தமிழ் வளர்க்க சங்கம் உரு வாக்கப்பட்டது என்பது வரலாறு. மதுரையில் உருவான தமிழ்ச்சங்கம் தான் தொன்மையானது. தலைச் சங்கம் எனப்படும் முதற்
சங்கத்துக்கு முன்பே தென்மதுரைத் தமிழ்ச் சங்கம், பொதிய மலைத் தமிழ்ச்சங்கம், மகேந் திரமலை தமிழ்ச்சங்கம் போன்றவை இருந்துள்ளன. அதேபோல் சைவ மதத்தை பரப்ப சங்கங்கள் உருவாகி, தமிழ் இலக்கியங்களை வளர்த்தன. அதன்பின் திராவிட இயக்கங்களின் வளர்ச்சியால் தமிழ்நாடெங்கும் வால்மீகிக்குப் பதில் கம்பரை பரப்ப, கம்பன் கழகங்கள் உருவாக்கப் பட்டன. பெரியார் தலைமையை ஏற்றவர்கள், முத்தமிழ் மன்றம், தமிழ் மன்றம் என்கிற பெயரில் தமிழ்நாடு முழுவதும் கலை இலக்கியங்களை வளர்த்தனர்.
புதுவைத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கழகம், புதுவை எழுத்தாளர் கழகம், மக்கள் கலைக்கழகம் என நூற்றுக்கும் அதிகமான அமைப்புகள் கலை இலக்கியத்தை வளர்த்தன. இப்படி தமிழ்நாடு, புதுவை மட்டுமல்லாமல் கொல்கத்தா தமிழ் மன்றம், டெல்லி தமிழ்ச்சங்கம், மலேசியா தமிழ்ச்சங்கம், யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம் எனக் கடல் கடந்தும் தமிழ்ச்சங்கங்கள் செயல்படத் தொடங்கின. முற்போக்கு இயக்கங்கள், கலை இலக்கிய பெருமன்றம், த.மு.எ.க.ச. பெயரில் கலை, இலக்கிய இரவுகளை நடத்தினர். அப்படி இயங்கிய தமிழ்நாட்டில் இன்று இலக்கிய அமைப்புகளின் பணிகள் பெருமளவு குறைந்துள்ளன எனக் கவலைப்படுகிறார்கள் இலக்கியவாதிகள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஓய்வுபெற்ற ஆசிரியர் கொத்தமங்கலம் ஜீவானந்தம், "நான் பள்ளியில் படிக்கிற காலத்தில் எங்கள் கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு பகுதியில் நடக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளைப் பார்த்து நம்மளும் இதுபோன்ற மேடைகளில் ஏற வேண்டு மென்ற ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வத்தில் கவிதைகள் எழுதினேன். கலை இலக்கிய பெருமன் றம் மேடையேறும் வாய்ப்பைக் கொடுத்தது. பிறகு கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பைந்தமிழ் பாசறை என்ற இலக்கிய அமைப்பு உருவானது, அதில் நானும் ஓர் உறுப்பினர். ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளூர் படைப்பாளிகளை வெளிக் கொண்டு வந்தோம். ஆனால் அந்த பைந்தமிழ் பாசறையை தொடர்ந்து நடத்த முடிய வில்லை. காரணம், காட்சி ஊடகம். பேச்சாளர்கள் பேசுவதை நீண்ட நேரம் காத்திருந்து கேட்க மக்கள் தயாராக இல்லை'' என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/19/ilagiyam1-2026-01-19-16-49-30.jpg)
கவிஞர் முத்துநிலவனிடம் பேசியபோது, "முன்பு ஒவ்வொரு கிராமத்திலும் கலை இலக்கிய நிகழ்வுகள் நடக்கும், அதில் இளம் புதிய படைப்பாளிகள் மேடையேறுவார்கள். அதிலிருந்து வளர்ந்து பெரிய படைப்பாளிகளாக, கலைஞர் களாக உருவாகியுள்ள னர். தற்போது அந்த நிகழ்வுகள் குறைந்து போனது வேதனை தான். அதற்கு கார ணம் சமூகவலைத் தளங்களால் கேட்டல், படித்தல் குறைந்து, பார்த்தலை மக்கள் அதிகம் விரும்புகிறார் கள். கந்தர்வன் நினைவு நிகழ்ச்சிகள் கூட சில ஆண்டுகள் தேங்கி இப்போது நடத்துகிறோம். இந்த நிலையிலிருந்து மீண்டு, கிராமங்கள் நோக்கி கலைப்பயணங்கள் தொடங்க வேண்டுமென்ற ஆர்வம் எங்களிடமுள்ளது. மேலும், கிராமியக் கலைகள் இரவு முழுவதும் நடத்த அனுமதி கிடைப்பதில்லை. அதனால் கிராமியக் கலைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு முழு இரவும் கிராமியக்கலை நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்று த.மு.எ.க.ச. மூலம் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாடு முழுவதும் 200 கலை இரவுகளை நடத்த த.மு. எ.க.ச. திட்டமிட்டுள்ளது" என்றார்.
