மிழக சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு செக் வைத்திருக்கிறது மத்திய மோடி அரசு. இதனால் சிலரின் கனவுகள் கலைந்திருப்பதால், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியும் பரபரப்பும் உருவாகியிருக்கிறது.  

Advertisment

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அவர்களின் சர்வீஸ் காலத்தைப் பொறுத்து பல்வேறு படி நிலைகளில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தலைமைச் செயலாளர் பதவி உயர்வு என்பதில் 1994ஆம் ஆண்டில் தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பணியில் சேர்ந்த அமுதா, அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காக்கர்லா உஷா, அபூர்வா ஆகிய 5 அதி காரி களுக்கும் கடந்த 2024 டிசம்பரில் தலை மைச் செயலாளர் களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு விட் டது. இதில், ரிட்டயர்டு ஆகிவிட்ட அபூர்வா வைத் தவிர மற்ற 4 பேரும் கூடுதல் தலை மைச் செயலாளர்களாக தற்போது பணியில் இருந்து வருகின்றனர். 

Advertisment

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை தலைமைச்செயலா ளர் அந்தஸ்தில் பதவி உயர்த்த வேண்டு மானால், அந்த அதிகாரி 30 ஆண்டுகள் சர்வீஸை நிறைவு செய்திருக்க வேண்டும். அந்த வகையில், 1995-ஆம் ஆண்டில்   ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பணியில் சேர்ந்தவர்கள் 30 ஆண்டு கால சர்வீஸை நிறைவு செய்திருப்பதால் அவர்களுக்கு தற்போது தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.        

அதாவது, 1995-ல் தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக சித்திக், ஜெயா, செந்தில்குமார், சந்தியாவேணுகோபால் சர்மா, உதயச்சந்திரன், ஹிதேஸ்குமார் மக்வானா, சந்திரமோகன் ஆகிய 7 பேர் நியமிக்கப்பட்டனர். தற்போது முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் (பிரின்சிபில் செக்ரட்டரி) இருக்கும் இவர்கள், தங்களின் 30 ஆண்டு கால சர்வீஸை கடந்த நவம்பர் மாதம் நிறைவு செய்திருப்பதால், இவர்களுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தை தற்போது வழங்க வேண்டும். அப்படி பதவி உயர்வு வழங்கப்படும் போது, கூடுதல் தலைமைச் செயலாளர்கள் என்கிற அந்தஸ்தில் அவர்களின் பதவிகள் அடையாளப்படுத்தப்படும். அந்த வகையில், அவர்களின் பதவி உயர்வுக்கான நடவடிக்கைகளை சீரியஸாக எடுத்தார் தற்போதைய தலைமைச்செயலாளர் முருகானந்தம். இதற்காக, மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறைக்கு கடந்த நவம்பர் மாதம் 10-ந்தேதி விரிவான கடிதத்தையும் தமிழக அரசு சார்பில் எழுதியிருக்கிறார். 

Advertisment

அந்த கடிதத்தில், "04-11-2025ஆம் தேதியில் தமிழக தலைமைச் செய லாளர் கேடரில் 18 பேர் இருக்கின்ற னர் (கேடர் போஸ்ட்டில் 5 + எக்ஸ் கேடர் போஸ்டில் 13=18).  இவர்களில் விக்ரம் கபூர், டாக்டர் அதுல்ய மிஸ்ரா, டாக்டர் கோபால், டாக்டர் சந்தீப் சக்சேனா, டாக்டர் சாய்குமார், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகிய 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 2025 டிசம்பர் மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் ஓய்வுபெறுகிறார்கள். 

