புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆடுகள் திருடப்படுவது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதைத் தடுக்கச்சென்ற ஒரு எஸ்.ஐ.யின் உயிர் பறிபோன பிறகும் கூட, இந்தத் திருட்டுக்கு முற்றுப்புள்ளி விழவில்லை. தற்போது மர்ம நபர்கள், காஸ்ட்லியான கார்களில் வந்து ஆடுகளைத் திருடிச் செல்கிறார்களாம்.
இது ஒருபுறம் என்றால், இன்னொரு புறம், திருடர்கள் பூட்டை உடைத்து நகைகளைக் கொள்ளை யடிப்பதில் ஆரம்பித்து, மின் மாற்றிகள், மின் பொருட்கள் மற்றும் வயல் பகுதிகளில் உள்ள மோட்டார் வயர்கள் வரை அனைத்தையும் அறுத்துக்கொண்டு போகிறார்களாம். இதனால் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட மக்கள் பகீரில் இருக்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயி கண்ணன், "கடந்த 10 வருடங்களாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை தாலுகா, தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு தாலுகாக்களில் அதிகமான ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நீர்மூழ்கி மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வருகிறோம். மோட்டாருக்கும், ஸ்டாட்டருக்கும் இடையில் உள்ள மின் வயர்களை திருடர்கள் அறுத்துச் சென்றுவிடுகிறார்கள். இதனால் பல மோட்டார்கள் ஆழ்குழாய் கிணறுகளுக்குள் விழுந்து எடுக்க முடியாமல் உள்ளன. சில நாட்களுக்கு முன்பு கூட பேராவூரணி பாங்கராங்கொல்லை கிராமத்தில் ஒரு மோட்டாரில் பொருத்தப்பட்டிருந்த காப்பர் ஒயர்களை திருடிச் சென்றுள்ளனர். இது பல வருடங்களாகத் தொடர்கிறது. ஆனால் திருடர்கள் பிடிபடுவதும் இல்லை. பிடித்தாலும் பெரிய நடவடிக்கை இல்லாததால் அடுத்தடுத்து திருட்டுகள் தொடர்கிறது.
இதேபோல பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்குள் 15க்கும் மேற்பட்ட மின்மாற்றிகளில் உள்ள பல லட்ச ரூபாய் மதிப்பிலான காப்பர், அலுமினிய காயில்களை திருடியிருக்கிறார்கள். மின்மாற்றியில் காயில் கழற்றி எடுக்க குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். அதற்கு 4 பேராவது வேண்டும். மேலும் இதைத் தூக்கிச் செல்ல குட்டியானை வாகனம் வேண்டும். பகலில் ஆள் நடமாட்டம் இல்லாத இடமாகப் பார்த்து வைத்துக் கொண்டு, இரவில் திருட்டை அரங்கேற்றிவிடுகிறார்கள். புதிய மின்மாற்றி வைக்கவேண்டும் என்றால், திருட்டு பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, அங்கே முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, அதன் நகலோடு மின்வாரிய அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இப்படி புதிய மின்மாற்றியை வைப்பதற்கு குறைந்தபட்சம் 2 மாதம் ஆகிறது. அதற்குள் அந்த மின்மாற்றியை நம்பி விளைவித்த பயிர்கள் கருகிவிடும். கடந்த மாதம் சேதுபாவாசத்திரம் பகுதியில் மரக்காவலசை கிராமத்தில் 65 எச்.பி. மின்மாற்றியில் காயில் திருடப்பட்டதால், அந்தப் பகுதியில் நடவு செய்திருந்த தென்னங்கன்றுகளை, குடத்தின் மூலம் தண்ணீர் எடுத்து ஊற்றிக் காப் பாற்றியிருக்கிறார்கள். நமக்குள்ள வருத்தம் என்ன என்றால், இதுவரை ஒரு திருடனைக்கூடப் பிடிக்க வில்லை''’என்றார் கவலையும் ஆதங்கமுமாய்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் நாம் கேட்டபோது, "பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகளில் காயில் திருட்டுப் போனது உண்மைதான். காவல்நிலையங்களில் புகார் கொடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவர்களுக்கு புதிய மின்மாற்றி களைப் பொருத்தி வருகிறோம். திருடர்களை போலீசார் பிடித்தால்தான் இந்த திருட்டைக் குறைக்க முடியும்''’என்கிறார்கள்.
காவல்துறைத் தரப்போ, “ "இதுவரை பல வயர் திருடர்களை பிடித்திருக்கிறோம். ஆனாலும் திருட்டு தொடர்கிறது. அதேபோல் மின்மாற்றிகளில் காயில் திருடுவதும் தொடர்கிறது. இது குறித்தெல்லாம் தீவிரமாக விசாரித்து வருகிறோம்''’என்றார்கள்.
ஏற்கெனவே இயற்கையால் விவசாயிகள் பலவகையிலும் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் அவர்களின் நிம்மதியைத் திருடர்களும் பறிக்க ஆரம்பித்திருப்பது பெரும் கொடுமை.