பா.ம.க. யாருக்குச் சொந்தம் என்கிற போட்டியில் பா.ம.க.வை இரண்டாக உடைத்துள்ளார்கள் அக்கட்சியின் நிறு வனர் ராமதாஸும் அவரது மகன் அன்புமணியும். ஆகஸ்ட் 17-ஆம் தேதி பா.ம.க. சிறப்பு பொதுக்குழு என ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்ட சில நிமிடங்களில் பா.ம.க. பொதுக்குழு என அன்புமணி அறிவித்து மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடத்திமுடித்தார். அதே நேரத்தில் ராமதாஸ் நடத்தும் சிறப்பு பொதுக்குழு பிசுபிசுக்க வேண்டுமென அதற்கான ஏற்பாடுகளை அன்புமணி தரப்பு மறைமுகமாக செய்யத்துவங்கியது.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி ராமதாஸின் மனைவியும், அன்புமணியின் அம்மாவுமான சரஸ்வதியம்மாவுக்கு 77-வது பிறந்தநாள். அன்றைய இரவு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரச்சாரப் பயணத்தை முடித்துக்கொண்டு நேரடியாக தைலாபுரம் சென்றார் அன்புமணி. ஏற்கனவே அவரது குடும்பத்தார் அங்கேவந்து காத்திருந்தனர். குடும்பத்தினருடன் பிறந்தநாள் கேக் வெட்டிய சரஸ்வதியம்மாள், தனது மகன் அன்புமணி, மகள்களுக்கு கேக் ஊட்டினார்.. குடும்பமே மகிழ்ச்சியுடன் இருந்தபோதும் ராமதாஸ் அமைதியாக, அதேநேரத்தில் கோபமாக மனைவி அருகில் நின்றிருந்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/19/pmk-meet1-2025-08-19-12-08-55.jpg)
அதற்குக் காரணம், ராமதாஸுக்கு தற்போது தனி உதவியாளராக இருக்கும் சாமிநாதன், ராமதாஸின் தனிப்பட்ட வாழ்க்கையை அன்புமணி டீம் சோசியல்மீடியாவில் மோசமாகக் கொச்சைப்படுத்தி எழுதி ட்ரோல் செய்வதை ராமதாஸிடம் கூறியுள்ளார். சிலர் சாமிநாதனை நேரடியாக மிரட்டிய தாக ராமதாஸிடம் சொன்னதால் அவர் கோபமாகி டி.ஜி.பி.க்கு புகார் தரச் சொல்லியுள்ளார். இதனால் தனது மனைவியின் பிறந்தநாளுக்கு வந்த மகன், மருமகளிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அருகில் நின்றிருந்த மகனை ஏறிட்டும் பார்க்கவில்லையாம். சௌமியா மட்டும் தனது மாமனாரிடம், அப்பா எனச்சொல்லி பேச முயன்றபோது, அவர் அங்கிருந்து நகர்ந்து அறைக்குப் போய்விட்டார் என்கிறார்கள். இரவு விருந்து சாப்பிட்டுவிட்டு அன்புமணி குடும்பத்தினர் புறப்பட்டுள்ளனர். குடும்பத்தோடு பிறந்தநாள் கொண் டாடிய போட்டோக்களில் சிலவற்றை மட்டும் அன்புமணி தரப்பு சோசியல் மீடியாவில் பதிவிட்டதும் இரண்டு அணிகளும் பரபரப்பானது. அப்பா -மகன் சமாதானமாகிட்டாங்க, பொதுக் குழு ரத்தாகப் போகுது என அன்புமணி டீம் பரப்பியது. பொதுக்குழு கூட்டத்துக்கான வேலையில் தீவிரமாக இருந்த ராமதாஸ் அணியினர் அதிர்ச்சி யடைந்து, என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பினர். இது ராமதாஸ் கவனத்துக்குச் சென்றதும், திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் என அறிவித்தார்.
ஆகஸ்ட் 17-ஆம் தேதி புதுவையை அடுத்த பட்டானூரில் சங்கமித்ரா மண்டபத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இதில் 4500 பேர் பங்கேற்றனர். அதில் மூன்றாயிரம் பேர் பொதுக்குழு உறுப்பினர்களாம். கட்சியின் கௌரவத்தலைவர் மணி தீர்மானங்களை வாசித் தார், கட்சியின் நிறுவனரான ராமதாஸ் இனி கட்சித்தலைவராக செயல்படுவார், வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என் பதை முடிவெடுக்கும் அதிகாரம் ராமதாஸுக்கே, கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவித இடஒதுக்கீடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு, பூரண மதுவிலக்கு உட்பட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ராமதாஸ் அமைத்த கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தந்த அறிக்கை மேடையில் வாசிக்கப்பட்டது. அதில், "அன்புமணி கட்சியை உடைக்கப்பார்த்தார், மக்கள் தொலைக்காட்சியை அபகரித்துவிட்டார், பசுமைத் தாயகம் அமைப்பை கைப்பற்றிக்கொண்டார், அனுமதி பெறாமல் பொதுக்குழு நடத்தியது, ஊர் வலம் போவது, சமூக ஊடகங்களில் ராமதாஸ்மீது அவதூறு பரப்புவது' என 16 குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டது. இதனால் அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/19/pmk-meet2-2025-08-19-12-09-10.jpg)
இறுதியாக மருத்துவர் ராமதாஸ் பேசும்போது, "எனது நண்பர் மறைந்த கலைஞர் தந்த 20% இட ஒதுக்கீட்டால் 115 சாதிகள் பயன்பெறுகிறார்கள். நாங்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த கேட்பதற்கு காரணமே, சாதி மக்களுக்கு ஏற்ப சரியாக இட ஒதுக்கீடு கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான். எங்கள் சமுதாயத்தின் சிறிய பிள்ளைகள்கூட 10.5 சதவிகித இட ஒதுக்கீடு எப்போது கிடைக்கும், மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது நடக்கும் எனக் கேட்கிறார்கள், அதனை முதலமைச்சர் தட்டிக்கழிக்கிறார். இதற்காக எங்களது போராட்டம் தொடரும். தொண்டர்கள் விருப்பப்படி சிறப்பாக கூட்டணி அமைப்பேன்'' என்றவர், ஒருமுறைகூட அன்புமணி பெயரை எதற்காகவும் கூறவில்லை.
ராமதாஸ் நடத்திய பொதுக்குழுவுக்கு இவ்வளவு பேர் வருவார்கள் என அன்புமணியும் அவரது தரப்பும் எதிர்பார்க்கவில்லை... எனவே அதிர்ச்சியாகிவிட்டார்கள். உடனே வழக்கறிஞர் பாலு மூலமாக, "இந்த பொதுக்குழு செல்லாது' என சொல்லவைத்தார் அன்புமணி. பா.ம.க. மேடையில் ராமதாஸின் வலதுபுறம் அன்புமணி அமருவார். தற்போது அந்த இடத்தில் இரண்டாவது முறையாக ராமதாஸின் மூத்தமகள் காந்திமதி அமரவைக்கப்படுகிறார். அவருக்கு கட்சியினர் வீரவாள் பரிசு வழங்கினார்கள். அன்புமணி மீது நடவடிக்கையென கட்சியை விட்டு நீக்கிவிட்டு, உங்கள் மகள் காந்திமதியை கட்சியின் தலைவராக்குங்கள் என ராமதாஸுக்கு சிலர் அழுத்தம் தந்துவருகின்றனர். என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதே இப்போது கேள்வியாக உள்ளது.
-தமிழ்குரு
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/19/pmk-meet-2025-08-19-12-08-41.jpg)