ஓ.பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில்,  1ஆம் தேதி வானகரத்தில் கூடவிருக்கும் அ.தி.மு.க. பொதுக்குழு வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என சிக்னல் தருகிறார்கள் அக்கட்சியின் சீனியர்கள்.

Advertisment

அ.தி.மு.க.வின் முக்கியப் பிரமுகர்கள் பலர் தி.மு.க.வில் ஐக்கியமான பின்னரும், அ.தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாது’ என வைராக்கியமாக இருந்தார் எடப்பாடி பழனிசாமி. ‘"வலுவான கூட்டணி அமைப்போம்'’ என அ.தி.மு.க., பா.ஜ.க. தலைவர்கள்  கூறிவந்தாலும்,  இப்படி அ.தி.மு.க. முக்கியப் புள்ளிகள் பலரும் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் தாவிவரும் நிலையில், “டிசம்பர் 15ஆம் தேதி தானும் முக்கிய முடிவெடுக்கப் போவதாகவும், தமிழக  அரசியலில் அது திருப்புமுனையாக  இருக்கும்’எனவும் கூறி, பரபரப்பை பற்றவைத்தார் ஓ.பி.எஸ். 

Advertisment

ஒருபக்கம் அ.தி.மு.க.வின் அதிருப்தி தலைவர் களுக்கு தி.மு.க. வலைவிரிக்க, மறுபக்கம் த.வெ.க. வின் முக்கிய முகமாகிப்போன செங்கோட்டையனிடம் அ.தி.மு.க.வின் சீனியர்கள் சிலர் டீல் பேசி வருவ தாக தகவல்கள் கசிய... டிசம்பர் மாத குளிரையும் தாண்டி, அரசியல் களம் அனலடிக்கத் துவங்கிய நிலையில்தான்... டிசம்பர் 10ஆம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவை எப்போதும்போல சென்னை, வானகரத்தில் கூட்டவுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி. 

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எப்படியும் தங்களது கூட்டணி ஆட்சி யை அமைக்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் கங்கணம் கட்டி, களத்தில் இறங்கியிருக்கும் நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் கூட்டணியின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கலாம் எனக்கருதும் பா.ஜ.க. தலைமை எடப்பாடிக்கு சில அறிவுரைகள் வழங்கியிருப்பதாக வும் கூறப்படுகிறது. 

Advertisment

இந்நிலையில்தான், பல மாதங்களுக்குப் பிறகு டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இதனால், சசிகலா மற்றும் ஓ.பி.எஸ்.ஸை  மீண்டும் அ.தி.மு.க. வில் இணைப்பதற்கு வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளும் கிளம் பியுள்ளன.  

இதற்கிடையே, “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும்வரை அ.ம.மு.க. அந்தக் கூட்டணியில் இடம் பெற வாய்ப்பே இல்லை” என அதிலிருந்து வில கிய அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திட்டவட்ட மாக அறிவித்துள் ளார்.

"பிரிந்தவர்கள் மீண்டும் இணைவார் களா?, அமித்ஷாவை சந்தித்த பிறகு ஓ.பி. எஸ்.ஸின் நிலைப்பாடு என்ன? எடப்பாடியா ரின் முடிவுதான் என்ன? பா.ஜ.க.வின் வியூகம் எப்படியிருக் கப் போகிறது?' என் பதை அறிவதற்காக டெல்லியிலுள்ள பா.ஜ.க.வின் இண்டலக்சுவல் டீமைச் சேர்ந்த தமிழக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரிடம் பேசி னோம்...