த.மு.எ.க.ச. மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஜீவி, "வலது சாரிகளின் உள்நுழைவு, முன்பு நடத்தப்பட்ட கலை, பண்பாட்டு நிகழ்வுகளை தடுத்துவிட்டது. புத்தக வாசிப்புகளும், விற்பனையும்கூட மங்கி வருகிறது. பிரபலமான எழுத்தாளர்களின் புத்தகங்கள் மட்டும் கூடுதல் பதிப்புகள் நடக்கிறது. ஆனால் சாதாரண எழுத்தாளர்களின் படைப்பு களை அச்சாக்கம் செய்யவே பொருளாதாரம் இடிக்கிறது. மேலும், திரைக்கலைஞர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற கலைஞர் களுக்கோ, படைப்பாளர்களுக்கோ கொடுப்ப தில்லை. நானே வட்டார அளவில் பல நூறு மேடைகளில் பேசியிருக்கிறேன், கவிதைகள் வாசித்திருக்கிறேன். ஆனால் இப்போது அதுபோன்ற வாய்ப்புகள் கிட்டவில்லை. மேலும், கொரோனாவுக்கு பிறகு நேரடிக் கூட்டங்கள் குறைந்து காணொலிக் கூட்டங்களாக நடத்தப்படுகிறது. வட்டார இலக்கிய நிகழ்வுகள் குறைகிறது. இதன்மீது அரசும் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 27 ஆண்டு காலமாக வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் நடத்திவந்தவரும், நம்மிடம் உரையாடியபின் கடந்த ஜனவரி 12ஆம் தேதி மறைந்த அம்மன்றத் தின் செயலாளர் பிரகாசம் கூறும்போது, "சமூகத் தில் பரவலாக அறியப்பட்ட இலக்கியவாதிகள் கூட்டங்களுக்கு வருவதற்கு ஆயிரங்களிலிருந்து லட்சங்கள் வரை கட்டணம் கேட்கிறார்கள். முன்பெல்லாம் அப்படியில்லை. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது இருமுறை வாணியம்பாடி முத்தமிழ்மன்ற நிகழ்ச்சிக்கு வந்தார். அவர் ஒரு ரூபாய்கூட வாங்கவில்லை. அதுபோல் கவிக்கோ.அப்துல்ரகுமான் உட்பட பலரையும் சொல்லமுடியும். இப்போது அப்படியே தலைகீழ். பலரும் முன்கூட்டியே என் கட்டணம் இவ்வளவு எனக் கேட்கிறார்கள். தங்களை வைத்து இலக்கிய அமைப்புகள் பணம் சம்பாதிப்பதாக நினைக்கிறார்கள். இலக்கிய நிகழ்வுகளுக்காக பொருளாதாரத்தை இழந்தவர்கள்தான் அதிகம். அதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் நிகழ்ச்சியை நடத்தமுடியாமல் கைவிட்ட அமைப்புகளே அதிகம்'' என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/19/ilagiyam2-2026-01-19-16-49-40.jpg)
எழுத்தாளர் யாழன்ஆதியிடம் பேசியபோது, "ஒரு காலத்தில் தமிழகம் தன்னுடைய வீதிகளை, முச்சந்திகளை, பரந்துவிரிந்த திடல்களை பல்கலைக்கழகங்களாக வைத்திருந்தது. பேரறிஞர் கள், தமிழாய்ந்தவர்கள், திராவிடச் சிந்தனையாளர் கள், பகுத்தறிவை பேசக் கூடியவர்கள் அனைவரும் எளிமையாக ஒரு பேருந்திலேறி அந்த ஊருக்கு வந்து, மிகச்சிறந்த உரையை ஆற்றி, அந்த மக்களை அறிவின் திசை பக்கம் திருப்பி விடுவதை செய்துகொண்டிருந்தனர். பல இலக்கிய அமைப்புகள், கம்பன் சார்ந்து அல்லது சங்க இலக்கியங்கள் சார்ந்து அல்லது நவீன இலக்கியங்கள் சார்ந்து