மிழக காவல்துறையில் பணிக்காலத்தைப் பொறுத்து, சீருடையில் ஆர்ம்-பேட்ஜ்கள் குத்தப்படும். அவை வெறும் அடையாளம் மட்டுமல்ல; அதிகாரமும்கூட. அந்த வகையில் டிச. 01-ஆம் தேதியோடு 15 ஆண்டுகள் சர்வீஸ் முடித்தும்கூட, சென்னை காக்கிகளுக்கு மூன்றுகோடு பேட்ஜ்கள் இன்னமும் வழங்கப்படவில்லை. மற்ற மாவட்டங்களில் நவ. 30-ஆம் தேதியே உத்தரவு பிறப்பித்து, தகுதியுள்ளவர்கள் தலைமைக் காவலர்களாக ஆகிவிட்ட நிலையில், அதற்கான வாய்ப்புகள் எதுவும் கண்ணில் தென்படாததால் தவிக்கின்றனர் சென்னை காக்கிகள். பத்து ஆண்டுகள் சர்வீஸ் முடித்தவர்களுக்கும் இதே நிலைமைதானாம்.

தலைநகரக் காக்கிகளுக்கே இந்த நிலைமையா?

udayakumar

நிலக்கோட்டையிலிருந்து திண்டுக்கல் சென்றுகொண்டிருந்த அ.தி.மு.க. எம்.பி. ஆர்.உதயகுமார், அழகம்பட்டி ரயில்வே கேட்கீப்பர் மணிமாறனைத் தாக்கிவிட்டுச் சென்றார். இதில் கடுப்பான கேட்கீப்பர், சக ஊழியர்களுடன் போராட்டத்தில் குதித்ததால் ரயில்கள் செல்லத் தாமதமானது. விஷயம் ரயில்வே போலீசுக்குப் போக... "ரயில் வரும் நேரத்தில் கேட்டைத் திறக்கச்சொல்லி எம்.பி. தாக்கினார்'’என மணிமாறனும், "வேலை நேரத்தில் செல்போன் பயன்படுத்தியதைத் தட்டிக்கேட்டால் தகாத வார்த்தைகளில் அர்ச்சித்தார். அதான் லேசாக தட்டினேன்'’என்று எம்.பி. உதயகுமாரும் கூறியிருக்கின்றனர். பஞ்சாயத்து அதிகமாகி எம்.பி. வருத்தம் தெரிவித்தார்.

Advertisment

அவரு எம்.பி.யா? சூப்பர்வைசரா?

theri

திருச்சி புறநகர் அ.தி.மு.க.வில் கட்சிப் பொறுப்பு அங்குள்ள பெரும்பான்மை சமுதாயமான முத்தரையர் மக்களுக்கே வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, வழக்கறிஞர் பிரிவில் இருந்த வளர்மதி, ஸ்ரீரங்கம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாகி அமைச்சராகவும் உயர்ந்துவிட்டார். தற்போது அதே சமுதாயத்தைச் சேர்ந்த மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகேசன் தனக்கும் வளர்மதிக்கு இணையான வாரியப் பொறுப்பு வேண்டுமென்று கொடி பிடித்திருக்கிறார். கஜா நிவாரண உதவிகள் வழங்கியபோது ஓரங்கட்டப்பட்ட கடுப்பில், ஓ.பி.எஸ்.வரை சென்று நெருக்கடி கொடுத்திருக்கிறார் பரமேஸ்வரி.

Advertisment

அவரு நிலைமையே மோசமா கெடக்கு!

கஜா புயலால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மேல்மலை மற்றும் கீழ்மலை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாழ்வாதாரங்களை இழந்திருக்கும் ஆதிவாசி மக்கள் நிவாரண உதவிகள் கிடைக்காமல் தவிக்கின்றனர். அவர்களைச் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கிய கலெக்டர் வினய், "உடனடியாக இடத்தை காலிசெய்யுங்க. மாற்று இடத்தை ஏற்பாடு செய்கிறோம்'’என விரட்டியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த மக்கள் “"மூன்று தலைமுறைகளாக இங்கதான் இருக்கோம். வெளியேற்ற நினைச்சா தற்கொலை பண்ணிக்குவோம்'’என மிரட்டியிருக்கின்றனர்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சலாமா?

