பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரென்ற பெருமைபெற்ற காஞ்சிபுரத்தில் வெற்றிக்கொடி நாட்ட இருபெரும் திராவிடக்கட்சிகளும் தீவிரமாக இருக்கிறார்கள். காஞ்சிபுரம் நகர்ப்பகுதிகளில் முதலியார் சமூக வாக்குகளும், அதற்கு இணையாக கிராமப்புறங்களில் வன்னியர் வாக்குகளும், பட்டியல் சமூக வாக்குகளும், இதர சமுதாய வாக்குகளும் உள்ளன.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில், 1957-ல் பேரறிஞர் அண்ணா வெற்றி பெற்றார். தொடர்ந்து தி.மு.க. வசமிருந்த தொகுதியை 1977-ல் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. வென்றெடுத்தது. தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ. எழிலரசன், இரண்டு முறை வெற்றிபெற்று, மீண்டும் தனக்கு வாய்ப்பு கிடைக்குமென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். தி.மு.க.வின் கொள்கைபரப்புச் செயலாளராக இருக்கும் சிட்டிங் எம்.எல்.ஏ. எழிலரசன், தி.மு.க. மாநில மாணவரணிச் செயலாளர் பதவியிலும் இருந்ததால், கட்சி நிர்வாகிகளும், தொகுதி மக்களும் அவரை சந்திப்பது கடினமாக இருந்த சூழலில், அப்பதவி ராஜீவ்காந்திக்கு சென்றதால், தற்போது மீண்டும் எம்.எல்.ஏ.வாகும் ஆர்வத்திலிருக்கிறார்.
அதேபோல். தி.மு.க.வின் தலைமை செயற்குழு உறுப்பினரான எம்.எஸ்.சுகுமார் ரேஸில் நிற்கிறார். கட்சியில் ஒன்றிய இளைஞரணி மாவட்ட பிரதிநிதி பதவியிலிருந்து, படிப்படியாக முன்னேறி தற்போது தலைமை செயற்குழு உறுப்பினர் பதவி வகித்துவரும் இவர், கடந்த 2012ஆம் வருடம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், ஊராட்சி உறுப்பினர் குழு பதவியில் போட்டியிட்ட 26 தி.மு.க.வினர் தோல்வியடைந்த நிலையில், இவர் மட்டும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டச் செயலாளர் கா.சுந்தர் ஆதரவில் சீட்டு கிடைத்தால் தன்னை எதிர்த்து களமிறங்கும் அ.தி.மு.க.வின் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரத்திற்கு நிகராக வன்னியர் சமுதாய வாக்குகளையும், பட்டியல் சமூக வாக்குகளையும் பெற்று வெற்றி பெறுவேன் என்று களத்தில் இறங்கியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து காஞ்சிபுரம் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் பி.எம்.குமார் ரேஸில் இருக்கிறார். கடந்த 2005 இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். இவருடைய தந்தை பி.முருகேசன் இரண்டு முறை காஞ்சிபுரம் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றவர். இவருடைய மனைவி மலர்விழி குமார், ஒன்றிய சேர்மனாக இருக்கிறார். கடந்த 2005, 2011 தேர்தல்களில் கூட்டணிக் கட்சியான பா.ம.க.விற்கு தொகுதி ஒதுக்கப்பட்டதால், தி.மு.க.வில் பல கோஷ்டிகள் உருவானது. இதனால் 2016-ல் எழிலரசனுக்கு சீட்டு வழங்கப்பட்டது. சிட்டிங் எம்.எல்.ஏ. மீது தொகுதி மக்களிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் முரண்பாடுகள் உள்ள நிலையில், கட்சிப் பணியில் நன்முறையில் செயல்படும் பி.எம்.குமார் தனக்கு சீட்டு ஒதுக்கப்படுமென்ற நம்பிக்கையுடன் களத்திலிருக்கிறார்.
இவரைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் களத்தில் உள்ளார். முதலியார் சமுதாயத்தை சேர்ந்த இவர் சீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். இவரின் தாத்தா குப்புசாமி திராவிடர் கழகத்தில் இணைந்து சுயமரியாதை திருமணம் செய்தவர். திராவிடக் குடும்பம் வழிவந்த இவர், 2005 முதல் கட்சியில் இணைந்து 2009-ல் இளைஞர் அணி கிளை பதவியும், பின்னர், துணை அமைப்பாளராக பதவிவகித்து, தற்போது மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளராக இருக்கிறார். இவரின் மனைவி மகாலட்சுமி காஞ்சிபுரம் மேயராக உள்ளார். தற்போது இவர் துணை முதல்வரை வைத்து மூன்று சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்தியதால் உதயநிதியின் குட் புக்கில் இடம்பெற்று, வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/12/kanchi1-2026-02-12-18-04-50.jpg)
இவரைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரான சி.ராதாகிருஷ்ணன், தி.மு.க. வேட்பாளர் வாய்ப்பை எதிர்பார்க்கிறார். இவர் யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர். இரண்டு சர்வதேசப் பள்ளிகள் உள்பட நான்கு பள்ளிகளை நடத்திவருகிறார். வைட்டமின் "ப' பலமுள்ளதால், எதிராளிகள் யாரானாலும் சந்திக்கத் தயாராகவுள்ளார். விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக பல போட்டிகளை நடத்தி அசத்தியதால் உதயநிதியின் குட்புக்கில் இடம்பிடித்து, வாய்ப்பை எதிர்நோக்குகிறார். இவருக்கு அனைத்து சமூகத்தை சார்ந்த வாக்குகளும் சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது.
அ.தி.மு.க. தரப்பில் மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் சோமசுந்தரத்திற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் முதலியார் சமூகம் என்பதால் காஞ்சிபுரம் நகரப் பகுதி இவருக்கு கை கொடுப்பதோடு, பா.ம.க.வின் கூட்டணியும் சேர்ந்து வலுச்சேர்க்குமென்று நம்புகிறார். இந்த நிலையில் அ.தி.மு.க.வின் மாவட்ட பொருளாளரான வள்ளிநாயகமோ, கடந்த முறை சோமசுந்தரம் போட்டியிட்ட உத்திரமேரூரில் மீண்டும் போட்டியிட வேண்டுமென்றும், தனக்கு காஞ்சிபுரம் ஒதுக்கவேண்டுமென்றும் கட்சியில் முறையிட்டு வருகிறார்.
அ.தி.மு.க. தரப்பில், கடந்தமுறை போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் மகேஷுக்கு தற்போது காஞ்சிபுரத்தை ஒதுக்கவேண்டுமென்று பா.ம.க. தரப்பில் கேட்கப்படுகிறது. நாம் தமிழர் சார்பாக சால்டின் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. விஜய் கட்சியில் தற்போது மாவட்டச் செயலாளராக இருக்கும் தென்னரசுக்கு வாய்ப்புகள் உள்ளது. பட்டு நகரமான காஞ்சி கோயில் நகரத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாக கடினமான ரேஸ் சூடுபிடித்துள்ளது!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t112415809z-arv-2026-02-07-16-54-11.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/12/kanchi-2026-02-12-18-04-41.jpg)