திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் நகர தி.மு.க. என்கிற பெயரிலான முகநூல் பக்கத்தில், "கலசப்பாக்கம் தொகுதியில் ஒரே சாதிதான் வெல்லும். அதனால் அந்த சாதிக்கு மட்டுமே சீட் தரவேண்டும் எனச்சொல்வதும், ஒரே குடும்பத்துக்கு 8 முறை சீட் தரப்படுவதும் எந்த விதத்தில் நியாயம்?' என்பதாக ஒரு பதிவும், மாவட்டத்திலேயே கட்சி சீனியர்களில் ஒருவரான சுந்தரபாண்டியனை, பட்டியல் சமூகம் என ஒதுக்கிவைப்பது சரியா? என அடுத்தடுத்த பதிவுகளும் வெளியாகிவருகிறது. இது மாவட்ட தி.மு.க.வில் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உளவுத்துறை மற்றும் தி.மு.க.வின் பென் டீம் விசாரித்துள்ளது.

Advertisment

விவரமறிய புதுப்பாளையம் ஒ.செ. சுந்தரபாண்டியனை தொடர்புக்கொண்டபோது, நமது லைனை எடுக்கவில்லை. அவரின் தரப்பினரோ, "எங்க பிரச்சனையை அமைச்சர் மற்றும் கட்சித் தலைவரிடம் சொல்லி யிருக்கோம், இணையத்தில் வந்தது குறித்து எங்களுக்கு தெரியாது, பத்திரிகையாளரிடம் பேச விருப்பமில்லை'' என்றனர்.

Advertisment

நாம் கலசப்பாக்கம், புதுப் பாளையம் தி.மு.க. நிர்வாகிகளிடம் கேட்டபோது, "திருவண்ணாமலை தி.மு.க. தெற்கு மாவட்டம், புதுப்பாளையம் ஒ.செ.வாக இருப்பவர் சுந்தரபாண்டியன். கட்சியில் 10 ஆண்டுகள் மாவட்ட துணைச்செய லாளராகவும் இருந்தார். பட்டியல் சமூக பிரமுகரான இவர், இரண்டு முறை ரிசர்வ், இரண்டு முறை பொதுப்பிரிவில் என நான்கு முறை புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவராக இருந்திருக்கிறார். பலமுறை செங்கம் தனித்தொகுதிக்கு சீட் கேட்டு அவருக்கு கிடைக்கவில்லை. தொகுதி சீரமைப்பில் புதுப்பாளையம் ஒன்றியம் கலசப்பாக்கம் தொகுதியில் வந்தது. சுந்தரபாண்டியன் செங்கத்தில் மீண்டும் சீட் கேட்க முடிவெடுக்க,  செங்கம் எம்.எல்.ஏ. கிரியோ, தொகுதி மாறி சீட் கேட்க எதிர்ப்பு தெரிவிக்க, அப்படியானால் தனது தொகுதியிலேயே சீட்டு கேட்க முயன்றார் சுந்தரபாண்டியன். கீழ்பென்னாத்தூர் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ. சரவணன் தரப்போ, பட்டியலினத்தை சேர்ந்தவர் எப்படி பொது தொகுதியில் கேட்கலாமென பிரச்சனையாக்கியுள்ளார்.

இதுகுறித்து சுந்தரபாண்டியன் தரப்பில் கேட்டபோது, "கட்சியில் 50 ஆண்டுகாலமாக நிர்வாகியாக இருந்துள்ள சுந்தரபாண்டியனை, எம்.எல்.ஏ.வான சரவணன் மதிக்காததால் இருவரும் எதிரிகளாகினர். இதனால் சமீபத்தில் முதலமைச்சரிடமே நேரடியாக புகார் போயிருக்கு. இந்நிலையில், இது முதலியார் தொகுதி. இங்கு உடையார் சமுதாயம் தான் ஜெயிக்கும். நான் ஜெயிச்ச பிறகு சுந்தரபாண்டி யனை கட்சிய விட்டே தூக்குறேன் பாருன்னு சரவணன் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்னது சுந்தரபாண்டியனுக்கு தெரிஞ்சதால் எதிர்ப்பை காட்டறார். அதேபோல், சரவணன், கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குள்ள வர்றார். அவர் கலசப்பாக்கம் தொகுதியில் வந்து நின்று எம்.எல்.ஏ.வாகலாமாம். அதுவே சுந்தர பாண்டியன் தொகுதி மாறினால் மட்டும் எதிர்ப்பதா? பட்டியல் சமூகம் என்பதால்தானே நசுக்கப்படுகிறார்? என எழுப்பிய கேள்விகள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது'' என்கிறார்கள். 

