கடந்த 12-ஆம் தேதி இரவு சுமார் 4:00 மணியளவில், பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்திலுள்ள ராணுவ பயிற்சி முகாமில் மாடியறையில் பீரங்கிப் படையைச் சேர்ந்த வீரர்கள் தங்கியிருந்தனர். அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி யால் சரமாரியாக சுட்டதில் சாகர் பன்னே, கமலேஷ், யோகேஷ்குமார், சந்தோஷ் நகரல் ஆகிய நான்கு வீரர்கள் பலியானார்கள்.
அவர்களில் கமலேஷ், யோகேஷ்குமார் இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். சாகர் பன்னே, சந்தோஷ் நகரல் இருவரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
பலியான கமலேஷ் நாமக்கல் மாவட்டம் நங்கவள்ளி அருகேயுள்ள மசக்காளியூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை ரவி, தாயார் செல்வமணி. இவர்களுக்கு இரு மகன்கள். இரண்டாவது மகன் கமலேஷ் பி.ஏ. பொருளாதாரம் படித்துவிட்டு, 2019லிஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்துள்ளார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு மீண்டும் பஞ்சாப் ராணுவ முகாமுக்குச் சென்றுள்ளார்.
இவருடனிருந்த சக தமிழக வீரர் யோகேஷ், தேனி மாவட்டம் மூணாம்பட்டி ஜெயராஜ், ரத்தினம் தம்பதியின் மகன். இவர்கள் இருவரும் துப்பாக்கிச் சூட்டில் இறந்த 12லிஆம் தேதி மதியம் கமலேஷ், யோகேஷ் குடும்பத்தினருக்கு ராணுவ முகாமிலிருந்து செல்போன் மூலம் துப்பாக்கிச் சூட்டில் இறந்துவிட்டதாகவும், உடலை அனுப்பி வைப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
மறுநாள் மதியம் விமானம் மூலம் கோவை கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து போலீசார் கமலேஷ் உடலை அவரது வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். பொதுவாக ராணுவ வீரர்கள் இறந்துபோனால் விமானத்தில் வரும் உடலை விமான நிலையத்திலிருந்து ராணுவ வாகனத்தில் சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு கொண்டுவந்து ஒப்படைப்பார்கள். அதோடு இறுதிச்சடங்கின்போது ராணுவ மரியாதை செய்து உடலை அடக்கம் செய்துவிட்டு அதிகாரிகள் செல்வார்கள். ஆனால் போலீசார் சாலையில் அடிபட்ட ஒருவரது உடலைக் கொண்டுவந்து சம்பந்தப்பட்டவர்கள் வீட்டில் போட்டுவிட் டுப் போவதுபோல கமலேஷ் உடலை கொண்டுவந்து கொடுத்துள்ளனர்.
கமலேஷ் மரணம் குறித்து வருவாய்த் துறையினர், காவல்துறை உயர் அதிகாரிகள், ராணுவத்தை சேர்ந்த யாரும் எந்தவித விளக்கமும் சொல்லவில்லை. இதனால் கோபமுற்ற கமலேஷ் உறவினர்கள், ஊர்மக்கள் ஒன்றுதிரண்டு மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். அதன்பிறகு கோவையிலிருந்து வீரர்களுடன் இராணுவ வாகனம் வந்து, லோகேஷ் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்துள்ளனர்.
இதுகுறித்து அவரது தந்தை ரவி, “"எனது மகன் மரணத்திற்கு உரிய விளக்கத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. அவன் காவல்துறையில் சேர்ந்து பணியாற்றவேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஆனால் கமலேஷ் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்யவேண்டும் என்று பிடிவாதமாக ராணுவத்தில் சேர்ந்தான். ராணுவத்தில் சக வீரர்களாலேயே என் மகன் சுடப்பட்டு இறந்துபோயிருக்கிறான். என் மகன் போன்ற ராணுவ வீரர்களுக்கு முகாமிலேயே பாதுகாப்பு இல்லை என்ற நிலை உரு வாகியுள்ளது. ராணுவ வீரர்கள் இறந்தால் உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய இழப்பீட்டுத் தொகையை அறிவிக்கும். அஞ்சலி செலுத்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள். அப்படி யாரும் வரவில்லை''” என்றார்.
