ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்குள், ஏதோ ஒரு வேலைக்காகச் சென்ற பவானியை எதிர்பார்த்து ரயில் நிலையத்தில் காத்திருந்தார்கள் "நக்கீரன்' மகளிரணியினர். நீண்ட நேரத்திற்குப் பிறகு, சோர்வோடு வந்தார் பவானி.
மல்லிகை: என்னாச்சு? வேலை முடியலையா? முகத்தைப் பார்த்தாலே தெரியுதே?
பவானி: எல்லா மாநகராட்சி அலுவலகங்கள் மாதிரிதான் இங்கேயும் இருக்காங்க. சிபாரிசு இருந்தா கொஞ்சம் சீக்கிரம் முடியும்ங்க.
காவேரி: நீ கொங்கு மண்டலக்காரிதானே! சிபாரிசுக்கு யாருமில்லையா?
பவானி: கனிமொழி வர்றேன்னாங்க. வரலை. போன் போட்டு ஏனுங்க வரலைனு கேட்டேன். "அவசரமா கோபிக்கு வந்துட்டேன். அங்கேயே வெயிட் பண்ணுங்க, வந்து கொண்டே இருக்கேன்'னு சொல்றாங்க.
மெரீனா: கனிமொழியா?
பவானி: ஆமாமுங்க. கனிமொழி நடராஜன். அப்பா பெயரும் நடராஜன். கணவர் பெயரும் நடராஜன். பாரம்பர்யமான தி.மு.க. குடும்பமுங்க. அப்பா, பேரூராட்சி செயலாளராகவும், வைஸ் சேர்மனாகவும் இருந்தவருங்க. இந்தக் கனிமொழி ஈரோடு மாநகர தி.மு.க. மகளிரணி அமைப்பாளரா இருந்தாங்க.
மல்லிகா: இப்ப இல்லியா?
பவானி: மாவட்டச் செயலாளர் முத்துசாமி இவங்களைப் பத்தி ஏதோ புகார் எழுதி அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அனுப்பியிருக்கிறாருங்க. என்ன ஏதுன்னுகூட விசாரிக்காம, விளக்கம் கேட்காம கட்சித் தலைமை, கனிமொழியை பதவியில் இருந்து சஸ்பெண்ட் பண்ணிருச்சுங்க.
காவேரி: மாவட்டச் செயலாளரையே ஓவர்டேக் எடுத்தாகளோ?
பவானி: நாலஞ்சு மாதம் முன்னாடி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு நடத்துனாருங்களே... அதில் கலந்து கொண்ட கனிமொழி நடராஜன், ""மாவட்டத் தலைமை அக்கறையோடு செயல்படலை. மினிட்புக்ல கையெழுத்து வாங்கிறதில்கூட பிரச்சினை. மக்களுக்கான போராட்டம் எதுவும் நடத்துவதில்லைனு எல்லாம் சொல்லியிருக்காங்க. அதில இருந்தே கனிமொழி மேல மா.செ.க்கு கோபமாம். சமீபத்தில் பேஸ்புக்ல ஏதோ எழுதியிருக்காங்க கனிமொழி. அவ்வளவுதான். பொறுப்பை காலிபண்ணிட்டாரு மா.செ.
காமாட்சி: இப்ப என்ன சொல்றாங்க உன் தோழி கனிமொழி?
பவானி: வர்றாங்கள்ல... வந்ததும் கேக்கலாம்ங்க... நீங்க உங்ககிட்ட இருக்க தகவலைச் சொல்லுங்க.
காமாட்சி: வேலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. மருத்துவர் அணி தலைவர் டாக்டர் லீலா சுப்பிரமணியை உங்க எல்லாருக்கும் தெரியும்தானே?
மல்லிகை: பூக்கடைக்கு எதுக்கு விளம்பரம்? அவங்க எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவங்க. லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் சேவைகள் மூலமா மக்கள்ட்ட நல்ல பெயர் எடுத்தவங்க. ஜெயலலிதாவின் நம்பகமான பெண்மணி. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராகக்கூட இருந்தாங்களே?
காமாட்சி: அதே லீலா சுப்பிரமணிதான். இப்பவும் மருத்துவரணி மாவட்டத் தலைவர்தான். ஆனால், ஊராட்சிக் குழுத் தலைவர் பதவி இல்லைல... இப்ப கொஞ்சம் கொஞ்சம் அந்தம்மாவை ஒதுக்கி வச்சுட்டாரு அமைச்சர் வீரமணி. அதனால தன்னோட ஆஸ்பிடல்ல உக்கார்ந்து புலம்பிக் கொண்டிருக்கிறார் அவர்.
