மெரீனாவின் தோழி கல்யாணி தன் மகள் கர்த்தவ்யாவின் மூன்றாவது பிறந்தநாள் விழாவை, சென்னை கிண்டியில் உள்ள குழந்தைகள் பூங்காவில் கொண்டாடினார். விழாவிற்கு நக்கீரன் மகளிரணியினரும் அழைக்கப்பட்டிருந்தனர். விழா முடிந்ததும், அருகிலுள்ள காமராஜர் நினைவகத்துக்கு வந்த மகளிரணியினர் அங்கே தங்கள் திண்ணைக் கச்சேரியைத் துவக்கினார்கள்.
பவானி: எங்க சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணிக்கு ஏற்பட்ட சோதனை, மற்ற மாவட்டங்களின் ஆட்சியர்களையும் ரொம்ப யோசிக்க வச்சிருக்குங்க.
மெரீனா: ரோகிணி நல்ல ஆக்டிவ்வான ஆட்சியராச்சே... அவங்களுக்கென்ன சோதனை?
பவானி: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள தளவாய்ப்பட்டியை சேர்ந்த தலித் சிறுமி ராஜலட்சுமி கொடூரமாகக் கொல்லப்பட்டது எல்லாருக்கும் தெரியும்தானுங்களே?
காவேரி: அந்த அப்பாவிச் சிறுமியின் தலையைத்தானே, அதே ஊரைச் சேர்ந்த தினேஷ் என்ற மிருகம் அறுத்து எடுத்துக்கொண்டு போனது.
பவானி: ஆமா அந்தச் சிறுமி வீட்டுக்கு மாவட்ட ஆட்சியர் ரோகிணி போனாங்க. சிறுமியோட தாய் சின்னப்பொண்ணுவையும், தந்தை சாமிவேலையும் சந்தித்து ஆறுதல் சொன்னதோடு, அவங்களுக்கு அரசின் சார்பாக சில வாக்குறுதிகளையும் கொடுத்தாங்க.
மல்லிகை: அது அவங்க கடமையாச்சே!
பவானி: ராஜலட்சுமி குடும்பத்துக்கு ஆட்சியர் ரோகிணி ஆறுதல் சொன்ன விஷயத்தை பத்திரிகையாளர்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது, ஆட்சியர் அலுவலகத்திற்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஒரு வாய்மொழி உத்தரவு வந்திருக்கிறது.
மெரீனா: என்னாவாம்?
பவானி: "அந்தக் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதற்கு முதலமைச்சர் போகப்போகிறார். அவர் ஆறுதல் சொல்லும் செய்திதான் முதலில் வரவேண்டும். ஆகவே நீங்கள் அங்கே போனதை செய்தியாக்க வேண்டாம்'னு சொன்னாங்களாம். இந்தச் சம்பவம்தான் கலெக்டர்கள் மத்தியில் இன்னைக்கு சீரியஸா ஓடிக்கிட்டிருக்குங்க.
காவேரி: இனிமே எந்த மாவட்டத்தில் என்ன நடந்தாலும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக போகக்கூடாது. போனாலும் வெளில தெரியக்கூடாது. முதலமைச்சரோ மற்ற அமைச்சர்களோதான் போகவேண்டும். அல்லது போனதாகத் தகவல் வரவேண்டும்... இல்லையா? தமிழ்நாட்டில் இதுவரை நடக்காத ஒரு முன்னுதாரணம். சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியை மட்டுமல்ல ஒவ்வொரு ஆட்சியரையும் மட்டம் தட்டும் வேலையிது.
மல்லிகை: குழந்தைகள் கொல்லப்படும் செய்தி நிறைய வருது இல்லியா?
நாச்சியார்: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி இலுப்பூர் பக்கத்தில குரும்பப்பட்டியினு ஒரு ஊரு. இந்த ஊர் விவசாயி வெள்ளச்சாமியின் நாலுவயசுப் பெண் குழந்தை ஷாலினி. வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த ஷாலினியை காட்டுப் பகுதிக்கு தூக்கிப்போய் யாரோ கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டனர்.
பவானி: பச்சைக் கொழந்தையை ஏனுங்க கொல்லோணும்?
நாச்சியார்: பக்கத்தில் தின்பண்டங்கள் சிதறிக் கிடந்திருக்கு. அதனால இது காமுகர்கள் வேலைனுதான் முதல்ல நினைச்சாங்க. இலுப்பூர் டி.எஸ்.பி. கோபாலசந்திரன், இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் தீவிரமாக விசாரணை நடத்தி சிங்காரம் என்பவரின் மனைவி சின்னப்பிள்ளையை அரெஸ்ட் பண்ணியிருக்காங்க.
மெரீனா: சம்பந்தமே இல்லாம அந்த லேடி ஏன் கொலை பண்ணாங்களாம்?
பவானி: தன்னிடத்தில் உள்ள மந்திர சக்தி பவர் அதிகரிக்கோணும்ங்கிறதுக்காக தலைச்சன் குழந்தையின் கழுத்தையறுத்து காளிக்கு பூசை செய்திருக்கிறார் சின்னப்பிள்ளை.
கோமுகி: இதைவிடக் கொடுமை, கடலூர் மாவட்டம் பண்ருட்டி பக்கத்தில் உள்ள கட்டமுத்துப்பாளையம் சிலம்பரசன் மனைவி ஜெயசித்ரா செய்த கொலைகள்.
மெரீனா: இவ யாரைக் கொலை செய்தாளாம்?
கோமுகி: போன வருஷம் ஏப்ரல் மாதம், 10 மாதமே ஆன தன்னோட இளையமகனை தண்ணிக்குள்ள அமுக்கிக் கொலை செய்திருக்கிறாள். இப்ப 4 வயதான தனது மூத்த மகன் மிதுனை, அதே மாதிரி தண்ணிக்குள்ள அமுக்கிக் கொலை செய்திருக்கிறாள்.
பவானி: அடிப் பாதகத்தி. பெத்த குழந்தைகளை கொல்ல எப்படி தாய்க்கு மனசு வருமுங்க?
கோமுகி: எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாம, ""காரணமே இல்லாம என் கணவர் மேல கோபம் கோபமா வருது. அவரு பலசாலி. அவரை கொல்ல முடியாது. அதான் குழந்தைகளைக் கொன்னுட்டேன்'' என்றாளாம் வளவனூர் இன்ஸ்பெக்டர் லட்சுமியிடம்.
நாச்சியார்: கொடுமை! கொடுமை!
காவேரி: அ.தி.மு.க. ஒ.செ.க்கு சவால்விட்டு ஜெயித்துத் திரும்பிய தாசில்தார் மேடத்தின் "தில்'லான தகவலைச் சொல்லட்டுமா?
பவானி: அடுத்த கச்சேரியில இதை நீங்க ஓப்பன் பண்ணலாம்ங்க. இன்னக்கிக் கச்சேரியை இதோட முடிச்சிக்கலாம்ங்க.
-இளையசெல்வன்
-எஸ்.பி.சேகர்