நெல்லுக்கு வேலி அமைத்த சீமை. தொன்மை மாறாத நெல்லையப்பர் காந்திமதியம்மை கோயிலுக்குள் உட்கார்ந்து, கால்களைத் தடவிக்கொண்டார்கள் நக்கீரன் மகளிரணியினர்.
காவேரி: இப்படிப்பட்ட பெரிய கோயில்கள்ல இதுதான் சிரமம். சாமியைத் தரிசனம் பண்ணிட்டு காந்திமதி அம்மையைக் கும்பிடுறதுக்கு நூறு மீட்டர், இருநூறு மீட்டர் நடக்க வேண்டியிருக்கு.
மல்லிகை: அந்தக் காலத்துல வயசானவுக வாக்கிங் போறதுக்காக இப்பிடிக் கட்டியிருக்காக. சிதம்பரம், ஸ்ரீரங்கம், காஞ்சி, மதுரை, திருவாரூர், ராமேஸ்வரம் எல்லா கோயில்லயும் வெளிப்பிரகாரத்தை மூணுதரம் சுத்துனம்னா ரெண்டுகிலோமீட்டர் வாக்கிங் போன மாதிரிதான்.
பரணி: பங்களாக்களைக்கூட இப்ப பிரமாண்டமாத்தானே கட்டுறாவ. பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள்ல ஒரு எம்.எல்.ஏ.வா தினகரன் அணியில நிக்கறாவளே விளாத்திகுளம் உமாமகேஸ்வரி... அவிய எட்டையபுரம் சண்முகவேல் நகர்ல ஒண்ணேகால் கோடில ஒரு பங்களா கட்டி பால்காய்ச்சியிருக்காக. துணைக்கு இருக்கட்டுமேன்னு ம.தி.மு.க. ஒ.செ. ஒருத்தரோட பெரிய தென்னந்தோப்பையும் வாங்கிப்போட்டிருக்காவளாம்.
பவானி: ஏனுங்க... இதே உமாமகேஸ்வரி ஆல் இந்தியா பர்மிட் லாரிகள் பன்னிரண்டை வாங்கி ஆந்திர விசாகப்பட்டினத்துக்கு அனுப்பிவச்சதை சொல்ல மறந்திட்டீங்களா?
மெரீனா: அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்க்கா... சரியான நேரம் அமைஞ்சு சேரவேண்டிய இடத்துல சேர்ந்தா மூணு கோடியும் காரும் வாங்கலாம். வருமானத்துக்கு வழியில்லாமப் போச்சேனு புலம்புனா மாதாமாதம் மாமூலா இருவத்தஞ்சு லட்சமும் வாங்கலாம். வர்றதை வச்சு மேலேமேலே ஏறவேண்டியதுதானே.
பரணி: மேலேமேலேனு சொன்னதும்தான் ஞாபகம் வருது. நம்ம நெல்லை ஆட்சியரம்மா ஷில்பா சதீஷ் இருக்காங்களே... அவிய 115 அடி உயரமுள்ள இரும்பு ஏணியில ஏறி இறங்கி அதிகாரிகளையும், பொதுமக்களையும் அசத்திப்பிட்டாவ.
மெரீனா: இன்னா மேட்டரும்மே?
பரணி: சேரன்மகாதேவி பக்கத்துல கூனியூர் ஏரியாவுல வயித்துப்போக்கு வாந்தின்னு சுகக்கேடாகி, ஆஸ்பத்திரியெல்லாம் ரொம்பிருச்சு. எல்லாம் குடிதண்ணியால ஏற்படுற வியாதினு பொதுமக்களும் டாக்டர்களும் சொன்னாவ. கூனியூருக்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் மேல்நிலைத் தொட்டியக் காட்டி அடிக்கடி சுத்தப்படுத்துறீங்களா? மருந்து போடுறீயளான்னு கேட்டிருக்காவ. அதெல்லாம் கிளீனா இருக்கு மேடம்னு ஆபீஸர்மாரு சொன்னாவளாம்.
