தொடர்ந்து தனது படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை உரக்கப் பேசுபவர் இயக்குநர் பா.ரஞ்சித். சினிமா மட்டுமின்றி இசை, குறும்படங்கள், நாடகங்கள் என அனைத்துத் தளங்களிலும் அவரது முன்னெடுப்புகள், வரவேற்பையும் விமர்சனங்களையும் ஒருசேர பெறுகின்றன. தற்போது சென்னையில் "வானம்' என்கிற கலைத்திருவிழாவை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தியிருக்கும் அவரை, சில கேள்விகளோடு சந்தித்தோம்…
வானம் கலைத் திருவிழாவை முன்னெடுப்பதற்கான யோசனை எப்படி வந்தது?
பண்பாட்டு ரீதியான உரையாடலை நிகழ்த்துவதற்கு கலை ரொம்பவும் அவசியமானதாக இருக்கிறது. இங்கு கலையென்பது வெறுமனே பொழுதுபோக்காக மட்டுமின்றி, சமூக கலாச்சாரப் பதிவுகளின் மீளாகத்தான் இருக்கிறது. ஆதிமனிதன் தனது கலாச்சார வெளியை தனது சந்ததிகளுக்கு கடத்திவிட்டுச் சென்ற கலை, நாகரிகத்தின் வளர்ச்சியால் பல்வேறு பரிமாணங்களை எடுத்திருக்கிறது. இந்தியா மாதிரியான வளரும் நாடுகளில் சமகால அரசியல் சூழலைப் பற்றிய உரையாடலுக்காக அந்தக் கலை பயன்பட்டு வருகிறது. தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் அரசியலைக் கைப்பற்றுவதற்காகவும் கலையை மிகத் தீவிரமாக பயன்படுத்தியிருக்கின்றன. மக்களை சுலபமாகத் தொடர்புகொள்ளும் இடத்தில் இருப்பதால், அதன்மூலம் அவர்களை ஒருங்கிணைக்க முடியுமென்று மாவோ சொல்கிறார். சோவியத் யூனியனும் கலை இலக்கியத்தை ஆயுதமாக கையாண்டிருக்கிறது. வரும் நூற்றாண்டின் முக்கியமான ஆயுதமாக சினிமா விளங்கும் என லெனினும் குறிப்பிடுகிறார். திராவிட இயக்கங்களைப் போலவே தலித் அரசியலைப் பேசுகிறோம். கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்வைத் (Casteless Collective) தொடர்ந்து வானம் நிகழ்வை நடத்தியிருக்கிறோம்.
டிசம்பர் மாதத்தை இதற்காக தேர்ந்தெடுத்ததன் காரணம்?
டிசம்பர் மாதத்தில்தான் பெரும்பாலான கலைத் திருவிழாக்கள் நடக்கின்றன. கலையம்சம் கொண்ட மாதமாகவும் அது கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக பல நாளிதழ்கள் டிசம்பரில் இசை சம்பந்தமாக செய்திகளை வெளியிடுகின்றன. ஏன் நாமும் அதே மாதத்தில் இசை விழா நடத்தக்கூடாது என்ற கேள்விதான் நடத்தச் செய்தது.
புத்தர், பறையிசை, மதுரைவீரன் போன்ற நிகழ்ச்சிகளை தனித்துவமான அடையாளத்தோடு பண்ண நினைக்கிறீர்களா?
வெவ்வேறு பவுத்தங்கள் பரவலாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. நான் அம்பேத்கர் சொன்ன விடுதலைக்கான பவுத்தத்தை சொல்ல நினைக்கிறேன். சாதியற்ற, வர்க்கமற்ற, மனிதர்கள் எல்லோரும் சமம், அவர்களுக்குள் ஏன் வேறுபாடு, சுரண்டல் எனக்கேட்ட மிகப்பெரிய புரட்சியாளரான புத்தரைப் பேசுகிற நாடகத்தை நடத்துகிறோம். கடவுளாக்கப்பட்ட பவுத்தம் என்றல்லாமல், சாதிய, மத முரண்களைக் களைய உதவுமென்று அம்பேத்கர் நினைத்த பவுத்தத்தை, விரிவுபடுத்திக் காட்டும் முயற்சிதான் இது. அதேபோல், அருந்ததிய சமுதாயத்தில் பிறந்த மதுரைவீரன் என்கிற வீரரின் திரித்துக் கூறப்பட்ட வரலாறைச் சொல்லாமல், வரலாற்று ஆய்வுகள் கூறும் உண்மையான தரவுகளை நாடகமாக மேடையேற்றி இருக்கிறோம்.
