"ஹலோ தலைவரே, தேர்தல் நெருங்கிவரும் சூழலிலும் கூட கூட்டணிகளுக்குள் இன்னும் சலசலப்பு அடங்கலையே!''”
"ஆமாம்பா, ஒரு பக்கம் பொருந்தா சோடிகளை இழுத் துக் கட்டியதால் சலசலப்பு. இன்னொரு பக்கம் அரசனை நம்பி புருஷனைக் கைவிட நினைப்பவர்களின் அலை பாய்தல். இதெல்லாம் சரியாக கொஞ்சநாள் ஆகும். ''”
"சரியா கணிச்சிட்டீங்க தலைவரே, முதல்ல பொருந்தா சோடிகளுக்குள் நிகழ்வதைச் சொல்றேன். எந்த நிலையிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டோம்னு வீராவேசம் பேசிய எடப்பாடியை, அரட்டி உருட்டி மிரட்டலாத் தங்கள் பக்கம் உட்காரவைச்சிருக்கு பா.ஜ.க. இருந்தாலும் எடப்பாடி மருகிக்கிட்டுதான் இருக்கார். இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி கோவை வடவள்ளியில் பிரச்சாரப் பயணக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி,’தி.மு.க.வுக்கு கோயிலைக் கண்டாலே கண்ணை உறுத்துது. அதனால் அங்க இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்குது. இது அடுக்குமா?ன்னு கொந்தளிச்சார். இதைப் பார்த்த அ.தி.மு.க. சீனியர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி, எடப்பாடிகிட்டயே,’ எம்.ஜி.ஆர்., அம்மா ஆட்சியிலும், ஏன் உங்கள் ஆட்சியிலும் அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் கட்டப்பட்டிருக்கே. இது வழக்கமான ஒன்னுதானே?’ன்னு கேட்டிருக்கிறார். திகைச்சிப்போன எடப் பாடியோ,’நான் பிரச்சாரத்தத் தொடங்கும் போது வந்த பா.ஜ.க. புள்ளிகளான நயினாரும் எல்.முருகனும், வானதி சீனிவாசனும், எங்கிட்ட ஒரு பேப்பரைக் கொடுத்து, அதைப் பேசச் சொன்னாங்க. நானும் அப்படிப் பேசித் தொலைச்சிட்டேன். எவ்வளவு கவனமாக இருந்தாலும், அவர்கள் நம்மைத் திசைதிருப்பி விடுகிறார்கள்’ என்று ஆதங்கப்பட்டாராம்.''”
"அரசனை நம்பி புருஷனைக் கைவிடத் துணியிறவங்க பத்தியும் நீயே சொல்லிடு.''”
"சொல்றேங்க தலைவரே, கிராமக் கமிட்டிகளைக் கொண்டு பூத் கமிட்டிகளை அமைக்க முயன்றுவரும் தமிழக காங்கிரஸ், இதுவரை 65 சதம் மட்டுமே அமைத்திருக்கிறது. 100 சதவீதம் அமைத்ததும் தமிழகத்தில் உள்ள கிராம கமிட்டி நிர்வாகிகளை அழைத்து ஒரு மாநாட்டை சென்னையில் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது. இதற்கு ராகுல்காந்தி உள்ளிட்ட அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் அழைக் கப்பட இருக்கிறார்கள். தற்போது முதற்கட்டமாக நியமிக்கப்பட்டிருக்கும் கிராம கமிட்டியின் நிர்வாகிகளுடன் அண்மையில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை. கூட்டணி விசயங்களை டெல்லித் தலைமையும் அறிவாலயமும் பேசி முடிக்கும்ன்னு தெரிஞ்சாலும், அந்தக் கூட்டத்தில் பேசிய சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், "தி.மு.க.விடம் அதிக சீட்டுகளைக் கேட்டுப் பெறவேண்டும். குறைந்தபட்சம் 65 சீட்டுகள் நமக்குத் தேவை. ஆனால், இது குறித்து தி.மு.க.விடம் பேசத் தயங்குகிறீர்கள். அதேபோல, கூட்டணி ஆட்சியையும் நாம் வலியுறுத்த வேண்டும். என்று முழக்கமிட்டார். பத்திரிகையாளர்களிடம் இது குறித்து செல்வப்பெருந்தகை மழுப்பினாலும், அவர் சொல்லித்தான் ராஜேஷ்குமார் இப்படியெல்லாம் பேசுகிறார் என்கிறார்கள், காங்கிரஸ் சீனியர்களே. இது அறிவாலயத் தரப்பை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறதாம்.''”
"எடப்பாடியை ‘பிராணாயாமம்’ என்னும் வியூக அமைப்பு இயக்கி வருவதாகச் சொல்கிறார்களே?''”
