இராஜராஜேச்சரம் எனும் தஞ்சைப் பெருவுடையார் கோயில் வளாகத்திற்குள் அமர்ந்து அதன் கலைக் கம்பீரம் பற்றியும் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் பற்றியும் அலசிய நக்கீரன் மகளிரணியினரின் கவனம் அரசியல் திண்ணைக்குத் திரும்பியது.
மல்லிகை: தஞ்சை மகாராஜா மஹால்ல போனவாரம் நடந்த மேயர் சாவித்திரி கோபால் வீட்டு கல்யாண ரிசப்ஷனுக்கு நம்ம காவேரியும் போனாங்களாம். சுவையான விருந்தாம். நான் சொல்றது சரிதானே காவேரி.
காவேரி: முன்னாள் மேயர் சாவித்திரி கோபாலின் இளையமகன் ரிசப்ஷனுக்கு நான் போனேன். விருந்தெல்லாம் அருமைதான். ஆனால் முன்னாள் மேயரம்மா முகத்தில திருப்தியில்லை. ஓ.பி.எஸ். ஏமாற்றிவிட்டாரே என்ற ஏமாற்றம்.
மெரீனா: ஆமாமா! நான்கூட கேள்விப்பட்டேன். வர்றேன்னு பிராமிஸ் பண்ணுன ஓ.பி.எஸ். வரலை. பதிலுக்கு முனுசாமியை அனுப்பி வச்சிருந்தாராம்.
காவேரி: கல்யாணத்துக்கு ஓ.பி.எஸ். வரலைனு அவரை கட்டாயம் வரவழைக்கணும்கிறதுக்காக மறுவாரத்தில ரிசப்ஷன் வச்சாங்க. அதுக்கும் வரமுடியலைனு கடைசி நேரத்தில முனுசாமியை அனுப்பியிருந்தார் ஓ.பி.எஸ். நம்பித்தானே ஓ.பி.எஸ். அணிக்குப் போனேன். எடப்பாடியோடு இணைந்ததும் என்னைப் போன்றவர்களை உதாசீனப்படுத்தலாமா? "ஓ.பி.எஸ்.சை நம்பிப் போனவுக அத்தனைபேருக்கும் இதுதான் கதி'னு மற்றவங்க கமெண்ட் பண்ணும்போது எவ்வளவு சங்கடமா இருக்கு'னு நொந்துபோயிருக்காங்க சாவித்திரி கோபால்.
காமாட்சி: ரஜினி மக்கள் மன்ற வேலூர் மாநகர மகளிரணிச் செயலாளர் லட்சுமி ரமேஷ் ஊத்திக் கொடுத்து உருப்படியான ஒரு வேலையைச் செஞ்சு, அந்த ஏரியா மக்கள்ட்ட பாராட்டுக்களை வாங்கியிருக்கிறார்.
மல்லிகை: ஊத்திக் கொடுத்தாரா?
காமாட்சி: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தனது ஏரியாவான சாய்நாதபுரத்தில் உள்ள அத்தனை வீடுகளுக்கும் கேன்களில் கொண்டுபோய், நிலவேம்புக் கசாயத்தை (டம்ளர்களில் ஊற்றிக் கொடுத்திருக்கிறார் ஒவ்வொருவருக்கும்). அதே ஏரியாவுல தனியார் மகளிர் கல்லூரி ஒண்ணு இருக்கு. அதன் வாசலில் நின்று அத்தனை மாணவிகளுக்கும் நிலவேம்புக் கசாயம் வழங்கியிருக்கிறார் லட்சுமி ரமேஷ்.
மெரீனா: ஒரு ஏரியாவுக்கு மட்டும் கொடுத்தால் போதுமா?
காமாட்சி: லட்சுமி ரமேஷைப் பார்த்து வேலூர் மாநகரம் முழுக்க நிலவேம்புக் கசாயம் கொடுக்கும் வேலையை தீவிரமாக்கியிருக்கிறார்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.
பரணி: "அஞ்சு வருஷத்துக்கும் 25 கோடி ரூபாய் எம்.பி. நிதி கிடைக்குது. சம்பாதிக்கிறவங்க சம்பாதிக்கிறாங்க. ஆனால், 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு அபார்ட்மெண்ட்தான் என் பேர்ல இருக்கிற சொத்து. எனக்கு பிரதிநிதிகளா சென்னைக்கு மதுரத்தையும் என் தொகுதிக்கு பாலாஜியையும் போட்டிருந்தேன். நான் கையெழுத்துப் போட்ட என் லெட்டர் பேடுகளை பயன்படுத்தி அவுக ரெண்டுபேரும் சம்பாரிச்சிட்டாக. போனதெல்லாம் போகட்டும்... இப்பப் பத்து நாட்களா என் கணவரோட சேர்ந்து வாழ்றேன்... அது போதும்'னு ரொம்ப வருத்தமும் கொஞ்சூண்டு சந்தோஷமுமா புலம்புறாவ ஒரு எம்.பி.
