Skip to main content

திண்ணைக் கச்சேரி! : அமைச்சர் - அதிகாரி போட்டா போட்டி விளையாட்டு!

ராஜாஜி, அண்ணா, காமராஜர், பெரியார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர் ஆகியோரின் திருவுடல் அஞ்சலி முகப்பாக விளங்கிய ராஜாஜி ஹாலின் படிக்கட்டுகளில் அமர்ந்தபடி கச்சேரியைத் தொடங்கினார்கள் நக்கீரன் மகளிரணியினர்.

மெரினா: இங்கே இந்திராகாந்தியோட அஸ்தியைக்கூட அஞ்சலிக்காக வெச்சிருந்தாங்களாமே...!

thinaikatcheryகோமுகி: என் அப்பா இன்னோரு தகவல்கூட சொல்லிருயிக்கார். 1967-ல் முதலமைச்சரா இருந்த அண்ணா, அப்ப பொதுப்பணித்துறை அமைச்சரா இருந்த கலைஞருக்கு இதே ராஜாஜி ஹால்ல நடந்த சங்கீத நாடக சங்க விழாவில், சிறந்த திரைப்பட வசனகர்த்தா விருது குடுத்தாங்களாம்.

மல்லிகை: இந்த தூண்கள், கட்டடம் எவ்வளவு அழகா ஸ்ட்ராங்கா இருக்கு பார்த்தியா? 1802-ல் வெள்ளைக்காரன் கட்டுனதாம். 1895-ல் புதுப்பிச்சிருக்காக. ஆங்கிலேய அரசு நிகழ்ச்சிகளும் இசை நிகழ்ச்சிகளும் நெறைய நடந்திருக்கு.

பவானி: இசைக்கச்சேரி நமக்கெதுக்கு? திண்ணைக் கச்சேரியைத் தொடங்கலாம். விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கும் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ரீட்டா ஹரீஷ்தாக்கருக்கும் பனிப்போராமே... நெஜமுங்களா?

மெரினா: பனிப்போரில்லை... இடிமின்னல் போருன்னே சொல்லலாம். இந்தம்மா ஐ.ஏ.எஸ்., கை சுத்தம்னு பேரெடுத்திருக்கு. ஆனால் சர்வாதிகாரின்னும் சொல்றாங்க. ஜெ.கிட்ட கார்டன்ல செயலாளரா இருந்தவங்க. ஜெ.கிட்ட கத்துக்கினதை மினிஸ்டர்ட்ட காட்டுறாகம்மே.

ritaமல்லிகை: எந்த விஷயத்தில முட்டிக்கிறாக, மோதிக்கிறாக?

மெரினா: விளையாட்டு மேம்பாட்டு ஆணையமே முடங்கிக் கெடக்கும்மே. எட்டு மாவட்டத்தில ரெண்டு வருஷமா மாவட்ட அதிகாரி நாற்காலிகள் காலியாயிருக்கு. எல்லா விளையாட்டுகளுக்கும் பயிற்சியாளர்கள் பற்றாக்குறை. 90 அதிகாரிகள் பதவி உயர்வு கிடைக்காததால பொருமிக்கினு இருக்காங்க. "ஏம்மா, நீங்க நோட்ஸ் போட்டு அனுப்புனாதானே நாங்க செயல்படுத்த முடியும். சும்மா இருந்தா எப்பிடி'ன்னு அமைச்சர் கேட்டிருக்காரு. "இட் ஈஸ் மை பிஸ்னஸ்... அரசுக்கு எப்ப நோட்ஸ் குடுக்கணும்னு எனக்குத் தெரியும்'னு மொகத்துல அடிக்கிற மாதிரி சொல்லிப்பிட்டாங்களாம். இவங்க வெளையாட்டால விளையாட்டுத்துறை நொண்டியா கெடக்குது.

கோமுகி: தனக்கு வேண்டியவங்களை பல விளையாட்டுகளுக்கு பொறுப்பாளர்களா போட்டு வச்சிருக்காங்க ரீட்டா ஹரீஸ்தாக்கர். புதுசா அப்பாயின்ட்மெண்ட், பதவி உயர்வுகளைப் போட்டால், இந்தம்மாவோட பொறுப்பாளர்களைத் தூக்கவேண்டியிருக்கும்... அதுதான் மோதலுக்குக் காரணம்.

காமாட்சி: பேரணாம்பட்டு முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டைஇலை கனகதாரா இறந்துட்டாங்க தெரியுமா? முதலமைச்சர் இ.பி.எஸ்.ஸோ, துணை ஓ.பி.எஸ்.ஸோ இரங்கல் கூட தெரிவிக்கலை. அவங்க ஆசிரியையா இருந்தாங்க. ராஜினாமா பண்ணவச்சு சீட் குடுத்து எம்.எல்.ஏ. ஆக்கினாங்க ஜெ. மாவட்ட மகளிரணி து.செ.யா இருந்தவங்க.

