* சென்னை -திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ். ராயப்பேட்டையின் ஒரு பகுதி ஐஸ்ஹவுஸ் காவல்நிலைய கட்டுப்பாட்டில் வருகிறது. சென்சிட்டிவான இந்தப் பகுதிகளில், தினமும் ஐந்துக்கும் குறையாமல் செயின் பறிப்பு, கொள்ளைச் சம்பவங்கள் நடக்கின்றன. மூன்று மாதங்களுக்கு முன்பு லாயிட்ஸ் காலனியில் வசிக்கும் செய்தித்துறை அதிகாரி ஒருவரின் வீட்டில் பலலட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளைபோயின. இதுகுறித்து புகாரளித்தும் கிரைம் இன்ஸ்பெக்டர் இல்லாததால் வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது. சென்னையின் பல ஸ்டேஷன்களிலும் இதுதான் நிலைமை.
க்ளைமாக்ஸ்லயாச்சும் வருவீங்களா சார்?
*பெரம்பலூர் எசனையைச் சேர்ந்தவர் ரேவதி. தன் கணவர் ரவியுடன் சண்டைபோட்டுவிட்டு பிரிந்துவாழும் தன்னை கணவரோடு சேர்த்து வைக்குமாறு பெரம்பலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். ரவியை அழைத்துப்பேசிய ஏட்டு இந்திராணி, ரேவதியிடம் கன்னாபின்னாவென பேசியதோடு, புகார்மனு ரசீது கேட்டதற்கு கெட்ட வார்த்தைகளில் திட்டியிருக்கிறார். கண்ணீரும் கம்பலையுமாக எஸ்.பி. திஷா மிட்டாலுக்கு போன்செய்து விஷயத்தைச் சொல்ல, ஐந்து நிமிடத்தில் புகார்மனு ரசீது தரவும், இந்திராணியிடம் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டிருக்கிறார்.
ஏட்டம்மா.. இதெல்லாம் தேவையாம்மா?
* துப்பாக்கி ஏந்திய போலீசார் எப்போதும் காவலுக்கு நிற்கும் விருதுநகர் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் உள்ளது, மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகம். இந்த அலுவலகத்தின் ஜன்னலை உடைத்து, ஆவணங்களுக்கு யாரோ தீ வைத்துவிட்டனர். முக்கிய ஆவணங்கள் எதுவும் இல்லையென்றாலும், முன்விரோதம் அல்லது அதிகாரி யாருக்கும் கெட்டபெயர் ஏற்படுத்த இப்படிச் செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் தீவைத்த கறுப்பு ஆட்டைப் பிடிக்க விசாரணை நடந்துவருகிறது.
தனிப்படை அமைச்சுப் பிடிங்க போலீஸ்கார்!
* திருச்சி -அரியமங்கலத்தில் உள்ள ஜெய் அகோரகாளி கோவிலில் ஏவல், பில்லி, சூனியம் செய்துவருகிறார் காசியில் அகோரி பயிற்சிபெற்ற மணிகண்டன். சமீபத்தில் இவரது தாயார் மேரி காலமான நிலையில், இடுகாட்டில் அவரது சடலத்தின் மீது அமர்ந்தபடி பூஜைகள் செய்துள்ளார். இதேபோல், சங்கிலியாண்டபுரம் சுடுகாட்டில் நிர்வாணபூஜை செய்தபோது, கம்யூனிஸ்ட் தோழர்களின் புகாரின்பேரில் காவல்துறையினர் மணிகண்டனை வெளியேற்றினர். இதுபோன்றவர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
* திரிபுராவில் ஆட்சியமைத்த பிறகு கம்யூனிஸ அடையாளங்களை அழித்துவருகிறது பிப்லாப் தேவ்குமார் தலைமையிலான பா.ஜ.க. அரசு. தற்போது, திரிபுரா சி.பி.எம். கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான "டெய்லி தேசெர் கதா'-வின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கு திரிபுராவின் கலெக்டர் சந்தீப் மகாத்மே உத்தரவின்படி, அங்கீகாரமற்ற உரிமையாளர் மாற்றம் என்ற காரணத்தைக்கூறி இந்திய பத்திரிகைகள் பதிவாளர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இது சட்டவிரோதமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது மற்றும் ஜனநாயக விரோதமானது என சி.பி.எம். தரப்பு குற்றம்சாட்டுகிறது.
