காசிக்கு நிகரான பெருமைவாய்ந்த தென்காசி காசிவிஸ்வநாதரின் கண்களையே கட்டியிருக்கிறார்கள் அங்குள்ள பூசாரிகள். ஆலயத்திற்கு உபயமாக வந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல்போய் தென்காசி மாவட்ட மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. 

Advertisment

மிகப்பிரபலமான தென்காசி காசிவிஸ்வநாதர் சுவாமி கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த 07.04.2025-ல் மாவட்டமே கொண்டாடும் வகையில் சீரும் சிறப்புமாக நடந்திருக்கிறது. கும்பாபி ஷேகத்திற்காக பக்தர்கள் பல லட்சங்களை நன்கொடை யாகவும், வெள்ளி, சில்வர் குடங்கள், வாளிகள், பித்தளை மற்றும் சில்வர் கரண்டிகள், விலையுயர்ந்த சால்வைகள் என்று லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்களை உபயமாகவும் கொடுத்தனர். 

இந்தப் பொருட்க ளனைத்தும் கோவிலின் அம்மன் சன்னிதியிலுள்ள மடப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இந்த ஆலயத்தின் செயல்அலுவலராக பொன்னி என்பவர் பணிமாறி வந்தி ருக்கிறார். பொறுப்பேற்றவுடன் இந்தப் பொருட்களை யெல்லாம் செயல் அலுவலர் பார்வையிட்ட போது அவை சரியாக இருந்திருக்கிறது. கடந்த 21.8.2025 அன்று, இரவு 7 மணிக்கு தற்செயலாக மடப்பள்ளிக்குச் சென்று ஆய்வுசெய்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த பக்தர்களின் காணிக்கைப் பொருட்கள் இல்லை. இதனால் அதிர்ச்சியான இ.ஓ. கோவிலிலுள்ள அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களை    யும் ஆய்வு செய்தபோது, கடந்த 10.08.2025 அன்று காலை 6 மணிக்கு கோவிலில் தற்காலிக அர்ச்சகராகப் பணிபுரியும் நடன சபாபதி, கோவிலின் பக்தரான ஹரி, தென்காசியைச் சேர்ந்த தினேஷ், கீழப்புலியூர் கணேசன் ஆகியோர் பெரிய அட்டைப்பெட்டிகள் மற்றும் சாக்குகளில் காணிக்கைப் பொருட்களை கோவிலின் தெற்கு வாசல்வழியாக ஒரு ஆட்டோவில் எடுத்துச் சென்றது தெரியவந்தி ருக்கிறது. 

இதையடுத்து 22-8-25 அன்று, இ.ஓ. பொன்னி தனது பணி யாளர்களுடன் நடன சபா பதி, ஹரி இரண்டு பேரையும் விசாரித்திருக்கிறார். அப்போது கோவிலின் முதன்மை அர்ச்சகரான செந்தில் ஆறுமுகம் என்கிற செந்தில் பட்டர் காணிக்கைப் பொருட்களை எடுத்துவரச் சொன்னதால்தான் நாங்கள் அந்தப் பொருட்களை எடுத்து            அர்ச்சகர் வீட்டிற்கு கொண்டுசென்றோம் என்றிருக்கிறார்கள்.

Advertisment

"பக்தர்கள் உபயமாகத் தந்த மேற்படி காணிக்கைப் பொருட்களின் மதிப்பு 1.95 லட்சம். எங்கள் கோவில் நிர்வாகத்திற்கு தெரியாமல் இந்தப் பொருட்களைத் திருடிச் சென்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று இ.ஓ. பொன்னி தென்காசி காவல்நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். அதனடிப்படையில் முதன்மை அர்ச்சகரான செந்தில், தற்காலிக அர்ச்சகர் நடன சபாபதி, ஹரி, தினேஷ், கணேசன் ஆகிய ஐந்து பேர் மீது எஸ்.ஐ. முருகேஸ்வரி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சம்பவம் மாவட்டத்தை அதிரவைத்திருக்கிறது. 

