கன்னியாகுமரி கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை துறை சார்ந்த அதிகாரி களால்கூட நெருங்க முடிவதில்லை. சரியாக அதிகாரிகள் சந்திக்கப் போகும் நேரம் பார்த்து திட்ட இயக்குநர் ராகுல் நாத், பத்மனாபபுரம் சப்-கலெக்டர் சுங்காரோ, எஸ்.பி.ஸ்ரீநாத் ஆகியோருடன் சேர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருக்கிறார். அவரைச் சந்திக்கக் கால் கடுக்க நிற்பவர்களுக்கு ஒருவேளை சந்திக்க வாய்ப்புக் கிடைத்தால் கூட, "ராகுல்நாத்திடம் பேசுங்கள்' என்கிறாராம். கலெக்டர் இப்படி இருந்தால் எப்படி மாவட்டப் பிரச்சினைகளைப் பேசுவதென்று முணு முணுக்கிறார்களாம் அதிகாரிகள்.
அதிகாரிகளுக்கே இப்படின்னா... மக்களோட நிலைமை?
இந்தத் தீபாவளி மற்ற யாரையும்விட அ.தி.மு.க. நிர்வாகிகளை ரொம்பவே குஷிப் படுத்தியிருக்கிறது. காரணம், எடப்பாடி அனைத்து மா.செ.க் களுக்கும் தலா ரூ.2 கோடி கொடுத்து பகிர்ந் தளிக்கச் சொன்னது தான். இதனால், ஐந்து லட்சத்திலிருந்து ஐந்தாயிரம் வரை அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கும் பணம் போய்ச் சேர்ந்திருக்கிறது. மதுரை புறநகர் மா.செ. ராஜன் செல்லப்பா தன் மகன் கையாலேயே பணத்தைக் கொடுக்க வைத்திருக்கிறார். செல்லூர் ராஜுவோ முக்கியப் பொறுப்பாளர்களோடு நிறுத்திக்கொண்டார். அடுத்தடுத்து தேர்தல்கள் வரவிருக்கும் நிலையில், "இதுபோன்ற குஷிப்படுத்தல்களுக்கு பஞ்சமிருக்காது' என்றே சிரிக்கின்றனர் அ.தி.மு.க. தொண்டர்கள்.
தேர்தல் முடிஞ்சதும் இன்னும் குஷியா இருக்கும்!
தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல்வேறு அரசு நிறு வனங்களில் ரெய்டு நடத்தினர். தூத்துக்குடி ல.ஒ.டி.எஸ்.பி. ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான டீம் கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரெய்டுக்கு சென்றது. ஆனால், இதை முன் கூட்டியே தெரிந்து கொண்ட அதிகாரிகள் அலர்ட் ஆகிவிட்டனர். சோதனையில் எதுவும் சிக்காமல் போனதால், வெறுங்கையோடு போகவேண்டாமென எண்ணி புதிய ரெஜிஸ்ட்ரேஷன், எஃப்.சி., டிரைவிங் லைசன்ஸ் என கட்டணம் செலுத்தவந்த ஒன்பதுபேரிடம் பணத்தைப் பறிமுதல் செய்து கொண்டு, "கோர்ட்டில் வாங்கிக்கோங்க' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினர்.
இப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க ஆபீஸர்ஸ்!
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞருக்கு அறிவாலயத்தில் சிலை நிறுவ தி.மு.க. முடிவு செய்தது. இந்த சிலைக்கான பீடம் மற்றும் தூண்கள் செய்யும் பணி திருவண்ணாமலை வரகூரில் உள்ள அருணை கிரானைட்ஸில் நடந்து வருகிறது. தி.மு.க. மா.செ. எ.வ. வேலுவுக்குச் சொந்தமான இந்த நிறுவனத்தில் உருவாகும் தூண்களை, அவரே பார்வையிடும் புகைப் படங்கள் சமீபத்தில் வைரலாகின. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த எ.வ.வேலு, தன்னுடன் வந்திருந்தவர்களை கடுமையாக திட்டி யிருக்கிறார். ஏற்கெனவே, ஸ்டாலின் கருத்தை அறியாமல் சிலை பற்றிப் பேசிய டி.கே.எஸ். இளங்கோவனின் பதவி பறிபோனது. இந்த எச்சரிக்கை உணர்வு தான் எ.வ.வேலு சீறியதற்குக் காரணம் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.
