தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3,935 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 போட்டித் தேர்வை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஜூலை 12ஆம் தேதி நடத்தியது. 11.48 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர்.
இத்தேர்வு வினாத்தாள், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோருக்கும்கூட சவால்விடும் வகையில் கடினமாக இருந்ததாகக் குமுறுகிறார்கள் தேர்வர்கள்.
இது தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு எழுதிய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ், முகேஷ், சின்னதுரை, ராஜ்குமார், ஹரீஷ், தேவி, கீர்த்திகா ஆகியோரிடம் பேசினோம். "குரூப்-4 தேர்வுக்கு 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை படித்தாலே போதும் என்றுதான் டி.என்.பி.எஸ்.சி. கூறுகிறது. இப்போது நடந்த தேர்விலும் பாடப்பகுதிக்குள் இருந்துதான் பெரும்பாலான வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. ஆனால், அவை எந்தப் புத்தகத்திலிருந்து எடுக்க
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3,935 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 போட்டித் தேர்வை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஜூலை 12ஆம் தேதி நடத்தியது. 11.48 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர்.
இத்தேர்வு வினாத்தாள், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோருக்கும்கூட சவால்விடும் வகையில் கடினமாக இருந்ததாகக் குமுறுகிறார்கள் தேர்வர்கள்.
இது தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு எழுதிய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ், முகேஷ், சின்னதுரை, ராஜ்குமார், ஹரீஷ், தேவி, கீர்த்திகா ஆகியோரிடம் பேசினோம். "குரூப்-4 தேர்வுக்கு 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை படித்தாலே போதும் என்றுதான் டி.என்.பி.எஸ்.சி. கூறுகிறது. இப்போது நடந்த தேர்விலும் பாடப்பகுதிக்குள் இருந்துதான் பெரும்பாலான வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. ஆனால், அவை எந்தப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டன என்ற "சோர்ஸ்' தெரியவில்லை.
உதாரணமாக, "திவான்பகதூர் பவானந்தம் பிள்ளை எழுதிய தமிழ் அகராதியின் பின் இணைப்பில், தமிழ் மொழியில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களை கூறியுள்ளவாறு பொருத் துக' என்ற வினா கேட்கப்பட்டது. இந்த வினா சமச்சீர்க் கல்வி புத்தகங்களில் இல்லை. 1953-ல் ஓலைச்சுவடிகளிலிருந்து தொகுத்து எழுதிய ஒரு நூலிலிருந்து எடுக்கப்பட்டது தெரியவந்தது. "அணிகம், அனிகம், அநிகம், அநங்கு' ஆகிய நான்கு சொற்களுக்கு, இணையான சொற்களை பொருத் தும்படி ஒரு வினா இடம்பெற்றுள்ளது. இந்த வினாவை, முனைவர் கோ.விஜயராகவன் எழுதிய மயங்கொலிச் சொல்லகராதியிலிருந்து எடுத்துள்ள னர். இது தமிழக அரசின் சமச்சீர் பாடப்புத்தகத்தில் எங்கேயும் இல்லை. மேலும், 'அணிகம்' என்ற சொல்லுக்கு 'ஊர்தி', 'சிவிகை' ஆகிய இரு பொருள்களும், 'அனிகம்' என்பதற்கு 'சிவிகை' என்ற பொருளும் உண்டு.
'வேளைப் பிசகு எனும் மரபுத் தொடரின் பொருள் தேர்க' என்ற வினா இருந்தது. இப்படி ஒரு சொல், பள்ளிப் பாடப் புத்தகங்களில் இல்லை. வினாத்தாள் தயாரித்த குழுவினர், சென்னை தமிழ்ப் பாதுகாப்புக் கழகத்தார் 72 ஆண்டுக்கு முன்பு 3 அணா விலையில் வெளியிட்டுள்ள, மரபுத்தொடர் அகர வரிசை புத்தகத்திலிருந்து 'வேளைப் பிசகு' என்ற சொல்லை எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், 'கங்கௌகம் என்றும் சொல்லை பிரித்து எழுதுக' என்ற கேள்விக்கு, தரப்பட்ட நான்கு விடைக் குறிப்புகளும் தவறானதாக இருந்தது.