உங்களுடைய படங்களில் சமரசம் செய்து கொள்கிறீர்களா?
மொழி மற்றும் கையாளப்படும் கருவிகளைத்தான் சமரசம் என்கிறோம். சாதி, மதம், பாலின பேதம் போன்ற முரண்களைக் களைய, அவற்றை ஏற்றுக்கொண்டிருப்பவர்களிடம் தான் நாம் பேசவேண்டும். அப்போது என்னைத் தவிர்த்துவிடாமல் இருப்பதற்கான சமரசம் கொண்ட, பார்வையாளருக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட ஹீரோயிசம் என்கிற மொழியில் கதை சொல்கிறேன். அப்படிப் பார்த்தால் "காலா'வரைக்கும் சமரசமான திரைப்படங்களைத்தான் எடுத்திருக்கிறேன். அதேசமயம், கொள்கையளவில் சமரசம் செய்துகொள்ளமாட்டேன்.
கள அரசியல் -கலை அரசியல்… இவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இரண்டுமே ஒன்றுதான்; பாதுகாப்பாக கையாள வேண்டியவை. கள அரசியல் ரொம்பவும் முக்கியமானது. அதேசமயம், கள வேலைப்பாட்டை விட, கலை வேலைப்பாடு அதீத பதற்றத்தை ஏற்படுத்திவிடும். அதனால்தான், என் படங்களை சாதாரணமாகக் கடந்துபோக முடிவதில்லை. அட்டக்கத்தி தவிர்த்து மற்ற மூன்று படங்களும் விமர்சனமாகவும், உரையாடல் ரீதியிலும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
தலித் என்பவர்களே சாதியற்றவர்கள்தான். அவர்களே இன்னொரு சாதியாக மாறுவதாக வைக்கப்படும் விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
சாதியற்றவர்கள் ஒன்றிணைவதற்கான வாய்ப்பை உடைக்கும் பேச்சாகவே அதைப் பார்க்கிறேன். சாதிய முரண்களைப் பேசினாலே சாதியவாதி என்ற முத்திரை குத்துவதை, வேலை செய்யவிடாமல் தடுக்கும் சூழ்ச்சி என்றே நினைக்கிறேன். இங்கிருக்கும் பிரச்சனைகளைக் களைய பேசித்தான் ஆகவேண்டும். இதுவரை 89 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்திருக்கின்றன. வன்கொடுமைகள், சாதியால் பிரிந்து கிடக்கும் கிராமங்கள், பட்டியலின சமுதாயத்திற்குள்ளேயே பிரிவினைகள் என பிரச்சனைகள் ஏராளம். இதையெல்லாம் சரிசெய்யாமல் டிஜிட்டல் உலகத்திற்குள் சென்று என்ன செய்யப் போகிறோம்? சாதிய முரண்களைக் கேள்வி கேட்காமல் அது உடையாது. இதைச் செய்வதால் சாதியவாதி முத்திரை குத்துவார்கள் என்றால்… ஐ டோண்ட் கேர்!
ஒரு அரசியல் திட்டத்தோடு நீங்கள் செயல்படுகிறீர்களா?
நிச்சயமாக அரசியல் திட்டம் இருக்கிறது. அது விழிப்புணர்வுதான். பண்பாட்டுத் தளங்களில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமான, மிகப்பெரிய வேலையென்று கருதுகிறேன். பெரியார் தன்னுடைய இயக்கத்தை வைத்து இங்கு செய்ததைப் போன்ற இயக்கம்தான் இது. பண்பாட்டுத் தளங்களில் நாம் ஏற்படுத்தும் உரையாடல் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தும்.
சந்திப்பு: -பெலிக்ஸ்
தொகுப்பு: -ச.ப.மதிவாணன்
படம்: -ஸ்ரீ பாலாஜி