கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு உத்த ரவு, பாதுகாப்பை கருத்தில் கொண்டு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், "இன்னும் 19 நாட் களா?' என, விதிர்விதிர்த்துப் போய் இருக்கிறார்கள் மக்கள். ‘யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது’ என்ற தனிமைப்படுத்து தல், உயிர்பயத்தில் பெரும் பாலோரால் கடைப்பிடிக் கப்பட்டு வரும் நிலையில், தமி ழகம் முழுவதும் களமிறங்கினோம்.
"144 உத்தரவுக்கும் எங்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை' என்பதுபோல், சமூக இடைவெளி என்பதே இல்லாமல், ஆயிரக்கணக்கானோர் தினமும் குவிவதை, சென்னை- கோயம்பேடு மார்க்கெட்டில் காண முடிந்தது. அங்கு காய்கறிக் கடை நடத்திவரும் ஜான்சன், ""இங்கே மூட்டை தூக்குறவங்கள்ல இருந்து டிபன் கடை போடுறவங்க வரை தினமும் வரக்கூடியவங்க சுமார் இருபத்தைந் தாயிரம் பேர். இது பத்தாதுன்னு 144 உத்தரவால பாதிக்கப்பட்ட சிறுகுறு தொழிலாளிங்க, ஆட்டோ டிரைவருங்க, பெயின்ட் அடிக்கிறவங்க எல்லாம் வயித்துப் பிழைப்புக்காக இங்கே காய்கறி விற்க வந்துட்டாங்க. மதியம் ஒரு மணி வரைக்கும்தானே வியாபாரம் பார்க்க முடியும். சில்லறை வியாபாரிங்க எல்லாரும் நைட் ஒரு மணிக்கெல்லாம் கூட்டம் கூட்டமா குவியறாங்க. வாகன நெரிசல் வேற. மார்க்கெட்டே ஸ்தம்பிச்சு போயிடுதுங்க. அதிகாரிகள் யாரும்எந்த நடவடிக்கையும் எடுத்ததில்ல.
வியாபாரிங்கள சொல்லி குத்தமில்ல சார். 2015-ல வெள்ளம் வந்தப்ப ரேசன் கார்டுக்கு அஞ்சாயிரம் கொடுத்தாங்க. இப்ப எடப்பாடி கொடுக்கிறது வெறும் ஆயிரம்தான். இத வச்சு எத்தனை நாளைக்கு சாப்பிட முடியும்? அதான்... பொழப்ப ஓட்டுறதுக்காக இம்புட்டு கூட்டம். இங்கே பத்து ருபாய்க்கு வாங்குற பொருள, ஏத்து கூலி இறக்கு கூலி எல்லாத்தயும் சேர்த்து வெளில போயி 50 ரூபாய்க்கு விக்கிறான். பாவம் ஜனங்க. பாதிக்கப்படறது அவங்கதான். செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம்... இந்தப்பக்கம் காஞ்சி புரம், திருவள்ளூர், வேலூர்னு சென்னைக்கு சுத்துப்பட்ல இருக்குற அத்தனை மாவட்டத்துக்கும் இங்கேயிருந்துதான் காய்கறி லோடு போகுது. கூடவே கொரோனாவும் சேர்ந்து போகுது'' என்றார் கவலையுடன்.
தமிழகத்தின் பிற மாவட் டங்களில் ஊரடங்கை எதிர்கொள்ளும் மக்க ளின் நிலை என்ன?
அய்யம்பெருமாள் (இராமநத்தம் - கடலூர் மாவட்டம்)
எங்கு பார்த்தாலும் மயான அமைதி. மரண தண்டனை கைதிகள் போல வாழறோம். எல்லா ஓட்டல் மாதிரியும் என்னோட ஓட்டலையும் மூட வேண்டியதா போச்சு. வருமானம் சுத்தமா நின்னு போச்சு. ஓட்டல்ல வேலை பார்த்தவங்களயும் என் குடும்பத்தையும் கையில இருந்தத வச்சு 25 நாள் காப்பாத்திட்டேன். இப்ப ஊரடங்க நீடிச்சிட் டாங்க. தலையில இடி விழுந்த மாதிரி ஆயிருச்சு. சாப்பாட்டுக்கே வழியில்லாம போச்சு. எல்லா வியாபாரமும் முடங்கிருச்சு. யாருகிட்ட போயி கடன் வாங்குறது? கொரோனா கிடக்கட்டும் விடுங்க. பசிக்காம இருக்கிறதுக்கு ஏதாச்சும் மருந்து இருக்கா? முதல்ல அதை, அரசாங்கத்த கொடுக்கச் சொல்லுங்க.
