குமுளி -தேக்கடியில் இருந்து படகில் புறப்பட்ட நக்கீரன் மகளிரணியினருக்கு, தூரத்தே தென்பட்ட முல்லைப் பெரியாறு அணைக்கட்டைக் காட்டினார் படகோட்டி. அணைக்கட்டைத் தரிசித்துத் திரும்பிய மகளிரணியினர் லோயர் கேம்ப்பிற்கு வந்து, பென்னிகுக் திருவுருவச் சிலைக்கு மாலை மரியாதை செய்தார்கள். மணிமண்டபத்திலேயே தங்கள் கச்சேரியைத் தொடங்கினர்.
வாணி: ஏனுங்க மல்லிகை. உங்க தேனி மாவட்டத்துக்கு புதுசா வந்த ஆட்சியர் பல்லவியை ஒடனே டிரான்ஸ்பர் செய்யோணுமிண்டு பயங்கர பிரஷ்ஷர் போகுதுண்டு கேள்விப்பட்டேனே... நெஜந்தானா அம்மணி?
மல்லிகை: வந்து நாலு மாசந்தான் ஆகுது. இதுவரைக்கும் ஆம்புளை ஆட்சியர்கள்தான் வந்தாக. இவங்கதான் முதல் பெண் கலெக்டர். வந்த கொஞ்சநாள்லயே நேர்மையானவுக, துணிச்சலானவுகனு பேரெடுத்திட்டாக. விட்டு வைப்பாங்களா துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். சாதிக்காரங்க?
பரணி: நேர்மையானவங்களை விட்டு வச்சா தப்புத்தண்டா பண்ண முடியாதில்ல?
மல்லிகை: அதேதான். போடி மேலத்தெரு, நடுத்தெரு, கீழத்தெருவுல இருக்கிற வி.ஐ.பி.க்கள் பலருக்கு கொட்டகுடி ஆத்துப்படுகையில நாப்பது ஏக்கர் ஐம்பது ஏக்கர்னு விவசாய நிலங்கள் இருக்கு. இவுங்கள்ல ஒவ்வொருத்தரும் கொட்டகுடி ஆத்துல பத்துப் பன்னெண்டு ஏக்கரை ஆக்கிரமிச்சு விவசாயம் பண்றாக. கொட்டகுடியில இருந்து போடிவரைக்கும் 30 கிலோமீட்டர்லயும் ஆத்தை ஆக்கிரமிச்சிருக்காங்க. இந்த ஆத்துத் தண்ணிய நம்பித்தான் போடியில, தேனியில விவசாயமும் நடக்குது. தாகமும் தீருது. தண்ணி வரத்து தடைபட்டதால ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றச் சொல்லி அதிரடி உத்தரவு போட்டாக ஆட்சியர் பல்லவி.
நாச்சியார்: புரிஞ்சிடுச்சு... புரிஞ்சிடுச்சு... கலெக்டரம்மாவை தூக்கியடிக்கலைனா ஆக்கிரமிச்ச எடமெல்லாம் கையை விட்டு ஆத்தோட சேர்ந்திடும். அதுனால துணை முதலமைச்சருக்கு சாதிக்கார ஆக்கிரமிப்பாளர்கள் நெருக்கடி குடுக்கிறாக சரிதானே.
காவேரி: மக்களுக்கு நல்லது செய்யோணும்னு நெனைக்கிற அதிகாரிகளை அதிகாரம் விட்டு வைக்காது மல்லிகை. மண்ணச்சநல்லூர் பேரூராட்சி நிர்வாக அலுவலர் பரமேஸ்வரியை ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி சஸ்பெண்ட் பண்ணிருக்காக. உண்மையான காரணம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பரமேஸ்வரிக்குத்தான் தெரியும்.
வாணி: அலுவலர் பரமேஸ்வரியோட சஸ்பெண்டுக்கு எம்.எல்.ஏ. பரமேஸ்வரிதான் காரணகர்த்தினு எப்படிச் சொல்றீங்க?
