தனியார்மய மாக்கலை கைவிடக்கோரியும், பணி நிரந்தரம் செய்யச் சொல்லியும் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் களை, அனுமதியில்லாமல் போராடியதாகக்கூறி போலீசார் கைதுசெய்தனர். அதன்பிறகு போராட்டத்திற்கு அனுமதி கொடுக்காததால் பல்வேறு வகையில் போராட்டத்தை கையிலெடுத் துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டலம் 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், தங்களுடைய பணி நிரந்தர கோரிக்கைக்காக, அம்பத்தூரிலுள்ள எல்.டி.யூ.சி. தொழிற்சங்க அலுவலகத்தில் கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய உண்ணாவிரதத்தை, அதன்பின் சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு தொடர்ந்தனர். அரசு தரப்பில் நடத்தப்பட்ட பலகட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், "நீதிமன்றத்தில், போராட்டம் நடத்துவதற்காக இடத்தை அரசு ஒதுக்கியுள்ளது. அந்த இடத்தில் அனுமதி பெற்று போராடலாம்' என்ற தீர்ப்பை பெற்றுக்கொண்டு, போராட் டத்தில் ஈடுபட்டவர்ளை ஆகஸ்ட் 13ஆம் தேதி இரவே, வலுக்கட்டாயமாக கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகு சில நாட்கள் தூய்மை பணியாளர்கள் அமைதிகாத்து வந்த நிலையில், இந்த போராட்டத்திற்கு உந்துதலாக இருந்த எல்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் தலைவரான வழக்கறிஞர் பாரதியை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேபோல தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோருவது தொடர்பான வழக்கும் வருகிற 17ஆம் தேதி வரவுள்ளது. மேலும், மாநகராட்சியிலுள்ள தூய்மை பணியாளர்களை தனியாரிடம் மாற்ற போடப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து போடப்பட்ட வழக்கும் நீதிமன்றத்தில் வரவுள்ளது.
இந்நிலையில், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்துவதற்கான தனி இடத்தை ஒதுக்கித்தரும்படி சென்னை கமிஷனரிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அனுமதி மறுத்த காரணத்தால், என்ன செய்யலாமென்று பல கட்டமாக யோசித்த நிலையில், முதற்கட்டமாக 8ஆம் தேதி மே தினப் பூங்காவில் கூடியுள்ளனர். அதற்கு, பொது இடத்தில் கூடுவது குற்றம் எனக்கூறிய அரசு, அவர்களை மீண்டும் கைது செய்து மண்டபத்தில் வைத்து பின்னர் விடுவித்தனர். பிறகு அடுத்த நாள், வெளியில் வந்து கூடினால் இப்படி நடக்கிறது, ஆகையால் தனிப்பட்டமுறையில் வீட்டிற்குள்ளேயே ஒன்றுகூடத் திட்டமிட்டு, கொருக்குப்பேட்டை ராஜீவ்காந்தி நகர் இரண்டாவது தெருவில் வசிக்கும் பார்த்தசாரதி, 5வது மண்டலத்தில் பணிபுரியும் இவரது வீட்டில் முதலில் 13 பேர் ஒன்றுகூடி, அதே பகுதியிலுள்ள மேம்பாலத்தின் கீழ் பந்தல் அமைத்து அங்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாம் என போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளனர்.
போலீசார் அனுமதி மறுத்த காரணத்தால் அவர்கள் அதே வீட்டில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அதன்பிறகு 250-க்கும் மேற்பட்டவர்கள் வரத்தொடங்கியதால் போலீசார் உடனடியாக போராட்டத்தை நிறுத்தும்படி கேட்டும் நிறுத்தாத காரணத்தால், உடனடியாக தூய்மை பணியாளர்களை கைது செய்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், கல்பனா மற்றும் கிரேஸ்மேரி ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிவிழுந்தனர். அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மீண்டும் மறுநாள் காலையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறமுள்ள மாதா கோவில் அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்து ஆலந்தூரிலுள்ள சமுதாயக்கூடத்தில் அடைத்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/15/thumaiemployee1-2025-09-15-17-52-59.jpg)
இதனால் நொந்துபோன தூய்மை பணியாளர்கள், இப்படி இந்த அரசு எங்களுக்கு கடந்த ஆட்சியின்போது அளித்த கோரிக்கையை நிறைவேற்றாமல், எங்கள் பணியை தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு, அதற்காக போராட்டத்தில் இறங்கியபோது, அனுமதி பெற்று போராட்டம் நடத்துங்கள் எனச்சொன்னது. ஆனால் தற்போதோ, எங்களுக்கு அனுமதி கொடுக்காமலும், மீறி எங்கள் உறவினர்கள் வீட்டிலே உண்ணாவிரதப் போராட்டம் செய்தாலும் கைது செய்கிறார்கள். இந்த சமூகத்தில் போராட்டம் செய்யும் உரிமைகூட கிடையாதா? எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், "இந்த பணியே செய்து வாழ்நாள் முழுவதும் இதிலேயே முடங்கிவிடாமல் எங்களையும் தொழில் முனைவோராக உயர்த்த, "அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்' எனும் திட்டத்தை கொண்டுவந்தால், அதையும் எங்கள் பெயரைச் சொல்லி இவர்களே விழுங்கிவிடுகிறார்கள். இப்படி எங்களை வைத்து இந்த அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கிறார்கள். நாங்கள் என்ன அந்த பணத்தையாக கேட்கிறோம்? எங்களுக்கான உரிமையை கேட்கிறோம். நிச்சயம் எங்கள் கோரிக்கையை இந்த அரசு கேட்க வேண்டும். எங்களின் கோரிக்கைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் செவிசாய்த்து உடனடியாகத் தீர்வுகாண வேண்டும். இல்லை யென்றால் நிச்சயம் தமிழகம் முழுவதுமுள்ள தூய்மை பணியாளர்கள் ஒருங்கிணைந்து தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தக்கூடத் தயங்கமாட்டோம்'' என்றனர்.
சமூகநீதி பேசும் அரசு, இந்த தூய்மை பணியாளர்களை காவல்துறையை வைத்து கட்டுப்படுத்தப்போகிறதா...? இல்லை அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றப்போகிறதா?
-சே
படங்கள்: சுந்தர் & ஸ்டாலின்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/15/thumaiemployee-2025-09-15-17-52-44.jpg)