பொது அறிவுப் பகுதியில் நில அளவை தொடர்பாக, பத்து மதிப்பெண்களுக்கான வினாவை 2 மதிப்பெண் பிரிவில் கேட்டுள்ளனர். சிவில் இன்ஜினியர் பாடத்திற்குரிய இவ்வினாவுக்கு விடைகாண அரை மணி நேரமாகும். இந்திய புவியியல் பாடத்திட்டத்தை தவிர்த்துவிட்டு, உலக புவியியல் பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டன. அதேநேரம், விடியல் பயணம், பணவீக்கம் குறைவு உள்ளிட்ட தமிழக அரசை விளம்பரப்படுத்தும் வினாக்களை கேட்கவும் தவறவில்லை. தேர்வுக்கான பாடப்பகுதி என்று ஒன்றைச் சொல்லிவிட்டு, சம்பந்தமே இல்லாமல் வினாக்களை கேட்டால் எப்படி எழுத முடியும்?'' என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
தேர்வர்கள் கார்த்திகா, விக்னேஷ் ஆகியோர் கூறுகையில், "குரூப்-4 தேர்வை, நாங்கள் மூன்றாவது முறையாக எழுதியிருக்கிறோம். இந்தமுறை எப்படியும் அரசுப்பணிக்குச் சென்றுவிட வேண்டுமென்ற வெறியோடு தயாராகியிருந்தோம். தேர்வுக்கூடத்தில் வினாத்தாளைப் பார்த்ததும் எங்கள் நம்பிக்கையும், கனவும் சுக்கல்சுக்கலாக நொறுங்கிப்போனது. இந்தத் தேர்வின் மூலம் தமிழக அரசின் மீதான நம்பிக்கையே தகர்ந்துவிட்டது. இந்த வினாத்தாள் சமநிலையில் தயாரிக்கப்படவில்லை. நடந்து முடிந்த குரூப்-4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்'' என்றனர். இந்த தேர்வு 60 சதவீதம் கடினமாக இருந்ததாகவே பெரும்பாலான தேர்வர்கள் புலம்புகின்றனர். பெரும்பாலான வினாக்களில் ஒற்றுப்பிழைகளும், மொழியாக்கத்தில் பிழைகளும் மிகுந்திருந்தன. வழக்கமாக வெளியிடப்படும் மாதிரி வினாத்தாள் இந்தமுறை வெளியிடாததும் தேர்வர்களை கொதிப்படையச் செய்துள்ளது.
இதற்கிடையே, டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பாதிரியார் ஏ.ராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில், பாடத்திட்டத்திற்கு வெளியிலிருந்து கேட்கப் பட்ட வினாக்கள் குறித்து பதிவிடுமாறு கேட்டிருந்தார். கடினமான தேர்வால் ஏற்கனவே நொந்து போயிருந்த இளைஞர்கள், அவரையும், தமிழக அரசையும் மிகக்கடுமையாக விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர்.
இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, "குரூப்-4 வினாத்தாள் சற்று கடினமாக இருந்தது உண்மைதான். ஆனால், தமிழ் இலக்கணத்தை புரிந்து படித்தவர்களுக்கு பொதுத்தமிழ் பகுதி ஓரளவு எளிமையாக இருந்திருக்கும். குறைந்த காலி இடங்களுக்கு போட்டி அதிகமாக இருக் கும்போது திறமையானவர்களைக் கண்டறிய இதுபோன்ற கடினமான வினாத்தாள் தயாரிக்கப் படுகிறது. இனிமேல், அனைத்து போட்டித்தேர்வு களின் வினாத்தாளின் தரமும் இதுபோலதான் இருக்கும். தமிழ் இலக்கணம், கலைச்சொற்களை புரிந்து படிக்க வேண்டியது அவசியம்'' என்றார்.
அரசு வேலைக்காக ஆண்டுக்கணக்கில் தயாராகிவந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் வாய்ப்பை அரசும், டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகமும் பறித்துவிட்டதாகவே கருதுகிறார்கள் தேர்வர்கள்.