கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான சுற்றுலா இடங்களை கண்டு நயந்த நக்கீரன் மகளிரணியினர், கடைசியில் திற்பரப்பு அருவிக்குச் சென்றனர். ஆசை தீர, மூச்சு முட்ட, விழிகள் கோவைப்பழமாய் சிவக்க நீராடி, களைத்து, உடைமாற்றி, அங்கிருந்த சிறிய பூங்காவில் அமர்ந்து தங்கள் கச்சேரியைத் தொடங்கினார்கள்.
மெரீனா: பரணி! உங்க பக்கத்தில குளிச்சாங்களே... உங்களையே முறைச்சு முறைச்சு பார்த்தாங்க... நீங்க கூட லேசா சிரிச்சீங்க... அவங்க லதா ராமச்சந்திரன்தானே?
பரணி: யாரு, அ.தி.மு.க. மகளிரணி குமரி மாவட்ட து.செ., தோவாளை எக்ஸ் சேர்மன் லதா ராமச்சந்திரன்னு நெனைச்சீங்களா? சேச்சே அவிய இல்லை. இவிய வேற. லதா ராமச்சந்திரன் ஒரு ஆளுகிட்ட பத்து லட்சத்தை தூக்கிக் கொடுத்துட்டு ஏமாந்து, நொந்து நூடுல்ஸ் ஆயிப் போயித்தாவ. அருவிக்கு வர்ற நெலைமையில அவிய இல்லை.
காவேரி: ஏமாந்திட்டாங்களா? வெளி நாட்டுக்கு ஆள் அனுப்புறேன். அரசாங்க வேலை வாங்கித் தர்றேன்னு இவங்க தானே பலபேர்ட்ட பல லட்சங்களை ஏமாத்தினதா முன்னே பேச்சு அடிபட்டுச்சு?
பரணி: அதெல்லாம் அவிய உச்சத்தில இருந்தப்ப. இப்ப, லதா ராமச்சந்திரன் மகன் எம்.பி.ஏ. படிச்சிருக்கிறாவ. மகனுக்கு ஏ.பி.ஆர்.ஓ. போஸ்டிங் கேட்டு எடப்பாடியையும் ஓ.பி.எஸ்.யையும் பார்க்கலாம்னு அலைஞ் சிருக்காவ. அப்ப, தலைமைச் செயலகத்தில கொடைக்கானல் சண்முகம் அறிமுகம் ஆகியிருக்கிறாவ. "20 லட்சத்தை இந்தக் கையில கொடு, அந்தக் கையில அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை வாங்கிக்க'னு அவர் சொன்னாராம். அட்வான்ஸா 10 லட்சத்தை சொளையா கொடுத்திருக்காவ. ஆறு மாசமாச்சு. கிடைக்கலை. ஓ.பி.எஸ்.கிட்ட ஒரு பாட்டம் அழுது பாத்துட்டு, இப்ப குமரி எஸ்.பி.கிட்ட புகார் கொடுத்து புலம்பிக்கிட்டிருக்காவ.
மல்லிகை: வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில உண்டுங்கிறது சரியாத்தான் இருக்கு.
பரணி: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில என்ன பிரச்சினை?
நாச்சியார்: மருத்துவமனை முதல்வர் வனிதா அங்கே வேலை செய்ற செவிலியர்களை கேவலமா நடத்துறாகளாம். அசிங்க அசிங்கமா பேசுறாகளாம். அதான்... அங்கே வேலை செய்ற 250 செவிலியர்களும் மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே போராட்டம்னு உக்கார்ந்து விட்டாக.
மெரீனா: பிரச்சினை தீர்ந்ததா?
நாச்சியார்: எங்கே தீர்ந்தது? மறுபடியும் ஸ்டிரைக் பண்ணப் போறாகளாம். முதல்வர் வனிதா இறங்கி வர்றதாயில்லை.
மல்லிகை: டார்ச்சர் பண்றது சிலருக்கு பொழுதுபோக்கா போச்சு.
காவேரி: அட... அரியலூர் மாவட்டம் சிலால் கிராமத்து இளைஞர் சத்தியமூர்த்தி எந்தத் தப்பும் பண்ணலை. ஆனால் போலீஸ் டார்ச்சர் தாங்காம தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
பவானி: என்ன பிரச்சினைங்க?
