"ஆங் சான் சூயியை நான் பார்த்தே இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது. அவர் பல்வேறு உடல்நலக் குறைவுகளுடன் இருந்தார். அநேகமாக அவர் உயிருடனிருக்க வாய்ப்பில்லை''’என சூயியின் மகனான கிம் அரிஸ் கூறியிருப்பது, சர்வதேச அளவில் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

Advertisment

ஆங் சான் சூயி, பர்மா எனப்பட்ட இன்றைய மியான்மரின் சுதந்திரத்துக்காகப் போராடிய ஜெனரல் ஆங் சானின் மகளாவார். ஆங் சான், தனது சுதந்திரப் போராட்ட அர்ப்பணிப்பு காராணமாக மியான்மரின் தேசத்தந்தையாகப் பார்க்கப்பட்டவர். அவர் 1947-லேயே படுகொலை செய்யப்பட்டார். ஆங் சான் சூயியின் தாய் கின் கியி அந்நாட்டின் தூதராகப் பணியாற்றியவர்.

Advertisment

இந்தியப் பல்கலைக்கழகத்திலும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் தன் கல்வியை முடித்த ஆங் சான் சூயி, 1972-ல் பிரிட்டிஷ் அறிஞர் மைக்கேல் அரிஸைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அலெக்ஸாண்டர், கிம் என இரு மகன்கள் பிறந்தனர்.

மியான்மருக்கு வெளியிலேயே காலம்தள்ளிய ஆங் சான் சூயி, உடல்நலமின்றி இருந்த அம்மாவைக் கவனிப்பதற்காக மியான்மர் திரும்பவேண்டியதானது. அவர் வந்த 1988 காலகட்டத்தில் மியான்மரில் முழுவேகத்தில் சுதந்திரப் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியைப் பார்த்து உத்வேகம் பெற்றிருந்த ஆங் சான் சூயி, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு எனும் கட்சியைத் தொடங்கி, அமைதிவழிப் போராட்டத்தில் இறங்கினார். ஆட்சியிலிருந்த ராணுவம் அடுத்த வருடமே அவரைக் கைது செய்தது. 15 வருடங்கள் அவரை வீட்டுக் காவலில் வைத்தது.

Advertisment

1990-லேயே சூயியின் என்.எல்.டி. கட்சி தேர்தலில் வெற்றிபெற்றது. அப்போது ராணுவம் அவரிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்தது. சூயியின் சுதந்திரப் போராட்டத்தை அங்கீகரித்து 1991-ல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் அதைப் பெறுவதற்கு ராணுவ ஆட்சி அனுமதிக்கவில்லை. அந்தப் பரிசை 2012-ல்தான் அவரால் பெற முடிந்தது.

ஆங் சான் சூயி மீது சில விமர்சனங்களும் இருக்கின்றன. 2015 தேர்தலில் என்.எல்.டி. கட்சி வெற்றிபெற்றபோதும், முழுமையான அதிகாரங் களை வழங்காமல் ஆங் சான் சூயியை தலைவராக ஏற்றுக்கொண்டு, உண்மையான அதிகாரத்தை ராணுவம் தன் கையில் வைத்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் ராணுவம் ரோஹிங்யா முஸ்லிம்களை அழித்தொழிக்கும் முயற்சியில் இறங்கியது. அரசப் படைகள், ரோஹிங்யாக்களை தேடித் தேடி அழித்தது. 

இந்தக் காலகட்டத்தில்தான் வங்காளதேசம், இந்தியா உள்ளிட்ட மியான்மரைச் சுற்றியுள்ள நாடுகளில் ரோஹிங்யாக்கள் வந்துகுவிந்தனர். கிட்டத்தட்ட 25,000 ரோஹிங்யாக்கள் கொன்றழிக் கப்பட்டனர். எனவே ஐ.நா. உள்ளிட்ட அமைப்பு கள் இதை இனப்படுகொலையென அழைத்தனர். இந்த இனப்படுகொலை நடைபெற்றபோது ராணுவத்தை விமர்சிக்காமல் ஆங் சான் சூயி அமைதியாக இருந்தது விமர்சனத்துக்குள்ளானது. அவருக்கு அளிக்கப்பட்ட பல விருதுகள் திரும்பப்பெறப்பட்டன.

இதையடுத்து நடந்த 2020 தேர்தலிலும் ஆங் சான் சூயியே வெற்றிபெற்றார். ஆனால் அவரது வெற்றியைப் பொறுக்கமுடியாத ராணுவம், ஒரே ஆண்டில் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு பல குற்றச்சாட்டுகளை அடுக்கியது. மீண்டும் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட் டார். கிட்டத்தட்ட 80 வயதான ஆங்சான் சூயிக்கு ராணுவம் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இந்தநிலையில்தான் இந்த மாத இறுதியில் தேர்தல்களை நடத்துவதற்கான மியான்மர் இராணுவ ஆட்சியின் முயற்சிகளை, "இராணுவ ஆட்சியை சட்டப்பூர்வமாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு போலியான செயல்' என கிம் விமர்சிக்கிறார். ராணுவத்தின் தேர்தல் முயற்சியை பல வெளிநாட்டு அரசாங்கங்கள் நிராகரித் துள்ளன. எனினும், அந்தத் தேர்தல் நடந்தால் அதைச் சாக்கிட்டாவது, தனது தாயின் உண்மையான நிலை வெளித்தெரிய ஒரு வாய்ப்பு என்கிறார் கிம். 

மியான்மரின் அரசியல் எதிர்காலம் கால்நூற்றாண்டுக்கும் மேலாக நிச்சயமற்றதாக உள்ளது. அரசுக்கு எதிராக ஜனநாயகத்தை விரும்பும் கிளர்ச்சியாளர்கள், இன்னொருபுறம் போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தான் சூயியின் மகன் ஜப்பானின் டோக்கியோவில் அளித்த நேர்காணலொன்றில், “"எனக்குத் தெரிந்தவரை அம்மா இறந்திருக்கலாம். அவருக் குத் தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவரை யாரும் பார்க்கவில்லை. குடும்பத்தினரை விடுங்கள், அவரது சட்டக் குழுவினரைக்கூட அவரைத் தொடர்புகொள்ள அனுமதிக்கவில்லை'' என்றுள்ளார். 

கிம்மின் இந்தக் குற்றச்சாட்டை ராணுவ ஆட்சியாளரான மின் ஆங் ஹ்லைங் நேரடியாக மறுக்காதபோதும், “"ஆங் சான் சூகி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார், வரவிருக்கும் தேர்தலைக் குழப்பும் நோக்குடன் திட்டமிட்டு, சரியான நேரத்தில் பரப்பப்பட்ட ஒரு தவறான தகவல்' என்று தேசிய பாதுகாப்பு மற்றும் தற்காப்பு கவுன்சில் தகவல் குழு டிசம்பர் 16 அன்று அறிவித்துள்ளது.

விடுமுறை நாட்கள் அல்லது முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கும் வகையில் கைதிகளை விடுதலை செய்யும் வழக்கம் மியான்மர் இராணு வத்திடம் உள்ளது. எனவே தேர்தலையொட்டி ஆங் சான் சூகி விடுவிக்கப்படாவிட்டால் அவருக்கு வேண்டாதது ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்பது நிச்சயமாகிவிடும்.