சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி படத்தில் வரும் ஒரு காட்சியில், தொழிலாளர்களின் சம்பளத்தில் ஒரு தொகையை முரடர்கள் வசூல் செய்வதுபோல வரும். இதேபோன்ற சம்பள வழிப்பறி சம்பவம், சென்னை மணலி எம்.எஃப்.எல். நிறுவனத்தின் செக்யூரிட்டி தொழிலாளர்களுக்கு ரியல் வாழ்க்கையிலேயே நடக்கிறது.

mfl

மணலி, எம்.எஃப்.எல். நிறுவனத்தில் செக்யூரிட்டி பணியில், 94 தொழிலாளர்களை ஆர்.ஜி.ஆர். என்ற நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்துள்ளது. இந்த தொழிலாளர்களின் சம்பளப் பணத்தில்தான் மோசடி நடந்துள்ளது. இந்த செக்யூரிட்டிகளின் உண்மையான சம்பளம் என்னவென்றே சொல்லப்படாமல் தான் பணியாற்றியுள்ளனர். இதனை அறிந்துகொள்வதற்காக தொழிலாளர் நல ஆணையத்தில் முறையிட்டுள்ளனர். அதையடுத்து. எம்.எஃப்.எல். நிறுவனம், குறைந்தபட்ச ஊதியம் வழங்கியதற்கான ஆதாரமாகச் சம்பள மஉத-ல் பதிவுசெய்து, தொழிலாளர்களின் ஊதியத்தை வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் மாத வருமானமாக ரூ.17,000 போடப்பட்டாலும், தஏத நிறுவனத்தின் எம்.டி. குமாரின் உத்தரவுப்படி, ஜெயராஜ், சிட்டிபாபு ஆகிய இருவர், கந்துவட்டியை வசூல் செய்வதுபோல, எம்.எஃப்.எல். நிறுவனத்தின் நுழைவாயிலில் நின்று, 94 தொழிலாளர்களிட மும், அவர்களின் சம்பளத் துக்கேற்ப, ரூ.3,000 முதல் ரூ.12,000 வரை வசூல் வேட்டை நடத்தியிருக்கிறார்கள். குமார் என்பவர் லயன்ஸ் கிளப்பில் முக்கிய பொறுப்பில் உள்ளார். ஜெயராஜ் என்பவர் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றியவர். தமிழ் பேசும் தொழிலாளர்களிடம் ரூ.6,000 வரையும், வட மாநிலத் தொழிலாளர்களிடம் ரூ.12,000 வரையும் மோசடியாக மிரட்டி, வசூலித்துவந்திருக்கிறார்கள். செக்யூரிட்டிகளுக்கு சீருடை வாங்குவதற்கான பணமென்ற கணக்கில் 6 மாதத்துக்கு ஒருமுறை ரூ.2,000 தனியாக வசூலித்திருக்கிறார்கள். ஆனால் சீருடை வழங்கியதில்லை. இதைக் கேள்விகேட்டால், வேலையைவிட்டுக் கிளம்பும்படி மிரட்டியிருக்கிறார்கள்.

Advertisment

mfl

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட தொழிலாளி ஒருவரிடம் கேட்டபோது, ""எம்.எஃப்.எல். நிறுவனம், எங்களுக்கு ஒரு நாள் வருமானமாக, ரூ.774 கொடுக்கிறார்கள். ஆனால் ஆர்.ஜி.ஆர். நிறுவனம், எங்கள் சம்பளத்தை வாங்கிக்கொண்டு, 400 ரூபாய் மட்டும்தான் கொடுத்தார்கள். இப்படி, 94 தொழி லாளர்களையும் ஏமாற்றி, மாதந்தோறும் லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கிறார்கள். இதில், காவல் நாய்களைப் பராமரிப்பதற்கான சம்பளமான 4,000 ரூபாயை அப்படியே மொத்தமாகத் தராமல் சுருட்டுகிறார்கள். நாய்களைப் பராமரிக்கும் தொழிலாளி, தனது சொந்தப்பணத்தை நாய்களுக்குச் செலவழிக்கிறார். இதுகுறித்து கேட்டால், உங்களிடம் வசூலிக்கும் பணம், அரசு தரப்பிலிருக்கும் முக்கிய அதிகாரிகளுக்கும் செல்வதால் எங்களால் ஒன்றும் செய்யமுடியாதென்று மிரட்டுகிறார்கள்.

