சின்னமருது என்று மக்களால் போற்றப்படும் மாவீரன் சிவகங்கை மருதுபாண்டியனை 1801இல் சங்கரபதி கோட்டை வாசலில், வெல்ஷி என்ற ஆங்கிலத் தளபதி துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துக் கைது செய்தான். வலது தொடையில் பாய்ந்த குண்டு அகற்றப்படாமலேயே, சின்னமருது திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டார்.
சங்கரபதி கோட்டை இப்போது பாழடைந்து கிடக்கிறது. அதை சுற்றுலாத் தலமாக்குவதாய் வாக்குறுதி அளித்த தமிழக அரசு, வாக்குறுதியை வசதியாக மறந்துவிட்டது.
சங்கரபதி கோட்டை வாசலில் உள்ள திறந்தவெளி முனீஸ்வரன் கோயிலில், சிதறு தேங்காய் உடைத்து வழிபட்ட நக்கீரன் மகளிரணியினர், அந்தப் பொட்டலிலேயே அமர்ந்து தங்கள் கச்சேரியைத் தொடங்கினர்.
காவேரி: வீடு வாசல் இல்லை. ஆனால் ஆயிரக்கணக்கான சேவல்கள் இங்கே சுற்றித் திரியுதே, இதெல்லாம் யாரோட சேவல்கள்?
நாச்சியார்: எல்லாம் இந்த முனீஸ்வரன் கோயிலுக்குச் சொந்தமான சேவல்கள்தான். சுற்றுப்புற கிராம மக்கள் நேர்ந்துவிட்டவை. இந்தக் கோயில்ல மாதம் ஒருமுறை இரண்டு முறை கிடாய்பூசை போடுவாங்க. அப்ப பத்திருபது சேவல்களை அறுத்து ரசம் வைப்பாங்க.
மெரீனா: கோயில்கள்ல நான் சாப்பிட்டதே இல்லை. எப்ப பூசை போடுவாங்கனு தெரிஞ்சா வரலாம்.
நாச்சியார்: பெண்களையும் சிறுவர்களையும் அனுமதிக்க மாட்டாங்க. முக்கால்வாசி ஆம்புளைக டாஸ்மாக் கிக்கோடதான் வருவாக. பனையோலைல முடைஞ்ச பெரிய பட்டையில சோற்றைப் போட்டு நெறைய ரசத்தை ஊத்துவாக. சின்னப்பட்டையில மட்டன் திறக்கலை அள்ளிப் போடுவாக. மூக்கு முட்டச் சாப்பிடுவாக ஆம்பிளைகள்.
கோமுகி: பெண்களை ஏன் அனுமதிக்கலை?
நாச்சியார்: காட்டுக்குள்ள கண்மாய்க் கரைகள்ல உள்ள முனியன், கருப்பர், அய்யனார், காளிகோயில் பூசைகளுக்கு பெண்களை வரவிட மாட்டாக. ஏன் என்று கேட்டால் அய்யப்பன் கோயில் நிர்வாகம் சொல்ற காரணங்களைத்தான் சொல்லுவாக. இப்ப இப்பத்தான் ஒருசில ஊர் காட்டுக்கோயில்களில் பிள்ளையார், முருகன் சிலைகளை கொண்டுபோய் வைத்து, பெண்களையும் அனுமதிக்கிறார்கள். மற்றபடி, வீட்டு விலக்கு என்றும் முனியனுக்கு பெண் வாடை பிடிக்காதுன்னும் காரணம் சொல்லுவாக.
பரணி: கேரளாவுல பாத்தீங்களா... சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களையும் அனுமதிக்கணும்கிற உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து கேரளா முழுக்க பெண்கள் போராடுறாங்க. பந்தளத்தில் நடந்த சரணகோஷப் பேரணியில் 80 ஆயிரம் பெண்கள் கலந்துக்கிட்டாங்க. கோட்டயத்தில் பெண்கள் தீக்குளிக்க முயன்றாங்களாம்.
மல்லிகை: எப்படிப்பட்ட முற்போக்கு தீர்ப்பா இருந்தாலும், எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யுது. பெண்கள் புறக்கணிக்கப்படத்தான் செய்கிறார்கள்.
மெரீனா: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு மேடையில சீட் ஒதுக்கலை. மேடையில் ஏறின கோகுல இந்திரா டென்ஷனாயிட்டாங்க. என்னங்க நடக்குதுனு இ.பி.எஸ்.சையும் ஓ.பி.எஸ்.சையும் பார்த்து கேட்டாங்க. "இது கட்சிக் கூட்டமில்லை. அரசு விழா. புரோட்டகால்படிதான்'னு சமாதானம் சொன்னாங்க. கோகுல இந்திரா கோபமா இறங்கினாங்க. வளர்மதி இறங்கிவந்து சமாதானப்படுத்தினாங்க. ஆனாலும் கோகுலஇந்திரா சமாதானம் ஆகலை. மேடையில இருந்த சிலரைச் சுட்டிக்காட்டி, இவங்க எல்லாரும் யாரு? ஏன் மேடையில இருக்க அனுமதிச்சீங்கன்னு கோபமா கேட்டுட்டு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை புறக்கணிச்சிட்டு போயிட்டாங்க.
காவேரி: காந்தி ஜெயந்தி அன்னக்கி, சிலைக்கு மாலை போடும்போதும், இதே புரோட்டகால் பிரச்சினையைக் காரணம் காட்டி, கோகுலஇந்திராவுக்கு டென்ஷனை உண்டாக்கினாங்க. அங்கேயும் குரலை உயர்த்தினாங்க கோகுலஇந்திரா.
காமாட்சி: வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.வில், பொதுக்குழு உறுப்பினராக பவானி வடிவேலை நியமனம் செய்தார் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன். இது அங்கே பெரிய புகைச்சலை உண்டாக்கியிருக்கு. நெமிலி கிழக்கு ஒ.செ.யாக கணவர் வடிவேல் இருக்கிறார். அங்கே மனைவியை எப்படி பொதுக்குழு உறுப்பினர் ஆக்கலாம்னு கொதிச்சிட்டாங்க உடன்பிறப்புகள்.
நாச்சியார்: 2016 சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் நீக்கப்பட்டாரே அந்தப் பவானியா?
காமாட்சி: அவுங்களேதான். கனிமொழி எம்.பி., பொருளாளர் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் சிபாரிசுகளால் பவானிக்கு ஏதாவது கிடைக்குது. கணவருக்கும் பதவி மனைவிக்கும் பதவியானு எதிர்ப்புக் கிளம்பியதும் நீக்கப்படுகிறார்.
நாச்சியார்: பவானி என்ன சொல்கிறார்?
காமாட்சி: "நாங்க எப்ப கட்சிக்கு வந்தோம் என்றோ, கணவரும் பதவியில இருக்கிறாரே என்றோ எதிர்க்காதீர்கள். நாங்க ரெண்டுபேரும் கட்சிக்காக உழைக்கிறோமா இல்லையா?'னு கேட்கிறாங்க அந்தம்மா.
மெரீனா: இதுவும் ஞாயமாத்தான் இருக்கு.
-இளையசெல்வன், து.ராஜா