ஆக்கப்பூர்வமா ஏதாச்சும் பண்ணுங்க பிப்லாப்!
* ரஃபேல் ஊழலைச் சொல்லியே பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் குடைச்சல் கொடுக்கிறதென்றால், சொந்தக் கட்சிக்குள்ளேயே எம்.எல்.ஏ. ஒருவர் கிளம்பியிருக்கிறார். மகாராஷ்டிர மாநிலம் கடோல் தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான ஆஷிஸ் தேஷ்முக், ரஃபேல் மெகா ஊழல் என விமர்சித்து வந்தார். அதேபோல், மத்திய அரசைக் கடுமையாக சாடிவிட்டு, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதமும் கொடுத்துவிட்டார். காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்துவந்த இவர் மீண்டும் காங்கிரஸிலேயே இணையப் போகிறாராம்.
அரசியல்ல சேஃப்டி ரொம்ப முக்கியம்!
* டெல்லி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் தலைவர், துணைத்தலைவர் பதவிகளைத் தட்டிச்சென்றது ஏ.பி.வி.பி. எனும் இந்துத்வா அமைப்பு. இதில் தலைவராக தேர்வான அன்கிவ் பைசொயா திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை முடித்ததாக சான்றிதழ்கள் கொடுத்திருந்தார். ஆனால், அது போலிச்சான்றிதழ் என செய்திகள் வெளியாகின. சான்றிதழில் திருவள்ளுவர் என்னும் பெயரே தவறாக அச்சிடப்பட்டுள்ள நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகமும் இதனை உறுதிசெய்துள்ளது.
இதுவும் காங்கிரஸ் சதியா இருக்குமோ?
* சென்னை -விருகம்பாக்கத்தில் பள்ளியொன்றில் ‘"வாழும் கலை'’ அமைப்பின் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதன் நிறுவனர் சாமியார் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மற்ற மாநிலங்களைப்போல் இல்லாமல், தமிழக கோயில்கள் அசுத்தமாக இருப்பதாகக் குற்றம்சாட்டிச் சென்றார். "வாழும் கலை என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தி யமுனை நதியை குப்பைக்காடாக மாற்றிவிட்டு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அபராதம் செலுத்தியவர்தானே நீங்கள்' என பலரும் அவரைக் கிண்டலடித்து வருகின்றனர்.
ஊருக்குத்தான் உபதேசமெல்லாம்
* தேனி சின்னமனூரைச் சேர்ந்தவர்கள் கணேசன்-காளீஸ்வரி தம்பதி. இவர்களது பத்து வயது மகள் நந்தினி விளையாடச் சென்றவர், மறுநாள் காமாட்சிபுரம் பகுதியிலுள்ள கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இவரை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு கழுத்தை நெரித்துக் கொன்றதாக சுந்தர்ராஜ், ரவி மற்றும் குமரேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2014-ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில், மூவருக்கும் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது தேனி மகளிர் நீதிமன்றம்.
குற்றமும் தண்டனையும்…
* மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை மற்றும் மத்திய செலவினங்களுக்கான நிதிக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட இந்தத் தகவல் சர்ச்சையைக் கிளப்ப, விரைவில் இதற்கான வேலைகள் நடக்கும் என முதல்வர் எடப்பாடி உள்ளிட்டோர் கூறிவருகின்றனர். இதற்குமுன்பே சென்னை வந்திருந்த அமித்ஷா, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக எந்தக் கணக்கில் சொன்னாரென்று தெரியவில்லை.
அண்டப்புழுகு மாதிரி அமித்ஷா புழுகா இருக்குமோ?