உலகின் இரண்டாவது நீள கடற்கரையான சென்னை மெரினாவில், திருமாமணி கண்ணகி சிலையருகில், வெள்ளித்தூள் பரப்பில் அமர்ந்த நக்கீரன் மகளிரணியினரின் கச்சேரி, தமிழக மகளிர் காங்கிரஸ் கோஷ்டிகளின் மோதலுடன் தொடங்கியது.
காவேரி: சத்தியமூர்த்தி பவனுக்குள்ள உன்னை எப்படி உள்ளே விட்டாங்க?
மெரினா: ஜான்ஸிராணிதான் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி. அவுங்க கோஷ்டியில ஒருத்தர் என் தோஸ்த். அவரோட நிழல்மாதிரி ஒட்டிகினே நானும் போனனா... ஆரம்பிக்கும் மின்னயே நக்மா கோஷ்டியினர் கரைச்சலை ஆரம்பிச்சுட்டாங்க. குஷ்பு கோஷ்டி, விஜயதாரணி கோஷ்டினு ஆளாளுக்கு கூச்சல்... நல்லவேளை அடிதடி, ஜாக்கெட், சேலைக் கிழிப்புனு போகலை.
நாச்சியார்: ஜான்ஸிராணி கம்ப்ளைண்டால நக்மாவை தமிழகப் பொறுப்பாளர் பதவியில இருந்து நீக்கிப்பிட்டாக. நக்மா இப்ப பாண்டிச்சேரிக்கு மட்டும்தான்னு நீ சொன்னதா ஞாபகம்?
மெரினா: ஆமா அதுதான் நெஜமாலுமே நடந்தது. தமிழகத்துக்கான புதிய பொறுப்பாளர் பாத்திமா ரோஸ்லின் முன்னிலையில்தான் அன்றைக்கி கூட்டம் நடந்துச்சு. பொறுப்புகளில் இருந்த நக்மா ஆதரவாளர்கள்தான் கூச்சல் குழப்பத்தை உண்டாக்கினாங்க.
மல்லிகை: கோஷ்டிகளை வரமாக வாங்கிக்கொண்டு தோன்றிய கட்சி அது. போகட்டும்... கடைசியா என்னதான் நடந்துச்சு.
மெரினா: நக்மா ஆதரவாளர்களை பொறுப்புகளில் இருந்து நீக்கிவிட்டு, நான் சொல்ற மகளிரை நியமிக்கணும்னு புதுசா ஒரு பட்டியலை டில்லிக்கு அனுப்பியிருக்காங்க ஜான்ஸிராணி.
நாச்சியார்: எட்டு மாதமா புதுக்கோட்டை சப்-கலெக்டரா இருந்தாக சரயு ஐ.ஏ.எஸ். இதுக்குள்ள எங்க மாவட்ட மக்களுக்கு சொந்த பந்தமாகவே மாறிப் போயிருந்தாக. மணல் களவாணிகளைப் புடிச்சாக. லைசென்ஸ் இல்லாத பார்களையெல்லாம் மூடுனாக. ஏழை பாளைகளை எந்திரிச்சு வந்து பார்த்தாக. நெறைய ஸ்கூலுகளுக்குப் போனாக. அப்பிடிப்பட்டவுகளை கடலூருக்கு மாத்திப்பிட்டாக.
மல்லிகை: சரியானவங்களை எங்கயுமே இருக்கவிட மாட்டாகள்ல.
நாச்சியார்: சரயும்மாவை வழியனுப்புறதுக்காக ஆபீசுக்கும் வீட்டுக்கும் வந்த கூட்டத்தை சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க. அம்புட்டுக் கூட்டம். ரெண்டு கண்ணும் தெரியாத ஒருத்தரு வந்தாரு. ""சார் எனக்கு பார்வையில்லை. நாப்பது வருஷமா அலைஞ்சேன். எனக்கு வீட்டுமனைப் பட்டா கெடைக்கலை. இந்த அம்மா வந்ததும் என்னை மாதிரி பலருக்கு பட்டா தந்தாக. உங்க செல்போன்ல ஒரு போட்டா எடுத்து பிரிண்ட் போட்டுத் தாங்க. எங்க வீட்ல பிரேம் போட்டு மாட்டணும்னு'' ஸ்கூல் வாத்தியார் சரவண மணிகண்டன்கிட்ட கெஞ்சிக்கினு இருந்தாரு. அந்த அம்மா எப்பிடி மக்களோட மனசுல இடம் புடிச்சிருக்காக பாருங்க.
