சென்னை -கடற்கரை ரயில் நிலையம்வரை ரிட்டன் டிக்கெட் எடுத்துக்கொண்டு, வேளச்சேரி ஸ்டேஷனில் ரயிலில் ஏறி அமர்ந்தார்கள் நக்கீரன் மகளிரணியினர். பறக்கும் ரயிலில் தொடங்கியது கச்சேரி.

மல்லிகை: கொடி பறக்குது கொடி பறக்குது. ஊருதோறும் கம்பம்தோறும் ம.நீ.ம. கொடி பறக்குது.

thinakatchery

Advertisment

நாச்சியார்: ஆமாவாம்ல... ஏத்தி ஏத்தி உள்ளங்கைகள் காய்ச்சிப் போச்சாம். அண்ணாந்து பார்த்து பார்த்து பிடரியெல்லாம் வீங்கிப் போச்சாம்ல நடிகை ஸ்ரீபிரியாவுக்கு?

மல்லிகை: திண்டுக்கல் மாநகர்ல பல இடங்கள்ல கொடியேத்திவிட்டு மக்கள் நீதி மய்யம் செயற்குழு உறுப்பினர் நடிகை ஸ்ரீபிரியாவும் "கட்டிப்பிடி' கவிஞர் சிநேகனும் வத்தலகுண்டுக்கு வந்தாக. காளியம்மன் கோயில் பக்கத்தில் கம்பத்தில ஏத்தக் கொடிக் கயித்தை ஸ்ரீபிரியாகிட்ட குடுத்தாக. ஸ்ரீபிரியா ஏத்துனாரு. பாதியில போகும்போது கயிறு, பூமுடிந்த கொடி எல்லாம் மொத்தமா அந்து ஸ்ரீபிரியா தலையில விழுந்திருச்சு.

sripriyaகாமாட்சி: அய்யய்யோ

Advertisment

நாச்சியார்: கம்பம் விழுகலை. கொடி மூட்டையும் கயிறும்தான் விழுந்துச்சாம்.

கோமுகி: அப்புறம்?

மல்லிகை: அப்புறமென்ன... ஒரு மணிநேரம் காத்திருந்து, கம்பத்தை கழட்டி மாட்டி கொடியை ஏத்திப் பறக்க விட்டுட்டு, ஸ்ரீபிரியாவும் சிநேகனும் கோயில்பட்டிக்கு போனாக. அங்கே முந்நூறு பெண்கள் வரவேற்றாங்களாம்.

காவேரி: ஆக... ஸ்ரீபிரியா அரசியல்வாதி ஆகிவிட்டாங்க. சரிதான். ஆனால் அரசியல்வாதி ஆன எல்லாப் பெண்களும் பதவிகளுக்கு வந்துவிட முடியாது.

நாச்சியார்: எந்தப் பொண்ணோட பதவியை எந்த ஆண் பிடுங்கிக்கொண்டார்?

காவேரி: நாகை மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளரா இருப்பவர் செல்வி. போன தடவை, மயிலாடுதுறை நகர கூட்டுறவு வங்கியின் துணைத்தலைவரா இருந்தவர். இந்த முறை கூட்டுறவு வங்கியின் தலைவராகும் நம்பிக்கையுடன் இருந்தவர். அமைச்சரும் மா.செ.யுமான ஓ.எஸ்.மணியனுக்கும் வக்கீல் செல்வியைத் தலைவராக்குவதில் சம்மதம்தான். ஆனால் ந.செ. செந்தில்நாதனைத் தலைவராக்கி, எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணனின் மகன் சரவணனைத் துணைத் தலைவராக்கி விட்டார்கள். அமைச்சரிடமும் எம்.எல்.ஏ.விடமும் கொந்தளித்துக் குமுறிக் கொட்டித் தீர்த்து விட்டார் வழக்கறிஞர் அணிச் செல்வி.

நாச்சியார்: மயிலாடுதுறை எம்.எல்.ஏ. மகன் சரவணன், அ.தி.மு.க.வில் என்னவாக இருக்கிறார்?

காவேரி: இந்தக் கேள்வியைத்தான் வழக்கறிஞர்அணி செல்வியும் எம்.எல்.ஏ.விடம் கேட்டார்.

மல்லிகை: என்ன சொன்னாராம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன்?

lawyerselviகாவேரி: என்னத்தை சொல்லுவார்? "எந்தப் பொறுப்புலயும் என் மகன் இல்லை. அதுனால என்ன? என் மகன் சரவணன் ஆசைப்பட்டான். கேட்டால் நீ விட்டுக்கொடுக்க மாட்டாய். என் மகன் கேட்டு இல்லைனு என்னால சொல்ல முடியுமா? அதான் கடைசி நேரத்தில் அறிவிச்சோம். சரிதான் போ'னு சொல்லி எரிந்த கோபத்தில் டீசலை ஊத்தினாரு எம்.எல்.ஏ.

