"விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமராஜின் செயல்பாடு சரியில்ல. சிவகாசில இருந்து விருதுநகருக்கு 100 தடவையாச்சும் அலைஞ்சிருப்பேன். நான் கொடுத்த புகார் மேல சரியான நடவடிக்கை எடுக்கல''’என்று விரக்தியுடன் பேசினார் சுரேஷ்.

Advertisment

என்ன விவகாரம் இது?

2019-2024-ல் விமல்ராஜ் என்பவர் சிவகாசியில் உள்ள கோல்டன் லோட்டஸ் பிரிண்டர்ஸில் மேனேஜராகப் பணிபுரிந்தபோது ரூ.1 கோடியே 14 லட்ச ரூபாய் கையாடல் செய்திருக்கிறார். இதுசம்பந்தமாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அந்நிறுவனத்தின் உரிமையாளர் உமாதேவி புகாரளித்தார். அந்தப் புகாரின் பேரில்  விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர்  விசாரணை நடத்தியதில், விமல்ராஜ் மீது மோசடி வழக்கு பதிவாகி, கைது செய்யப்பட்டார். 90 நாட்கள் விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளார். 

தான் பணியாற்றிய நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து, அதன் உரிமையாளருக்குத் தெரியாமல்  தனது   பெயரிலுள்ள நான்கு வங்கிக் கணக்குகளுக்கு பணப்பரி                   வர்த்தனை  செய்துகொண்ட  விமல்ராஜ், தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து 40-க்கும் மேற்பட்டோரின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பியதோடு, தன் மனைவி சினேகப்ரியா, தந்தை கிருபாகரன், மைத்துனர் அமித் ஆகியோருக்கும் லட்சங்களில் பணம் அனுப்பியிருக்கிறார். 

இவ்வழக்கினை விசாரித்த ஆய்வாளர் ஜெயமணி மற்றும் சார்பு ஆய்வாளர் லதாகுமாரி ஆகியோர் மாற்றலாகிச் சென்ற நிலையில், அங்கு ஆய்வாளராக வந்த  ராமராஜ், பிணையில் வெளிவந்த விமல்ராஜுக்கு சாதகமாகவும், வழக்கிற்காக அலைந்த உமாதேவியின் கணவர் சுரேஷுக்கு எதிராகவும் நடந்துகொண்டார். கையாடல் செய்ததற்கான ஆதாரங்கள் இருந்தும், வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்கவில்லை. 

Advertisment

இதன் பின்னணியில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகப் பிரிவு ஒன்றில் சூப்பிரண்டாக உள்ள முத்துராஜ்குமார் இருக்கிறார். இந்த முத்துராஜ்குமாரும் புகாருக்கு ஆளான விமல்ராஜும் நெருங்கிய நண்பர்கள். அதனால்,  ஆய்வாளர் ராமராஜ் மீது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனிடம் உமாதேவி புகாரளிக்க, மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் விசாரணை மேற்கொள்ள, விமல்ராஜ் தனது வீட்டை விற்க முடியாதபடி, தமிழ்நாடு அரசு பதிவுத்துறையின் சொத்து தொடர்பான வில்லங்கச் சான்றில் பதிவுக்குத் தடை (தீர்வளிப்பு) என்று ஏறியது. ஆனாலும், சிவகாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் விமல்ராஜ்,  ஜஸ்டின் பிரபாகரன் என்பவருக்கு வீட்டினை விற்று, முறைகேடாகப் பதிவு செய்ய முடிந்தது.  இதுகுறித்து ஆய்வாளர் ராமராஜ், சிவகாசி சார்பதிவாளர் செந்தில்ராஜ்குமாரிடமோ,   விமல்ராஜிடமோ விசாரணை எதுவும் நடத்தவில்லை. அதேநேரத்தில், அந்த வில்லங்கச் சான்றில் பதிவுக்குத் தடை என்ற மொத்தக் குறிப்பும் தற்போது காணப்படவில்லை. அது நீக்கப்பட்டதற்கான விவரமும் இல்லை. இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார் உமாதேவி.