"பிரணாயாமம் என்பது, ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் தரப்பு நடத்திவரும் ’தேர்தல் வியூக அமைப்பு’ நிறுவனம். அது இங்கே எடப்பாடிக்கு ஆதரவாகக் களமிறங்கி இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. இதை முழுதாக மறுக்கும் அ.தி.மு.க. தரப்பினர், ‘எடப்பாடியின் அரசியல் வியூகத்தை வகுக்க ஒரு புதிய டீம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த டீம் தான் இப்போது அவரது பிரச்சார உரைகளை எழுதிக்கொடுக்கிறது. அந்த டீம் தான், எடப்பாடி செல்லும் பகுதிகள் குறித்து முன்னதாகவே ஆய்வு செய்து, அதற்கு ஏற்ப அவர் உரைகளைத் தயாரிக்கிறது. இந்த டீம் தன்னை மீண்டும் முதல்வராக்கும் என்று அவர் அழுத்தமாக நம்புகிறார்’ என்றும் சொல்கிறார்கள்.''
"பா.ம.க. நிறுவனர் ராமதாஸைக் கண்காணிக்க, தைலாபுரத்தில் அவர் மகன் அன்புமணி ரகசியமாகப் பொருத்திய கருவி ஒன்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறதே?''”
"தனது பேச்சுக்களை அன்புமணி நவீன கருவிகள் மூலம் ஒட்டுக் கேட்ப தாக சந்தேகப்பட்ட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அதைக் கண்டுபிடிக்க தனியார் டிடெக்டிவ் ஏஜன்ஸி ஒன்றின் நிபுணர்களை, தைலாபுரம் இல்லத்திற்கு வரவழைத்திருகிறார். அவர்கள் தீவிரமாக வீட்டைத் துழாவி, ஒரு அதிநவீன ஒட்டுக்கேட்கும் கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். லண்டன் தயாரிப்பான அந்தக் கருவியில், லண்டனில் இருந்து இயங்கும் சிம்கார்டு பொருத்தப்பட்டிருக்கிறதாம். அந்தக் கருவி மூலம், தன் அப்பா ராமதாஸ் யாருடனெல்லாம் உரையாடுகிறாரோ அதை எல்லாம் முழுதாகத் தன் செல்போன் மூலம் கேட்டு வந்திருக்கிறார் அன்புமணி. தன் தந்தை என்று கூடப் பார்க்காமல், தனிமனித சுதந்திரத்திற்கும், அந்தரங்கத்திற்கும் எதிராக அன்புமணி எல்லை மீறி நடந்துவருவதை அறிந்து ரொம்பவே அதிர்ந்துபோயிருக்கிறார் ராமதாஸ். இது குறித்தும் காவல்துறையில் புகார் கொடுக்கலாமா என்றும் அவர் ஆலோசித்து வருகிறாராம்.''”
"அமைச்சரின் அலுவலக உதவியாளரை தி.மு.க. எம்.எல்.ஏ. தரப்பு தாக்கியிருக்கிறதே?''”
"வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், ராமநாதபுரம் மா.செ.வும், எம்.எல்.ஏ.வுமான காதர்பாட்சா முத்துராமலிங்கத்திற்கு ஏழாம் பொருத்தம் என்பது ஊரறிந்த ரகசியம். இந்த சூழலில், கடந்த சனிக்கிழமை, தி.மு.க.வின் ஓரணியில் தமிழ்நாடு பற்றிய ஆலோசனைக் கூட்டம் முதுகுளத்தூரில் நடந்தது. இதில் அமைச்சரின் முதுகுளத் தூர் எம்.எல்.ஏ. அலுவலக உதவியாளர் டோனி, அதற்கான பணிகளை கவனித்துக்கொண்டி ருந்தார். இந்த நிலையில், அங்கு வந்த மா.செ.வின் தீவிர ஆதர வாளரான கடலாடி தெற்கு ஒ.செ. மாயகிருஷ்ணன், இளைஞரணி அமைப் பாளர் முரளி ஆகியோர், "எங்க மா.செ.விற்கு எதிராக நடக்குறீயா?' என்று கேட்டபடியே டோனியின் கழுத்தை அழுத்தி, அடித்து உதைத் தனர். இந்தக் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவான நிலையில், மாயகிருஷ்ணன் மற்றும் முரளி மீது வழக்கு பதிவாகியுள்ளது. மீனவர் சமூகத்தைச் சேர்ந்த டோனியை மா.செ. தரப்பு தாக்கிவிட்டது என சமூக பிரச்சனையாக மாற்றி, அமைச்சர் தரப்பு தலைமைவரை கொண்டுசென்றிருக்கிறது. இதனால் மா.செ. பதட்டத்தில் இருக்கிறாராம்.''”