பஞ்சாப் ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ராணுவ அதிகாரிகள் போலீசில் புகாரளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்திய பதிண்டா மாவட்ட மூத்த போலீஸ் அதிகாரி குல்நீத் சிங் குரானா, இரண்டு நாட்கள் கழித்து ஊடகத்தினரைச் சந்தித்துள்ளார். அப்போது அவர், “முகாமில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக குன்னர் தேசாய் என்ற சக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், அங்கிருந்து ஆயுதக் கிடங்கிலிருந்து ஒசநஆந ரக துப்பாக்கியை திருடி மறைத்து வைத்திருந்து இரவு நேரத்தில் தூங்கிக்கொண்டிருக்கும்போது சுட்டதில் நாலு பேர் உயிரிழந்துள்ளனர். 12-ஆம் தேதி அதிகாலை தூக்கத்திலிருந்த சக ராணுவ வீரர்களை முகத்தில் துணி கட்டிக்கொண்டு வந்த இருவர் சுட்டுவிட்டு தப்பி ஓடியதாக குன்னர் தேசாய் கூறினார். அவரது வாக்குமூலத்தில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தியதில், அவர் ஆயுதத்தை திருடி மறைத்து வைத்திருந்து சுட்டுவிட்டு அந்த துப்பாக்கியை கால்வாயில் வீசிவிட்டு எதுவும் நடவாததுபோல் இருந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து ராணுவ அதிகாரிகளும் காவல்துறையும் தனித்தனியாக விசாரணை நடத்துகிறார்கள்''’என்று தெரிவித்துள்ளார்.
காவல்துறை அதிகாரி குல்நீத்சிங் குரானா விசாரணையின் போது நான்கு பேரை சுட்டுக் கொன்ற குன்னர் தேசாய், முகாமில் தான் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தாகவும், அதற்குப் பழிவாங்கும் நோக்கத்தில்தான் அந்த நான்கு வீரர்களையும் சுட்டுக்கொன்றதாகவும் கூறியுள்ளார்.
"இந்திய ராணுவத்தில் இதுபோன்று ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடும் ராணுவ வீரர்களை சட்டப்படி தண்டிப்பதில் ராணுவம் உறுதியாக உள்ளது. ராணுவ வீரர்கள் தனிப்பட்ட முறையில் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள், சக வீரர்களால் ஏற்படும் அவமானம், தொல்லை இதுபோன்ற தனிப்பட்ட காரணங்கள் குறித்து முறையான புகாரளித்தால் அதை விரிவாக விசாரிக்கும் நடைமுறை உள்ளது. ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் ஒரு யூனிட்டுக்கு ஒரு வீரரால் கெட்ட பெயர் வந்தால் அப்படிப்பட்டவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் ராணுவ வீரர்கள் தங்கள் பிரச்சனைகளை குறித்து தெரிவிப்பதற்கு சி.இ.ஓ. என்ற அதிகாரியை எளிதில் அணுகுவதற்கான வழிமுறைகளும் உள்ளன. இவ்வளவு ஏற்பாடுகள் இருப்பதால், குன்னர் தேசாய் கூறியுள்ள குற்றச்சாட்டு ஏற்புடையதாக இல்லை'' என்கிறார்கள் ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் சிலர்.
ராணுவத்திலுள்ள தமிழகம் உட்பட தென்மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும், இந்தி பேசும் வடமாநிலத்தவர்களுக்கும் இடையே ஒருவித ஈகோ பிரச்சனை அவ்வப்போது எழுவது உண்டு. அதுபோன்ற பிரச்சனையினால்தான் குன்னர் தேசாய் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர், கர்நாடகத்தைச் சேர்ந்த இரண்டு பேரைச் சுட்டுக்கொன்றுள்ளார்.