ராஜு (பெரங்கியம் - கடலூர் மாவட்டம் )
நான் பார்க்கிறது சமையல் மாஸ்டர் வேலை. சுபகாரியங்களுக்கு புக் பண்ணுன எல்லா ஆர்டரும் கேன்சல் ஆயிருச்சு. நல்ல உள்ளம் படைச்சவங்க, ஏழை மக்களுக்கு, மாற்று திறனாளிகளுக்கு உதவுறாங்க. அந்த உதவிகூட எங்கள மாதிரி உள்ளவங்களுக்கு கிடைக்கிறதில்ல.
பெரியசாமி (தொளார் - கடலூர் மாவட்டம்)
கொரானாவுல மக்கள் சாகுறத டிவில காட்டிக்கிட்டே இருக்காங்க. ரொம்ப பயமா இருக்கு. அரிசி, மளிகைச் சாமான், ஆயிரம் ரூபாய்ன்னு கவர்மெண்ட் கொடுக்குது. கிடைச்சத சாப்பிட்டு உயிர் வாழ பழகிக்கணும். மூணு வேளை வெற்றிலை போட்டுக்கிட்டிருந்த நான், இப்பல்லாம் ஒரு வேளைதான்.
கௌரி (குச்சிப்பாளையம் - விழுப்புரம் மாவட்டம்)
வீட்ல தனியா இருங்கன்னு அரசாங்கம் சொல்லுது. 20-ந் தேதி 100 நாள் வேலை ஆரம்பிக்க போறாங்களாம். நாங்க 200 பேருக்கு மேல அந்த வேலைதான் பார்க் கிறோம். வேலை நடக்கிற இடத்துல ஒட்டி ஒட்டித்தான் இருப்போம். இடைவெளி விட்டு வேலை பாருங் கன்னு அரசாங்கம் சொல்லுது. எப்படி பார்க்கப் போறோம்னு தெரியலை. 100 நாள் வேலைய மே 3-ந் தேதி வரைக்கும் ஒத்தி வைக்கிறதுதான் சரி. எங்களுக்கு மாச சம்பளம் கொடுத்தா நல்லாயிருக்கும்.
முருகப்பன் (பந்தநல்லூர் - தஞ்சை மாவட்டம்)
எல்லா பொருளுக்கும் எங்க ஊருல ரெண்டு மடங்கு விலை. ஊரடங்குக்கு முன்னால வியாபாரிங்க கொள்முதல் செய்ததுதான். காலாவதியாகி குடோன்ல வச்சிருந்தத பொருளையெல்லாம் தட்டுப் பாடான இந்த நேரத்துல வித்துட்டாங்க. போட்டோ, வீடியோ ஆதாரத்தோட தஞ்சை மாவட்ட ஆட்சியர் கிட்ட, உணவுத்துறை அதிகாரிகள்கிட்ட சொன்னோம். ஒரு நடவடிக்கையும் எடுக்கல. காலாவதியானத சாப்பிட்டதுல யாருக்கு என்ன நோய் வரும்னே தெரியல.
சுகுணா (பந்தநல்லூர் காவல் ஆய்வாளர்)
விவசாயத்த வச்சித்தான் இங்கேயிருக்கிற கிராமங்கள் வாழ்ந்துக்கிட்டிருக்கு. எல்லாருமே இங்கே ஏழைங்கதான். ஊரடங்குனால வேலை இல்லாம போச்சு. அவங்க வீட்லயும் உலை கொதிக்கணும்ல. அதனாலதான்... தினமும் ரெண்டு கிராமங்களை செலக்ட் பண்ணி, அரிசி, மளிகைப் பொருட்கள் கொடுத்துட்டு வர்றேன். அதை வாங்கிட்டு போறப்ப மக்கள் முகத்துல அப்படியொரு சந்தோஷம். அவங்களுக்கு வயிறு நிறையுதுன்னா.. நமக்கு மனசு நிறையுது.
