""விசாரணைக்காக அழைத்து வைத்திருந்தால் கண்டிப்பாக எனக்கு தெரிவிக்கவேண்டும். தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை உண்டு'' என கடந்த வாரத்தில் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடந்த க்ரைம் மீட்டிங்கில் எஸ்.பி. ஆஷிஷ் ராவத் தெரிவித்திருந்தார். ஒரு சந்தேக வழக்கில், தங்களுக்கு கஸ்டடி விசாரணை விஷயம் தெரிந்திருந்தும் எஸ்.பி.க்கு தகவல்தெரிவிக்காமல் மறைக்க, போலீஸாரால் அப்பாவி இளைஞரொருவர் பலியாகியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் திருப்புவனம் காவல் நிலையத்தில் ஆஜராகி புகாரொன்றை அளித்துள்ளார் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா. ""என்னுடைய அம்மாவுக்கு (சிவகாமி) ஸ்கேன் எடுக்கும் பொருட்டு மதுரைக்கு வந்தோம். ஸ்கேன் எடுக்கும்பொழுது நகையை அணிந்திருக்கக்கூடாது என்பதால் அம்மாவின் தங்கச் சங்கிலி, வளையல் 2 மற்றும் கல் மோதிரம் 2 ஆகியவற்றைக் கழற்றி நாங்கள் கொண்டுவந்த கட்டைப்பையில் வைத்தோம். ஸ்கேன் எடுக்க நேரமாகும் என்பதால் இங்கிருந்து அருகிலுள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மனை தரிசிக்கலாம் என்றார் என்னுடைய அம்மா. எனக்குச் சொந்தமான பசலி58 ஆய 1150 என்கின்ற பதிவெண் கொண்ட கிவிட் காரில் மடப்புரம் கோவிலுக்குச் சென்றோம்.
அம்மாவிற்கு நடக்க இயலாது என்பதால் வீல் சேரை கோவில் நிர்வாகத்திடம் கேட்டு பெற்றுவந்தேன். அந்த வீல் சேரை எனக்கு எடுத்துவந்து கொடுத்தது அஜித்குமார் எனும் கோவில் காவலாளி. ""அம்மாவை வீல்சேரில் வைத்து நான் கோவிலுக்குச் செல்கின்றேன். நீங்கள் என்னுடைய காரை பார்க் செய்துவிட்டு வாருங்கள்'' என காரின் சாவியை அஜித்குமாரிடம் கொடுத்துவிட்டு தரிசனம் செய்ய புறப்பட்டேன். வெகுநேரம் கழித்து காரின் சாவியைக் கொண்டுவந்து கொடுத்தார் அஜித்குமார். தரிசனம் முடிந்ததும் திரும்பச் செல்கையில் கட்டைப்பை கலைந்துகிடப்பது தெரியவர நகையைத் தேடினோம். நகையைக் காணவில்லை. கோவில் நிர்வாகத்திடம் நடந்ததைக் கூறினோம். அஜித்குமாரை அழைத்து விசாரித்தார்கள். அதன்பின் போலீஸிடம் தெரிவித்தோம்'' என்கின்றது அந்த புகார்.
சிறுவயதிலேயே தந்தையை இழந்த கோவில் காவலாளி அஜித்குமாரையும், அவரது தம்பியையும் வளர்த்தது தாய் மாலதியே. ஓங்குதாங்கான தாட்டியமான ஆள் என்பதால் மடப்புரத்திலுள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக காவலாளி வேலை கிடைத் துள்ளது 28 வயதான அஜித்குமாருக்கு. ""வேலை பார்த்ததற்கு இன் னும் சம்பளம்கூட வரவில்லை. அந்த டாக்டர் அம்மா புகாரில் இருப் பதுபோல் இவன், டாக்டரின் காரை எடுத்து பார்க் செய்யவில்லை. இவன் வண்டி எடுத்துவிடுவதற்குப் பதில் அருகிலுள்ள ஆட்டோக் காரரை அழைத்து பார்க்கிங்கில் காரை நிறுத்தக்கோரியுள்ளான்.