2019-ல் தான் மேற்படி நால்வரும் ராணுவத்தில் சேர்ந்துள்ளனர் பயிற்சி முடிந்து முகாமிற்கு செல்வதற்கு எப்படியும் ஒரு ஆண்டு கடந்திருக்கும். அப்படி பார்க்கும்போது ராணுவத்தில் சேர்ந்து ஓரிரு ஆண்டுகளில் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதற்கு துணிவிருக்காது. அப்படிப்பட்ட நிலையில் இளம் வீரர்களான இவர்கள் நால்வரும் குன்னர் தேசாயை பாலியல் துன்புறுத்தல் செய்தார்கள் என்பது பொய்யானது.
குன்னர் தேசாய் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை எனவே இது குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி, பிள்ளைகளை இழந்த பெற்றோர்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்த வேண்டும். எதிரி நாடுகளிடமிருந்து நம்மைக் காப்பாற்று வதற்கு போராடும் நமது வீரர்களை சக ராணுவ வீரர்களே எதிரியாக மாறி சுட்டுக்கொல்வது மன்னிக்க முடியாத குற்றம்.
ராணுவ முகாம்கள் நாட்டின் எல்லைப் பகுதி உட்பட பல இடங்களில் உள்ளன. இவற்றில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் என்ற பிரிவு உள்ளது. இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பார்கள். இவர்களுக்குள் அதிகளவு பாகுபாடு விரோத மனப்பான்மை இருப்பது இல்லை. அப்படியே சிறு, சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை சரிசெய்து கொள்வார்கள். ஆனால் வடமாநிலங்களிலுள்ள ரெஜிமெண்ட்களில் தங்கியிருக்கும் வீரர்களிடையே தென்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து இருப்பார்கள். தமிழர்கள், தென்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் அவர்களை கிண்டல், கேலி, வம்பு செய்வது என இருப்பார்கள். எதிர்த்துக் கேள்வி கேட்டால் அப்படிப்பட்ட வீரர்களை திட்டம் போட்டு தீர்த்துக்கட்டவும் தயங்கமாட் டார்கள்.
ராணுவ முகாம்களில் நடக்கும் அசம்பாவித சம்பவங்கள் முழுமையான அளவில் வெளிவருவதில்லை. காரணம் ராணுவ வீரர்களைக் கண்காணிக்கும் சின்ன சின்ன பதவியிலுள்ள அதிகாரிகள் பதவி உயர்வு பெறவேண்டுமானால் அந்த முகாம்களில் எந்தத் தவறும் நடக்காமல் கண்காணிக்க வேண்டும். அவரது கண்காணிப்பை மீறி குற்றம் நடந்துவிட்டால் அந்த ராணுவ அதிகாரி உயர் பதவிகளை அடையமுடியாது. அதன் காரணமாக முகாமிலுள்ள ராணுவ அதிகாரிகள் அங்கு நடக்கும் உண்மைச் சம்பவங்களை மறைத்து யார் மீதாவது பழியைப் போட்டு வழக்கை முடிப்பார்கள்.
நிச்சயம் பஞ்சாப் ராணுவ முகாமில் நடந்த சம்பவத்தில் உண்மைகள் வெளி வராது. அப்படி உண்மைகள் வெளிவர வேண்டுமானால் இறந்து போன ராணுவ வீரர்கள், அவர்களை துப்பாக்கி யால் சுட்ட ராணுவ வீரர் ஆகியோரின் பின்னணி, செல்போன் உள்ளிட்டவை களை ஆய்வுசெய்ய வேண்டும். ராணுவ அதிகாரிகள் அதனைச் செய்ய மாட்டார்கள்'' என்கிறார்கள் பணியிலிருந்து சமீபமாக ஓய்வுபெற்று திரும்பியுள்ள ராணுவ வீரர்கள்.