உமா (வேதாரண்யம் - நாகை மாவட்டம்)
பால் கறந்து கடைகளில் விற்று பிழைச்சுக்கிட்டிருந்தோம். அதுலயும் இப்ப மண்ணு விழுந்திருச்சு. டீ கடைங்க இல்லைங்கிறதுனால முன்ன மாதிரி பால் வியாபாரம் இல்ல. கறந்த பாலை என்ன செய்யுறதுன்னு தெரியாம, குறைஞ்ச விலைக்கு அக்கம்பக்கத்துல இருக்கிற வீடுகளுக்கு கொடுக்கிறோம். அந்தக் காசு, மாட்டு தீவனம் வாங்குறதுக்குகூட பத்தல. யூரியா விலை ஏறிபோச்சுன்னு விவசாயிங்க புலம்புறாங்க. நாங்கள்லாம் விவசாய கூலிங்க. எங்க நிலைமை அரசாங்கத்துக்கு தெரியல. நானும் விவசாயின்னு சொல்லுறாரு எடப்பாடி. விவசாயிகள் வேற... விவசாய கூலிகள் வேறன்னு அவருக்கும் தெரியல.
தங்க கண்ணன் (சேந்தன்குடி - புதுக்கோட்டை மாவட்டம்)
கஜா புயலுக்கு பிறகு இந்த வருஷம்தான் விவசாயம் பண்ணு னோம். கத்தரிக்கா, பச்சமிளகா, மா, பலா, வாழை, மலர்கள்ன்னு உற்பத்தி யெல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு. அத இப்ப வாங்க நாதியில்ல. குடும்ப அட்டைக்கு நிவாரணம் கொடுத்த அரசாங்கம் விவசாய பயிர் களுக்கு எதுவும் தரல. விவசாயிங்க எங்கேயும் போக முடியல. போற இடத்துல எல்லாம் போலீஸ்காரங்க நிக்கிறாங்க. ஃபைன் போடுறாங்க. ஊருக்கே சோறு போடுற விவசாயி வீட்ல ஒருவேளை சோறுகூட நிம்மதியா சாப்பிட முடியல.
மதியழகன் (அரயப்பட்டி - புதுக்கோட்டை மாவட்டம்)
ஊரடங்குன்னா வேலைக்கு போகக்கூடாதுன்னு சொல்லுது அரசாங்கம். அப்படின்னா... வாழறதுக்கு வழி காட்டணும்ல. புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்துல கட்டுமான தொழிலாளிங்க, தரைக்கடை போட்டவங்க, மில், தென்னை நார், வலைத் தொழிற்சாலைகள்ல வேலை பார்க்கிறவங்க, விவசாயிங்கன்னு எல்லாருமே வேலையில்லாம வீட்ல சும்மா இருக்காங்க. கேரளாவுல மக்களுக்கு தேவையானத கொஞ்சமாவது செஞ்சு கொடுத்திருக்காங்க. இங்கே... தமிழ்நாட்டுல எதுவும் பண்ணல. இப்பவே பட்டினி கிடக்கிற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்க.
உமாபதி சுரேஷ் (திருச்சி)
போட்ட வாழையெல்லாம் பழுத்து தொங்குது. லாரி கிடைக்க மாட்டேங்குது. ஊரடங்கினால விவசாயம் அடங்கிப்போச்சு. வயித்து பசிய அடக்கி விவசாயம் பண்ணுனேன். இந்த கொரோனா கொடுமை எங்கள மொத்தமா அடக்கிருச்சு. நூறு வாழை சாஞ்சிருச்சு. 300 தாரை காப்பாத்தி வச்சிருக் கோம். 12 தார்தான் வெட்டிருக்கோம். கிலோ 25 ரூபாய்க்கு விற்கிறத 9 ரூபாய்க்கு கொடுத்துக் கிட்டிருக்கோம். இந்த வாழைத் தாரெல்லாம் கேரளா போக வேண்டியது. இப்ப அழுகிக் கிட்டிருக்கு. இத கண் கொண்டு பார்க்க முடியல.
லட்சுமி (திருச்சி)
திடக்கழிவு ஒப்பந்த வேலைங்க. மாசம் 2500 ரூபாய் சம்பளம். நோய்த்தொற்று ஏற்படும்கிற பயத்தோட ஒவ்வொரு நாளும் போய்க்கிட்டிருக்கு. இப்ப டெய்லி பிளீச்சிங் பவுடர் அடிக்கணும். அதனால.. கையெல்லாம் வெந்து கிடக்கு. எங்களுக்கு பெரிய பொறுப்பு இருக்கு. குடும்பத்த நினைச்சுக்கிட்டிருக்க முடியாது. சம்பளமெல்லாம் பெரிசில்லீங்க. ஊருக்காக வேலை பார்க்கிறோம்ல. அந்த மனநிறைவு ஒண்ணே போதும்.
