புதுக்கோட்டை தி.மு.க மாநகரச் செயலாளராக இருந்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளரான செந்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த தையடுத்து, அந்த இடத்திற்கு எம்.எம்.அப்துல்லா ஆதரவாளரான புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளரான ராஜேஷ், தி.மு.க. மாநகரப் பொறுப் பாளராக நியமனம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த புதிய மாநகரப் பொறுப் பாளர் அறிவிப்பையடுத்து, மாநகர வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகி கள் மாநகரப் பொறுப்பாளரை ஏற்க மறுத்து மாற்றக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். சென்னை சென்று கட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர்.
அதன் பிறகும் பொறுப்பாளர் மாற்றம் செய்யப்படவில்லை என்ற நிலையில், கடந்த மாதம் மண்டலப் பொறுப்பாளர் நேரு கலந்துகொண்ட கூட்டத்திலும் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, விரைவில் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று மூத்த தலைவர் கவிதைப்பித்தன் சமாதானம் செய்து வைத்தார். ஆனால் எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.
இந்நிலையில் கடந்த ஜூலை 8, செவ் வாயன்று, புதுக்கோட்டை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பி.எல்.ஏ. 2, பி.டி.ஏ. கலந்தாய்வுக் கூட்டம் மண்டலப் பொறுப்பாளர் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
தெற்கு மாவட்டக் கூட்டத்தில் வைக்கப் பட்டிருந்த பதாகையில், தெற்கு மாவட்டத் தைச் சேர்ந்த அமைச்சர் மெய்யநாதன் படம் வைக்கப்படவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் சலசலப்பு ஏற்படுத்தினர். அமைச்சர்கள் நேருவும், மெய்யநாதனும் சமாதானம் செய்துவைத்து கூட்டத்தை நடத்தி முடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஒரு தனியார் மண்டபத்தில் நடந்த வடக்கு மாவட்ட தி.மு.க. பி.எல்.ஏ. 2 கலந்தாய்வுக் கூட்டத்திற்கு மண்டலப் பொறுப்பாளரான கே.என்.நேரு மற்றும் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் உள்பட மாவட்ட நிர்வாகிகள் வந்தபோது, மாநகரப் பொறுப்பாளருக்கு எதிராக ஏராளமானோர் திரண்டு நின்று "மாநகரப் பொறுப்பாளரை மாற்று' என்ற பதாகையோடு முழக்கமிட்டனர். அமைச்சர் நேரு உள்ளிட்ட வர்கள் வந்தபோது, எங்கள் கோரிக்கைக்கு எந்த நடவடிக்கையும் இல்லை என்ற நிர்வாகிகள், இல்லன்னா எங்களை நீக்குங்கள் எனக்கூறி வழிமறித்து நின்றனர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் இப்படி செய்யக்கூடாது, தலைமையின் கவனத்துக்கு சென்று நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறிவிட்டு நிகழ்ச்சிக்கு சென்றார். இப்படி சமாதானம் செய்வதே வழக்கமாகிவிட்டது, விரைவில் தலைமை இவ்விவகாரத்தில் தீர்வுகாண வேண்டுமென்றனர் மூத்த நிர்வாகிகள்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை, தி.மு.க. தலைமையின் உத்தரவின் பேரில், மூத்த தலைவர் கவிதைப்பித்தன் தலைமையில், மாநகரப் பொறுப்பாளர்கள் முன்னிலையில், மாநகரில் 3 பொறுப்பாளர்களை நியமனம் செய்யும்விதமாக மொத்தமுள்ள 42 வார்டு களை, 14 வார்டுக்கு ஒரு மாநகரப் பகுதிப் பொறுப்பாளரை நியமிக்கும் வண்ணம், 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தலைமைக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த அறிக்கையையடுத்து அன்று மாலையே திடீரென 42 வட்டச் செயலாளர் களையும் கட்சித்தலைமை சென்னைக்கு அழைக்க, சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
கலைஞர் அரங்கத்தில் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டை மாநகர வட்டச் செயலாளர்களை அழைத்து சந்தித் தார். புதுக்கோட்டையில் என்ன நடக்கிறது என்று விசாரித்தவர், "நான் சொல்ற வார்த்தைக்கு கட்டுப்படுவீங்களா?" என்றதும், "தலைவர் எது சொன்னாலும் கேட்கிறோம்'' என்று மொத்த வட்டச் செயலாளர்களும் கோரஸாக கூறினர். "புதுக்கோட்டை மாநகரத்தை 3 பகுதிகளாகப் பிரித்து அறிக்கை அனுப்பியிருக்காங்க.
நான் 2 பகுதியாகப் பிரித்து சில நாட் களில் அதற்கு நிர்வாகிகளை அறிவிக்கப் போறேன். அவங்க யாராயிருந்தாலும் ஏற்றுக் கொண்டு கட்சிப் பணிகளை செய்யணும். தேர்தல் நேரத்தில் இப்படி செய்யக் கூடாது'' என்று கூற, அனைத்து வட்டச் செயலாளர்களும் ஒப்புக்கொள்ள, அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு வெளியேறினார்கள்.
இதையடுத்து புதுக்கோட்டை மாநகர தி.மு.க. உட்கட்சி முட்டல் மோதல்களுக்கு சனிக்கிழமை தீர்வு ஏற்பட்டது உ.பி.க்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தி.மு.க. வினர் கூறும்போது, "மாநகரை 3 பகுதிகளாக பிரிக்க திட்டமிடப்பட்டு, ஏற்கெனவே பொறுப்பிலிருந்த ராஜேஷ் ஒரு பகுதிக்கும், செந்தில் மகன் கணேஷ் மற்றொரு பகுதிக்கும், மாநகர துணை மேயர் லியாகத்அலி இன்னொரு பகுதிக்கும் பொறுப்பாளர்களாக நியமனம் செய்து அறிவிப்பு வரலாமென்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் தலைவர் 2 பகுதிகளாகப் பிரித்துவிட்டார்.
இதில் யார் மாநகரப் பொறுப்பாளராக வர உள்ளனர் என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. அதே நேரத்தில் கட்சியே கதியென்று பல ஆண்டுகளாக உழைத்த பலரும் இந்தப் பதவிக்காக ரொம்பவே மெனக்கெட்டனர். கட்சியிலுள்ள 2, 3ஆம் கட்டத் தலைவர்கள், பெரிய செலவுகளை செய்துள்ளனர். அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. மேலும், ஒரு பொறுப்பாளருக்கு ஒரு பதவி என்று இருக்கவேண்டும்.
ஆனால் மாநகரப் பொறுப்புக்கு வரும் ஒவ்வொருவரும் ஏற்கெனவே மாவட்ட பொறுப்பிலும் உள்ளனர். ஒரு நபருக்கு இத்தனை கட்சிப் பதவிகள் தேவையா? பகிர்ந்து கொடுக்கலாமே? இதற்கும் தலைவர் தான் விரைந்து முடிவெடுக்க வேண்டும்'' என்றனர். இதுபோன்ற குறைபாடுகளை விரைந்து சரி செய்வதே கட்சிக்கு நல்லது.