கோமுகி: மணல் கொள்ளையர்கள், லாட்டரி விற்பனையாளர்கள், பாண்டிச்சேரி "சரக்குக்' கடத்தல் மன்னன்கள் என்று பல தரப்பும் சேர்ந்து, மணலூர்பேட்டை, அரகண்டநல்லூர், திருக்கோயிலூர், திருவெண்ணெய்நல்லூர், காணை, வளவனூர், கண்டமங்கலம் ஆகிய காவல்நிலையங்களுக்கு மாதந்தோறும் தலா 5 லட்சம் வரை மாமூல் படியளக்கிறார்களாம். இப்படிப்பட்ட ஸ்டேஷன்களுக்கு நாணயமான மகளிர் இன்ஸ். வந்தால் விட்டுவைப்பார்களா?

காவேரி: யாரு அந்த மகளிர் இன்ஸ்பெக்டர்?

கோமுகி: லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய மகளிர் இன்ஸ்பெக்டர் லட்சுமியை 3 மாதத்துக்கு முன்னாடி வளவனூர் ஸ்டேஷனுக்கு அனுப்புனாங்க. "ஏம்மா... ரொம்ப மோசமான ஏரியா. உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். ரொம்ப எச்சரிக்கையா வேலை செய்யணும்'னு சொல்லித்தான் இங்கே அனுப்புனாங்களாம்.

மல்லிகை: இன்ஸ்பெக்டர் லட்சுமியின் உயிருக்கு விலை வச்சது யாரு?

subinspector

கோமுகி: புதுச்சேரியில இருந்து பல மாவட்டங்களுக்கு "சரக்குக்' கடத்தியவன் ஆன்றோர்பாளையம் பொக்கை சரவணன். எத்தனையோ ஸ்கெட்ச் போட்டும் போலீசாரால் அவனைப் பிடிக்க முடியலை. சரக்கு வாகனத்தோட அந்தப் பொக்கையை பிடிச்சு அரெஸ்ட் பண்ணாங்க இன்ஸ் லட்சுமி. அதுமட்டுமில்லை. 4 வயசுப் பெண் குழந்தையை பாலியல் கொடுமை செய்தவனையும், இளம்பெண்ணைக் கடத்தி கற்பழித்த 4 வெறியர்களையும் உடனடியாக அரெஸ்ட் செஞ்சாங்க. அதே மாதிரி மணல் திருடர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டினாங்க.

நாச்சியார்: இப்படிப்பட்டவங்களை உடனே டிரான்ஸ்பர் செய்ய வைப்பாங்க. இல்லைனா ஆளைக் காலி பண்ண நெனைப்பானுங்க.

கோமுகி: அதேதான். பெண்ணையாற்றில் நள்ளிரவில் மணல் திருடிக்கொண்டிருந்த கும்பலை பிடிப்பதற்காக ஒரு பள்ளத்தில் ஒளிந்திருந்தார் இன்ஸ்பெக்டர் லட்சுமி. இதைத் தெரிந்துகொண்ட மணல் மாஃபியா கும்பல் அந்தப் பள்ளத்திற்குள் லாரியை கவிழ்த்து, இன்ஸ்பெக்டரை கொலைசெய்யத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.

லோடு மணலுடன் லாரி தன்னை நோக்கி வருவதைக் கண்ட இன்ஸ்பெக்டர், மின்னல் வேகத்தில் ஜம்ப் பண்ணி மேலே ஏறிட்டாங்க. லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில்...

காவேரி: கொலைகாரப் பாவிகளை சும்மாவா விட்டாங்க?

கோமுகி: மூணுபேரை அரெஸ்ட் பண்ணி, பொக்லைனையும் மூணு லாரிகளையும் பறிமுதல் செஞ்சிருக்காங்க. உயிரைப் பத்திக் கவலைப்படாமல் செயல்பட்ட இன்ஸ்பெக்டர் லட்சுமியை எஸ்.பி. ஜெயக்குமாரும், டி.ஐ.ஜி. சந்தோஷ்குமாரும் மனம்திறந்து பாராட்டியிருக்காங்க.

மல்லிகை: நம்மளை நம்ம ரசிகர்கள் பாராட்டுவாக. புறப்பட்ட இடத்துக்கு திரும்பியாச்சு. இறங்குங்க.

-சக்தி, எஸ்.பி.சேகர், செல்வகுமார்