இந்த திருட்டுச் சம்பவத்தோடு பிற வகையான ஆலய முறைகேடுகளும் வெளிப் பட்டது.

ஆலயத்தின் அறங்காவலர்கள் குழு நியமிக்கப்படுவதற்கு முன்புதான் கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறது. மூத்த அர்ச்சகர்கள் ஓய்வுபெற்ற நிலையில், கோவிலின் முதன்மை அர்ச்சகரான செந்தில் பட்டர் பொறுப்புக்கு வந்திருக்கிறார். 

Advertisment

கும்பாபிஷேக திருப்பணிகள் அனைத்தும் உபயதாரர்கள் மூலம்தான் நடத்தப்பட்டது. அந்தப் பணிகள் யார் யாரிடம் கொடுக்கப்பட்டது, எவ்வளவு மதிப்பு என்கிற விவரம் வெளியிடப் படவில்லை. அதேபோன்று கும்பாபிஷேகத்திற்காக வசூல் செய்யப்பட்ட பொருட்கள், நன்கொடை விவரமும் வெளியிடப்படவே இல்லை. கோவில் புனரமைப்புப் பணியைக் காரணம் காட்டி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மணல் வெட்டி அள்ளப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறது. இந்த மணல் கொள்ளை விவகாரம் காரணமாக முந்தைய இ.ஓ. முருகன் கும்பாபிஷேகத்திற்கு முன்பே இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

செந்தில் பட்டரின் இச்செயலுக்கு இதற்குமுன் பணியிலிருந்த கணபதி உள்ளிட்ட செயல் அலுவலர்கள் பலரும் உடந்தையாக இருந்திருக்கின்றனர். 

முதல் இருவர் பிடிபட்ட நிலையில், செந்தில் பட்டர் மற்றும் நடன சபாபதி தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து ஆலய சொத்து மீட்புக்குழு அமைப்பின் நிர்வாகியான சங்கரசுப்பிரமணியனைச் சந்தித்தபோது, "இந்த ஆலயத்திற்கு டோனர்கள் அதிகம். யார் நன்கொடை செய்யவேண்டும் என்ற வரன்முறையே இல்லை. இது முறைகேட்டிற்கு வாய்ப்பாகிவிட்டது. கும்பாபிஷேக வரவு -செலவுகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டது செந்தில் பட்டர்தான். ஒரு உபயதாரர் 20 லட்சத்திற்கு ஆலயத் திருப்பணிகள் செய்யவேண்டும் என்று நிதி கொடுக்கிறபோது அந்தப் பணி பட்டர் சொல்பவர்களிடம்தான் தரப்படும். இதற்கு இ.ஓ.வும் உடந்தை. யாகசாலை பூஜைக்காக டோனர்கள் பல வெள்ளிக்குடங்களை உபயமாகக் கொடுத்தி ருக்கிறார்கள். அவை என்னவானது என்று தெரியவில்லை. எங்கள் அமைப்பின் மூலம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். நீதிமன்றமும் கண்டிச்சிருக்கு. தவிர இப்போது திருடுபோனது என்று புகார் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு பல லட்சமாகும். ஆனால் புகாரில் அவை குறைத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. விசாரணைக் கமிஷன் மூலம் முறையான விசாரணை நடத்தினால் பல விஷயங்கள் அம்பலமாகும்''’என்றார் கனத்த குரலில்.

காணிக்கைப் பொருட்கள் திருட்டு விவகாரத்தில் கோயில் தலைகள், கும்பாபிஷேகம் தொடர்புடைய புள்ளிகள் அம்பலமாகிவிடுமென ஆலய நிர்வாகத் தரப்பில் ஒத்துழைப்பதில்லை. இதனால் செந்தில் பட்டரைத் தேடுவதில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதோடு, வழக்கும் அடுத்தகட்டத்துக்குப் போகாமல் தேங்கி நிற்கிறதாம்.

சிவன் சொத்து குல நாசம்!