ஹேமந் நிஜந்தன் (திருச்சி)
செல்போன் உதிரிபாகம் விற்கிற வருமா னத்த வச்சு அத்தனை வரியையும் முறையா செலுத்தினோம். முதலீடு அதிகம். ஆனா... வருமா னம் குறைச்சல். பண சுழற்சி முறையில எங்க வாழ்க்கை சுழன்றுகிட்டிருக்கும். இப்ப பண சுழற்சி சுத்தமா இல்ல. வாழ்க்கையும் படுத்திருச்சு. எப்படி மீண்டு வரப்போறோம்னு தெரியல. ரேசன் கார்டுக்கு 1000 ரூபாய் எந்த மூலைக்கு? தினமும் 200 ரூபாய் தந்தால் சமாளிச்சு ஓட்ட முடியும்.
சுபா (கண்ணார்பட்டி - திண்டுக்கல் மாவட்டம்)
காய்கறி விலையெல்லாம் ஏறிப்போச்சு. வீட்ல தினமும் ரசமும் கஞ்சியும்தான். கேஸ் வாங்க பணம் இல்ல. காடு, தோட் டம்னு அலைஞ்சி விறகு பொறுக்கிட்டு வந்து சமைச்சு சாப்பிடறோம். காசு கொடுத்து தண்ணி வாங்க முடியல. தாகத் துக்கு தண்ணி குடிக்கிறதுக்கே யோசிக்கிற நிலைமைக்கு கொண்டுவந்துட்டாங்க.
முத்தம்மாள் (பள்ளபட்டி - திண்டுக்கல் மாவட்டம்)
புருஷன், புள்ள குட்டின்னு எனக்கு யாருமில்லீங்க. செருப்பு தைச்சி அதுல கிடைக்கிற அம்பது நூற வச்சு சாப்பிட்டேன். இப்ப திண்டுக்கல் டவுணுக்கு மூணு கிலோ மீட்டர் நடந்தே போக வேண்டியிருக்கு. முன்ன மாதிரி வேலையில்ல. அதுவும் மதியம் 1 மணிக்குள்ள கிளம்பிடணும். பிஞ்சுபோன செருப்ப தைக்கிறதுக்கு ஊரு அடைஞ்சு கிடக்கிற நேரத்துல யாரு வருவா? யாராச்சும் வரமாட்டாங்களான்னு பார்த்துக்கிட்டு இருக்கிறதே பொழப்பா போச்சு.
சுப்பிரமணி (திண்டுக்கல்)
வேலை பார்த்த ஓட்டல அடைச்சிட்டாங்க. சொந்த ஊரான பெங்களூருக்கு போக முடியல. பஸ் ஸ்டாண்ட்ல ஓரஞ்சாரத்துல படுத்திருப்பேன். யாராச்சும் கொடுக்கிறத வச்சி சாப்பிட்டேன். தனியாளுங்க யாருக்கும் உதவக்கூடாதுன்னு அரசாங் கம் உத்தரவு போட்டதுல இருந்து, அதுவும் நின்னு ருச்சு. பெரியாஸ்பத்திரி பக்கத்துல மாஸ்க் விற்கிற வர்கிட்ட, 80 ரூபாய்க்கு 10 மாஸ்க் வாங்குறேன். 10 ரூபாய்ன்னு 10 பேருக்கு விற்கிறேன். கிடைக்கிற 20 ரூபாய வச்சு அம்மா உணவகத்துல சாப்பிடறேன்.
பாஷா (மதுரை)
ஆட்டோ ஓட்டுறத வச்சி கஞ்சி குடிச்சிக்கிட்டி ருந்தோம். இப்ப அதுக்கும் வழியில்லாம போச்சு. இந்த கொரோனா ஒரு பாடம் கத்துக்கொடுத்திருக்கு. பெத்தவங்க சொன்ன பேச்ச கேட்டு சரியா படிக்காமத்தான ஆட்டோ ஓட்டுறேன். மாச சம்பளம் வாங்குற மாதிரி ஒரு வேலைக்கு என் மகனையாச்சும் நல்லா படிக்க வைக்கணும்கிறது மனசுல பதிஞ்சிருச்சு. இன்னொரு விஷயம். நம்ம பிரதமர் அடிக்கடி டிவில வர்றாரு. மேல்தட்டு மக்களை மனசுல வச்சே பேசுறாரு. கீழ்த்தட்டு மக்களை அவரு கணக்குல எடுத்துக்கிட்ட மாதிரியே தெரியல.
