தூத்துக்குடி பனிமய மாதா கோயில் அருகில், மணற்பரப்பில் அமர்ந்தபடி, ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு பற்றிய நினைவுகளில் மூழ்கியிருந்தார்கள் நக்கீரன் மகளிரணியினர்.
காவேரி: அந்தத் துப்பாக்கிக் கொலைகள், மாணவிகள் மனதில்கூட எப்படிப்பட்ட கொந்தளிப்பை உண்டாக்கி இருக்கு பாத்தீங்களா? ஆமா அதை விசாரிக்கிறதுக்காக நீதிபதி அருணா ஜெகதீசனம்மா தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டதே என்னாச்சு பரணி?
பரணி: தீவிரமா விசாரணை நடந்து கொண்டிருப்பதாகத்தான் செய்திகள் வருது. விசாரணைக் கமிஷன் முன் ஆஜராகணும்னு முதல்ல கிளாஸ்டன் என்கிறவருக்கு சம்மன் அனுப்பினாங்க.
மல்லிகை: கிளாஸ்டன் என்பவர் துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரில் ஒருத்தர். கமிஷன் ஊழியர்களின் கவனக்குறைவால் அப்படி நடந்துவிட்டதாகச் சொன்னாங்க.
பரணி: அதே மாதிரி இப்ப புதுசா ஒரு சம்மனை எடுத்துக்கினு தாசில்தாரும் ஊழியர்களும் கந்தையா என்பவர் வீட்டுக்குப் போனாங்க. அவர் மனைவி செல்வமணிகிட்ட சம்மனைக் குடுத்து, "கட்டாயம் உங்க கணவரை விசாரணைக்கு வரச் சொல்லுங்கம்மா' என்றார்கள். அந்தம்மா தேம்பித் தேம்பி அழுதுச்சாம்.
பவானி: ஏனுங்க அழணும்? சம்மனைப் பாத்துப் பயந்துட்டாங்களோ?
பரணி: இந்த கந்தையாவும் கொல்லப்பட்ட 13 பேர்ல இன்னொருத்தர்தான். எம் புருஷனைச் சுட்டுக் கொன்னு ரோட்ல மூடிப் போட்டிருந்தாவ. "மூளை வளர்ச்சி இல்லாத பையனை வச்சுக்கிட்டு நான் படுறபாடு ஊருக்கே தெரியும். செத்துப் போனவர்ட்ட எப்படிங்க விசாரிக்கப் போறீங்க'னு அந்தம்மா கேட்டுச்சாம். சம்மன் கொண்டுபோன தாசில்தாரும் ஊழியர்களும் தலையத் தொங்கப் போட்டுக்கினு திரும்பிப் போனாவளாம்.
காவேரி: பவானிசாகர் எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு பேசி முடிச்சிருந்த சந்தியாங்கிற பெண்ணைக் காணலைனு சொன்னாங்களே. கண்டுபுடிச்சிட்டதா தகவல் வந்ததே... 12-ஆம் தேதி எம்.எல்.ஏ.வுக்கு கல்யாணம் நடக்கும்தானே?
பவானி: எம்.எல்.ஏ.வுக்கு குறிப்பிட்ட தேதியில் கல்யாணம் நடக்கும்ங்க. பொண்ணு சந்தியா இல்லீங்க. வேற பொண்ணுங்க. அவசரமா பேசி முடிச்சு ரகசியமா வச்சிருக்காங்க.
மல்லிகை: அந்தப் பொண்ணு சந்தியாவை எங்கே கண்டுபிடிச்சாங்களாம்?
பவானி: மணப்பாறைல தன்னோட தோழி வீட்ல இருந்திச்சாம். கண்டுபிடிச்சு போலீஸ் கூட்டி வந்து கோபி கோர்ட்ல, நீதிபதி பாரதி பிரபா முன்னாடி நிப்பாட்டிட்டாங்க. ""எனக்குக் கல்யாணத்தில விருப்பமில்லீங்க மேடம். அப்பாம்மா கட்டாயப்படுத்தினாங்க. அதனால வீட்டை விட்டுப் போனேன்''னு நீதிபதியிடம் சொல்லுச்சுங்க அந்தப் பொண்ணு. ஆனால் உண்மையான காரணத்தை போலீஸ்காரங்ககிட்ட சொன்னுச்சுங்களாம்.
காவேரி: உண்மையான காரணம் என்னவாம்?
பவானி: மாப்பிள்ளை வயசுதானுங்க காரணம். ஒண்ணு, ரெண்டு இல்லை. இருபது வயசு வித்தியாசம்ங்க. ""எங்க அப்பா வயசுங்க. என்னால எப்படி கழுத்தை நீட்ட முடியும்''னு கேட்டுச்சாம் அந்தப் பொண்ணு. எம்.எல்.ஏ. ஈஸ்வரன் அந்தப் பொண்ணுகிட்ட போன்ல கெஞ்சினாராம். "வயசானா என்ன சொத்து சுகத்தை யோசி. என் பதவியைப் பற்றி யோசி. நம்ம கல்யாணம் சி.எம். தலைமையில நடக்கும். எவ்வளவு பெரிய புகழ். எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பாரு. கணக்கு சரியா வரும்'னு சொன்னாருங்களாம் எம்.எல்.ஏ., சந்தியா விரும்பலை.
மல்லிகை: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியத்தின் கணவர் ஜாகீர் உசேனை தன்னோட வீட்டுக்கு வரவச்சு, அமைச்சர் தங்கமணி, ""யோவ், ஒவ்வொரு வீட்டுக்கும் போய் வாங்குவியா? உன்னால எனக்குக் கெட்ட பெயர் வந்துடும் போல''னு ரொம்ப கோபப்பட்டாராமே?