போனமாதம் எம்.எஃப்.எல் நிறுவனத்தில் கொடுத்த சம்பளப்பட்டியலில் ரூ.24,000 வழங்கியதாகக் கணக்குக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் வங்கிக்கணக்கில் ரூ.10,000 மட்டுமே போடப்பட்டுள்ளது. வங்கியிடமிருந்து பொய்யான பட்டியலைக் கொடுத்துள்ளனர். அதில் வங்கி மேலாளரும் கையெழுத்து போட்டுள்ளார். இப்படித்தான் சம்பளப் பணத்தில் மோசடி செய்கிறார்கள். இதனால் கொதிப்படைந்த நாங்கள், ஒன்றுகூடிக் கேள்வியெழுப்பியதும், ஆர்.ஜி.ஆர். நிறுவனம் பிடித்த பணத்தைத் திருப்பித் தருகிறோம் என்று சொன்னார்கள். ஆனால் அடுத்த அரை மணி நேரத்திலேயே, இதுகுறித்து சி.எம்.டி.யிடம் பேசினோம், பணமெல்லாம் தரமுடியாதென்று கூறிவிட்டார். இரண்டு செக்யூரிட்டிகள் மட்டும் இதுகுறித்து பேசுவதற்கு அலுவலகத்துக்கு வரச்சொல்லி அழைத்தார்கள்.

Advertisment

அதனை மறுத்துவிட்டு, இங்கு வந்து அனைத்துத் தொழிலாளர்கள் மத்தியில் பேச வேண்டுமென்றும், யாரையாவது வேலை நீக்கம் செய்தால் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோமென்றும் அறிவித்தோம். அதன்பின்னர் ஒருவழியாக இம்மாதச் சம்பளத்தைப் போட்டார்கள். ஆனால் ஜெயராஜ் வழக்கம்போல, வட மாநிலத் தொழிலாளர்களை மிரட்டியுள்ளார். இந்த குமார், ஜெயராஜ் மற்றும் சிட்டிபாபு மூவரும் தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கொடூரர்களாக இருக்கிறார்கள்'' என்றனர்.

இதுகுறித்து ஆர்.ஜி.ஆர். நிறுவனத் தின் எம்.டி. குமாரிடம் விசாரித்தபோது, ""அப்படியெல்லாம் தொழிலாளர்களிடம் வசூலிப்பதில்லை. எம்.எஃப்.எல். நிறுவனம் கொடுக்கும் பணத்தை அப்படியே வங்கிக்கணக்கில் சேர்த்துவிடுகிறோம்'' என்றார். தொழிலாளர்களின் போராட்டம் குறித்து கேட்டதும், சரியான பதிலைச் சொல்ல முடியாமல், ஒரே பதிலையே திரும்பத்திரும்பச் சொல்லி மழுப்பினார். தொழிலாளர்களிடம் பண வசூல் செய்யும் ஜெயராஜிடம் விசாரித்தபோது, ""நான் பணம் வசூலிக்கவில்லை. அவர்கள் பொய் சொல்கிறார்கள்'' என்று மறுத்தார்.

mfl

இதுகுறித்து, எம்.எஃப்.எல். நிறு வனத்தின் உயர் அதிகாரியான ஆனந்த விஜயனிடம் விசாரித்தபோது, ""எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. நாங்கள் வழக்கம் போல எங்கள் வேலையைச் சரியாகச் செய்துவருகிறோம். நீங்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொண்டு என்னவென்பதை விசாரிக்கிறோம்'' என்று கூறினார். ஆர்.ஜி.ஆர் நிறுவனம் மட்டுமின்றி, இதே எம்.எஃப்.எல். நிறுவனத்தில், மற்ற சில ஒப்பந்ததாரர்களின் நிறுவனங்களிலும் இதே மாதிரியான முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் வந்துள்ளன.

நக்கீரன் இந்த விவகாரம் குறித்து விசாரித்ததில், இம்மாதம் பிடித்தமின்றி முழுமையான ஊதியம் வழங்கப்பட்டதாகத் தொழிலாளிகள் தெரிவித்தனர். இது இந்த ஒரு மாதத்துக்கு மட்டும்தானா... நிரந் தரமாகவா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.