கடலூர் நகரைச் சுற்றிப் பார்த்த நக்கீரன் மகளிரணியினர், வெள்ளி கடற்கரையில் அமர்ந்தார்கள்.
காவேரி: கடலூர் சார்-ஆட்சியர் சரயுவை எதிர்த்து வி.ஏ.ஓ.க்களின் போராட்டங்கள் தொடர்ந்து நடக்குதுபோலிருக்கு...
கோமுகி: கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த கிராமங்களில் தங்கிப் பணிகளைச் செய்யணும்ங்கிறது அரசு உத்தரவு. கடலூர் மாவட்ட வி.ஏ.ஓ.க்களில் அதிகம் பேர் கிராமங்களில் இருப்பதேயில்லை. வி.ஏ.ஓ.க்களை பார்க்கிறதுக்காக மக்கள் வாரக் கணக்கில் அலைகிறார்கள். இதற்காக சார்-ஆட்சியர் சரயு கொஞ்சம் கண்டிப்புக் காட்டினார். வி.ஏ.ஓ.க்களின் யூனியன் ஸ்ட்ராங்கா இருக்கு. அதான் அதிகாரமாகப் பேசினார், அசிங்கமாகப் பேசினார்னு காரணங்களைக் கண்டுபிடிச்சு, கடலூர், சிதம்பரம், பண்ருட்டினு பல ஊர்களில் சார்-ஆட்சியரை கண்டிச்சு போராட்டம் நடத்தியிருக்காங்க.
மெரீனா: சார்-ஆட்சியர் சரயு பின்னாடி வந்த அதிகாரிகள், கடலூர் டவுனில் கடைகளுக்குள் புகுந்து பிஸ்கட், பிரட் பாக்கெட்டுகளை அள்ளிக்கொண்டு போய் விட்டார்களாமே?
கோமுகி: பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக, கடைக்குக் கடை சென்று பிரச்சாரம் செய்திருக்காங்க. சில கடைகளுக்குச் சென்ற சார்-ஆட்சியர் சரயு, பொறுப்பை மற்ற அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு அவசரமாக அலுவலகம் போய்விட்டார். இதுதான் சமயம் என்று கடைகளுக்குள் நுழைந்த அலுவலர்கள் பிளாஸ்டிக் பேக்கில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டுகளையெல்லாம் அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள். கடைக்காரர்கள் புகார் செய்ததால், சார்-ஆட்சியர் சரயு உத்தரவால் கொள்ளையடித்த பிஸ்கெட் பாக்கெட்டுகளில் பாதியைத் திரும்ப கொண்டுபோய் கடைக்காரர்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
நாச்சியார்: சரயு போன்ற சில அதிகாரிகள் வகிக்கும் பொறுப்புகளுக்கு சிறப்பு சேர்க்கிறாக. ஆனால், ரேணுகா போன்ற தாசில்தார்கள் ரேட் பிக்ஸ் பண்ணி லஞ்சம் வாங்கி, அரசு ஊழியர்கள் என்றாலே பேய்கள்தான் என்ற பெயரெடுத்துக் கொடுக்கிறாக.
வாணி: இந்த ரேணுகா எந்த வட்டமுங்க?
கோமுகி: அவங்க திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாசில்தாரா இருக்காங்க. எந்தச் சான்றிதழ் என்றாலும் அவர் ஃபிக்ஸ்பண்ணி வச்சிருக்கிற அமௌன்ட்டை கொடுத்தாதான் கொடுப்பாங்களாம். செங்கம் தாலுகாவுல 160 டிராக்டர்கள் மணல் கடத்துகின்றன. சனிக்கிழமை சாயந்தரம் ஆச்சுனா ஒவ்வொரு டிராக்டருக்கும் தலா ஐயாயிரம் மொய் எழுதி ஆகணுமாம். இப்ப வெறும் ரெண்டாயிரத்தில கம்பி எண்ணுறாங்க.
