ப்பல் மூலமாகத்தான் வந்தார்கள், இங்கு இருக்கிற சரக்குகளை கொண்டுபோனார்கள். வ.உ.சிதம்பரனார் பதிலுக்கு ஒரு சுதேசி கப்பலை வாங்கினார். "வந்தே மாதரம்' என்று அதை அழைத்தார். அதற்காக நிதி திரட்ட வடக்கே வருகிறார். "நான் வெள்ளையனை எதிர்த்து கப்பல் ஓட்டப் போகிறேன். எனக்கு நிதி தாருங்கள்' என்று கேட்டு வருகிறபோது, அவருடைய மகன் இறந்துபோன செய்தி வருகிறது. அவர் சொல்கிறார், "நான் போய் ஆகவேண்டியது ஒன்றுமில்லை. என் மகன் இறந்தது எனக்குப் பெரிதில்லை. எனக்கு வெள்ளையனை விரட்ட கப்பல் வாங்குவதுதான் முக்கியம்' என்று கூறுகிறார். அப்படியாக காசு வசூலித்துக் கொண்டுபோய் அந்த கப்பலை வாங்கினார். அவரை எதிர்த்து வழக்கு தொடுக்கப் பட்டதில், சரித்திரத்தில் இல்லாத அளவிற்கு இரண்டு ஆயுள் தண்டனைகளை பெற்ற ஒரே தலைவன் வ.உ.சிதம்பரனார்தான். சிறையில் என்ன நடந்தது? மற்ற கைதிகளைப் போல கூட அவரை நடத்தவில்லை. அவரை செக்கிழுக்க வைத்தார்கள். எண்ணெய் ஆட்டுகிற செக்கினை மாட்டுக்கு பதிலாக அவரை வைத்து இழுத்த கொடுமை உங்களுக்குத் தெரியாததா? தலைவர் அவர்களே, எத்தனை இடங்களில் நீங்களும் பேசியிருப்பீர்கள்? எவ்வளவு அறிந்திருப்பீர்கள்? செக்கிழுத்து வெளியே வந்து சக்கையாக விழுந்தார்.

Advertisment

சிறையிலே அவரைப்போலவே சென்ற வீரன் சுப்பிரமணிய சிவா, வெளியே வந்தபோது தொழுநோய் வந்து செத்தார். அவர்களுக்கு என்ன தந்தது இந்த நாடு? அதைத்தான் கேட்டேன். வடபுலத்திலிருந்து இத்தனை பெயர்களை நாங்கள் வைக்கிறோமே, இவ்வளவு மரியாதை தருகிறோமே, இங்கே வாடியவர்களுக்காகப் போராடிய எங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவாவது செய்கிறீர்களா?

Advertisment

குறைந்தபட்சம் உங்கள் பாடத் திட்டத்தி லாவது சொல்லித்தாருங்கள், சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் இப்படி எல்லாம் தலைவர்கள் வாழ்ந் திருக்கிறார்கள் என்று! ராணி அப்பக்கா என்று ஒருவர் கர்நாடகத்திலே வாழ்ந்தார். யாருக்கு தெரியும்? எத்தனை கொடுமைகள்! எவ்வளவு பெரிய தியாகம்! கொஞ்ச நஞ்சமல்ல. சோழவந்தானிலே பிறந்த ஒரு பெண் பத்மாசனி. மதுரையிலே ஸ்ரீநிவாசவரதன் என்பவருக்கு வாழ்க்கைப்படுகிறார். அவர் தேசபக்தி உள்ளவர். அவரோடு சேர்ந்து இவரும் தெருவெல்லாம் பாரதியாரின் பாடல்களை பாடிக்கொண்டே போகிறார். வெள்ளையர்களுக்கு அதிர்ச்சியாகிறது.

ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பற்றி, லாலா லஜபதிராய் அடிபட்டு செத்ததை பற்றி, பத்மாசனி தமிழ்நாட்டு வீதிகளில் முழங்கிய முழக்கம், எங்களுக்கு இருந்த உணர்வு, இது பஞ்சாப் என்று பார்க்கவில்லை. ஜாலியன் வாலா பாக்கில் நடந்த படுகொலை என்று பார்க்கவில்லை. இது தேச விடுதலைக்கெதிராக நடைபெற்ற படு பாதகம். ஆயிரக் கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள் என்று தெருத் தெருவாகப் பாடி யவர் பத்மாசனி. அவரை கொண்டு போய் சிறையில் அடைத்தார்கள். கர்ப்பிணியாக இருந்தவருக்கு, சிறைக்கு உள்ளேயே குழந்தை பிறந்து செத்துப்போனது. வெளியே வந்து தன்னுடைய விடுதலைப் போராட்டப் பணியினை தொடர்கிறார். அந்த பணியிலேயே இறந்து போனார். பத்மாசனியை யார் அறிவார்? என் தம்பி முருகன் அறிவாரா குறைந்தபட்சம்? எவ்வளவு பேர்கள்!