Advertisment

இதுகுறித்து தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழுவிலுள்ள மேல்மட்ட நிர்வாகிகள் சிலரோ, "தமிழ்நாட்டில் தி.மு.க. தொடங்கியது முதல் இப்போதுவரை பட்டியலின சமூகம் பக்கபலமாக இருக்கிறது. கழகமும் பட்டியல் சமூக பிரமுகர்களுக்கு பதவிகள் தந்தது, மக்களும் ஏற்றுக்கொண்டார்கள்.  பட்டியல் சமூகத்தை சேர்ந்த சி.டி.தண்ட பாணி கோவையில், பொள் ளாச்சியில் பொதுத்தொகுதியில் நின்று எம்.எல்.ஏ., எம்.பி.யாக்கப் பட்டார். மிசா.ஆபிரஹாம், நீண்ட காலம் ந.செ.வாக இருந்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சமயநல்லூர் செல்வ    ராஜ், பொதுத்தொகுதியான மேலூரில் 2001ல் நிறுத்தப்பட்டார். இப்படி பட்டியல்    சமூகத்தை சேர்ந்த கழக நிர்வாகிகளை பொது தொகுதியில் நிறுத்தினார்கள், மக்களும் வெற்றிபெற வைத்தார்கள். இதனை பொறுத் துக்கொள்ள  முடியாத சிலர் தொடர்ந்து, பட்டியலினத்தவருக்கு மா.செ., ந.செ. பதவி தந்தால் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் எனச் சொல்லி பட்டியலின பிரமுகர்களை தடுக்கத் தொடங்கினார்கள். 

1996-ல் ராஜபாளையத்தில் நடந்த ஒரு திருமணத்தில், எம்.எல்.ஏ.வாகயிருந்த வி.பி.ராஜன், கழகத்தில் பட்டியலினத்தவர்களால் எந்த பதவிக்கும் வர முடிவதில்லை என கலைஞர் முன்பு குறையாகச் சொன்னதும், 1998-ல் உட்கட்சி தேர்தல் நடந்தபோது கிளை முதல் தலைமைக்கழகம் வரையும், அணிகளில் பட்டியலினம் மற்றும் மகளிர்க்கு துணைச்செயலாளர் பதவி வழங்க வேண்டும் என விதி திருத்தப்பட்டது.

தற்போது கட்சியில் இரண்டு மா.செ.க் கள் தான் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள். ஒற்றைப்படையில்தான் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பட்டியல் சமூக பிரமுகர்கள் மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர் பதவி கேட்டால், அதான் துணைச்செயலாளர் பதவி தருகிறோமே என்கிறார்கள். அதிகாரமற்ற அந்த பதவியில் இருப்பதும் ஒன்றுதான் இல்லாததும் ஒன்றுதான். 

வி.சி.க.வில் இருக்கும் முக்கிய நிர்வாகி கள் பலர் தி.மு.க.வில் இருக்க வேண்டியவர்கள். அவர்களை எங்கள் கட்சியிலுள்ள சாதியவாதிகள் புறக்கணித்து, அவமானப்படுத்தியதால் அங்கே சென்றுவிட்டார்கள். உங்களுக்குதான் தனித்தொகுதி இருக்கிறதே, உள்ளாட்சி பதவிகளில் தனி ஒதுக்கீடு உள்ளதே, அது போதாதா எனச்சொல்லி எதிர்க்கிறார்கள். 

பா.ம.க., புதிய நீதிக்கட்சி போன்ற சாதியக் கட்சிகளை அடக்க, கட்சியிலுள்ள அச்சமுதாய பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் தந்ததுபோல், இனியாவது எங்கள் கழகத் தலைவரும், சின்னவரும் ஆராய்ந்து, ஆதிதிராவிடப் பிரமுகர்களுக்கு கட்சியில் முக்கியத்துவமிக்க பதவிகளைத் தந்து நம்பிக்கையளிக்க வேண்டும்'' என்றார்கள் கவலையுடன்.