தொடர்ந்து தங்களுடைய நிகழ்வுகளை நடத்தி ஒரு பண்பாட்டு நடவடிக்கையை இச்சமூகத்தில் செய்து கொண்டிருந்தன. இதனால் அப்போது வாசிக்கிற மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. காலம் செல்லச்செல்ல உலகமயமாக்கல், பொருளாதாரத் தேவை, வாழ்வியல் முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் நுகர்வு கலாச்சாரத்திற்கு மக்கள் வந்தனர். அதன்பின்பு தொழில்நுட்ப வளர்ச்சி, வேகமான சமூக ஊடகங்கள், காணொலிக் காட்சிகள் மக்களை திசைமாற்றிப் போட்டன. இதனால் இலக்கிய நிகழ்வுகளுக்கு வரக்கூடிய பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துபோனது.
இந்த கலை - இலக்கியக் கூடுகைகள், பண்பாட்டு ரீதியான பல மாற்றங்களை செய்துகொண்டிருந்த காலத்தில் தமிழ் மக்கள் மிகுந்த இலக் கியச் செறிவுடையவர் களாக இருந்தார்கள். ஆனால் இப்போது எல்லோரும் தலையை கீழே போட்டுக்கொண்டு கைப்பேசியை தேய்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது நமக்குள்ள மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் இத்தகைய பண்பாட்டு ரீதியான பாடங்களை நடத்திக்கொண் டிருந்த இலக்கிய அமைப்புகள் தங்களுடைய பணியை செய்ய முடியாமல் போவதுதான். அது மட்டுமல்ல, அவர்களுக்கு தரப்படக்கூடிய நன்கொடைகள் போதுமான அளவிற்கு தரப்படுவதில்லை. இலக்கியக் கூட்டங்களுக்கு யார் வருகிறார்களென நினைக்கிறார்கள். ஆகவே மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சிகளி னூடே இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இலக்கிய அமைப்புகள் தொடர்ந்து இயங்கினால் மட்டுமே நாம் ஒரு பண்பாட்டு உத்வேகத்தை அடையமுடியும். அது சமூகத்துக்கு மிகவும் அவசியமாகிறது. இப்போது இருக்கக்கூடிய அரசு, மொழி மீது அக்கறை கொண்டதாக, வாசிப் பின் மீதும் அக்கறை கொண்டதாக இருக்கக்கூடிய காரணத்தால், இலக்கிய ஆர்வலர்களை உருவாக்கு வதும், அதன்மூலம் வெறுப்பு என்ற தன்மையி லிருந்து அன்பு என்ற ஒற்றுமைக்கு அனைவரையும் ஒன்று சேர்ப்பதும் அவசியம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகச்சிறப்பாக நெடுங்காலமாக பணியாற்றிக்கொண்டிருக்கக்கூடிய இலக்கிய அமைப்புகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு நிதி நல்கை செய்து, அந்த அமைப்புகள் தொடர்ந்து இயங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். ஒரு பள்ளியில் காலை உணவு, மதிய சத்துணவு போட்டு குழந்தைகளை படிக்க வைப்பதினால் எத்தகைய பெருமாற்றம் நிகழ்கிறதோ, அத்தகைய ஒரு மாற்றத்தை சமூக அளவில் நம்மால் கொண்டுவர முடியும். ஆகவே அரசு இத்தகைய இலக்கிய அமைப்புகளுக்கு உதவி, பாதுகாக்க முன்வர வேண்டும்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2026/01/19/ilagiyam-2026-01-19-16-49-16.jpg)