தரிசனம் முடிந்து வெளியேவந்தவர்கள் சில நிமிடங்களில் இவனிடம் நகையைக் காணவில்லை எனக்கேட்க, இவனும் அலட் சியமாக பதிலைக் கூறினான். உடனடியாக கோவில் நிர்வாகமும் இவனை அழைத்து விசாரித்தது. பின்பு மணி 3 இருக்கும். எங்கி ருந்தோ வந்தது டெம்போ டிராவலர் ஒன்று. அதிலிறங்கிய 7-க்கும் மேற்பட்ட போலீஸார் அஜித்குமாரையும் அவனது நண்பர்களையும் அள்ளிக்கொண்டு சென்றது'' என்கிறார் மடப்புரம் காளிகோவில் முன்பு கடை வைத்திருக்கும் அஜித்குமாரின் உறவுப் பெண்மணி ஒருவர்.
பிற்பகல் மதியம் 3 மணியளவில் கூட்டிச்செல்லப்பட்ட அஜித்குமார் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. காவல் நிலையத்திலும், நீதிபதி முன்பும் ஒப்படைக்கப்படவில்லை. மறுநாள் சனிக்கிழமை அதிகாலையளவில் அஜித்குமாரின் வீட்டிற்கு வந்த போலீஸார், "நாங்கள் மானாமதுரை டி.எஸ்.பி. ஸ்பெஷல் டீம்' என அறிமுகம் செய்துகொண்டே வீட்டை சல்லடையிட்டுள்ளது. தேடிய பொருட்கள் கிடைக்காததால் அங்கிருந்த அஜித்குமாரின் தம்பி நவீனையும் இழுத்துக்கொண்டு சென்றது. பின் மாலை 4.30 மணியளவில் விடுவிக்கப்பட்டிருக்கிறார் தம்பி நவீன். ஆனால் அஜித் குமார் விடுவிக்கப்படவில்லை. அஜித்குமாருக்கு என்ன ஆனது? என்ற கேள்வியுடன் உற்றார் உறவினர்களோடு மடப்புரம் காவல் நிலையத்தை முற்றுகையிட, அஜித்குமார் இறந்துவிட்டான் எனத்தகவல் கசிய ஆரம்பித்தது. உறுதியான தகவலும் இல்லை. அஜித்குமாரின் உடல் எங்கிருக்கின்றது? என்கிற தகவல் இல்லை என்பதால் காவல் நிலையமே பதற்றத்துக்குள்ளானது.
""வீட்டில் ஏதேனும் நகை யிருக்கின்றதா? என வீடு முழுவ தும் தேடியவர்கள் என்னையும் இழுத்துக்கொண்டு சென்றனர். மானாமதுரை வலையேனந்தல் கண்மாய்க்கு எங்களைக் கொண்டு சென்றவர்கள், அஜித்குமாரின் கைகளை பின்புறம் கட்டி, மண்டியிடவைத்து பி.வி.சி. பைப்பால் அடித்துநொறுக்கினர். அரைமணி நேரம் கழித்து என் னையையும் அதுபோல் மண்டி யிடவைத்து அஜித்குமார் கண் முன்பே அடித்துநொறுக்கினார் கள். அடித்த இடத்திலேயே சிறுநீர் மலம் கழித்துவிட்டார் அஜித்குமார். காலை முதல் மாலை வரை பிளாஸ்டிக் பைப், இரும்புக் கம்பி வைத்து அடித்த னர். அதன்பின் கோவில் மாட்டுக் கொட்டாயில் வைத்து அடித்த னர். ஆதாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் எந்த ஒரு குற்றப் பின்னணியுமில்லாத எனது அண்ணனை அடித்துக் கொலை செய்துள்ளனர்'' என்கின்றார் தம்பி நவீன்.
அஜித்குமார் போலீஸாரால் அடித்துக்கொல்லப்பட்டதாக தகவல் ஊருக்குள் பரவ, உறவினர் கள் காவல்நிலையத்தில் கூடினர். அஜித்குமார் உடல் எங்கிருக்கிறது என்று இரவு 11 மணி வரை போலீ சாரிடம் வாக்குவாதம் செய்தனர். போலீசார் சொல்ல மறுத்த நிலையில் போராட்டத்திலும் இறங்கினர். இதனையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்குள்ள மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததை உறுதி செய்யவே, அங்கிருந்து அஜித்குமாரின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக மதுரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப் பட்டது. இந்தத் தகவலறிந்த அஜித்குமாரின் உறவினர்கள் திருப்புவனம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, ""அஜித்குமாரை காவல் நிலையத்திற்கே கொண்டு செல்லாமல் அடித்து சித்ரவதை கொலைசெய்த போலீஸார்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படவேண்டும். அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்ய வேண்டும்'' என, காவல்துறை யினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன்... போராட்டத்தில் இறங்கினர்.
