செங்கோட்டையன், ஹரித்துவா ருக்கு செல்வதாகக் கூறி டெல்லி சென்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து வந்தி ருக்கிறார். "பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கவேண்டும். பத்து நாட்கள் கெடு'’என செப்டம்பர் 5-ஆம் தேதி செங்கோட்டையன் சொன்ன அடுத்தகணமே, எடப்பாடி தரப்பினர் எண்ணெயில் போட்ட கடுகாய் வெடித்தனர். மறுநாளே, அத்தனை கட்சிப் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்ட செங்கோட்டை யனுக்கு ஆதரவாக தோளோடு தோள்கொடுத்த திருப்பூர் எக்ஸ் எம்.பி. சத்யபாமா உட்பட 7 பேரின் பதவிகள் பறிக்கப்பட்டன.  செங்கோட்டை யனுக்கு ஆதரவாக தாங்களும் கட்சிப் பொறுப்பி லிருந்து விலகப் போவதாக ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் குரல்கள் எழுந்தன. போஸ்டர்களும் முளைத்தன.

Advertisment

அதேநேரத்தில், சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பி.எஸ்., கே.சி. பழனிச்சாமி, புகழேந்தி போன்றவர்களும், “கட்சியின் சீனியருக்கே இந்த நிலையா..?”என எடப்பாடி பழனிச்சாமியின் முடிவை விமர்சித்து செங்கோட்டையனுக்கு ஆதரவாக களத்தில் இறங்கினர். 

பரப்புரை பயணத்திற்காக திண்டுக்கல்லில் தங்கியிருந்த எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரை, தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கே வரவழைத்து, “"என்ன செய்வீங்களோ தெரியாது. செங்கோட்டை யனுக்கு ஆதரவா கட்சியைவிட்டு ஒருத்தரும் போகக்கூடாது'’என உத்தரவிட்ட கையோடு, தங்கமணியை மட்டும் தனியே சந்தித்து, எத்தனை ஸ்வீட் பாக்ஸ் வேணுமோ. அத்தனையும் ஏற்பாடு செய்யவேண்டிய பொறுப்பு உங்களோடது. எல்லாத்துக்கும் எம் பையன் மிதுனை கன்சல்ட் பண்ணிக்கோங்க''’என உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

அடுத்த நாளே காட்சிகள் மாறத் துவங்கின. நிம்மதியைத் தேடி ஹரித்துவார் செல்வதாகக் கூறி 8-ஆம் தேதி காலை இண்டிகோ 6E-6806 என்ற விமானத்தில் டெல்லிக்குப் பறந்தார் செங்கோட் டையன். அடுத்த சில நிமிடங்களிலேயே, செங்கோட்டையனை பிளைட் ஏற்றிவிட கோவை ஏர்போர்ட் சென்றவர்கள் முதல் அவரது அனைத்து ஆதரவாளர்களின் பட்டியல்களையும் வைத்துக் கொண்டு, ‘ஸ்வீட் பாக்ஸ்’ ஸ்மெல்லைக் காட்டத் துவங்கியது எடப்பாடியார் தரப்பு. விளைவு..? செங்கோட்டையன் டெல்லியில் கால் வைப்பதற்கு முன்பாகவே, செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளராக இருந்த பவானிசாகர் எம்.எல்.ஏ. பண்ணாரி உட்பட பலரும் செங்கோட்டையனுக்கு பதிலாகப் பொறுப்பு வழங்கப்பட்ட கே.ஏ.செல்வ ராஜை சந்தித்து சால்வை அணிவித்து மகிழ்ந்தனர்.

