திருவண்ணாமலை நகரத்தைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் "தூய்மை அருணை'’என்ற அமைப்பைத் தொடங்கி, பொதுச்சேவையில் ஈடுபட்டு வருகிறார் தி.மு.க. தெற்கு மா.செ.வும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு. இதன்படி, வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். நடிகர் விவேக்கை வைத்து ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் முயற்சியைத் தொடங்கி செயல்படுத்தியும் வருகின்றனர். அடுத்தபடியாக மழைக்காலங்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகளால் பாதிப்புக்குள்ளாகும் ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் குழுவையும் தயார் செய்துவருகின்றனர்.

இதுதான் உண்மையான ஸ்மார்ட் சிட்டி!

theri

Advertisment

நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் அரசு நிகழ்ச்சிகளில் இருந்து பாதியிலேயே கிளம்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம், மீனவர்கள் பாதுகாப்புக்கூட்டம் என பல நிகழ்ச்சிகளில் முக்கியமான நேரத்தில் அவர் கிளம்பியதால் பலரும் அதிருப்தியடைந்தனர். தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தன்று அரசு மருத்துவமனையில் கலெக்டர் தலைமையில் சிறப்பு ரத்ததான முகாமில் கலந்துகொண்ட பாதிப்பேருக்கு மட்டும் சான்றிதழ்களைக் கொடுத்துவிட்டு வழக்கம்போல் கிளம்பிவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாவம் அவருக்கென்ன அவசரமோ?

Advertisment

திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் இளைஞரணி மா.செ. குடமுருட்டி கரிகாலன். தி.மு.க. மா.து.செ. குடமுருட்டி சேகரின் தம்பியான இவர், தனது அரசியல் நடவடிக்கைகளில் பக்கபலமாக நிற்பார் என விஜய்யே நினைக்கும் அளவுக்கு நம்பிக்கை கொடுத்தவர். விஜய் தனது அரசியல் பிரவேசத்திற்கான அஸ்திவாரத்தைத் தொடுத்திருக்கும் இந்தவேளையில், திருச்சி விமானநிலையத்திற்கு வந்திருந்த டி.டி.வி. தினகரனை, அ.ம.மு.க. திருச்சி மா.செ. சீனிவாசன் துணையோடு சந்தித்து சால்வையும் அணிவித்திருக்கிறார் குடமுருட்டி கரிகாலன்.

உம்... கம்... ஜம்...

விழுப்புரம்-காந்திக்குப்பத்தில் இருக்கிறது மலட்டாறு. இதற்கு நெருக்கமாக வனத்துறைக்கு சொந்தமான காடும், கிராமத்துக்குச் சொந்தமான சுடுகாடும் அருகருகே அமைந்துள்ளன. நீண்டகாலமாக மலட்டாறில் மணல்கொள்ளையில் ஈடுபடுபவர்கள், அருகிலுள்ள சுடுகாட்டு மணலையும் விட்டுவைப்பதில்லை. பல சமயங்களில் புதைக்கப்பட்ட உடல்களின் எலும்புக்கூடுகளை வெளியில் வீசிவிட்டு மணலைக் கடத்திச் செல்கின்றனர். அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வதில்லை. ஒருநாள் அடுப்பை மெத்துவதற்காக பெண்கள் மணல் அள்ளியபோது வனத்துறையினர் அதைப்பிடுங்கி கீழே கொட்டியதால் ஆத்திரமடைந்தனர். "மணல் கொள்ளையர்களுக்கு மட்டும் தனிசட்டமா?'’என மனித எலும்புகளுடன் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சுடுகாட்டைக் காணோம்னு கேஸ் போடணும்!

theri

நாக்பூரின் அச்சல்பூர் தொகுதியைச் சேர்ந்த சுயேட்சை ச.ம.உ. பச்சுச்சு காடு -கோஸிக்கர்டு அணைத் திட்டத்துக்காக இவரது தொகுதியிலுள்ள 50 கிராமங்களைச் சேர்ந்த நிலங்களை எடுத்துக்கொள்ள அரசு முடிவுசெய்திருக்கிறது. மக்களின் எதிர்ப்பைக் கணக்கில்கொள்ளாத இந்தத் திட்டத்தால் எரிச்சலடைந்த கிராமத்தினர் 5,000 பேர் நேரடியாக எம்.எல்.ஏ. ஹாஸ்டலுக்குள் நுழைந்து அவரது அறையிலும் மொட்டைமாடியிலும் ஹாஸ்டல் வளாகத்திலும் அமர்ந்துகொண்டனர். எம்.எல்.ஏ.வும் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காததால் போலீஸ் அடுத்தென்ன செய்வதென கைபிசைந்துகொண்டிருக்கிறது.

அசத்தல் யோசனையா இருக்கே!

"சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம்' என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நாடு முழுவதும் விவாதமாகியிருக்கும் இதுபற்றி, பெண்களின் மாதவிடாயோடு ஒப்பிட்டு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்து தெரிவித்து கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தார். இந்நிலையில், தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, தான் நடித்த நாடகத்தில் தனது கை, கால், வாய் கட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ஸ்மிருதி, "நான் என்ன சொன்னாலும் அதற்கு வேறொரு அர்த்தத்தை சொல்லப்போகிறீர்கள். பிரச்சினை எதற்கு?'’என எழுதியுள்ளார்.

உண்மையில் கட்டப்பட்டிருப்பவர்கள் பெண்கள்தான்!

தேனி –-கம்பத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பால்பாண்டியன். இவர் "எடப்பாடியார் பேரவை'’என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டினார். அதில் ஹைலைட்டே இ.பி.எஸ்.ஸின் படம் பெரியதாகவும், ஓ.பி.எஸ்.ஸின் படம் ஓரத்தில் குட்டியாகவும் இருந்ததுதான். இதனால் அதிர்ச்சியடைந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பால்பாண்டியனை வலைவீசி தேடிவந்த நிலையில், ’எடப்பாடியார் பேரவையின் சார்பில் "இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்'’என்ற புதிய போஸ்டரை ஊர்முழுக்க ஒட்டிவிட்டார். முதலில் குட்டியாக இருந்த ஓ.பி.எஸ்.ஸின் படம்கூட இந்தமுறை இடம்பெறவில்லை.

இ.பி.எஸ். டீலிங்கா இருக்குமோ?

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்படும் தலைமைச் செயலகத்தில் உள்ளது நாமக்கல் கவிஞர் மாளிகை. தமிழக அரசின் முக்கியத்துறைகள் பலவும் இந்தக் கட்டிடத்தில்தான் செயல்படுகின்றன. இதனால் எப்போதும் பரபரப்பாகவே காட்சியளிக்கும் இந்தக் கட்டிடத் தின் இரண்டாவது தளத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இணை இயக்குநர் ரவீந்திரனின் அறைக்குள், 25-ஆம் தேதி மதியவாக்கில் சாரைப்பாம்பு ஒன்று நுழைந்து விட்டது. இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட, தீயணைப்புத் துறையினர் பாம்பை அப்புறப்படுத்தினர். தலைமைச் செயலகத்திற்குள் பாம்பு நுழைவது முதல் முறையல்ல.

அழையா விருந்தாளி!

-எஸ்.பி.சேகர், ஜெ.டி.ஆர்., து.ராஜா, செல்வகுமார், சுப்ரமணி, மதி