"உழவன் ஆப்'’ என்ற செயலியை சமீபத்தில் அறிமுகம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி. "விவசாயிகளின் நலன்காக்கும் இந்த செயலியின் மூலம் பல்வேறு நெருக்கடிகள் குறைக்கப்படும் வகையில், அனைத்து ஊராட்சிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன' என அறிவித்தது தமிழக அரசு. ஆனால், 28 ஊராட்சிகளைக் கொண்ட திருநெல்வேலி ஆலங்குளம் யூனியனில் 23 ஊராட்சிகள் மட்டுமே செயலியில் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், பத்து ஊராட்சிகளின் பெயர்களும் தப்புத் தப்பாக இருப்பதால் குழப்பத்தில் இருக்கின்றனர் விவசாயிகள்.

ஆப் கொடுத்து ஆப்பு வைக்கிது அரசு!

theri

"இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்களுக்குச் சொந்தமானது' என பண்ருட்டி சேகர் தலைமையிலான அணி, ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் திட்டக்குடியில் மாநாட்டை நடத்தியது. ஆனால், முத்தரசன் தலைமையிலான மணிவாசகம் அணி, "சேகர் நடத்தும் மாநாட்டில் ஏ.ஐ.டி.யூ.சி. பெயரைப் பயன்படுத்தக்கூடாது' எனக்கூறி, மாநாட்டு அனுமதியை ரத்துசெய்யக் கோரியது. அதிகாரிகள் மறுக்கவே மாநாட்டு மண்டபம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்க, அதற்கும் மறுத்துவிட்டனர். இதனால், மணிவாசகம் அணியினர் திட்டக்குடி தாசில்தார் அலுவலகம் முன்பே ஆர்ப்பாட்டத்தில் குதித்து பரபரப்பு கிளப்பினர்.

சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க…தோழர்களே!

tmalai

கார்த்திகை மாத சிவராத்திரிக்கு முன்தினம் பூமிக்கு வரும் குபேரன், அண்ணாமலையாரை வணங்கிவிட்டு கிரிவலம் செல்வார். "அன்றைய தினம் குபேரனோடு நடந்தால் நாமும் குபேரனாகலாம்'’என வாட்ஸ்அப், பேஸ்புக்கில் ஒரு தகவல் பரவியது. இந்த செய்தியைப் படித்துவிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆடம்பர கார்களில் டிச. 05-ஆம் தேதி மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தனர். இதில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் கண்ட உள்ளூர் மக்கள், "எங்களுக்குத் தெரியாத குபேர-கிரிவலமா?' என குழம்ப, மறுப்பேதும் தெரிவிக்காத கோவில் நிர்வாகம் கல்லா கட்டிவிட்டது.

கோவில் நிர்வாகம்தான் குபேரன் ஆகியிருக்கு!

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பிலான அரசாணை நகல் எரிப்புப் போராட்டம், நவம்பர் 26-ல் வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 250 ஆசிரியர்களில், 160 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து நன்னடத்தை விதிமீறல் 17-பி நோட்டீஸை அனுப்பியது கல்வித்துறை. ஆனால், போராட்டத்தை ஒருங்கிணைத்த முக்கிய நிர்வாகியின் பெயர் மட்டும் இதில் மிஸ்ஸிங். அதேபோல், போராட்டத்தில் கலந்துகொள்ளாத ஆசிரியர்களுக்கும் நோட்டீஸ் சென்றதால் அதிர்ச்சியடைந்து விசாரித்ததில், கைதான ஆசிரியர்கள், சொந்த முகவரியைக் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்தது தெரிய வந்திருக்கிறது.

டீச்சிங்-கோச்சிங் பக்காவா இருக்கு!

-பரமசிவன், எஸ்.பி.சேகர், ஜெ.டி.ஆர்., து.ராஜா, சக்தி, அருண்பாண்டியன்