இந்தியாவின் இயற்கை வளங்களைப் பாது காப்பதில் அறிவியல் ஆய்வுகள் மூலம் பெரும் பங்காற்றியவர் பேராசிரியர் மாதவ் காட்கில். இந்திய மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாவலர் எனப் புகழப்பட்டவர். அண்மையில் மறைந்தார் மாதவ் காட்கில். சுற்றுச் சூழல் மற்றும் இயற்கை வனத்தை பாதுகாக்கும் அமைப்புகளுக்கும், இயற்கை வளங்களை நேசிக்கும் பழங்குடியினருக்கும் மாதவ் காட்கிலின் மறைவு பேரிழப்பு.
பேராசிரியர் மாதவ் காட்கிலுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த தமிழகத்தின் சுற்றுச் சூழலியல் அமைப்பான 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜனிடம் பேசினோம்.
"தென்னிந்தியாவில் வாழக்கூடிய மனிதர்களுக் கும் உயிரினங்களுக்கும், தன்னுடைய அம்மாவை விட உன்னதமான விஷயம் ஒன்று உண்டென்றால் அது மேற்குத்தொடர்ச்சி மலைகள்தான்.
யுனெஸ்கோவால் "biodiversity heritage hottest of the hotspot" என்று அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள், நம்முடைய செயல்பாடுகளால் கடந்த 250 ஆண்டுகளாக கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன. அதுவும் கடந்த 100 ஆண்டுகளாக, அணைகள், மின் திட்டங்கள், சாலைகள், சுரங்கங்கள் என கட்டுமானங்களின் பெயரில் மிகப்பெரிய அழிவை சந்தித்துவருகின்றன.
மீதம் இருக்கின்ற மேற்கு மலைகளை பாதுகாக்கும் நோக்கில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கடந்த 2010ஆம் ஆண்டு பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையில் "உயர்மட்ட வல்லுநர்' குழுவை அமைத்தது. 2011ஆம் ஆண்டு இந்தக் குழு, தன்னுடைய அறிக்கையை ஒன்றிய அரசிடம் அளித்தது.
மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க இந்த அறிக்கையை அமல்படுத்தவேண்டும் என பல்வேறு அமைப்புகள், சூழலியல் நிறுவனங்கள் என எல்லோரும் குரல் கொடுத்தார்கள்.
இந்த அறிக்கையை தயாரிக்க காட்கில் அவர்களின் கால்கள் அந்த மலைத் தொடரில் படியாத இடங்களே இல்லை எனச் சொல்லலாம். அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து இந்த அறிக்கையை கொடுத்தார் காட்கில். வல்லுநர் குழுவின் அறிக்கையை பார்த்தாலே தெரியும் காட்கிலின் மெனக்கெடல்.
எந்த மாநில அரசும் அவர் சொன்னதை நடை முறைப்படுத்தவில்லை என்கிற வருத்தம் காட்கிலுக்கு உண்டு. அவர் எந்த இடங்களை பாதுகாக்கச் சொல்லியிருந்தாரோ, அந்த இடங்களை பாதுகாத்திருந்தால் கேரளாவின் "வயநாடு நிலச்சரிவு' உள்ளிட்ட பெருந்துயரங்களை நாம் சந்தித்திருக்கமாட்டோம்.
மக்களோடு பழகி, உரையாடி அவர்களுக்கான அறிவிய லாளராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதில்தான் காட்கிலின் மகிழ்வின் உயரம் இருந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/19/book-2026-01-19-16-43-11.jpg)
"நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் "வேள்பாரி நாவல்' என் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, அதில் பாரியின் இயற்கை குறித்த புரிதல், அதன் பின்னால் இருந்த அறிவியல் பாங்கு, அவன் வாழ்ந்த மேற்கு மலைத் தொடர்களின் சூழலியல் அழகு என, மெய்சிலிர்க்க அவர் பதிவொன்றில் எழுதியிருப்பார்.'
பாரிக்கு பிறகு மேற்கு மலைத் தொடர்களை அதிகம் நேசித்தவர் மாதவ் காட்கில். காட்கில் அவர்களுடைய மரண செய்தி, என்னைப் போன்ற சூழலியலாளர்களை கடும் துயரத்தில் ஆழ்த்துகிறது. கோவையில் அவரை சந்தித்த நிகழ்வு இன்றும் நினைவில் உள்ளது. நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது, மேற்குத் தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க, அவர் வலியுறுத்திய "மேற்கு தொடர்ச்சி மலை சூழலியல் பாதுகாப்பு ஆணையம்' அமைப்பதுதான். இந்த ஆணையத்தை அமைக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும்'' என்கிறார் சுந்தரராஜன்.
தி ஃபிஷ்ஷர்டு லேண்ட், எ வாக் அப் தி ஹில், எகாலஜி அண்ட் ஈக்விட்டி, தி யூஸ் அண்ட் அப்யூஸ் ஆப் தி நேச்சர், எகாலஜிக்கல் ஜர்னிஸ், நர்ச்சரிங் பயோடைவர்சிட்டி (தி இந்தியன் அஜெண்டா), பட்டர்ப்ளைஸ் ஆப் தி பெனின்சுலார் இந்தியா, டைவர்சிட்டி தி கார்னர் ஸ்டோன் ஆப் லைப், சயின்ஸ், டெமாக்ரசி அன்ட் எகாலஜி இன் இந்தியா உள்ளிட்ட சுற்றுச்சூழல் குறித்த பல முக்கியமான புத்தகங்களின் ஆசிரியர் ஆவார் மாதவ் காட்கில். அவரது இழப்பு வெறுமனே ஒரு உயிரின் இழப்பு மட்டுமல்ல, சுற்றுச்சூழல் சார்ந்த முன்னெடுப்புக்கு நேர்ந்த சேதாரம்.
இந்தியாவில் களவாடப் பட்டுக்கொண்டிருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைகளை பாதுகாப்பதில், ஒன்றிய பா.ஜ.க. அரசு தீவிர கவனம் செலுத்தா ததுதான் இயற்கை வளங்களின் பாதுகாப்பிற்காகப் போராடும் சுற்றுச் சூழலியல் அமைப்பு களின் வருத்தமாக இருக்கிறது.
-இளையர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/19/book11-2026-01-19-16-42-56.jpg)