Advertisment

siva1

நான் முக்கியமான ஒன்றை இன்றைக்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அது ரொம்ப அவசியமாகிறது. மீண்டும் தெரியுமா? தெரியுமா? என்றுதான் நான் கேட்க வேண்டும். எங்களுடைய துர்ப்பாக்கியமான இந்த வார்த்தையை நான் பயன்படுத்துவதில்லை. ஆனால் பயன்படுத்தவேண்டிய கட்டாயம். திருவனந்தபுரத்திலே குமரி பக்கத்திலே பிறந்த செண்பகராமன் பிள்ளை உங்களுக்கு தெரியும். அண்ணன் சிதம்பரத்துக்கும் தெரியும். செண்பகராமன் பிள்ளையின் அறிவாற்றலை புரிந்துகொண்ட ஒரு ஜெர்மனி நாட்டு உளவாளி, "நீ இங்கே இருக்காதே, இது போதாது, நீ வெளிநாட்டுக்கு வா' என்றபோது, இவருக்கு அப்பொழுதே, சிறுவயதிலேயே விடுதலை வேட்கை வருகிறது. முதல்முதலாக "ஜெய்ஹிந்த்' என்ற முழக்கத்தை உருவாக்கியதே செண்பகராமன்தான். அந்த செண்பகராமன், இங்கிருந்து கிளம்பி இத்தாலிக்குப் போய் பல மொழிகளை பயில்கிறார். எல்லாவற்றையும் படித்துவிட்டு ஜெர்மன் நாட்டுக்கு போய், அங்கே இருக்கிற மன்னர் பேரரசர் கெய்சரின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய வராக மாறி, அவருடைய அந்தரங்க ஆலோசகராக பொறுப்பேற்கிறார்.

அதற்கு பின்னால் ஹிட்லரோடும் அவர் நெருங்குகிறார். அப்போதுதான் முதல் உலகப்போர் நடைபெறுகிறது. அங்கிருந்து வந்த எம்டன் என்ற போர்க் கப்பலிலே அவர் தளபதியாக வந்தது யாருக்குமே தெரியாது. எம்டன் குண்டு என்று கேள்விப் பட்டிருப்போம். தமிழ்நாட்டு எல்லைக்குள்ளே கடலோரத்திலே வந்து வெள்ளையர்களுடைய பர்மாசல் என்கிற எண்ணைக் கிடங்குகளை உடைத்துவிட்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே குண்டு வீசிவிட்டு வெற்றிகரமாக திரும்பிய வீரன் செண்பகராமன். பின்னர் ஹிட்லரிடம் நெருங்கு கிறான். ஹிட்லருக்கு இவன் மீது ஏகப்பட்ட மரியாதை.

அவரிடம் செண்பகராமன் பேசுகிறார். "என் நாடு விடுதலையடைய வேண்டும். நான் அதற்காகத்தான் இவ்வளவு தொலைவு வந்தேன்' என்கிறார். அந்த நேரத்திலே ஹிட்லர் சொல்கிறான், "இந்தியர்கள் சுய ஆட்சிக்கு தகுதியற்றவர்கள்' என்று சொல்கிறான். இதைக்கேட்ட செண்பக ராமன் கொந்தளித்துப்போய், "நீ பேசியது தவறு, மன்னிப்பு கேள். அந்த மன்னிப்பையும் எழுத்து மூலமாக கேள்' என்று கேட்கிறார். வேறு வழியில்லாமல் அன்றைக்கு செண்பகராமனுக்கு மக்களிடமிருந்த செல்வாக்கை உணர்ந்த ஹிட்லர், முதன்முதலாக தலைவணங்கி மன்னிப்புக் கடிதம் எழுதியது, தமிழனாகிய செண்பக ராமனுக்குத்தான். 

எதற்காக? இந்த நாட்டை ஒருவன் அவமானப்படுத்தினான் என்பதற்காக. அவன், அந்நிய நாட்டின் மிகப்பெரிய சர்வாதிகாரியாக இருந்தபோதிலும் எதிர்த்துப் பேசுகிற துணிச்சல் செண்பகராமனுக்கு இருந்தது. ஹிட்லர் கடிதம் எழுதினான். எழுதிவிட்டு ஆற்ற முடியவில்லை. நம்மிடமிருந்து இப்படி ஒரு கடிதம் போய் விட்டதே, இதை எப்படி யாவது கைப்பற்ற வேண் டும் என்று நினைத்தான். அப்படி கைப்பற்ற முனைவது அவனுடைய நாசிகள். அந்த கடிதத்தை கைப்பற்ற முனைகிற முயற்சியில் மெல்லக் கொல்கிற நஞ்சினை உணவிலே கலந்து கொடுக் கிறார்கள். தெரியாமல் உட்கொள்கிறார். மெல்ல மெல்ல அவருடைய உயிர் போகிறது. அவைத் தலைவர் அவர்களே, பலபேர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இதை இங்கே பதிவு செய்கிறேன். 

