தவமாய் உருவாகிப் பயணிக்கும் தாமிரபரணியின் அகத்தியர் தீர்த்தமும் இந்திர தீர்த்தமும் சங்கமிக்கும் இடத்தில் சிவாலயம். அங்கே நீராடி, நமசிவாயனை தரிசிப்பது புஷ்கரத்திற்கே புண்ணியம் சேர்க்கும் என்று பலரும் சொன்னதால் நக்கீரன் மகளிரணி யினரின் நீராடல் அங்கேதான் நடந்தது.
புஷ்கர நீராடி கரையேறிக்கொண்டிருந்த நொடியில் பின்னாலிருந்து கூச்சல் ""அய்யய்யோ... என் சங்கிலியை யாரோ கட்பண்ணிட்டாங்க... காணோம்... காணோம்...'' தாமிரபரணியே மனிதத் தலைகளால் நிரம்பியிருந்தது. கரையில் நின்றுகொண்டிருந்த மகளிர் போலீஸை நெருங்கினார்கள் நமது மகளிரணியினர்.
பரணி: கடுமையான கூட்டம்... பாருங்க, தங்கச் சங்கிலியை காணோம்னு கத்துறாவ ஒரு அம்மா! களாவணிச் சிறுக்கிய, பக்தர்களோட கலந்திருப்பாக... கொஞ்சம் கவனமா பார்த்துக்கிருங்க...
மகளிர் போலீஸ் I: நாங்க என்ன செய்றது? அந்த வலை கட்டிருக் காங்களே... அதைத்தாண்டி யாரும் போயிடாமப் பாத்துக்கணும்... அதுதான் எங்க டூட்டி. அதைத் தாண்டிப்போய்க் குளிச்சா சுழல்ல சிக்கிக்கிருவாக. ஆழமும் ரொம்ப. அதுக்காகத்தான் நாங்க நிக்கிறோம்.
மல்லிகை: சின்ன ரோடு. ஹெவி டிராபிக். வி.ஐ.பி.கள் பூராபேரும் இங்கே நீராட வர்றாங்க. டிராபிக்க ஒழுங்கு பண்றதுக்கு யாருமில்லையே?
மகளிர் போலீஸ் II : அம்பை டி.எஸ்.பி. ஜாகிர்உசேன் சார் வருவார்னு சொல்றாங்க... வந்தாலும் வருவார்.
மெரீனா: நாங்க குளிச்சிட்டு கரையேறும்போது "நகை போச்சு... நகை போச்சு...'னு யாரோ கத்துனாங்க. அப்ப திருடர்கள் கலந்திருக்கானுங்கனுதானே அர்த்தம்?
மகளிர் போலீஸ் I: இந்த ஒரு வாரத்துல இந்தத் தீர்த்தத்துல மட்டும் ஐம்பது அறுபது பவுன் நகை திருடுப் போயிருக்குங்க. ரொம்ப பேர் கம்ப்ளைண்டு கொடுக்கவேயில்லையாம். வாசுதேவநல்லூரைச் சேர்ந்த கோமதியும் பரமசிவமும் மட்டும்தான் வி.கே.புரம் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருக்காங்க.
பரணி: களவாணிகள் யாரும் பிடிபடலையா?
மகளிர் போலீஸ் II : ரெண்டு லேடீஸை பக்தர்கள் புடுச்சுக் கொடுத்திருக்காங்க. ஒருத்தி மேற்குவங்காளத்தைச் சேர்ந்த லலிதாகுமாரி, இன்னொருத்தி ஆந்திரா -நெல்லூரைச் சேர்ந்த ரமணம்மா. ஒரு பெரிய கும்பலே புஷ்கர நீராடல்ல நகை திருடுவதற்காக புறப்பட்டு வந்திருக்கு. மற்ற பொம்பளைங்க இன்னும் மாட் டலை -சொல்லிவிட்டு அக்கறையோடு நகர்ந்தார்கள் மகளிர் போலீசார். கோயிலுக்குள் சென்று சாமி கும்பிட்டு விட்டு, வெளியே வந்த மகளிரணியினர் மரத்தடியில் கச்சேரியைத் தொடர்ந் தார்கள்.
நாச்சியார்: பல்கலைத் துணைவேந்தர்கள் இருக்கைக்கு இணையாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் போஸ்டிங் ரேட்டும் எக்கச்சக்கம் உயர்ந்திருச்சாம்ல... தெரியுமா?
பவானி: ஏன் தெரியாம? டாஸ்மாக் டிஸ்ட்ரிக் மேனேஜர் போஸ்டிங்குக்காக 75 லட்சம் வரை கொடுக்கிறாங்களாம். கொடுத்தால் என்ன? எங்க ஈரோடு மாவட்டத்துல 174 டாஸ்மாக் கடைகள். டி.எம்.க்கு ஒவ்வொரு மாதமும் தலா 30 ஆயிரம் மாமூல் தர்றாங்களாம். ஒவ்வொரு பாரும் 10 ஆயிரம் மாத மாமூல்.