"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க.வின் அஜெண்டா, இம்முறை அதிகமான இடங்களில் வெல்லவேண்டும் என்பதுதான். கடந்த பாராளு மன்றத் தேர்தலில் ஒன்றிணைந்த அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி இருந்திருந்தால் தாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைத் திருக்கும் என நம்பும் பா.ஜ.க. தலைவர்கள், இம்முறை அதற் கான களச்சூழலை உருவாக்கி வருகிறார்கள். முதலில், ஒருங் கிணைந்த அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. மற்றும் சிறிய கட்சிகள் + சில ஜாதிக் கட்சிகள் மற்றும் இறுதியாக தமிழக வெற்றிக் கழகம் என்பதுதான்  தற்போ தைய கூட்டணியின் செயல் திட்டம். அ.ம.மு.க. குறித்த எந்த விவாதமும் இப்போ தைக்கு கிடையாது. யார் ஏற்றுக் கொண்டாலும், இல்லாவிட்டாலும்  எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தி மட்டுமே தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளது பா.ஜ.க. தலைமை.  

இதற்கிடையே, அ.தி.மு.க.வில் மீண்டும் ஒன்றிணைவதற்கு பா.ஜ.க. தரப்பிலிருந்து எந்தவொரு சப்போர்ட்டும் கிடைக்காத சூழலில்தான் 15ஆம் தேதி முக்கிய முடிவெடுப்பதாக கூறிய ஓ.பி.எஸ்., தனது ஆதரவாளர்களோடு தி.மு.க. வில் தன்னை இணைத்துக் கொள்ளவும் முடிவெடுத் திருந்ததாக ரகசிய தகவல்கள் கிடைத்தன. ஒருவேளை அது மட்டும்  நடந்து விட்டால், தமிழக அரசியலில் பா.ஜ.க.வின் கனவு பஸ்பமாகிவிடும் என பதறிவிட்டார் அமித்ஷா. எனவேதான், ஓ.பி.எஸ்.ஸுக்கு அவசர அவசரமாக அழைப்பு விடுக்கப்பட்டது. 

இதற்கு முன்பே, கோவையைச் சேர்ந்த ஆன் மிகத் தலைவர் ஒருவர் மூலம் சில வாக்குறுதிகள் தரப்பட்ட பிறகுதான், அங்கிருந்து கொச்சின் விமான நிலையம் வழியாக தனது மகன் ரவீந்திர நாத்துடன்  2ஆம் தேதி டெல்லி வந்து சேர்ந்தார் ஓ.பி.எஸ். ஆடிட்டர் ஒருவரும் சென்னையிலிருந்து டெல்லி வந்தார். இங்கு வைத்து ஓ.பி.எஸ்.ஸின் தி.மு.க. முடிவிற்கு ‘ப்ரேக்’ போட்டுள்ளதோடு, அ.தி.மு.க.வில் அவரை இணைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தற்போதைக்கு எடப்பாடி பழனிச்சாமி சில விசயங்களில் அடம்பிடித்தாலும் கடந்த 4ஆம் தேதி, அதாவது ஜெயலலிதா நினைவு தினத்திற்கு முதல்நாள் சென்னையில் வைத்து எடப்பாடியாரின் மகன் மிதுன் முன்னிலையில் சசிகலாவை சந்தித்து முக்கிய விசயங்களும் விவாதிக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க.வின் பொதுக்குழு முடிவடைந்த பிறகு அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்பார்க்கும்  காரியங் கள் நடக்கும் என நம்பலாம். இதற்காக, அ.தி.மு.க.வின் இரண்டாம்கட்டத் தலைவர்களோடும் தொடர்பில்தான் இருக்கிறோம்''’என்றார் அவர்.

இதனைத் தொடர்ந்து, ‘"ஓ.பி.எஸ்., சசிகலா ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைப்பது குறித்து  பொதுக்குழுவில் தீர்மானம் ஏதும் நிறைவேற் றப்படவுள்ளதா?'’என்ற கேள்வியோடு அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழுவின் தீர்மானக் கமிட்டி உறுப்பினர் ஒருவரை அணுகினோம். “

"வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழுவாக இது இருக்கும். பொதுக்குழு முடிந்தவுடன் எடப்பாடியார் டெல்லி செல்வார் என்பதை மட்டுமே இப்போதைக்கு கூற முடியும்'’என சூசகமாக கூறியபடியே நழுவி விட்டார் அவர். மீண்டும் ரணகளமா அல்லது குதூகலமா என்பது 10ஆம் தேதி தெரிந்துவிடும்!