சிவகங்கை அமுதா... ""சொந்தக் கார் இருக்கு. ஆனா.. எங்கயும் போக முடியல. உடம்பு செக்கப்புக்கு போகணும்னா ஆஸ்பத்திரி மூடிக்கிடக்கு. இருந்தும் இல்லாத மாதிரி ஒரு வாழ்க்கைன்னா.. அது இதுதான்''’’ என்று நொந்துகொள்ள, சலவைத் தொழிலாளியான கண்ணன்... ""மக்கள் சும்மாவே வீட்ல இருக்காங்கள்ல. துணி துவைக்கிறதுக்கு கத்துக்கிட்டாங்க. நாடு சகஜ நிலைமைக்கு வந்தாலும், அடுத்து எங்களுக்கு வேலை வருமான்னு தெரியல'' என்றார் எதிர்காலம் குறித்த அச்சத்துடன்.
சங்கரன்கோவில் லட்சுமியம்மாள்...“""குடிக்கிற தண்ணி வரல. வெளிய வரப்பிடாதுன்னா எப்படி? ஒரு குடம் தண்ணிக்கு முண்டுறோம்யா...'' என்று தலையில் அடித்துக்கொண்டார். நெல்லை பேட்டை பகுதியில் டேரா போட்டுள்ள நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மலையாளி, மாரிராஜ், அல்லிராஜ், காத்தவராயன் போன்றவர்கள் கோயில் விழாவ நிப்பாட்டிட்டாங்க. பஸ், ரயில் ஓடல. ஊசி மணி, பாசி மாலை விற்கிற இடமெல்லாம் ஜனநடமாட்டம் இல்ல. நாடோடியா திரியிற எங்க பொழப்பு இப்ப அந்தரத்துல தொங்குது''’என்றனர் பெரும் கவலையுடன்.
நாகர்கோவில் அரசியல் கட்சி பிரமுகரான லிசம்மா, ""ஊரடங்கை நீடிச்சா ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும். 50 பேரு சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டாலும் 100 பேர் உயிரை கொரோனாவுல இருந்து காப்பாற்ற முடியுதுல்ல. இந்த ஊரடங்கால் கோடீஸ்வரனுக்கும் கஷ்டம்தான். பிளாட்பாரத்துல படுத்துக்கிடக்கிறவனுக்கும் கஷ்டம்தான்'' என்றார்.
சிவகாசியில் பிளாஸ்டிக் குடங்களை சைக்கிளில் கட்டி சாலையில் உருட்டிச்சென்ற முனியாண்டி “மூணும் பொம்பள புள்ளைங்க. சின்ன ஓட்டு வீட்டுக்குள்ள ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பார்த்துக்கிட்டு அஞ்சு பேரும் சும்மா இருக்கிறது ரொம்ப கொடுமைங்க. சைக்கிள் பஞ்சர்ன்னு சொல்லியும் வீட்ல கேட்கல. நாலு குடத்த வித்துட்டுத்தான் வீட்டு பக்கம் வரணும்னு விரட்டியடிச்சிட்டா. பஞ்சர் பார்க்கிறதுக்கு எங்கே கடையிருக்கு? வாழ்க்கையும் பஞ்சராயிருச்சு. எல்லாம் வெறுத்துப் போச்சு. செத்துடலாம்னு தோணுது. பொம்பள புள்ளைங்கள கரை சேர்க்கணும்ல. அதுவரைக்கும் என் உசிரு போகாது'' என்றார் நம்பிக்கையுடன்.
அனைத்து தரப்பினரையும் கொரோனா புரட்டிப் போட்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகளோ, நாட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களோ, வறுமையில் உழன்று பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்களின் தேவைகளுக்கு சரிவர தீர்வு காணாமல், சேனல்களில் முகம் காட்டுவதும், உருக்கமாகப் பேசுவதுமாக இருக்கின்றனர்.
-அதிதேஜா, பரமசிவன், சக்தி, எஸ்.பி.சேகர், ஜெ.டி.ஆர்., பகத்சிங், மணிகண்டன், அண்ணல், நாகேந்திரன், செல்வகுமார், அசோக், ராம்குமார்