மல்லிகை: ஆமாமா... அதோட லைசென்ஸ் இல்லாம பார் நடத்தணும்னா மாதம் 20 ஆயிரம் மாமூல். ஒழுங்கா "கவனிக்காத' சேல்ஸ் மேன், ஹெல்ப்பர், கேஷியர், சூபர்வைஸர் இவங்களை ஏதாச்சும் காரணம் சொல்லி சஸ்பெண்ட் செய்வாங்க. மறுபடியும் அவங்களை வேலையில சேக்கிறதுக்கு ஸ்பெஷல் அமௌண்ட். டாஸ்மாக் டி.எம். காட்ல 12 மாதமும் புயல்மழைதான்.
பவானி: எங்க மாவட்டத்துல தேவிகாராணின்னு ஒரு லேடிதான் டாஸ்மாக் டி.எம்.மா இருந்தாங்க. ஒரு வருஷத்துல ஆயுசுக்கு வேண்டியதை அறுவடை செஞ்சாச்சாம். இப்பதான் தேவிகாராணியை காத்திருப்போர் பட்டியல்ல போட்ருக்காக.
மெரீனா: ஏன்? அளவைத் தாண்டி விட்டாரா?
பவானி: அதுக்காக இல்லை. எல்லாத்தையுமே பூசாரியே எடுத்துக் கிடலாம்ங்களா? மேல உள்ள கடவுள்களுக்கான பங்கு கரெக்ட்டா போகணும்ல... போகலை. அதான் இந்த தண்டனைனு சொல்றாங்க.
காவேரி: நாகை மாவட்டம் பூம்புகார் பக்கத்துல திருவெண்காடுனு ஒரு ஊரு...
நாச்சியார்: திருவெண்காடு தெரியாதா என்ன... நவக்கிரக தலங்களில் புதனுக்குரிய தல மாச்சே... விஷயத்தைச் சொல்லு...
காவேரி: அங்கே ஒரு காவல்நிலையம் இருக்கு. அந்த ஸ்டேஷன் ஆய்வாளர் வேலுதேவி உட்கார்ந்திருக்கிற வீல்சேரோட விலை என்ன தெரியுமா? 28 ஆயிரம் ரூபாயாம். நாகை மாவட்ட கலெக்டரும் எஸ்.பி.யும் கூட அப்படி நாற்காலில உட்காரலைனா பாத்துக்கோயேன்.
பரணி: யாரோட உபயமாம்?
காவேரி: மயிலாடுதுறை பர்னிச்சர் நிறுவனம் ஒண்ணு பெருந்தோட்டத்துல மிகப்பெரிய இறால்குட்டை நடத்துதாம். அவங்களோட உபயம்தானாம். திருவெண்காடு காவல்நிலைய ரூஃப்பை துளை போட்டுக்கொண்டு மழை கொட்டுதாம். கள்ளச்சாராயம், லாட்டரி, மணல் குவாரி, இறால்குட்டைகள்... எக்ஸட்ரா எக்ஸட்ராக்களின் கிருபைதான்.
மெரீனா: ஏய்... அந்த திருவெண்காடுலதானே பா.ஜ.க. பிரமுகர் ஒருத்தர் ஸ்டாக்பண்ணி வச்சிருந்த ரெண்டாயிரம் லோடு மணலுக்கு எஸ்.பி. விஜயகுமார் சீல் வச்சாரு. ஏழுபேரை அரெஸ்ட் பண்ணாரு.
காவேரி: அதேதான்... அதேதான். "இருப்பு 2000 லோடுனா, இதுவரை விற்றது எத்தனை லோடு, உங்களுக்கு கமிஷன் எவ்வளவு'னு இன்ஸ்பெக்டர் வேலுதேவியை கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்துவிட்டாராம் எஸ்.பி.
மல்லிகை: எதுக்கு கேள்வி கேக்கோணும்? நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே.
காவேரி: இன்ஸ்பெக்டர் வேலுதேவி மேல நடவடிக்கை எடுக்கலை. அவங்களுக்கு ரொம்ப வேண்டிய அவங்க ஓட்டுநர் அன்பரசனைத்தான் சஸ்பெண்ட் பண்ணீருக்காங்க.
நாச்சியார்: அவுகள்லாம் செய்ற பாவங்களுக்கு எத்தனை புஷ்கரணியில மூழ்கி எந்திரிச் சாலும் போதாதுத்தா!
-ஜீவாதங்கவேல், பரமசிவன், செல்வகுமார்
படம் : ராம்குமார்