காவேரி: மண்ணச்சநல்லூர்ல, ஒரு பெட்ரோல் பங்குக்கும் குப்பைக் கிடங்குக்கும் பக்கத்தில எம்.எல்.ஏ.வுக்குச் சொந்தமான ஒண்ணரை ஏக்கர் இடம் இருக்கு. இந்த இடத்தை ஒட்டியிருக்கிற இடத்தை பஸ் டெப்போவுக்காக செலக்ட் பண்ணச் சொல்லி, எம்.எல்.ஏ. பிரஷ்ஷர் குடுத்திருக்காங்க. குப்பைக் கிடங்கும் பெட்ரோல் பங்கும் இருக்கு. அங்கே செலக்ட் பண்ண முடியாதுனு நிர்வாக அலுவலர் மறுத்திட்டாங்க. இன்னொண்ணு... அந்த பேரூராட்சியில எம்.எல்.ஏ. பரமேஸ்வரியோட அக்கா மகள் வேலை செய்யுது. அந்தப் பொண்ணு ஒரு ரெண்டு லட்சத்தை பாத்திருக்கு. அதையும் அலுவலர் பரமேஸ்வரி கண்டிச்சிருக்கு. "ஏண்டி, என் பேச்சையும் கேக்கலை... என் அக்கா மகளையும் கைநீட்டிப் பேசியிருக்கே... ஒரு வாரத்துக்குள்ள காட்டுறேண்டி நான் யாரு'னு... சவால் விட்டாங்களாம் எம்.எல்.ஏ., மறுவாரம் சஸ்பெண்ட்.
வாணி: ஒண்ணு சொல்லட்டுங்களா? உண்மையிலேயே சஸ்பெண்ட்... டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டியவங்க பலர் நின்ன இடத்தில நின்னு எட்டுக்கால் பூச்சி மாதிரி சேமிக்கிறாங்க.
நாச்சியார்: யாருத்தா அந்தச் சிலந்தி?
வாணி: கிணத்துக்கடவு வட்டாட்சியர் தெரியுங்களா? விமலாங்கிற அந்த அம்மணியோட வண்டி காரச்சேரி ரோட்லதான் அதிகமா நிக்குது. ஏன்னு சொல்லுங்க பார்ப்போம்?
மல்லிகை: மணல் கடத்தலை... மண் கடத்தலை... ஜல்லிக் கடத்தலை தடுக்குறதுக்காக நிக்கிறதோ?
வாணி: ஆமாமுங்க. கல்குவாரிகள்ல இருந்து அதிக லோடு ஏத்திட்டு வர்ற லாரிகளை மடக்குவாங்க. பத்தாயிரத்தில் தொடங்கி ஆயிரம்வரை டீலிங் நடக்குமுங்க.
நாச்சியார்: வரும்படி பாக்கத்தானா?
வாணி: அது மட்டுமில்லீங்க. கோயமுத்தூர்-பொள்ளாச்சி நெடுஞ்சாலையை 26 கிலோமீட்டர் தொலைவுக்கு நான்கு வழிச்சாலையா மாத்துறாங்க. கே.என்.ஆர்.ங்கிற ஆந்திர கம்பெனிதான் காண்ட்ராக்டர். அவங்க இந்த பகுதி விவசாய நெலங்கள்ல, அரசு அனுமதி இல்லாம எடுக்கிற மண்ணை லாரிகள்ல கொண்டு போறாங்க. அந்த லாரிகள் எந்த தடையும் இல்லாம போறதுக்கு வட்டாட்சியர் விமலா பாதுகாப்பா நிக்கிறாங்க.
மல்லிகை: அதுனால வட்டாட்சியருக்கு என்ன லாபம்?
வாணி: லாபம் இல்லாம, தன்னையும் தன் சொத்துகளையும் தானம் கொடுத்து வேலை செய்றதுக்கு தாசில்தார் விமலா என்ன பென்னிகுக்கா? இருட்டப் போகுது எந்திரிங்க கிளம்பலாம்.
-சக்தி, ஜெ.டி.ஆர்., அருள்குமார்