எப்போதும் மஞ்சள் துண்டு அணிந்தபடியே காட்சியளிக்கிறார் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. அமைச்சர் செங்கோட்டையன் விருதுநகர் சென்றபோதுகூட அப்படியேதான் இருந்தார். என்னவென்று விசாரித்தால் "ஜோதிடம், மாந்த்ரீகம் போன்றவற்றில் அதிக ஈடுபாடுகொண்ட ராஜேந்திர பாலாஜி, குருப்பெயர்ச்சி மூலம் அமைச்சர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள கையாளும் டெக்னிக்தான் இது' என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். அமைச்சரைத் திருப்திப்படுத்த அவரது ஆதரவாளர்களும் ஆளுக்கொரு மஞ்சள் துண்டோடு சுற்றித் திரிகின்றனர்.
கண்ணாடியைத் திருப்பினா வண்டி ஓடுமா?
திருநெல்வேலி-சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் எச்.ராஜா கலந்துகொள்வார் என விளம்பரமும் செய்திருந்தனர். கூட்டம் தொடங்கி நெடுநேரம் ஆகியும் எச்.ராஜா வருவதாகத் தெரியவில்லை. காத்துக் கிடந்தவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக கழன்றுவிட்டனர். பேசிக் களைத்திருந்த நிர்வாகிகளிடம் நாம் பேசுகையில், “"பெட்ரோல் விலை, ஜி.எஸ்.டி.ன்னு ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு. இதுல கட்சி வேலைக்கு காசு தராம வெறுங்கையில முழம் போட்டா
எப்போதும் மஞ்சள் துண்டு அணிந்தபடியே காட்சியளிக்கிறார் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. அமைச்சர் செங்கோட்டையன் விருதுநகர் சென்றபோதுகூட அப்படியேதான் இருந்தார். என்னவென்று விசாரித்தால் "ஜோதிடம், மாந்த்ரீகம் போன்றவற்றில் அதிக ஈடுபாடுகொண்ட ராஜேந்திர பாலாஜி, குருப்பெயர்ச்சி மூலம் அமைச்சர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள கையாளும் டெக்னிக்தான் இது' என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். அமைச்சரைத் திருப்திப்படுத்த அவரது ஆதரவாளர்களும் ஆளுக்கொரு மஞ்சள் துண்டோடு சுற்றித் திரிகின்றனர்.
கண்ணாடியைத் திருப்பினா வண்டி ஓடுமா?
திருநெல்வேலி-சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் எச்.ராஜா கலந்துகொள்வார் என விளம்பரமும் செய்திருந்தனர். கூட்டம் தொடங்கி நெடுநேரம் ஆகியும் எச்.ராஜா வருவதாகத் தெரியவில்லை. காத்துக் கிடந்தவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக கழன்றுவிட்டனர். பேசிக் களைத்திருந்த நிர்வாகிகளிடம் நாம் பேசுகையில், “"பெட்ரோல் விலை, ஜி.எஸ்.டி.ன்னு ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு. இதுல கட்சி வேலைக்கு காசு தராம வெறுங்கையில முழம் போட்டா எப்படி?' எச்.ராஜா பெயரையே பரபரப்புக்காகத்தான் போட்டோம்'’’ என்றனர்.
அவர் அட்மினையாச்சும் கூப்பிட்டிருக்கலாமே!
சமீபகாலமாக பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்துவருகிறார் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை. தமிழக அரசியல் நடப்புகளை டெல்லிக்கு தெரியப்படுத்துபவரான இவர், பா.ஜ.க.வினர் தனக்கு முக்கியத்துவம் தராத கடுப்பில் இப்படி நடந்துகொள்கிறாராம். உளவுத்துறையின் மூலம் இதைத் தெரிந்துகொண்ட டெல்லி தரப்பு, பிரதமர்-எடப்பாடி சந்திப்பின்போது, தம்பிதுரையை வரவேண்டாம் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டதாம். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி, தம்பிதுரையை அழைத்து அருகில் நிற்கவைத்ததும் கஷ்டப்பட்டு சிரித்திருக்கிறார்.
ஓ.பி.எஸ்.-க்கு நடந்த மாதிரியே!
ஜாக்கிங் போகிறவர்கள் சுற்றுப்புறத்தில் இருக்கும் குப்பைகளைச் சுத்தம் செய்தபடி செல்வதற்கு "ப்ளாக்கிங்' என்று பெயராம். வெளிநாடுகளில் பரவலாகியிருக்கும் இந்த நடைமுறையை செயல்படுத்த திருச்சி மாநகராட்சி முடிவுசெய்து, "அக். 2' என தேதியும் குறித்தது. நிகழ்விற்கு நடிகர் ஆதி, டி.வி. தொகுப்பாளர் கோபிநாத் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்ள, 2000 பேருக்கான டி-சர்ட், கையுறை, உணவு என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டன. வந்தவர்களோ பிரபலங்களுடன் செல்பி எடுப்பதிலேயே ஆர்வமாக இருந்ததால் அனைவரும் அப்செட் ஆகிவிட்டனர்.
