"கஜா' புயலின் கோரத்தாண்டவத்தால் கிளை முறிந்த, உடைந்து விழுந்த வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெறியப்பட்ட விருட்சங்களின் கோரக்காட்சிகள் நக்கீரன் மகளிரணியை கண்கலங்க வைத்தது. திருவாரூர் நகரத் தெருக்களில் மூன்றுமணி நேரத்திற்கு மேல் நடந்தலைந்து சேதங்களைப் பார்த்த நமது மகளிரணியினர் கமலாலயக் குளத்தின் படிக்கட்டில் அமர்ந்தார்கள்.

நாச்சியார்: ஒரு கண்ணுல வெண்ணையும் ஒரு கண்ணுல சுண்ணாம்பையும் வைக்கிற அற்பத்தனமான வேலையை அமைச்சர்கள் செய்யலாமா?

thinakatchery

Advertisment

காவேரி: அதான் நாம கண்ணாரப் பார்க்கிறோமே... அ.தி.மு.க.காரர்கள் ஜெயித்த தொகுதிகளில் நடக்கும் நிவாரணப் பணிகளில் பாதியளவு கூட தி.மு.க. ஜெயித்த தொகுதிகளில் நடக்கலையே!

மெரீனா: தி.மு.க. ஜெயித்த தொகுதிகளில் அக்கறையோட வேலை செய்ற அதிகாரிகளை அமைச்சர்கள் கோபித்துக்கொள்கிறார்களாம்!

காவேரி: மன்னார்குடி தாசில்தார் ஸ்ரீதேவியை சஸ்பெண்ட் செய்ய வைத்துவிட்டார் அமைச்சர் தெர்மாகோல் செல்லூர்ராஜு.

Advertisment

காமாட்சி: நிவாரணப் பணிகளிலும் உதவி ஒத்தாசைகளிலும் ராப்பகலா தீவிரமா வேலை செய்த அதிகாரிகளில் ஸ்ரீதேவியும் ஒருவர். அவரை ஏன் சஸ்பெண்ட் செய்தாங்க.

காவேரி: ஆளுநர் வந்தப்ப, அவரை ஃபாலோ பண்ணிட்டு தாசில்தார் ஸ்ரீதேவி போயிருக்காங்க. அப்ப அமைச்சர் ரெண்டு தடவை போன் போட்டாராம். டவர் பிரச்சினை. ஸ்ரீதேவி எடுக்கலையாம்... இது ஒரு காரணம்னு சொல்லி உடனே சஸ்பெண்ட் பண்ண வச்சிட்டாரு. உண்மையான காரணம் என்னன்னா... மன்னார்குடி தொகுதியில டி.ஆர்.பாலுவோட மகன் ராஜாதான் எம்.எல்.ஏ! அந்த தி.மு.க. தொகுதியில் பற்றுதலோடு வேலை செய்ததுதான்.

மெரீனா: வருவாய்த்துறையின் மற்ற அதிகாரிகள் எல்லாரும் இதைப்பற்றி என்ன சொன்னாங்க?

thinakatcheryகாவேரி: கொந்தளிச்சிட்டாங்க. கலெக்டர் ஆபீஸ் வளாகத்திலேயே போராடினாங்க. தாசில்தார் ஸ்ரீதேவிக்கு நியாயம் கிடைக்கிறவரை "புயல்' வேலை செய்யமாட்டோம்னு உறுதியா நின்னாங்க. அப்புறம்தான் தாசில்தார் ஸ்ரீதேவி சஸ்பென்ஸனை கேன்சல் செய்திருக்காங்க.

பவானி: ஏனுங்க... எந்த எஸ்.பி.யும் செய்யாத ஒரு வேலையை எங்க நீலகிரி எஸ்.பி.சண்முகப்பிரியா செஞ்சிருக்காங்க. போலீஸ், பள்ளிக் கல்வித்துறை, போக்குவரத்துத் துறைனு அத்தனை அதிகாரிகளும் பாராட்டுறாங்க.

நாச்சியார்: அப்படி என்னத்தா செஞ்சிட்டாக உங்க எஸ்.பி?

பவானி: நீலகிரியில விபத்தில்லா நாளேயில்லீங்க... சாவில்லாத விபத்துமில்லீங்க. எத்தனை ஹேர்பின் பென்ட்டுகள்... அதனால பேருந்து ஓட்டுநர்களுக்கும், பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாமை, திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக்கை அழைத்து வந்து நடத்தினார் எஸ்.பி. சண்முகப்பிரியா. இதுல ஸ்டார் விஷயம் என்னன்னா... இதுவரை இப்படி ஒரு முகாமை வேறு யாரும் நடத்தலீங்க...