மல்லிகை: அதிகாரிக செய்ற உதவிகளை அன்னாடம்காய்ச்சிகள் ஆயுசுக்கும் மறக்கவே மாட்டாக. அப்பிடித்தான் மதுரை மாநகராட்சி ஆணையர் அனிஸ் சேகரை பதினைஞ்சு மூதாட்டிகள் தெய்வமா நெனைக்க ஆரம்பிச்சிருக்காங்க.
காவேரி: அனிஸ் சேகர் முன்கோபினு கேள்விப்பட்டேனே?
மல்லிகை: மதுரை காந்தி மியூசியம் ரோட்ல 15 பாட்டிமார்கள் கொய்யாப்பழம், இலந்தை பழம், முந்திரி பழம்னு விக்கிறாங்க. அவுங்கள்ட்ட பப்பாளி வாங்கிச் சாப்பிட்ட ஸ்கூல் பசங்க பழத்தைச் சாப்பிட்டு தோலை எறிஞ்சிருக்கானுங்க. அந்தத் தோலு அந்த ரோட்ல வந்த கமிஷனர் அனிஸ் சேகரோட கார் மேல விழுந்திருச்சாம். கமிஷனர் பயங்கர டென்ஷனாயிட்டாராம். அடுத்த அரைமணி நேரத்தில் போலீஸ் பட்டாளம் வந்துச்சு... 15 பாட்டிமார்கள் பரப்பி வச்சிருந்த பழங்களை நடுரோட்ல தூக்கிக் கொட்டுச்சு. 15 பாட்டிகளையும் அங்கேருந்து வெரட்டிச்சு போலீஸ் படை.
மெரினா: இதுக்கோசரம்தான் கமிஷனரை தெய்வமா நெனைக்கிறாங்களாம்மே...
மல்லிகை: மிச்சம் மீதியையும் கேளும்மே... 15 பாட்டிகளும் மாநகராட்சி ஆணையர் வீட்டுக்குப் போனாக. ""நாங்க எல்லாம் மதுரையை சுத்தியிருக்கிற பூலாம்பட்டி, சத்திரப்பட்டி, வீரபாண்டி, காஞ்சாரம் பேட்டைகளை சேர்ந்தவுக. எங்க தோட்டங்கள்ல வெளைஞ்சதைத்தான் கொண்டாந்து விக்கிறம். எங்க வயித்தில அடிக்க வேணாம்னு ஒம் புருஷன்ட்ட சொல்லுங்கத்தானு கமிஷனர் மனைவிகிட்ட கெஞ்சினாக. அந்தம்மாவும் பாட்டியளுக்கு சூஸ் போட்டுக் குடுத்து அனுப்பிட்டு கமிஷனர்ட்ட சொன்னாகளாம். கமிஷனர் மனைவி கிருபையில பாட்டிகள் இப்ப மறுபடியும் பழங்கள் விக்க ஆரம்பிச்சுட்டாக. அந்த வழியா போற கமிஷனர் காரை நிப்பாட்டி காசு குடுத்து பழம் வாங்கிட்டுப் போறாரு.
நாச்சியார்: தமிழக திருநங்கை சத்தியஸ்ரீ ஷர்மிளா வழக்கறிஞராக தமிழகம், பாண்டிச்சேரி பார் கவுன்சில்ல பதிவு செய்திருக்கிறார். இந்தியாவின் முதல் மூன்றாம்பால் வழக்கறிஞர் இவர்தான். வாழ்த்துகள் குவியுது.
மெரினா: நாமளும் வாழ்த்து அனுப்பிவிடுவோம். சாதனை புரியட்டும்; திருநங்கையருக்கு வழிகாட்டியாகட்டும்.
-இளையசெல்வன், இரா.பகத்சிங், அண்ணல்