பவானி: ஜூலை 2016-இல் இருந்து ஆசியா மரியம்தான் நாமக்கல் கலெக்டர். படிப்படியா ஐ.ஏ.எஸ். அந்தஸ்துக்கு வந்தவர். காவிரி பாயும் மாவட்டம் இல்லியா... அதான் வரும்படிய காவிரி மணல் போல பொக்லைன்ல அள்ளலாம். ஜெ. உயிரோட இருந்தவரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.வி.பி. பாஸ்கர்தான் கலெக்டரம்மாவுக்கு ஆல் இன் ஆலா இருந்தாராம். இப்ப எம்.எல்.ஏ.வை அண்ட விடுறதில்லீங்க. எல்லாமே கணவர் ஜாகிர் உசேன்தானுங்க.
மல்லிகை: கலெக்டரா வரும்போது அத்தனைபேரும் நெருப்பா இருக்காங்க. இல்லைனா இருக்கிறா மாதிரி காட்டிக்கிறாங்க. அப்புறமா... பாதிப் பேரு... சரிதான் அரசு எவ்வழி அதிகாரிகள் அவ்வழி.
வாணி: என் செல்போன்ல ஒரு லேடியோட வாய்ஸ் ரெக்கார்டு இருக்குங்க. இப்ப ஆன் பண்றேன். இந்த வாய்சுக்குச் சொந்தக்காரர் யார்னு சொல்லுங்க... சரிங்களா? ரெடி...! ""ஏய்.. நீங்கள்லாம் யாரு? வெறும் பப்ளிக். நீங்கள்லாம் எங்கூடப் பேசுறதே தப்பு. என்னைக் கேள்வி கேட்க நீங்க யாரு? நான் யார் தெரியுதா? ஆபீஸரு'' கேட்டீங்கள்ல சொல்லுங்க இந்த வாய்ஸ் யாரோடது?
மல்லிகை: புதுக்குரலா இருக்கு. ஆனா ரொம்ப அகம்பாவம் பிடித்த ஒரு ஆபீஸர்.
காவேரி: வாணி! நீங்களே சொல்லிடுங்களேன்... இது யாரோட குரல்?
வாணி: ஹர்சினி. அறநிலையத்துறையின் திருப்பூர் மாவட்ட உதவி ஆணையரா இருக்காங்க. அவங்க ஆபீஸ் கதவுல 50 ஆயிரத்துக்கு வாங்கின சி.சி.டி.வி. கேமரா பொருத்தியிருக்காங்க.
பரணி: கேமரா பொருத்துனது தப்பா?
வாணி: அது தப்பில்லீங்க. சேவூர் லட்சுமி நரசிம்மர் கோயில் அர்ச்சகர்கள் தட்டில் விழுந்த தட்சணைகளை தட்டிப்புடுங்கி அந்தக் காசுல வாங்கிப் பொருத்துனதுதான் தப்புங்க.
மல்லிகை: தட்டுகள்ல அவ்வளவா விழுகுது?
வாணி: அது மட்டுமில்லீங்க. திருப்பூர் மாவட்ட அவினாசியில இருக்கிற அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரெண்டு கல்யாண மண்டபங்களை ஐநூற்றுவகை கொங்குச் செட்டியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவிச்சாங்க. அதை மீட்க வக்கீல் சத்தியமூர்த்தியும் தோழர்களும் முன்னின்று போராடி உயர்நீதிமன்றத்துக்கும் போனாங்க. இரண்டு கல்யாண மண்டபங்களும் அறநிலையத்துறைக்குச் சொந்தம்னு தீர்ப்பு வந்திருச்சு. தீர்ப்பு வந்து ரெண்டு மாசமாச்சு. இன்னும் அதை திறக்கலை இந்த ஹர்சினி அக்கா.
காவேரி: அதுக்குனு நிறைய விதிகள் இருக்கும்ல.
வாணி: அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீங்க மேல்முறையீட்டுக்குப் போங்க. அங்கே உங்களுக்குத்தான் தீர்ப்பு வரும். அதுவரைக்கும் அந்த ரெண்டு மண்டபம் பத்தி நான் பேசவே மாட்டம்னு எதிரிகள்ட்டயே சொல்லியிருக்காங்களாம்.
காவேரி: குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணியில ஏதோ சலசலப்பாமே?
பரணி: அங்கே ரஜினி மன்றம் ஆரம்பிச்சதில் இருந்து, மகளிர் அணினா அது ஈஸ்வரிதான். ரஜினிக்கே அறிமுகமானவங்க ஈஸ்வரி. அவங்கதான் மா.செ. இப்ப என்ன பிரச்சினைனா? ஆக்டிவ்வா வேலை செய்ற பல பெண்கள் ரஜினி மக்கள் மன்றத்தில் சேர்ந்திருக்காங்க. மா.செ. பதவியை அவங்க கைப்பத்திருவாங்களோ என்ற பயத்தில் அவங்களையெல்லாம் ஈஸ்வரி டார்ச்சர் பண்றாங்களாம். ஈஸ்வரி மேல் நிறைய புகார்கள் தலைமைக்கு போயிருக்காம்.
மல்லிகை: தலைமை என்றாலே புகார்களுக்கான களஞ்சியம்தானே. பனிமய மாதாவை வேண்டிக்கினு எந்திரிங்க இருட்டப்போகுது.
-பரமசிவன், ஜீவாதங்கவேல், மணிகண்டன், இளையராஜா