நாச்சியார்: ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமியின் பெரிய மாமனாரோட மணல் டிராக்டரை காணலையாமே?

பரணி: அந்தத் தாக்கல் உங்க காதுக்கும் வந்திருச்சா? டிராக்டருக்கு பர்மிட் இல்லை. மணலுக்கு பர்மிஷன் இல்லை. மடக்கிப் புடிச்ச கோயிலான்குளம் எஸ்.ஐ. அந்த மணல் டிராக்டரை சங்கரன்கோயில் தாசில்தார்ட்ட ஒப்படைச்சுப்பிட்டாவ. பிடிபட்டது பெரிய மாமனார் வீட்டு டிராக்டர்னு அப்புறம்தான் அமைச்சரம்மாவுக்கு தெரிஞ்சிருக்கு.

மெரீனா: மினிஸ்டர் சொன்னா விடமாட்டாங்களா?

பரணி: "நான் தாசில்தார்ட்ட ஒப்படைச்சிட்டேன்'னு எஸ்.ஐ. கையை விரிச்சிட்டாரு. பர்மிட்டுமில்லை, பர்மிஷனுமில்லைனு மயங்கினாராம் தாசில்தார். அமைச்சரால் வேறு என்னதான் செய்ய முடியும்? தாசில்தார் கஸ்டடியில் திருட்டு மணலோடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பர்மிட் இல்லாத டிராக்டர் திடீரென மாயமாகிவிட்டது. கருமமே கண்ணான வட்டாட்சியர் டிராக்டரை காணவில்லை, யாரோ திருடிக்கொண்டு போயிட்டதா போலீஸ்ல புகார் செஞ்சிருக்காங்க. வேறென்ன செய்ய முடியும் வட்டாட்சியரால்?

நாச்சியார்: திருட்டு மணல் டிராக்டரை கடத்தினது மந்திரி ஆட்களா? பெரிய மாமனார் ஆட்களா?

பரணி: அவிய வேற, இவிய வேறயா? யாருங்கிறதை புகார் வாங்கின போலீஸே கண்டுபிடிக்கட்டும்...

காமாட்சி: நான் ஒரு புது தகவலைச் சொல்றேன். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் டவுனைச் சேர்ந்த 28 வயசு திருநங்கை மோனிகா ஏழு வருஷமா விரதமிருந்து இருமுடி கட்டி, சபரிமலைக்கு போயிட்டு வர்றாங்களாம்...

மெரீனா: சேலை கட்டீட்டு போனாங்களா? வேட்டி கட்டிக்கிட்டா?

காமாட்சி: முதல்ல நாலுவருஷம் ஆம்பள பக்தரா போயிட்டு வந்திருக்காங்க. அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு திருநங்கையாகி கடந்த மூணு வருஷமா கறுப்புவேட்டி கட்டிக்கிட்டு, ஏழெட்டு மூதாட்டிகளோடு போயிருக்காங்க.

பவானி: பிறகு என்னங்க பிரச்சினை?

காமாட்சி: போன வருஷம் இருமுடியோடு பதினெட்டு படியேறி, தரிசனம் பார்த்துவிட்டுஇறங்கி இருமுடியைப் பிரித்து நெய்தேங்காய் உடைக்கக் காத்திருந்தபோது, கேரள போலீஸார் வந்து விசாரணை நடத்தி, தனியா கூட்டிப்போய் திருநங்கைதானானு செக் பண்ணீருக்காங்க.

மெரீனா: கறுப்பு வேட்டிதானே உடுத்தியிருந்தாங்க. எப்படி சந்தேகப்பட்டாங்களாம்.

காமாட்சி: வளர்த்த தலைமுடியை வச்சுதான். அப்புறம் பம்பைக்கு இழுத்து வந்து விட்டு, இனிமே சபரிமலை பக்கமே தலைவச்சுப் படுக்கப்பிடாதுனு எச்சரித்து அனுப்புனாங்களாம்.

நாச்சியார்: இந்த வருஷமும் இருமுடி கட்டப் போறாங்களா அந்த திருநங்கை மோனிகா?

காமாட்சி: ஆமாவாம்! "இதுவரை நான் மட்டும் போனேன். இந்த வருஷம் இன்னும் சிலரோடு போவேன். எங்களை ஏன் தடுக்கணும்? எங்களுக்குத்தான் தீட்டுக் கிடையாதே? எங்களை அனுமதிக்கணும்'னு கேரள அரசுக்கு கோரிக்கை வச்சிருக்காங்களாம் மோனிகா. அனுமதி கிடைக்காட்டி... போராடத் தயாராயிட்டாங்க.

காவேரி: நியாயம்தானே?

-பரமசிவன், து.ராஜா, அருள்குமார், க.செல்வகுமார்