ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லையென்பதற்கு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் சம்பவங் களே சாட்சி. இலங்கை கடற் படையினரின் தாக்குதல் சம்பவங்களால் இதுவரை 900 மீனவர்கள் வரை உயிரிழந்துள்ளனர். அதுகுறித்து இந்திய ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுப்பதே கிடையாது என்பதே மீனவர்களின் குமுறலாக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட் டைப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜ்கிரண், கல்யாணமாகி 40 நாட்களே ஆன நிலையில், அக்டோபர் 18-ம் தேதி, தனது இளம் மனைவி பிருந்தாவிடம் விடைபெற்று, அருகில் நின்ற அம்மாவிடம், "அம்மா பிருந்தாவுக்கு துணையா இருந்துக்கம்மா, நாளைக்கு வந்துடறேன்" என்று கடலுக்குள் சென்றார். அவரோடு 118 படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அடுத்த நாள் அதி காலையிலேயே, ராஜ்கிரண் ஓட்டிச்சென்ற படகை இலங்கை கடற்படைக்கப்பல் மோதி மூழ்கடித்ததில், அதிலிருந்த மூவரும் என்ன ஆனார்களென்று தகவல் தெரியவில்லை யென்ற செய்தி பேரிடியாக வந்தது.
இந்த செய்தி, மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த, அனைத்து மீனவர்களும் ஒன்றுதிரண்டு சாலை மறியலில் இறங்கினர். அந்த போராட்டத்திற்குப் பின்னர், காணாமல்போன மூவரில், சுகந்தனும், சேவியரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறையில் ஒப்படைக்கப் பட்டது தெரியவந்தது. ஆனால் ராஜ்கிரண் நிலை மட்டும் தெரியவில்லையென மீன்வளத்துறை தக வல் கொடுத்தது. அன்று மாலையில்தான் ராஜ் கிரண் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டதாக மீன்வளத் துறைக்கு இலங்கை அரசு தெரிவித்தது. அடுத்த சில நிமிடங்களிலேயே அத்தகவலைத் திரும்பப்பெற்றது. அதனால் ராஜ்கிரண் குறித்த குழப்பம் தொடர்ந் தது. அடுத்த நாளிலும் ராஜ்கிரண் குறித்து சரியான தகவல் தரப்படாததால் புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்ட மீனவர்களும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆறுதல் சொன்னதுடன், ராஜ்கிரண் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், மற்ற இருவர் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் தனது சொந்த நிதியிலிருந்து வழங் கினார். போராட்டக் களத்திற்கு கந்தர்வகோட்டை ச.ம.உ சி.பி.எம். தோழர் சின்னத்துரை, ராமநாத புரம் எம்.பி. நவாஸ்கனி மற்றும் பலரும் வந்து ஆதரவு தெரிவித்து ஆறுதல் கூறினார்கள். 22-ம் தேதி காலையில், ராஜ்கிரண் உடலை ஒப்படைப்ப தாகக் கூறியதால் ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஏமாற்றத்தோடு திரும்ப, மீண்டும் 23-ம் தேதி அழைப்புவர, இந்திய கடற்படை முன்னிலையில் ராஜ்கிரண் உடலைப் பெற்றனர்.
ராஜ்கிரண் உடலைப் பார்த்து, "கடலுக்குப் போயிட்டு வந்துடுவேன்னு சொல்லிட்டு போனியளே.. இப்ப இப்டி கட்டி அனுப்பிட் டானுங்களே" என்று இளம் மனைவி பிருந்தா கதறியது கண் கலங்க வைத்தது. ராஜ்கிரணின் அம்மா ஆரவள்ளி, "என் மவன் என்னய்யா தப்பு செஞ்சான்.. இப்படி துடிக்க துடிக்க அடிச்சு கொன்னிருக் கானுங்களே.. உசுரு போகும் போது எம்புள்ள எப்டி துடிச்சிருக்கும்... எம் மருமவளுக்கு என்னய்யா பதில் சொல்வேன்?" என்று கதறினார். சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, தமிழக அரசு அறி வித்திருந்த ரூ.10 லட்சத்திற்கான காசோலையைக் கொடுத்தனர்.
மே-17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி நம்மிடம், "இலங்கை அரசு ராஜ்கிரணைப் பிடித்து தாக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறது. பிரேதப் பரிசோதனைக் கோரிக்கையையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. தமிழக அரசாவது உடற்கூறாய்வு செய்து, சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை மீது கொலை வழக்கு தொடரவேண்டும். கேரளாவில் ரூ.20 கோடி இழப்பீடு கிடைத்த நிலையில், இங்கே மாநில அரசு மட்டும் ரூ.10 லட்சம் இழப்பீடு கொடுத்திருக்கிறது. மத்திய மோடி அரசோ ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. மத்திய அரசின் நிவாரணம் பெற்றுத் தருவதுடன், ராஜ்கிரண் மனைவி பிருந்தாவுக்கு அரசு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்றார்.
சி.பி.எம். ஒ.செ. ராமநாதன், "ராஜ்கிரண் உடலை இலங்கை கடற்படை அவங்க கப்பல்ல கொண்டு வந்து சர்வதேச எல்லையில் ஒப்படைக் கிறார்கள். சடலத்தை வாங்க நம் மீனவர்கள் தான் சொந்த செலவில் அதிகாரிகளையும் ஏற்றிக் கொண்டு கடலுக்குள் சென்று சடலத்தை வாங்கி வருகிறோம். ஆனால் இந்திய கடற்படை, மீடி யேட்டராக மட்டும் நின்று வேடிக்கை பார்க்கிறார் கள். மீனவர்களுக்கு எந்த பாதுகாப்பையும் இந்திய அரசாங்கம் கொடுப்பதில்லை" என்றார்.
மீனவர் பிரபாகரன், "சம்பவம் நடந்த அன்னிக்கி ராஜ்கிரண் படகிலிருந்து வாக்கி டாக்கியில் அழைச்சு, "எங்களை இலங்கை கடற்படை சுற்றிவளைக்கிறது. படகில் மோதிட்டாங்க" என்று சொன்னார்கள். அதன் பிறகு எந்த தகவலும் இல்லை'' என்றார். கைது செய்யப்பட்ட சுகந்தன், சேவியர் ஆகியோரை மீட்பதுடன், மூழ்கடிக்கப்பட்ட படகுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்'' என்று ஒன்றிய அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.