siva2

இன்னொரு செய்தி... எனக்கு முன்னால் பேசிய சுகேந்திரசேகர் ராய் சொன்னார். உள்துறை அமைச்சரும் சொன்னார். பிரதமரும் சொன்னார். இவரும் சொன்னார். மராட்டிய மாநிலத்தைச் சார்ந்த என் சகோதரி ரஜினி பாட்டீல் இருந்தால் அவருக்குத் தெரியும். மராட்டிய மாநிலத்தைச் சார்ந்த திருமதி காமா, மேடம் காமா... அந்த அம்மாதான் முதன்முதலாக ஜெர்மன் நாட்டிலே நடைபெற்ற ஒரு உலக சோசலிசம் மாநாட்டிலே, 1907-வது ஆண்டு நடைபெற்ற உலக சோசியலிச மாநாட்டிலே ஒரு பெண், பார்சி இனத்தைச் சார்ந்த மராட்டிய பெண்மணி தன் சேலை மடிப்புக்குள்ளி ருந்து மூவர்ணக்  கொடியை எடுத்துக் காட்டி, "இது என் இந்திய நாட்டின் சுதந்திரக் கொடி. எல்லோரும் வணக்கம் சொல்லுங்கள்' என்று சொன்னார். அந்த மாநாட்டில் விளாடிமீர் லெனின் இருந்தார். எல்லோரும் சேர்ந்து அதற்கு வணக்கம் செலுத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அந்த அம்மையாரோடு அரசியல்ரீதியாக தொடர்பில் இருந்தவர்கள் விளாடிமீர் லெனினும், மார்க்சிம் கார்க்கியும். இந்த நாட்டிலே போராடிய அத்தனை பேருக்கும் அடைக்கலம் கொடுத்தார். அவர் வளர்த்த பெண் லட்சுமிபாய் என்பவர்தான் இந்த செண்பகராமனை மணந்துகொண்டார்.

இந்த கதை இது வரலாறா? இல்லை கதை, சோகக் கதை... சொந்தக் கதை... ஊருக்குத் தெரியாத கதை... தெரியவேண்டிய கதை! ஒரு தனி மனிதன் இங்கிருந்து ஜெர்மன் நாட்டுக்கு போய் ஒரு சர்வாதிகாரியை மிரட்டுகின்ற அளவிற்கு வாழ்ந்து, கப்பலில் ஏறி தளபதியாக வந்து உலகத்தில் இருக்கிற எல்லோருக்கும் அதை பரப்புகிறான். அந்த செண்பகராமனை முதன்முதலாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மன் நாட்டில் சந் தித்தபோதுதான் "ஜெய்ஹிந்த்' என்ற அவருடைய அந்த முழக்கத்தை எடுத்துக்கொண்டு திரும்புகிறார் என்பதும் ஒரு வரலாறு.

மெல்லக் கொல்லும் விஷம். உயிர் போய்க்கொண்டிருக்கிறது... இங்கிருந்தால்      உனக்கு ஆபத்து, வேறு நாட்டுக்கு போ என்று சொல்கிறபோது, போகிற வழியில் நாசிகள் வழிமறித்துத் தாக்குகிறார்கள். மருத்துவமனைக்கு போகிறார், உயிர் பிரிகிறது. உயிர் பிரிகிற நேரத்தில், ரொம்ப ரொம்ப முக்கியம், அந்த நேரத்தில் அவர் சொன்னதுதான் ரொம்ப முக்கியம். "நான் இந்தியா விடுதலை பெற்று அதனுடைய சுதந்திர நாட்டின் போர்க்கப்பலில் இந்தியாவிற்கு திரும்பிச் செல்லவேண்டும் என்று விரும்பினேன் ஆனால் இப்படியே இறக்கவேண்டிய நிலை வந்துவிட்டது. என் ஆசை, விருப்பம் அது' என்று சொல்லிவிட்டு இறந்துபோகிறார். இறந்து போனவருடைய சாம்பலை, மூன்று ஆண்டுகள் மட்டுமே அவரோடு வாழ்ந்த அவருடைய மனைவி லட்சுமிபாய்,       அந்த அஸ்தியை கையிலே வைத்துக்கொண்டு இந்தியாவிற்கு தப்பி வருகிறார். எத்தனை ஆண்டுகள் காத்திருந்தார் தெரியுமா? அவர் விரும்பியது நடக்க 32 ஆண்டுகள் காத்திருந்தார். நாடு விடுதலை அடைந்தது.

(திருச்சி சிவா எம்.பி.யின் உரை தொடரும்..)

தொகுப்பு: தாஸ்