பரணி: ஜெ. உசுரோட இருந்தவரை, ஒரு கிளைச்செயலாளர் இறந்தாலும் தனக்குத் தகவல் வரணும்னு உத்தரவு. "நமது எம்.ஜி.ஆர்.'லயும், "ஜெயா டி.வி.'லயும் இரங்கல் தெரிவிப்பாங்க. கட்சிக்காரங்க அதை ஒரு பெரும் கௌரவமா நெனைச்சாங்க. இப்ப எல்லாமே தலைகீழுங்க. கனகதாராவுக்கு அமைச்சர் வீரமணியும், நிலோபர்கபிலும் அஞ்சலி செலுத்தியிருக்காங்க. ஆனாலும் கட்சித் தலைமைங்கிறது முதலும் துணையும்தானுங்களே?

கோமுகி: இதுக்குத்தான் சொல்றது ஒரே தலைமை வேணும்னு.

பவானி: ஆமாமுங்க. திருடனைப் புடிக்கிறது ஒரு டிபார்ட்மெண்ட்... தண்டிக்கிறது வேறவொரு டிபார்ட்மெண்ட்டுனாலே பிரச்சினைதானுங்க. ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி பெயர் கலைவாணிங்க. இங்கே வந்த ஒரு வருஷத்துக்குள்ள பலகோடி மதிப்புள்ள புகையிலை, பான்மசாலா, குட்காவை புடுச்சு குடோன்களுக்கு சீல் வச்சிட்டாங்கங்க. போன வாரம்கூட கொங்கலம்மன் தெருவுல ஒரு அறையில பதுக்கி வச்சிருந்த ஒரு கோடி ரூபாய் புகையிலை போதைப்பொருட்களைக் கைப்பற்றினாருங்க. ஆனால், அதை ஸ்டாக் வச்சிருந்த ஆசாமிகளை அவங்களால ஒண்ணும் செய்ய முடியலைங்க.

thinaikatcheryமெரினா: அவங்களை ஏன் அரெஸ்ட் பண்ணலை?

பவானி: உணவு பாதுகாப்பு அதிகாரி கலைவாணியால் காவல்துறைக்கு பரிந்துரைதான் செய்ய முடியும். கைது செய்யும் அதிகாரம் போலீசுக்குத்தான். இவங்க பரிந்துரை செய்வாங்க. காவல்துறை கல்லா கட்டிட்டு ஒப்புக்கு ஏதாச்சும் நான்சென்ஸ் கேஸ் போட்டு மரியாதை செய்வாங்கங்க.

மல்லிகை: போலீஸ்ல எல்லாரையும் சகட்டுமேனிக்கு கொறை சொல்லாதிய. தேனி மாவட்டம் அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமியின் வீரதீரம் பற்றிக் கேள்விப்பட்டியளா? இன்னொரு வேலுநாச்சிதான்.

மெரினா: தங்கப்பதக்கம் வாங்கிருக்காம்மே.

மல்லிகை: இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி ஜீப்ல தனியா ரெய்டு போயிருக்காக. பொம்மிநாயக்கன்பட்டி பிரிவு ரோட்ல ஈஸ்வரன்கோயில் உண்டியலை உடைச்சு அள்ளிக்கினு டூவீலர்ல பறந்திருக்கானுக. இன்ஸ், ஜீப்ல விரட்டிப்போக... அவனுக டூவீலரை ரோட்ல போட்டுட்டு ஒத்தையடிப் பாதையில ஓடுனானுகளாம். இன்ஸ்பெக்டரும் ஜீப்பை விட்டுட்டு இறங்கி ஓடி ஒருத்தனைப் புடிச்சிருக்கு. பசக்குனு திரும்புன களவாணிப்பய கத்தியால இன்ஸ்பெக்டரம்மா கையைக் குத்தி கிழிச்சிருக்கான். இன்ஸ் அசரலை... முத்துக்கிருஷ்ணன்கிற அந்த களவாணியை புடுச்சு நாலு குடுத்து, ஜீப்ல தூக்கிப் போட்டுக்கினு ஸ்டேஷனுக்கு வந்து, சரியா விசாரிச்சு, இன்னொரு திருட்டுப்பயலையும், திருடின உண்டியல் பணத்தையும் புடுச்சிருச்சு. டூவீலரையும் கைப்பத்திப்பிட்டாக.

காமாட்சி: ஓ.பி.எஸ். மாவட்டத்தில ஆண் காக்கிகளைவிட பெண் காக்கிகள்தான் துணிச்சலா வேலை செய்றாங்கனு சொல்லுங்க.

மெரினா: எந்திரிங்க... இப்பிடியே நடந்துபோயி அண்ணா சமாதி பின்னால எப்பிடி வேலை நடக்குதுனு பாக்கலாம்.

-இளையசெல்வன், ஜீவாதங்கவேல், சக்தி, து.ராஜா
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்