பணத்தை வீணாக்கவே பயிற்சி எடுப்பாங்க போல!
குஜராத்தில் 14 மாத பெண்குழந்தை வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரத்தில், குஜராத் மக்களால், அங்கு வேலைபார்த்த பிறமாநில மக்கள் தாக்கப்பட்டனர். இதன்விளைவாக ஆயிரக்கணக்கானோர் குஜராத்தைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதற்கெதிரான கோபம் பிரதமர் மோடி போட்டியிட்டு ஜெயித்த வாரணாசியில் வெடித்திருக்கிறது. "குஜராத்தி நரேந்திர மோடியே வாரணாசியை விட்டு வெளியேறு' என்ற வாசகங்களுடன் வாரணாசி முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. தவிரவும் வாரணாசியிலுள்ள குஜராத்தி, மகாராஷ்டிரவாசிகள் வெளியேற ஒரு வாரம் அவகாசமளித்திருக்கிறது உ.பி., பீகார் "ஏக்தா மஞ்ச்' எனும் அமைப்பு.
ஏழைத்தாயின் மகன் என்றும் பாராமல்!
கோவை அரசு கலைக் கல்லூரியில் முதுகலை வரலாறு முதலாமாண்டு படித்துவருபவர் மாலதி. இவர் கடந்த மாதம் 28-ஆம் தேதி கல்லூரி மைதானத்தில் பகத்சிங் பிறந்ததின விழாவைக் கொண்டாடியுள்ளார். இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டு பேசியுள்ளனர். இந்நிலையில், அனுமதிபெறாமல் கூட்டம் கூட்டியதாகவும், கல்லூரியின் நிறைகுறைகளைப் பற்றி விவாதித்ததாகவும் கூறி மாலதி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், "வரலாறு படிக்கும் நாங்கள் பகத்சிங் பிறந்ததினத்தைக் கொண்டாடினால் என்ன தவறு?' என்று மாலதி தரப்பு கேள்வியெழுப்புகிறது.
வரலாறு முக்கியம்தானே?
பல்கேரியாவின் ரூஸ் நகரில் இயங்கிவரும் டி.வி.என். எனும் செய்தி நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்தவர் விக்டோரியா மாரினோவா. இவர் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் நிதியில் முறைகேடுகள் நடப்பதாகத் தொடர்ந்து எழுதிவந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் காணாமல்போன விக்டோரியா, உடல் சிதைந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டிருப்பது உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது. "மக்கள் பக்கம் நிற்கும் பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்பட்டால், அதற்கு நாடே வெட்கித் தலைகுனிய வேண்டும்' என கண்டனக்குரல்கள் எழுகின்றன.
உலகமெங்கும் இதுதான் நிலைபோல!
வங்காளதேசத்தில் 2004-ல் அவாமி லீக் கட்சி நடத்திய ஊர்வலத்தின்மீது நடந்த கிரனேட் தாக்குதலில் 24 பேர் இறந்தார்கள். 500-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அக்கட்சியின் தலைவி ஹஸீனா சற்றே கேட்கும் திறனை இழந்தார். கீழ்நீதிமன்றத்தில் நடந்துவந்த இவ்வழக்கில் அக் 10-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய 19 பேருக்கு மரண தண்டனையும், இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் கலிதா ஜியாவின் மகன் தாரிக்யு ரஹ்மானுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு தீர்ப்புக்கு 14 வருடங்களா?
இந்தியாவில் மட்டுமல்ல அங்கேயும் அப்படித்தான்!
டிசம்பரில் நடக்கவிருக்கிறது ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல். ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வை தோற்கடிக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது காங்கிரஸ். படித்த வேட்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என்றும் கூறிவிட்டார் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட். இதற்கிடையில், கருத்துக்கணிப்புகளும் காங்கிரசுக்கே சாதகமாக இருப்பதால், பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் மாற்றப்படலாம் என்கிற விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், தற்போதைய முதல்வர் வசுந்தரா ராஜே தாமரைதான் பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் என்று சர்ச்சைகளுக்கு பதிலளித்திருக்கிறார்.
தீர்ப்பு மக்கள்தானே சொல்லுவாங்க!
-சி.என்.ஆர்., பரமசிவன், ஜெ.டி.ஆர்., மதிவாணன்