Skip to main content

"ஒருங்கிணைப்பும் இல்ல, ஒத்துழைப்பும் இல்ல!'' -இராமநாதபுரம் ரணகளம்!

வாக்குப்பதிவு நாள் நெருங்க நெருங்க அனைத்துத் தொகுதிகளிலும் பிரச்சாரமும் சூடு பிடிக்குது, பிரச்சனைகளும் அக்னி வெயிலைவிட அனலடிக்குது. இராமநாதபுரம் தொகுதியில் இது கூடுதலாகவே இருக்கிறது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக முஸ்லிம் லீக்கை சேர்ந்த நவாஸ்கனியும், பா.ஜ.க. வேட்பாளராக நெல்லையைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனும், அ.ம.மு.க. சார்பில் மாஜி அமைச்சர் வ.து.நடராஜனின் மகன் ஆனந்தும் களத்தில் வரிந்து கட்டுகிறார்கள்.

பிரபல எஸ்.டி.கூரியரின் உரிமையாளரான நவாஸ்கனி வேட்பாளராக வந்திறங்கியதுமே, கூட் டணியின் நியாயப்படி, வேட்பாளரின் விதிப்படி, தி.மு.க.வின் மாவட்டப் பொறுப்பாளர் கே.முத்து ராமலிங்கத்தைச் சந்தித்து சால்வை அணி வித்து, செய்ய வேண்டிய அனைத்து மரியாதைகளையும் செய்தார்.

ramnadஅடுத்ததாக, மாஜி அமைச்சரும் மா.செ.வுமான சுப.தங்கவேலனையும் அவரது மகனும் மாஜி மா.செ.வுமான சுப.த.திவாக ரையும் சந்தித்து, செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்தார் நவாஸ்கனி. இதெல்லாம் முடிந்த பின் ஜமாத் தலைவர்கள், இஸ்லாம் சமூக பெரியவர்கள் ஆகியோரைச் சந்தித்து பிரச்சாரத்தை வேகப்படுத்திச் சென்றபோதுதான் வேகத்தடையாக சில விவகாரங்கள் வெடித்தன. முத்துராமலிங்கம் தரப்பும் தங்கவேலன் தரப்பும் தனித்தனியாக வாக்குச் சேகரிப்பில் இறங்கி, கனியை கிறுகிறுக்க வைத்தன. அதேபோல் கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் இரண்டு தரப்பும் தனித்தனியே பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தன. இப்போது அதிலும் கோளாறு ஏற்பட்டுள்ளது.

""ஒருங்கிணைப்பும் இல்ல, ஒத்துழைப்பும் இல்ல'' என முத்துராமலிங்கம் தரப்பு மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள் தங்கவேலன் தரப்பினர். இது குறித்து காதர்மைதீனிடம் எழுத்துப்பூர்வமாகவே கொடுத்து, இதை தலைமைக்குத் தெரியப்படுத்துமாறு சொல்லியுள்ளனர் தங்கவேலன் ஆதரவாளர்கள். இதற்கிடையே த.மு. மு.க.வின் மாஜி மாவட்டச் செயலாளர் கலிமுல்லாகானிடம் பெரும் தொகை ஒன்றை நவாஸ்கனி கொடுத்தும், அதை செலவழிக்காமல் இறுக்கிப் பிடித்திருக்கும் அதிருப்தியில் காங்கிரஸ் மற்றும் வி.சி.க.தொண் டர்கள் பாதிப்பேர் தேனிக் கும் சிதம்பரத்திற்கும் புறப்பட்டுவிட்டனர்.

"நயினார் நாகேந் திரனும் பணப்பட்டுவாடா வில் தாராளம் காட்டினா லும், திருநெல்வேலிக் காரருக்கு ஓட்டுப் போட்டு நாம என்னபண்றது' என தொகுதிவாசிகளிடம் முணுமுணுப்பு கிளம்பி யிருக்கிறது. மண்ணின் மைந்தர் என்ற கெத்துடன் ஓட்டுக் கேட்டாலும் செலவுக்கு ரொம்பவே திண்டாடுகிறார் வ.து.ந. ஆனந்த். வெற்றிக்கனியைப் பறிக்க கூடுதல் கவனத்துடன் உழைக்கவேண்டும் நவாஸ்கனி.

-ஈ.பா.பரமேஷ்வரன்


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்