இது குறித்து விமல்ராஜை தொடர்புகொண்டோம். "எனக்குத் தெரியலீங்க, எதுன்னாலும் அட்வ கேட்கிட்ட பேசிக்கங்க... போலீஸ் ஸ்டேஷன்ல விபரம் கேட்டுக்கங்க''’என எரிச்சலுடன் பேசி லைனைத் துண்டித்தார். 

“ஆரம்பத்துல டி.சி.பி.ல இருந்த அதிகாரிங்க நல்லபடியா செயல் பட்டாங்க. ராமராஜ் இன்ஸ்பெக்டரா வந்தபிறகு நெலம மாறிருச்சு. விமல்ராஜோட வீட்ட முடக்கி,  பணத்த பறிமுதல் செய்து, நீங்க இழந்த தொகைய  உங்களுக்கு கிடைக்கிற மாதிரி பண்ணிடறேன். எனக்கு 15 லட்ச ரூபாய் கொடுத்துருங்கன்னு என்கிட்ட பேரம் பேசினார் ராமராஜ். அவ்வளவு பணம் தர முடியாதுன்னு சொன்னதுனால. தன்னோட ஆதாயத்துக்காக விமல்ராஜ் பக்கம்  சேர்ந்துட்டாரு''’என்று சுரேஷ் குமுறிய நிலையில்... ஆய்வாளர் ராமராஜை தொடர்புகொண்டோம். 

Advertisment

"சுரேஷ் என்கிட்ட, எப்படியாவது பணத்த வாங்கித் தாங்கன்னு சொன்னாரு. எதிரி கையாடல் பண்ணுன பணத்த கொடுத்தாத்தானே வாங்கமுடியும். நான் பேரம் பேசினேன்னு சுரேஷ் நிரூபிச்சிட்டா, என்னோட வேலையை ரிசைன்பண்ணத் தயாரா இருக்கேன். சுரேஷ் என் மேல எத்தனையோ பெட்டிஷன் கொடுத்துட்டாரு. இத்தனைக்கும், விமல்ராஜ் வீட்ட பத்திரம் பதியக்கூடாதுன்னு சட்டத்தை மீறி ஒரு லெட்டர் வேற கொடுத்தேன். ஹைகோர்ட் வரைக்கும் என் பேரை குறிப்பிட்டிருக்காங்க. நானும் ரிப்ளை ஃபைல் பண்ணிருக்கேன்''” என்றார். .

முத்துராஜ்குமாரிடம் பேசினோம்... "விமல்ராஜும் நானும் சர்ச்ல வச்சு பார்த்துக்கு வோம். இதுல என்னை எதுக்கு லிங்க் பண்ணு றாங்க? ஒரு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கிட்ட நீங்க எனக்கு சாதகமா பண்ணுங்கன்னு எல்லாம் சொல்ல முடியாது''’என்று மறுத்தார்.  

"விமல்ராஜ் வீடு கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவில் முறைகேடு எதுவும் நடந்துள்ளதா?''’என சிவகாசி சார்பதிவாளர் செந்தில் ராஜ்குமாரிடம் கேட்டோம். "அதுல வில்லங்கம் எதுவுமே இல்ல. வில்லங்கச் சான்றில் தடை என்று குறிப்பிட்டிருந்தால் யார் நினைத்தாலும் மாற்ற முடியாது. சர்வர் எங்க கண்ட்ரோல்ல இல்ல. அகமதாபாத்ல எங்கேயோ இருக்குன்னு சொல்லுவாங்க''’என்று ஒரே போடாகப் போட்டார். 

உமாதேவியும், சுரேஷும் "விமல்ராஜ் பெரிய கேடி. எங்க கம்பெனில இருந்து கையாடல் பண்ணுன கோடிக்கணக்கான ரூபாய்ல, போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் சார்பதிவாளருக்கும் அவங்க கேட்ட பணத்த கொடுத்துட்டாரு. டிபார்ட்மெண்ட் குற்றவாளிக்கு சப்போர்ட் பண்ணுது. பாதிக்கப்பட்ட நாங்கதான் கோர்ட்டுக்கு அலைஞ்சுக்கிட்டிருக்கோம்''’என்றனர் பரிதாபமாக.