"கலைஞர் வீடு கட்டும் திட்டத்திலேயே அதிகாரிகள் கைவைக்கிறார்களாமே?''”
"கலைஞர் கனவு இல்லம் எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது தி.மு.க. அரசு. இது, முதல்வர் ஸ்டாலினின் கனவுத் திட்டமும் கூட! அதன்படி தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தில் பயனாளிகள் கண்டறியப்பட்டு அவர்கள் வீடு கட்ட அரசு உதவி செய்து வருகிறது. இந்தத் திட்டத்தில்தான் அதிகாரிகள் குளறுபடிகளை ஏற்படுத்தி வருகிறார்களாம். எடுத்துக்காட்டாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 4,000 வீடுகள் கட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஒதுக்கீடு ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் திட்ட இயக்குநர் பதவியில் இருக்கும் சரவணன் என்பவர், அந்த மாவட்டத்துக் கான வீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்து, அவற்றை வேறு மாவட்டத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறாராம். இதற்காக, ஒதுக்கீடு ஆணையைப் பெற்றவர்களில் யார் யார் வீடு கட்டத் தொடங்கவில்லையோ அந்த வீடுகளுக்கான ஆணையை அவர் ரத்து செய்து வருகிறாராம்.'' ”
"என்னப்பா சொல்றே?''”
"ஆமாங்க தலைவரே, இதனால் பதட்டமான பயனாளிகளோ, இது அநியாயம். வீடு கட்ட முதல் தவணைப் பணத்தை அரசு ரிலீஸ் செய்தால் தானே வேலையைத் தொடங்க முடியும்? அதைச் செய்ய இந்தத் திட்ட இயக்குனர் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார். ஏழைகள் வீடு கட்ட தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட பல காரணங்கள் இருக்கும். அதனை அறிந்து அதற்கு தீர்வு காண அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும். ஆனால், சரவணன் போன்ற அதிகாரிகள் முயற்சிப்பதில்லை. ஏழைகளின் நலன் கருதி தி.மு.க. அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந் தால் அதனை நிறைவேற்றுவதற்கு பதிலாக வேறு ரூட்டில் பயணிக்கவே சரவணன் மாதிரி அதிகாரி கள் வேகமாக இயங்குகின்றனர். மேலும், ஒரு ஊராட்சியில் முறையாக சில வீடுகள் ரத்து செய்யப் பட்டால், அந்த வீடுகளை அதே மாவட்டத்தில் அருகில் உள்ள ஊராட்சிக்குக் கொண்டு செல்ல வேண்டும். ஆனால், இவர் வேறு மாவட்டத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார். இது குறித்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட நினைத்தால், அவரை சந்திக்கவே முடிவதில்லை’ என்கிறார்கள் ஆதங்கத்தோடு.''”
"காரைக்குடி தி.மு.க. மேயருக்கு எதிராகவும் உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டிருக்கிறதே?''”
"மதுரை மாநகராட்சி தொடர்பான களேபரம் அடங்குவதற்குள் காரைக்குடியிலும் தி.மு.க. மேயருக்கு எதிரான கலகம் தொடங்கி யிருக்கிறது.’"தி.மு.க. மேயர் முத்துதுரை எங்களை மதிப்பதில்லை. மக்கள் பணியும் இங்கே நடப்பதில்லை'’ என்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தி, மொத்தமுள்ள 36 கவுன்சிலர்களில் ஒருவர் ராஜினாமா செய்த நிலையில், 22 கவுன்சிலர்களின் ஆதரவோடு, மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர... மாநகராட்சி ஆணைய ரிடம் மனு கொடுத்திருக்கிறார் தி.மு.க. மாநகர செய லாளரும், நடப்பு துணைமேயருமான குணசேகரன். மேயர் முத்துதுரை, அமைச்சர் பெரியகருப்பனின் ஆதரவாளராம். பல்வேறு புகார்களால் மதுரை மாநகராட்சியின் 5 மண்டலத் தலைவர்களை தி.மு.க. தலைமை ராஜினாமா செய்யவைத்த நிலையிலும், மேயர் நாற்காலி தி.மு.க.வினராலேயே பலவீனமாக அங்கே ஆடிக்கொண்டிருக்கிறது. காரைக்குடி மேயரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி, அ.தி.மு.க.வினரும் அங்கு கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.''”
"ஒரு தற்கொலை விவகாரத்தில் சென்னை டி.சி. பாண்டியராஜனின் பெயர் பரபரப்பாக அடிபடுகிறதே?''”
"திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனின் தற்கொலை விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அவர், திருமலா நிறுவனத் திடம் இருந்து, 40 கோடி ரூபாயைக் கையாடல் செய்தார் என்றும், அதில் 5 கோடி ரூபாய் மட்டும் மீட்கப்பட்டிருக்கிறது என்றும் தகவல் சொல்லப் பட்ட நிலையில், நவீன் தற்கொலை செய்துகொண் டார். இதற்குக் காரணம், டிசி. பாண்டியராஜன் தரப்பின் டார்ச்சர் என்று செய்தி பரவிவருகிறது. இந்த பாண்டியராஜன், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றவாளிகள் தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு, அப்போதே விமர்சனத்தில் அடிபட்ட வர். அதேபோல் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடிய பெண்களைத் தாக்கிய விவகாரத்திலும் சிக்கி, கண்டனத்திற்கு ஆளானவர். அப்படிப்பட்ட வரை, அமைச்சர் ஒருவரின் சிபாரிசில், கொளத்தூர் பகுதி டி.சி.யாக தி.மு.க. அரசு நியமித் தது. இந்த நிலையில், திருமலா பால் விவகாரத்தை மத்திய குற்றப்பிரிவு போலீஸின் விசாரணைக்கு, கமிஷனர் அருண் அனுப்பிய நிலையிலும், அதில் பாண்டியராஜன் தேவையில்லாமல் தலையிட்டி ருக்கிறார் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் பாண்டியராஜன் அத்துமீறி இருக் கிறாரா? என்கிற விசாரணை இப் போது தீவிரமாக நடந்துவருகிறது.''
"தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி. யார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறதே’?''’
"தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜூவாலின் பதவிகாலம் அடுத்த மாதம் முடிகிறது. இதனையடுத்து புதிய டி.ஜி.பி. யார்? என்பது குறித்தும், டி.ஜி.பி.யை தேர்வு செய்வதிலுள்ள நடைமுறைகள் குறித்தும் கடந்த இதழில் தனியாக 2 பக்க செய்தி நம் நக்கீர னில் வெளியானது. இந்த நிலையில், சீனியாரிட்டி தகுதியுள்ள எம்பேனலைத் தயாரித்து, அதனை மத் திய அரசின் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைத்துவிட்டது தமிழக அரசு. அதில் முதல் 3 இடத்திலுள்ள சீமா அகர்வால், சந்திப்ராய் ரத்தோர், ராஜீவ்குமார் ஆகியோர் மட்டுமே பரிந் துரைக்கப்படுவார்களாம். இந்த மூவர் பட்டியல் இன்னும் டெல்லியிலிருந்து வரவில்லை. வந்ததும் இதில் ஒருவரை முதல்வர் ஸ்டாலின் டிக் அடிக்க இருக்கிறார். பட்டியலில் உள்ள சீமாவுக்கு வாய்ப்பு மிக குறைவாம். ஏனெனில், சீமா அகர்வாலின் கணவர் ஏ.கே.விஸ்வநாதன் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதி காரி. அவர், எடப்பாடிக்கு மிக வேண்டப்பட்டவர். அடுத்த 2 இடத்தில் இருப்பவர்களில் சந்தீப்ராய் ரத்தோருக்கு வாய்ப்பு அதிகம் என்கின்றனர். இதற் கிடையே, தற்போதைய டி.ஜி.பி. சங்கர் ஜூவாலுக்கே 6 மாத காலம் பணி நீட்டிப்பு வழங்கலாம் என்கிற மற்றொரு ப்ரபோசலும் தமிழக அரசிடம் இருந்து டெல்லிக்குப் போயிருக்கிறதாம். டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் பொதுவாக பணி நீட்டிப்பை மத்திய உள்துறையும் யு.பி.எஸ்.சி.யும் ஊக்குவிப்பதில்லை என்பதால், பணி நீட்டிப்பு ப்ரபோஷலுக்கு அப்ரூவல் கிடைக்காது என்றும் கூறுகின்றனர்.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். 1500 பாடல்களுக்கு மேல் எழுதி தன் 41ஆம் வயதில் மறைந்தவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். அவரது 50ஆவது பிறந்த நாள், இந்த மாதம் 12ஆம் தேதி அவர் ரசிகர்களால் கொண் டாடப்பட்டிருக்கிறது. இதையொட்டி, திரையுலகின் சார்பில் நா.முத்துக்குமாரின் பாடல்களுக்கு மெட்டமைத்த இசையமைப்பாளர்களும், அவர் பாடலைப் பாடியவர்களும் பங்கேற்கும் "ஆனந்த யாழை'’என்கிற பிரமாண்ட இசை நிகழ்ச்சி, வரும் 19ஆம் தேதி மாலை 4 மணியளவில், சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கிறது. இதற்காக பரிசுப் பொருட்களுடன் கூடிய பிரமாண்ட அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டு, முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் முத்துக்குமார் குடும்பத்திற்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் வழங்கப்பட விருக்கிறது என்று கிசுகிசுக் கிறார்கள் விழாக்குழுவினர்.''