இதனால் காலியாகும் 6 இடங்களை பூர்த்தி செய்யும் வகையில், 1995ஆம் ஆண்டு பிரிவு (பேட்ஜ்) தமிழக ஐ..ஏ.எஸ். அதிகாரிகளான சித்திக், ஜெயா, செந்தில்குமார், சந்தியா வேணுகோபால்சர்மா, உதயச்சந்திரன், ஹித்தேஸ்குமார் மக்வானா, சந்திரமோகன் உள்ளிட்ட 7 பேரும் தலைமைச் செயலாளர் கேடருக்குத் தகுதி பெற்றவர்கள். இவர்களில் ஹித்தேஸ் குமார் மக்வானா, தற்போது மத்திய அரசு பணியில் இருந்து வருவதால், மற்ற 6 அதிகாரிகளுக்கும் தலைமைச்செயலாளர் கேடர் பதவி உயர்வு வழங்க அனுமதி வேண்டும்'’என்று  அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முருகானந்தம். 

தலைமைச்செயலாளர் முருகானந்தம் எழுதிய இந்த கடிதத்திற்கு மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அண்டர் செக்ரட்டரி ராஜேஷ்குமார் யாதவ் ஐ.ஏ.எஸ்., கடந்த நவம்பர் மாதம் 21-ந் தேதி பதில் அனுப்பியிருக்கிறார். 

மத்திய அரசு எழுதியுள்ள அந்த பதில் கடிதத்தில்... "உயர்மட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டிய சீனியர்              டியூட்டி பதவிகள் குறித்து கடந்த 2022-ஆம் ஆண்டு சட்டவிதிகள் உருவாக்கப்பட்டு அரசாணை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த அரசாணையின் சட்டவிதி 12(7)-ன்படி, தமிழ்நாட்டில் 7 கேடர் பதவிகளுக்கும், அதற்கு இணையான 7 எக்ஸ் கேடர் பதவிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அதனை மட்டுமே பயன்படுத்த முடியும். 

ஆனால், தற்போது தமிழ்நாடு அரசு, 7 கேடர் பதவிகளில் 5-ஐ மட்டுமே பயன்படுத்துகிறது. இரண்டு இடங்கள் காலியாக இருக்கின்றன. அதேசமயம், அனுமதிக்கப்பட்ட 7 எக்ஸ் கேடர் பதவிகளுக்கு பதிலாக 13 எக்ஸ் கேடர் பதவிகளைப் பயன்படுத்துகிறது. அந்த வகையில், எக்ஸ் கேடர் பதவிகளில் கூடுதலாக 6 அதிகாரிகளை வைத்திருக்கிறீர்கள். 

இது, மத்திய அரசின் சட்ட விதிகளை மீறுவதாக இருக்கிறது. இந்த கூடுதலான எக்ஸ் கேடர் பதவிகளை பயன்படுத்த மத்திய அரசின் அனுமதியைப் பெறவில்லை. இப்படிப்பட்ட சூழலில், தற்போது 6 கேடர் பதவிகளுக்கு அதிகாரிகளை உயர்மட்ட ஊதியத்தில் பதவி உயர்த்த அனுமதி கேட்டுள்ளீர்கள். இது மேற்கண்ட சட்டவிதிகளின் படி சாத்தியமில்லை. அனுமதி வழங்க முடியாது'”என்று சொல்லி, உதயச் சந்திரன் உள்ளிட்ட 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தலைமைச் செய லாளர்களாக பதவி உயர்த்தும் தமிழக அரசின் கோரிக்கையை மறுத்து விட்டது மத்திய அரசு. 

இந்த விவகாரம்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. இது குறித்து நாம் விசாரித்தபோது, "சட்டமன்றத் தேர்தலுக்குள் தலைமைச் செயலாள ராக பதவி உயர்வு பெற்று, தேர்தலுக் குப் பிறகு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமையும் பட்சத்தில் தலைமைச் செயலாளராக அமரவேண்டும் என திட்டமிட்டிருந்தார் உதயச்சந்திரன். ஆனால், மத்திய அரசின் மேற்கண்ட அனுமதி மறுப்பால், உதயச் சந்திரனின் விருப்பத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது''’என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.  

-இளையர்