வாணி: லஞ்ச ஒழிப்புத் துறை இல்லைனா நிலைமை ரொம்ப சீரியஸாயிடுமுங்க.
காவிரி: ஆமா. நயம்பாடி கிராமத்தை சேர்ந்த வெண்ணிலாவின் கணவர் போன வருஷம் செத்துட்டாரு. விதவைக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கணும்னு கணவரின் இறப்புச் சான்றிதழ் கேட்டிருக்கிறார் வெண்ணிலா. ரெண்டு மாசம் நடையா நடக்கவிட்ட தாசில்தார் ரேணுகா, கடைசியா "ரெண்டாயிரம் இருந்தால் வா இல்லைனா நடையைக் கட்டு'னு சொல்லிட்டாங்க.
மெரீனா: வெண்ணிலா நேரா லஞ்ச ஒழிப்புக்கு நடையைக் கட்டிட்டாங்களோ.
காவேரி: உறவினர் ஒருவர் ஐடியா கொடுத்திருக்கிறார். திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. சரவணகுமாரை சந்தித்து சொல்லிவிட்டார். 10ஆம் தேதி மத்தியானம் ரசாயனம் தடவின 2 ஆயிரம் நோட்டை வாங்கி பேக்ல வச்ச தாசில்தார் ரேணுகாவை, "வாங்க மேடம்'னு சொல்லி இழுத்துக்கிட்டு போய்ட்டாங்க.
நாச்சியார்: அ.தி.மு.க. மகளிரணி மாநில துணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமியைத் தெரியுமா?
மல்லிகை: இராமநாதபுரம் மா.செ. முனியசாமியோட மனைவிதானே. சட்டமன்றத் தேர்தல்ல முதுகுளத்தூர்ல நின்னு தோற்றவங்க. அதுக்கு முன்னால பரமக்குடி நகரசபை சேர்மனா இருந்தாங்க. இப்ப என்ன வில்லங்கம்?
காவேரி: வில்லங்கம் ஒண்ணுமில்லை. அமைச்சர் மணிகண்டனுக்கும் முனியசாமி குடும்பத்துக்கும் எப்பவுமே முட்டல் மோதல்தான். கட்சித் தலைமை இப்ப அமைச்சர் உதயகுமார் சிபாரிசில, இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் பதவியை கீர்த்திகா முனியசாமிக்கு ஒதுக்கியது அ.தி.மு.க. தலைமை.
வாணி: மா.செ. மனைவிக்கு எதுக்கு ஒரு வருமானப் பதவினு அமைச்சர் மணிகண்டன் எதிர்க்கிறாருங்களா?
காவேரி: எதிர்க்கிறது மட்டுமில்லை... கீர்த்திகா முனியசாமிக்கு கட்சித் தலைமை ஒதுக்கிய பதவியில் தனது சகோதரி மஞ்சுளாவை உட்கார வைக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டார் அமைச்சர் மணிகண்டன். அதனால, மூதலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவியாக்கிவிட்டார். அந்தம்மா, தான்தான் மாவட்டத்துக்கும் தலைவர்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்களாம்.
காமாட்சி: ஓகோ... அதான் கீர்த்திகா முனியசாமி கொந்தளிக்கிறாங்களோ?
காவேரி: ஆமா... அமைச்சர் மணிகண்டன் தன் அப்பாவை ராம்கோவிற்கும் அக்காளை மாவட்ட வங்கிக்கும் கொண்டுவரப் பார்க்கிறார்; பார்த்துவிடுவோம்... மினிஸ்டர் அக்காவா? மாவட்டம் மனைவியாங்கிறதை பார்த்துவிடுவோம் சவால் விட்ருக்காங்களாம்.
மெரீனா: சவால்கள் இல்லாத அரசியல் பழைய கஞ்சியாகிவிடும்... சரி கிளம்பலாம்.
-எஸ்.பி.சேகர், து.ராஜா, நாகேந்திரன்