கொஞ்ச நேரத்துல டயர்ட் ஆக்கிட்டாய்ங்களே!
புத்தாடையும், பட்டாசுமாக இனிதே கழிந்தது தீபாவளிப் பண்டிகை. ஏழை- பணக்காரர் வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் கொண்டாடும் இந்த விழாவை, ஏதுமற்ற யாசகர்களோடு கொண்டாடி மகிழ்ந் திருக்கிறார் வேலூர் ரஜினி மக்கள் மன்றத் தின் மா.செ. சோளிங்கர் ரவி. சோளிங்கர் கோவில் பகுதிகளில் சுற்றித் திரிந்த இயலாதவர்கள் நூறு பேரை அழைத்து வந்து, புத்தாடைகள் வழங்கி, பட்டாசுகள் வெடிக்கச் செய்தார். திறந்த வெளி மைதானத்தில் போடப்பட்ட நாற்காலிகளில் அவர்களை அமர்த்தி ரஜினியின் பெருமையைப் பேசிவிட்டு, அன்று இரவு உணவை யும் பரிமாறி வயிறார அனுப்பி வைத்தார்.
சிறப்பு நெகிழ்ச்சி!
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகை முடிந்த பிறகு அகற்றப்படும் திடக் கழிவுகளின் எடை கணக்கிடப்படும். அந்தவகையில், இந்த ஆண்டு நவ.5 முதல் 8ஆம் தேதி வரை சென்னையில் மட்டுமே 95 டன் கழிவு கள் அகற்றப்பட்டுள் ளன. இதில் வெடி மருந்துள்ள 58.97 டன் கழிவுகளை தனியாகப் பிரித்து அவற்றைக் கையாளும் பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சென்ற ஆண்டு தீபாவளியையொட்டி 80 டன் கழிவுகள் அகற்றப்பட்டதாக தகவல் வெளியானது. உச்சநீதிமன்றம் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதித்தும், இந்த ஆண்டு கழிவுகளின் எண்ணிக்கை 15 டன் கூடத்தான் செய்திருக்கிறது. ஆனால், காற்றுமாசு குறைந்ததாக இன்னொரு தகவல் சொல்கிறது.
ஒரே குழப்பமா இருக்கே?
முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க. நிர்வாகியுமான செந்தில்பாலாஜி, "அரவக்குறிச்சி தொகுதியில் அ.ம.மு.க. நிர்வாகிகளின் வீடுகளுக்கு வலியசென்று ஆள் பிடிக்கும் கைத்தடி! இதற்கு நடுரோட்டில் நின்று கையேந்தலாம்'’என தன் முகநூல் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டிருந்தார். என்ன விஷயமென்று துருவியதில், அரவக்குறிச்சியில் உள்ள அ.ம.மு.க. நிர்வாகிகளின் வீடுகளுக்கு தீபா வளியன்று வாழ்த்து சொல்வதாகச் சென்ற அ.தி.மு.க. நிர்வாகிகள், கரூர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லைன்போட்டுக் கொடுத்தனர். அவரும் ‘"இருங்க வர்றேன்'’ என்றபடி கட் செய்துவிட்டு, நேரில் வந்து சால்வை அணிவித்து, "நான் இருக் கேன்'’என நம்பிக்கையும் தந்துவிட்டு சென் றுள்ளார். இப்படியே 25 நிர்வாகிகளுடன் சேர்ந்து போட்டோக்களும் எடுத்து வைத்திருப்பதாக சொல்கின்றனர்.
செலவு செஞ்சவங்களுக்கு வயிறு எரியத் தானே செய்யும்?
-பரமசிவன், ஜெ.டி.ஆர்., து.ராஜா, அண்ணல், மணிகண்டன், மதி