Advertisment

  அதேபோல, அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்ட கடலூர், தர்மபுரி உள்ளிட்ட சில மா.செ.க்களை, தானே போனில் தொடர்புகொண்ட மிதுன், “"அண்ணே, நானே உங்களை நேரில் சந்திக் கிறேன். அதுக்கு முன்னாடி, உங்க மாவட்டத்தில எந்தெந்த தொகுதிக்கு, யார் யாரை வேட்பாளரா போடலாம்னு ஒரு லிஸ்ட் அனுப்புங்கண்ணே. அப்பா கேக்கச் சொன்னாங்க'’என பிரம்மாஸ் திரத்தை வீசவே... அவர்களும் குஷியானார்கள். 

அதேநேரத்தில், “"நல்லா இருந்த அ.தி.மு.க. இப்படி அதிரிபுதிரியாக போனதற்கு பா.ஜ.க.தான் காரணம்'” என டெல்லி பா.ஜ.க. தலைவர்களை சமூக வலைத்தளங்களில் பலரும் வறுத்துக் கொண்டிருக்க... அன்று மாலை கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தங்கமணியோடு நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர்களில் ஒருவரான கே.பி.ராம லிங்கம். "பா.ஜனதாவுக்கும், செங்கோட்டையனின் கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரா செயல்படும் யாரையும் தேர்தல் முடியும்வரை பா.ஜ.க.வினர் யாருமே சந்திக்கமாட்டாங்க. இது எனக்கு மேலேயிருந்து வந்த தகவல்''’என செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.

அதேநேரத்தில் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து சுமார் 35 நிமிடங்கள் ஆலோசனை செய்துகொண்டிருந்தார் செங்கோட்டையன். பிறகு, மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம் டெல்லி சப்தர்ஜங்  ரோட்டிலுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வீட்டுக்குச் சென்ற செங்கோட்டையன்,  அவருடன் 1 மணி நேரம் ஆலோசனை செய்து விட்டு கோவை திரும்பினார்.   

Advertisment

செங்கோட்டையனின் இந்த அதிரடி காய் நகர்த்தல்கள் அ.தி.மு.க. தலைவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், “"போகும்போது நிம்மதியைத் தேடிச் செல்வதாக சோகமாக கூறிய செங்கோட்டையன், கோவை திரும்பியதும் சந்தோசமா இருந்தாரே? அந்த ரகசியம் என்னங்க?'’என செங்கோட்டையனின் நிழலாகவே இருக்கும் அந்த கொங்கு மண்டல முக்கியப் புள்ளியிடம் கேட்டோம். 

"நோக்கம் ஒவ்வொன்றாக நிறைவேறத் துவங்கும் என வாக்குறுதி கொடுத்துள்ளது டெல்லி மேலிடம். அதன் முதற்கட்டமாக செங்கோட்டையனின் டெல்லி விசிட்டுக்குப் பிறகு சற்றே இறங்கிவந்திருக்கிறார் எடப்பாடியார். அ.தி.மு.க.வில் கிங் மேக்கராக இருந்த ஒரு முக்கியப் புள்ளியை மட்டும் விரைவில் கட்சியில் இணைத்துக்கொள்வதாக டெல்லி தலைவர்களிடம் வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆனால், கட்சியில் அவருக்கு எந்தப் பொறுப்பும் கிடையாதாம். 

அதேபோல, “"ஒரு புதிய கட்சியையும் கூட்டணியில் இணைத்தால் வெற்றி நிச்சயம்'’என டெல்லி தலைவர்களிடம் செங்கோட்டையன் எடுத்துக் கூறியிருக்கிறார். அதற்கு, ‘"அந்த ஏற்பாட் டை நீங்களே ஸ்டார்ட் பண்ணுங்க. தேவையான சப்போர்ட்  நாங்க தர்றோம்'’ என உறுதி கொடுத் துள்ளது டெல்லி மேலிடம்... இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லமுடியும்'’என தொடர்பைத் துண்டித்தார் அந்த முக்கியப் புள்ளி.

ஆக,  அந்த முக்கியப் புள்ளி சசிகலாதான்... ரீ-என்ட்ரி ஆகப்போகிறார் என அ.தி.மு.க.வினர் கிசுகிசுக்கிறார்கள்.