காவேரி: பொம்புளைதானே... 115 அடி இரும்பு ஏணியில ஏறி, வாட்டர் டாங்க பார்க்கவாப் போறாங்கனு மெத்தனமா நெனச்சு பொய் சொல்லிப்பிட்டாங்க அப்பிடித்தானே?
பரணி: ஆனால் கலெக்டரம்மா நம்பலை. கடகடனு ஏறிட்டாவ. வாட்டர் டாங்க்ல புழுவும் பூச்சியுமா நாத்தம் தாங்கலை. அரை அடி, ஓரடிக்கு சகதி இருந்திருக்கும்போல... ஏரியாவுல இருக்கிற அத்தனை மேல்நிலைத் தொட்டிகளையும் கழுவி கிளீனாக்கி மருந்து போடணும்னு சொல்லி எச்சரிச்சிட்டுப் போனாவளாம்.
பவானி: அவங்க மாவட்ட ஆட்சியர். தனக்கு கீழ வேலை செய்றவங்களை வார்ன் பண்ணலாம்ங்க. அவங்களும் பணிவு காட்டுவாங்க. ஆனால் ஒரு டி.ஆர்.ஓ.வோ, ஆட்சியரின் நேர்முக உதவியாளரோ ஒரு ராஜ்யசபா எம்.பி.யை எச்சரிக்க முடியுங்களா?
காவேரி: எந்த எம்.பி.? எந்த டி.ஆர்.ஓ?
காவேரி: கேரள மக்களுக்கு அனுப்பவேண்டிய நிவாரணப் பொருட்கள் எல்லாம் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தினம்தினம் நிறைய வருதுங்க. அதையெல்லாம் அனுப்பவேண்டிய பொறுப்பை டி.ஆர்.ஓ. ரேவதியிடமும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுகன்யாவிடமும் ஒப்படைச்சிருக்காங்க.
மெரீனா: இதுல ராஜ்யசபா எம்.பி. விஜயகுமாருக்கு என்ன ரோல்?
பவானி: ராஜ்யசபா எம்.பி. விஜயகுமார், தினகரன் அணிக்காரர். அவர்கிட்ட இருந்த மா.செ. பதவியை ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். தலைமை புடுங்கிப்பிடிச்சு. புடுங்கி, குமரி கிழக்குக்கு அசோகனையும், மேற்குக்கு ஜான்தங்கத்தையும் போட்டுப்பிட்டாவ. இப்ப வலுவில்லாத எம்.பி. விஜயகுமாரை, எந்த அதிகாரியும் மதிக்கிறதில்லை. எந்த விழாவுக்கும் கூப்பிடுறதுமில்லை. அதனால அழையா விருந்தாளியா கலெக்டர் ஆபீசுக்கு தினமும் வர்றாரு. யாரு நிவாரண உதவி செய்தாலும் அவுக பக்கத்துல போய் நின்னு போஸ் குடுக்கிறாரு. அவரு வந்தாலே டி.ஆர்.ஓ. ரேவதியும், ஆட்சியரின் உதவியாளர் சுகன்யாவும் ஓட்டம் புடிக்கிறாக. இவரு எப்ப போவாருன்னு ஒளிஞ்சிருந்து பாக்குறாவ.
காவேரி: ஆட்சியர் பிரசாந்த் நேரே என்ன செய்றாரு?
பரணி: எம்.பி.யை பார்த்ததும் கலெக்டர் தன்னோட அறைக்குள்ள ஓடி பதுங்கிடுறாரு. அதிகாரிங்க ஆட்சியில இருக்கிற கட்சிக்காரங்களை பகைக்க முடியுமா?
பவானி: ஆசியன் விளையாட்டுல நம்ம வீராங்கனைகளோடு பங்கு எப்படியிருக்கு அதைச் சொல்லுங்க...
மெரீனா: கபடியில தோத்துப்போயிட்டம். துப்பாக்கியில ராகி சர்னோபத்ங்கிற 27 வயது மராட்டி பொண்ணு சாதனை படைச்சு தங்கம் வாங்கியிருக்கு... பார்ப்போம், பார்ப்போம் எத்தனை பி.டி.உஷாக்கள் வர்றாங்கனு பார்ப்போம்.
-ஜீவாதங்கவேல், மணிகண்டன், நாகேந்திரன்