மல்லிகை: யாரு... தென்காசி எம்.பி. வசந்தி முருகேசன்தானே. அது சரி, அதென்ன லெட்டர்பேடு சமாச்சாரம்?
பரணி: தென்காசி, சென்னை, டில்லினு அலையுறாகள்ல, தொகுதி மக்களை அடிக்கடி சந்திக்க முடியலை. யாராவது சிபாரிசு கேட்டு வந்தால் இதில் டைப் பண்ணிக் குடுங்கனு லெட்டர் பேடுகளில் கையெழுத்துப் போட்டு தன்னோட பிரதிநிதிகள்ட்ட கொடுத்திருந்தாங்களாம். எம்.பி. வசந்தி முருகேசன். அந்தப் பிரதிநிதிகள், அந்த லெட்டர்பேடுகளை, திருநெல்வேலி டூ சங்கரன்கோயில், கிருஷ்ணன் கோயில் டூ சங்கரன்கோயில், சாலைகளுக்கான டெண்டர்களுக்கு பயன்படுத்தி, கமிஷனா கிடைச்ச பெருந்தொகையை அமிக்கிப்பிட்டாவளாம்.
மெரீனா: அந்த ரெண்டு பிரதிநிதிகளிடம் இருந்தும் கமிஷனைப் பறிமுதல் செய்ய முடியலையாமா?
பரணி: அந்த ரெண்டு பிரதிநிதிகளும் டி.டி.வி. தினகரன் கட்சியில சேர்ந்துவிட்டாவளாம்.
காவேரி: ஒரு இன்ட்ரெஸ்ட்டான சேதி எங்கிட்ட இருக்கு. ஆளும் கட்சி ஒ.செ. ஒருவருக்கும், ஒரு லேடி தாசில்தாருக்கும் மோதல். "ஒன்னை டிரான்ஸ்பர் பண்ணலைனா என் பேரை மாத்திக்கிறேன்'னு ஒ.செ. சவால் விட்டாராம். "பண்ணிப் பார் பத்தே நாளில் திரும்பி வந்து காட்டுறேன்'னு லேடி தாசில்தார் சவால் விட்டாங்க. லேடிதான் ஜெயிச்சாங்க.
காமாட்சி: எந்த ஊர்ல நடந்த சவால் இது?
காவேரி: நாகை மாவட்டம் குத்தாலம் தாசில்தார் பெயர் சபீதாதேவி. யாராக இருந்தாலும் ஒரே ரேட்டுதான். பிக்ஸடு. பட்டா மாறுதலா பத்தாயிரம்னா பத்தாயிரம்தான். ஆளும்கட்சி ஒ.செ. தமிழ்ச்செல்வன் தன்னோட பட்டா மாறுதலுக்கு தாசில்தார் சபீதாவை நாடியிருக்கிறார். அந்தம்மா "சலுகையெல்லாம் கிடையாது'னு நறுக்குனு சொல்லிட்டாங்களாம். அங்கேதான் சவால்... சவாலுக்கு சவால்.
மல்லிகை: சவாலை எப்படி சாதிச்சாக?
காவேரி: அ.தி.மு.க. ஒ.செ., அமைச்சர் ஓ.எஸ். மணியனைப் போய்ப் பார்த்தார். அடுத்த வாரமே லேடி தாசில்தாரை குத்தாலத்தில் இருந்து கீழ்வேளூருக்கு மாத்திப்பிட்டாங்க. ஒரு வாரம் லீவு போட்ட லேடி தாசில்தார், உடனே மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரைப் போய் பார்த்து மறுபடியும் குத்தாலத்துக்கே போஸ்டிங் வாங்கிட்டு வந்துட்டாங்க.
மல்லிகை: சவால்கள் ரொம்ப முக்கியம். காஞ்சிபுரத்தில கைலாசநாதர் கோயிலைப் பார்த்து பிரமித்த மாமன்னன் ராஜராஜன், அதைவிட பலமடங்கு பிரமாண்டமாக உலகம் வியக்க நானும் கட்டுகிறேன் பார்னு சவால் விட்டு சபதம் எடுத்துதான் இந்த இராஜராஜேச்சரத்தை கட்டினாராம். வரலாறு ரொம்ப முக்கியம்... எழுந்து கிளம்பலாமா?
-து.ராஜா, செம்பருத்தி, செல்வகுமார், நாகேந்திரன்