காவேரி: அரியலூர் மாவட்டம் சிலால் கிராமத்தில் சொந்தமா, சிறியதா ஒரு வீடு கட்டிக்கொண்டிருந்தார் இளைஞர் சத்தியமூர்த்தி. மணல் தட்டுப்பாடு... பக்கத்து ஊர்ல ஒரு நண்பர் "என்கிட்ட கொஞ்சம் மணல் இருக்கு. வேன் எடுத்துட்டு வந்து அள்ளீட்டுப் போ. உனக்கு மணல் கிடைச்சதும் கொண்டுவந்து கொடு'ன்னு சொன்னாராம். டாடா ஏஸ் வேன்ல அள்ளீட்டு வந்திருக்காரு. தா.பழுர் போலீஸ் வீடு தேடி வந்திருச்சு.
மல்லிகை: ஒரு வேன் மணல்கூட வீடுகள்ல இருக்கக்கூடாதா?
காவேரி: அப்பிடித்தான். போலீஸ் வந்தப்ப சத்தியமூர்த்தி வீட்ல இல்லை. அவர் தம்பி கணே சன் அந்த மணலை அள்ளிப்போடச் சொல்லி, தம்பி கணேசனையும் வேனையும் ஸ்டேஷனுக்கு கொண்டு போயிட்டாங்க. மணல் கடத்திய சத்தியமூர்த்தியை சரண்டர் பண்ணணும், இல்லைனா இவ்வளவு தரணும்னு பேரம் பேசி கணேசனை டார்ச்சர் பண்ணீருக்காங்க. மாட்டினா சிறையில அடைச்சிருவாங்களேனு பயந்து, தன்னோட தோப்புல தூக்குல தொங்கிட்டாரு சத்தியமூர்த்தி. சத்தியமூர்த்தி சாவுக்கு காரணமான போலீஸ்காரங்க மீது நடவடிக்கை எடுக்கணும்னு சிலால் மக்கள் சாலை மறியல் செஞ்சாங்க.
கோமுகி: அதுக் கெல்லாம் போலீஸ் பயப்படுமா?
காவேரி: பயப்பட வச்சாங்க சிலால் மக் கள். உடை யார்பாளை யம் கோட் டாட்சியர் ஜோதி வந்து சமாதானம் பேசினாங்க. ஆனாலும் மக்கள் கொதிப்பு அடங் கலை.
மெரீனா: கலெக் டர், எஸ்.பி. எல்லாம் வந்தாங்களோ?
காவேரி: இல்லையில்லை. கோட்டாட்சியர் ஜோதி, "கட்டாயம் போலீசார் மீது நடவடிக்கை நான் எடுப்பேன். போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கிற அதிகாரம் வருவாய்த்துறைக்கு உண்டு'னு சொல்லி பிராமிஸ் பண்ணின பிறகுதான் சாலைமறியல் வாபஸாச்சு.
மல்லிகை: சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் புவனலதா மீது புகார்கள் பறக்குதாமே?
பவானி: பழைய கூத்துதானுங்க. ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வில் பல மையங்களிலும் எழுதிய மாணவர்கள் தாராளமா காப்பி அடிச்சிருக்காங்க. ஆயிரக்கணக்கான விடைத்தாள்களில் ஒரே மாதிரி கையெழுத்து, ஒரே மாதிரி பதில்கள்.
மல்லிகை: எப்புடி?
பவானி: தேர்வுக்கூடத்துல இருந்து விடைத்தாள்கள் வெளியே போயிருக்கு. பிறகு விடைத்தாள்களை எழுதி பெரியார் பல்கலைக்கு அனுப்பி, விடைத்தாள் கட்டுகளுடன் சேர்த்திருக்காங்க. புவனலதாவுக்கு இதுல தொடர்பு இருக்குனு துணைவேந்தருக்கு புகார்கள் போயிருக்கு.
கோமுகி: நாடு வௌங்கினாப்லதான்!
-எஸ்.பி.சேகர், மணிகண்டன்,
நாகேந்திரன், இளையராஜா