மெரீனா: டாக்டரம்மா என்ன சொல்லிப் புலம்புறாங்க?
காமாட்சி: "ஜெ. மேடம் இருந்தா என்னை இப்படிக் கட்டம் கட்டுவாங்களா? அமைச்சர் வீரமணிக்காக நான் எவ்ளோ செஞ்சு கொடுத்திருக்கேன். அதையெல்லாம் மறந்துட்டு இப்பிடி ஒதுக்கி வைக்கிறாரே'னுதான் புலம்புறாங்க டாக்டரம்மா.
பவானி: அமைச்சர் தரப்புல இதுக்கு என்ன சொல்றாங்களாம்?
காமாட்சி: "ஒரு குடும்பத்தில எத்தனை பேருக்குப் பதவி தரமுடியும்? சம்பாதிச்சதில கொஞ்சமாச்சும் கட்சிக்கு திருப்பி செய்ய வேண்டாமா? வாணியம்பாடியில ஸ்கூலு... தோல் பேக்டரினு அவங்க குடும்பம் மட்டும் செட்டில் ஆனாப் போதுமா? அந்தம்மா புருஷன் இப்பவும் விவசாயக் கூட்டுறவு வங்கித் தலைவர் பதவியில இருக்கிறாரே போதாதா'னு கேக்குறாங்க அமைச்சரோட ஆட்கள்.
மல்லிகை: உங்க திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஏரியா, மறுபடியும் பழைய குருடி கதவைத் திறடீனு மாறிப் போச்சுனு சொன்னீங்களே... அது என்ன விஷயம்?
காவேரி: வையம்பட்டி காவல்நிலையத்துக்கு உட்பட்ட ஏரியாவுக்குள்ள லாட்டரி சீட்டு, மணல் திருட்டு, ரம்மி கிளப் எல்லாம் இலைமறை காயாக தெரிஞ்சும் தெரியாம நடந்ததுண்டு. இப்ப எல்லாமே பகிரங்கமா நடக்குது.
மெரீனா: போலீஸ் என்ன பண்ணுது?
காவேரி: வையம்பட்டி காவல் நிலையத்துக்கு ஆய்வாளராக அனுஷ்கா மனோகரி வந்தபிறகுதான், கிரிமினல்கள் எதையும் பகிரங்கமா பயமில்லாம செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. இன்ஸ்பெக்டர் மேடமே போன் போட்டு அவங்ககிட்ட நலம் விசாரிச்சு ஊக்கப்படுத்துறாங்களாம். சிரங்கு பிடிச்ச கை சும்மா இருக்குமா? பத்தாக்குறைக்கு இந்த அனுஷ்கா மனோகரிதான் மணப்பாறை போலீஸ் ஸ்டேஷனுக்கும் பொறுப்பு இன்ஸ்பெக்டராம்... இனிமே அந்த ஊரும் உருப்பட்டா மாதிரிதான்.
பவானி: ஒரு நிமிஷம்... அதோ நான் சொன்ன கனிமொழி நடராஜன் வர்றாங்க. வாங்க வாங்க... கனிமொழி எப்படி இருக்கீங்க?
கனிமொழி நடராஜன்: வெரி ஸாரி... ரொம்ப லேட் பண்ணீட்டன்ல... எல்லாருக்கும்... "நக்கீரன்' மகளிரணி எல்லாருக்கும் வணக்கம்.
மல்லிகை: வணக்கம்ங்க... உங்களைப் பற்றி பவானி நிறையச் சொன்னாங்க. தி.மு.க. தலைமை உங்க பதவியை சஸ்பெண்ட் பண்ணிட்டதா சொல்லி வருத்தப்பட்டாங்க.
கனிமொழி நடராஜன்: கட்சித் தலைமை என் பெயரை பார்த்தாவது யோசித்திருக்கணும். மா.செ. இப்படி என்னை பழிவாங்கியிருக்க வேணாம். மா.செ. மாதிரியே தலைமையும் செயல்படாம என்கிட்ட விளக்கம் கேட்டிருக்கலாம்ல?
மெரீனா: தலைமைக்கு ஒரு தன்னிலை விளக்கக் கடிதம் எழுதுங்க கனிமொழி.
-ஜீவாதங்கவேல், து.ராஜா, ஜெ.டி.ஆர்.