சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் தூய்மைப் பணியாளர்களை தனியார்மயப்படுத்தும் தீர்மானத்தை கைவிடச்சொல்லியும், பத்தாண்டு களுக்கு மேலாக பணிபுரிந்துவரும் பணியாளர்களை பணி நிரந்தரப்படுத் தச் சொல்லியும், சென்னை மாநக ராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் வாசலின் முன்பாக, பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் உடன்பாடு ஏற்படாமல், வெயிலிலும், கொட்டும் மழையிலும் 11வது நாளாக தூய்மைப் பணியாளர்களின் போராட் டம் வலுத்து வருகிறது.

Advertisment

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத் தில், சென்னையிலுள்ள 15 மண்டலத் தில் 11 மண்டலத்தை ராம்கி நிறுவனத் திற்கு 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு தாரைவார்த்தது. தற்போதும் அதேபோல மீதமுள்ள மண்டலங்களை யும், ஒரு ஆண்டிற்கு 271 கோடி வீதம் 10 ஆண்டுகளுக்கு 2,710 கோடிக்கு ஒப்பந்தம் போட்டுள்ள நிலையில், அதனை ஏற்க மறுத்து போராடி வரு கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.

அரசும், ராம்கி நிறுவனமும் போட்டுள்ள ஒப்பந்தத்தின் படி, 4 மாதத்திற்குள் பணியைத் தொடங்கி திறம்பட செய்துகாட்ட வேண்டும், இல்லையென்றால் ஒப்பந்தம் வாபஸ் என்ற விதியும் உள்ளது. ஆகையால், பணியாளர்களை ராம்கி நிறுவனம் பணிக்கு மீண்டும் அழைப்பதற்கு முற்பட்டுவருகிறது. அதற்கு மறுத்து போராட்டம் தொடர்கிறது.

corporationworkers1

Advertisment

11வது நாளாக போராடிவரும் எல்.டி.யூ.சி. தொழிற்சங்கத்திற்கு பல கட்சிகளும் இயக்கங்களும் ஆதரவாகக் களமிறங்கிய சூழ்நிலையில், தி.மு.க. கூட்டணியிலுள்ள வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், திராவிடர் கழகம் போன்றவையும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவளிப்பது அரசுக்கு சிக்கலை உண்டாக்கியுள்ளது.  

"ஒப்பந்த நிறுவனமான ராம்கி, ஆந்திராவைச் சேர்ந்த அயோத்ய ராமிரெட்டி என்பவருக்கு சொந்தமானதாகும். தெலுங்கானா, மஹாராஷ்டிரா, பீகார், ஜார்க்கண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கழிவுநீர் மேலாண்மையில் ஈடுபட்டுவருகிறது. இந்நிறுவனம், ஏற்கெனவே தென் மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளில் மருத்துவக் கழிவுகளை எடுக்கும் டெண்டரை கையிலெடுத்து, விருதுநகர் முக்களம் பகுதியில் ஒரு மருத்துவக்கழிவுகளை எரிக்கும் நிறுவனத்தை நிறுவி செயல்பட்டுவருகிறது. இப்படி எரிப்பதால், சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் சுற்றுச்சூழலை பாதித்து, பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பு, மலட்டுத்தன்மை, கேன்சர் உட்பட பல்வேறு நோய்களை ஏற்படுத்தி மரணங்களை நிகழ்த்துவது தெரியவந்ததால்,  2013ஆம் ஆண்டு அரசே அந்நிறுவனத்தை நிறுத்தியது. இதையெதிர்த்து நீதிமன்றத்தில் முட்டிமோதி மீண்டும் இயங்கியது. இந்நிறுவனம், ஆந்திராவில் ரூ.143 கோடி நில மோசடியில் சிக்கியதில், ராமிரெட்டியை சி.பி.ஐ. குற்றவாளியாக சேர்த்துள்ளது'' என்று பகீரூட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தற்போது 4 மண்டல தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டத்தால் அம்மண்டலங்கள் மிகவும் சீரழிந்துள்ளன வாம். சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தினுள்ளேயே குப்பைகள் குவிந்துள்ளனவாம். இந்நிலையில், இந்த 4 மண்டலங்களையும் சேர்த்து தூய்மைப்பணியைக் கவனிக்கும்படி மற்ற பணியாளர்கள் நிர்பந்திக்கப்படுவதால் பணியாளர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இந்த போராட்டத்தி லுள்ளவர்களோடு, அரசு சார்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா,  ஆணையர் குமருகுருபரன், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 