இதனையடுத்து அங்கு ஏராளமான காவலர்கள் குவிக்கப் பட, மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் திருப்புவனம் காவல் நிலை யம் சென்று அங்கு காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அஜித்குமாரின் கொலைக்குக் காரணமான மானாமதுரை டி.எஸ்.பி.யின் தனிப்படை டீமிலுள்ள பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோரை பணி யிடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
இது இப்படியிருக்க, திருப்புவனம் ஊர்முழுவதும் கடையடைப்பு செய்து மந்தையில் திரண்டு, ஆறு பேரை கைதுசெய்தால் மட்டுமே உடலை வாங்குவோமென கொலைக்கான நியாயம் கேட்டனர். இதனிடையே திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் வெங்கடேச பிரசாத், போலீஸார் ஆறுபேரிடம் விசாரணை மேற்கொண்டார். பிறகு கொலையுண்ட அஜித்தின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்று நேரடியாக ஆய்வுசெய்யவுள்ளார் என தகவல் வெளியானது. அஜித்குமார் உடலை ஆய்வுசெய்யும்போது உறவினர்கள் உடனிருக்க வேண்டும் என போலீஸ் தரப்பிலிருந்து கூற, அவசரம் அவசரமாக தன்னுடைய வாகனத்தை கொடுத்து உதவினார் தி.மு.க.வின் சேங்கைமாறன்.
தவறாகப் புரிந்துகொண்ட அ.தி.மு.க.வினரோ மா.செ.செந்தில்நாதன் தலைமையில், ""கொடி கட்டிய காரில் எப்படி அனுமதிக்கலாம்?"" என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீஸாரின் சமாதான முயற்சிக்குப் பின் அஜித்குமாரின் தம்பி நவீன், அவரது அம்மா மாலதி ஆகியோர் போலீஸாரின் வாகனத்தில் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். மருத்துவமனையில் விசாரணையில் ஈடுபட்ட நீதிபதியிடம் தங்களது மகனின் கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
""இந்த கொலை முழுக்க முழுக்க மாவட்ட தனிப்பிரிவின் கவனக்குறைவாலேயே நடந்திருக் கின்றது. அதாவது, சிவகங்கை தனிப் பிரிவோ, நாம் சொன்னால்தானே எஸ்.பி.க்குத் தெரியும் என்கின்ற மமதையில் இருந்ததால் இந்த கொலை நடந்திருக்கின்றது. முந்தின வாரம்தான் கஸ்டடி விசாரணை இருந்தால் எனக்குத் தெரிவிக்க வேண்டுமென்றி ருக்கின்றார் எஸ்.பி.. இருப்பினும் அதனை மறைத்துள்ளனர். அது கொலையில் முடிந்துள்ளது. 18 மணி நேரமாக விசாரணை எனும் பெயரில் ஒருவனை வைத்து ஊரெல்லாம் சுற்றிக்கொண்டிருப்பது எஸ்.பி.யின் தனிப் பிரிவிற்கு தெரியாதா? சம்பவத்தில் காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். அது தீர்வாகாது. தமிழ்நாட்டில் பல காவல் நிலையங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே காவலர்களாகப் பணியாற்றுவதால், இதுபோன்ற பல தவறுகளுக்கு காரணமாக அமைகிறது. மேலும், ஒவ்வொரு காவல்நிலைய மரணங்களுக்குப் பிறகும், அதை தற்காலிகமாக சமாளித்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களே தவிர, நிரந்தரமாக தீர்வுகாண எவ்வித நடவடிக்கைகளையும் எந்த ஆட்சியிலும் எடுப்பதில்லை. அஜித்குமார் விவகாரம் மீண்டுமொரு சாத்தான்குளம் சம்பவமாக உருவெடுத்துள்ளது.'' என்கின்றார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் வழக்கறிஞரான பாஸ்கர் மதுரம்.
காவல்துறை கடமையும் தவறியுள்ளது... கண்ணியத்தையும் இழந்துள்ளது.