ஆளுந்தரப்பிலான முதல்வர் வேட்பாளர் -வழிகாட்டும் குழு பரபரப்புகளைத் தாண்டி ஒற்றை ஆளாக புதிய பரபரப்பை மீடியாக்களில் உருவாக்கிவிட்டார் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வான கள்ளக்குறிச்சி பிரபு. இத்தனைக்கு அவர் சம்பந்தப்பட்ட அந்த பரபரப்பு, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்டதுதான். ஆனால், தனித் தொகுதி எம்.எல்.ஏவான பிரபு, பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்தால், சாதிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் சமுதாயத்தில் பரபரப்பு ஏற்படத்தானே செய்யும்.
எம்.எல்.ஏ. பிரபுவின் சொந்த ஊர்தியாக துருகம். அவரது அப்பா அய்யப்பா, அ.தி.மு.க. ஒ.செ.வாக, கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் தொகுதி மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமும் செல்வாக்கும் கொண்டவர்கள். உழைப்பால் உயர்ந்தவர் கள் என்று பலரும் அவர் களைச் சுட்டிக்காட்டு கின்றனர்.
35 வயதான எம்.எல்.ஏ. பிரபுவுக்கு நீண்ட நாட்களாக மணப்பெண் தேடிக் கொண்டிருந்தனர். இதற்கிடையே எம். எல்.ஏ. பிரபுவுக்கும், அந்தப் பகுதியில் இருக்கும் மலையம்மன் கோயிலில் அர்ச்சகரான சாமிநாதனின் மகளான கல்லூரி மாணவி சௌந்தர்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. இதைறிந்த சவுந்தர்யாவின் அப்பா சாமிநாதன் இவர்களின் காதலைக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருக்கிறார். காரணம், ஆளுங்கட்சியின் செல்வாக்கான எம்.எல். ஏவாக இருந்தாலும் அவர். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான்.
இந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாத எம்.எல்.ஏ., காதலி சௌந்தர்யாவைத் தன் குடும்பத்தார் முன்னிலையில் 5-ந் தேதி அதிகாலையில் திருமணம் செய்துகொண்டார். அந்த நொடியில் இருந்தே அந்தப் பகுதியில் பரபரப்புத் தீ பற்றிக்கொண்டது. எம்.எல்.ஏ.வின் சாதி மறுப்புத் திருமணம் மீடியாக்களிலும் சமூக வலைத்தளங்களி லும் விறுவிறு செய்தியானது. பல தரப்பிலிருந்தும் பாராட்டு ஸ்டேட்டஸ் கள் குவிந்தன.
அதே நேரத்தில், எதிர்ப்புக் குரல்களும் கிளம்பின. கல்லூரி மாணவியை மனம் மாற்றிவிட்டார் என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதனிடையே, மணமகள் சவுந்தர்யாவின் அப்பாவான கோவில் குருக்கள் தனது மகளை எம்.எல்.ஏ. கடத்திவிட்டதாகக் கூறி, தியாகதுருகம் போலீசில் புகார் கொடுத்ததுடன், தீக்குளிக்க முயற்சித்தும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தத் திடீர் திருப்பம் மேலும் சர்ச்சையானது.
இது குறித்து மணமகள் சவுந்தர்யாவிடம் நாம் கேட்டபோது, ""இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். என்னை யாரும் கடத்தவோ, கட்டாயப்படுத்தவோ இல்லை. என்னுடைய மனப்பூர்வமான சம்மதத்துடன்தான் பிரபுவை திருமணம் செய்து கொண்டேன். கோபத்தில் இருக்கும் என் அப்பா அம்மாவை விரைவில் நான் சமாதானம் செய்து விடுவேன்'' என்றார் உறுதியும் நம்பிக்கையும் நிறைந்த குரலில்.
எம்.எல்.ஏ. பிரபுவோ, ""இந்தக் காலத்தில் காதல் திருமணம் செய்து கொள்வது பெரிய தவறா? இதை வேண்டுமென்றே சிலர் பெரிதுபடுத்துகிறார்கள். சௌந்தர்யா வின் அப்பா, திருமணத்தின்போது எங்கள் வீட்டுக்கு வந்தார். சீர்வரிசை கொடுக்க வந்ததாகக் கூறினார். பிறகு அவரே, மாற்றி மாற்றிப் பேசுகிறார். முறைப் படி அவர் தரப்பில் பெண் கேட்டோம். கொடுக்க மறுத்துவிட்டார். அதனால் சௌந்தர்யாவின் முழு சம்மதத்தின் பேரிலேயே திருமணம் செய்துகொண்டேன். விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். தொகுதி மக்களிடம் எனக்கு உள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கத்தில் சிலர், நான் மணப் பெண்ணை கடத்தியதாகப் புரளி கிளப்பி வருகிறார்கள்'' என்றார் ஆதங்கமாய். பிரபுவின் ஆதரவாளர்களோ, ""காதல் திருமணம் செய்வது என்பது சமூகத்தில் நடப்பது தானே? ஆனால் எம்.எல்.ஏ.வின் காதல் திருமணம் மட்டும் பரபரப்பாக்கப்படுவது ஏன்? அரசியல்வாதி என்றால் காதலிக்கக் கூடாதா? காதலித்து திருமணம் செய்து கொள்ளக்கூடாதா? பிரபு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். சௌந்தர்யா பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். பிரபுவுக்கு வசதி வாய்ப்புகள் இருந்தும் இங்கே ஜாதி என்ற வேலி குறுக்கிடுகிறது இதை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர்தான், அலப்பறை செய்கிறார்கள்.
தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட பட்டியல் இன ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை, பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் காதல் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிரபு குடும்பத்திற்கு மரு மகளாக வந்துள்ள சவுந்தர்யா மகாராணியைப் போல் வாழ்வார்'' என்கிறார்கள் உற்சாகமாய்.
புகார், வழக்கு என இந்தத் திருமணத்தை சர்ச்சையாக்கும் முயற்சிகள் தொடர்ந்தாலும், மணமகளுக்கு 19 வயது என்பதால் மணமக்கள் இருவருமே மேஜர் என்ற அடிப்படையில் அவர்களின் திருமணத்திற்கு சட்டப்பூர்வமான எந்தத் தடையும் இல்லை. சாதி ஏற்றத்தாழ்வை நொறுக்கி, காதலில் உறுதியாக இருந்து திருமணம் செய்தது போலவே, வாழ்க்கையிலும் தொடர் வெற்றிகள் பெறும்போது சர்ச்சைகள் சத்தமின்றி ஓடிவிடும்.
-எஸ்.பி.எஸ்.