Advertisment

corporationworkers2

அரசுத் தரப்பிலோ, 'இந்த பணியை, ஒப்பந்தம் போட்டு தனியார் நிறுவனத்திடம் அரசு கொடுத்துவிட்டது. மீண்டும் மாற்ற இயலாது. உங்களுக்கான பணி முடிந்த நிலையில், மீண்டும் அதே பணியை அந்நிறுவனம் கொடுக் கும். அதனால்தான் இன்றுவரை இந்த மண்டலத்திற்கு ஆட்களை எடுக்காமல் இருக்கிறார்கள்' எனப் பேச்சுவார்த் தையில் முன்வைக்கப்பட்டது. ஆனால் எல்.டி.யூ.சி. தொழிற் சங்கம் அதனை மறுத்து, பலகட்டப் பேச்சுவார்த்தைகளை பத்தாம் தேதிவரை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்துசெல்ல வேண்டுமென்றும், இல்லையென்றால் காவல்துறை நடவடிக்கை எடுக்குமென்று எச்சரித்தும், போராட்டம் தொடர்கிறது.

இதுகுறித்து பேசிய எல்.டி.யூ.சி. தொழிற்சங்க தலைவர் பாரதி, "தொடர்ந்து அரசு சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது. விட்ட டெண்டரை மாற்ற முடியாதென்றால், அந்தளவிற்கு கமிஷன் வந்துள்ளது என்றுதானே அர்த்தம்? மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் உரிமை அரசுக்கு கிடையாது. ஆனாலும் அதையே மீண்டும் செய்கிறது. இதுநாள்வரை இத்துறை அமைச்சர் வந்து பேசவேயில்லை. இதுநாள் வரை இந்த மக்கள் மழையிலும் வெயிலிலும் போராடுகிறார்களே என்று மனமிரங்காமல் மௌனம் காப்பது தவறு. அ.தி.மு.க. ஆட்சியின்போது இதே முதல்வர்தானே போராட்டக்களத்தில் எங்களோடிருந்து குரலெழுப்பினார்? இப்போது என்னாச்சு? அவர்களுக்கும் இவர்களுக்கும் எங்கே வித்தியாசம் இருக்கிறது? சென்னையின் பூர்வகுடியான இவர்களை இங்கிருந்து அகற்றினீர்கள். வாழ்வுரிமை யான இந்த வேலையையும் பிடுங்கிவிட்டால் நாங்கள் இங்கு அடிமைகளா? இனியும் நாங்கள் பொறுத்துக்கொள்ளமாட்டோம். எங்களை காவல்துறையை வைத்து அடித்தாலும், அகற்றினாலும் எங்களின் கோரிக்கை நிறைவேறும்வரை போராட் டம் தொடரும்'' என்றார். 

இந்நிலையில், தூய்மை பணியா ளர்களின் போராட்டத்தால் பொதுமக் கள் பாதிக்கப்படுவதாக வழக்கறிஞர் வினோத், தலைமை நீதிபதியிடம் திங்கள்கிழமை முறையிட்டார். அதனை மனுவாக தாக்கல் செய்தால் செவ்வாய்க் கிழமை விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். அதேபோல் தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்பாக தாக்கல் செய் யப்பட்ட வழக்கில், அரசு தரப்பில் பதி லளிக்க கால அவகாசம் வழங்கி உத்தர விட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது உயர் நீதிமன்றம்.