ரீல்ஸ் மோகத்தில், சரியாக விசாரிக்காமல் ரீல்ஸ் வெளி யிட்டதால் அவமானத்தை எதிர்கொண்ட ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவை உலுக்கியுள்ளது.
கேரளாவிலுள்ள கோழிக்கோடுக்கு அருகிலுள்ள கோவிந்த புரத்தை சேர்ந்த தீபக் என்பவர் ஜவுளி நிறுவனமொன்றில் விற்பனையாளராகப் பணியாற்றிவந்திருக்கிறார். அவர் தனது பணி நிமித்தமாக ஜனவரி 15ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, கண்ணூர் வரை பேருந்தில் சென்றிருக்கிறார். அப்போது கூட்ட நெருக்கடியில் நின்றபடி பயணிக்க, அவர் அருகே நின்றபடி பயணித்த சிம்ஜிதா முஸ்தபா என்ற பெண் மீது உரசும்படி இருந்திருக்கிறது. அவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறாரெனக் கருதிய பெண்ணோ, அவரிடம் அதுகுறித்து கண்டித்துப் பேசாமல், அதை அப்படியே ரகசியமாக செல்பி வீடியோவாக எடுத்திருக்கிறார்.
அந்த செல்பி வீடியோவை உடனே சமூக வலைத்தளத்தில் ரீல்ஸாகப் பதிவிட்டவர், தன்னிடம் இந்த நபர் அநாகரிகமாக நடந்துகொள்ளப் பார்த்ததாகவும், அதை அப்படியே வீடியோவாகப் படம் பிடித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ உடனடியாக உலகம் முழுக்க வைரலாகியிருக்கிறது. கிட்டத்தட்ட 25 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து அந்த வீடியோ வைரலாக, அதனை தீபக்கின் நண்பர்கள், உறவினர்கள் வட்டத்திலும் பார்த்து, அதுகுறித்து தீபக்கிடம் இழிவாகப் பேசியிருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த நிலையிலிருந்த தீபக், சனிக்கிழமையன்று இரவில் தூங்குவதற்காக அறைக்குள் சென்று தாழிட்டவர், மறுநாளில் கதவை திறக்காமலேயிருக்க, அவரது பெற்றோர் கதவை தட்டித் தட்டிப் பார்த்திருக்கிறார்கள். கதவை திறக்காததால், அருகிலுள்ள வீட்டில் வசிப்பவர்களை அழைத்துவந்து கதவை உடைத்து திறந்து பார்த்தபோது, தூக்கில் தொங்கியபடி இறந்திருந்தார் தீபக். அதைப் பார்த்த பெற்றோர் கதறியழுதனர்.
தீபக்கின் மரணத்துக்கு காரணமான வீடியோவில், தீபக்கின் கை, சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது எதேச்சையாக உரசுவதாகவே தெரிகிறது. அப்பெண்ணே அவரை உரசியது போலவும், அவர் விலகியதுபோலவும் தெரிந்ததால், அப்போதுவரை தீபக்கை திட்டியவர்கள், தற்போது அப்பெண்தான் இந்த மரணத்துக்கு காரணமென்று குற்றம்சாட்டுகிறார்கள். இந்நிலையில், உண்மைக்கு புறம்பாக வீடியோ வெளியிட்டதாக அப்பெண் மீது தீபக்கின் உறவினர்கள், மனித உரிமை ஆணையத்தில் புகாரளித்துள்ளனர்.
தீபக் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை என்றும், கண்ணியமானவரென்றும் அவரது நிறுவனத்தில் உடன் பணியாற்றுவோர் கூறுகிறார்கள். தன்னை அவமானப்படுத்துவது போல் வீடியோ வந்ததால் தீபக் மிகவும் மனம் நொந்திருந்ததாகவும் குறிப்பிட்டனர். அதேபோல் தீபக் மீது வடகரா காவல் நிலையத்தில் புகாரளித்திருப்பதாக அப்பெண் பொய் சொல்லியிருப்பதும் தெரியவந்தது. தற்போது அவர் கைதாகியிருக்கிறார்.
ஆக... ரீல்ஸ், வியூஸ் மோகத்தில் தீர விசாரிக்காமல் வீடியோ வெளியிட்டதில் ஒரு உயிர் பரிதாபமாகப் பலியாகியுள்ளது!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/22/kerala-2026-01-22-16-20-33.jpg)