ராங்கால் முதல்வர் வகுத்த தேர்தல் வியூகம்! வேலுமணி நடத்திய ரகசிய கூட்டம்! பதைபதைப்பில் எடப்பாடி!

dmk

 

""ஹலோ தலைவரே, தேர்தலை முன்னிறுத்தி தமிழக அரசியல் களம் பரபரக்க ஆரம்பித்திருக்கிறது.’’அதிலும் ஆளுங்கட்சியான தி.மு.க., "ஓரணியில் தமிழகம்' என்கிற திட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு மக்களைச் சந்திக்க ரெடியாயிடிச்சே.''’’

""உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வின் தேர்தல் பணிகளில் ஒரு கட்டமாக ’ஓரணியில் தமிழ்நாடு’ எனும் செயல் திட்டத்தை செயல் படுத்துவது  தொடர்பாக, மா.செ.க்கள் மற்றும் எம்.பி.க்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை 28ஆம் தேதி காணொலி வழியாக நடத்தினார் ஸ்டாலின். இதில் பேசிய அவர் ‘இந்தத் திட்டத்தை, உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டும் என்று நீங்கள் நினைத்து விடக்கூடாது. தமிழ்நாட் டின் மண், மொழி, மானம் காப்பதற்காக மக்களை ஓரணியில் திரட்டும் வேள்வி இது. இதில் இணைபவர்கள், தி.மு.க. வில் உறுப்பினர்களாகவும் இணைவார்கள். அந்த அளவுக்கு சாதி, மதம், இனம் பார்க்காமல் அவர்களை நீங்கள் அணுக வேண்டும். தமிழ்நாட்டுக்கு டெல்லியால் இழைக்கப் படும் அநீதிகளை அவர்களிடம் எடுத்துச் சொல்லி, ஒன்றிணைய வைக்கவேண்டும். ஜூலை 1ஆம் தேதி நான் தொடங்கி வைத்த பின், இத்திட்டத்தின் முன்னெடுப்பை மாவட்டம்தோறும் அமைச்சர்களும் மா.செ.க்களும் மாவட்ட பொறுப்பாளர்களும் தொடங்கிவைக்க வேண்டும்’என்று தேர்தலுக்காக வியூகத்தை வகுத்துக் கொடுத்திருக்கிறார்.''’’ 

""ஆமாம்பா...பொது மக்களைத் தேடி வீடு வீடாகச் சென்று மக்களை ஒருங்கிணைக்க தி.மு.க. திட்டமிட்டிருக்கிறதே?''’’

""ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், தொகுதிக்கு ஒருவர் என 234 நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலம் தொகுதி வாரியாக 68,000 வாக்குச் சாவடி முகவர்களுக்கும் பயிற்சியளிப்பது தொடங்கி, இறுதியாக ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க ஓரணியில் தமிழ்நாடு நிறைவு விழாவை நடத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு, அதற்கான செயல் திட்டங்கள் வேகமெடுத்துள்ளன. குறைந்த பட்சம் 200 இடங்களை வெல்வதை இலக்காக வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்களை வீடு தேடிச் சென்று சந்தித்து, விளக்கம் கொடுக்கும் அசைன்மெண்டையும் உடன்பிறப்பு களுக்குக் கொடுத்திருக்கிறார். தேர்தலுக்காக அவர்  புதிய, புதிய செயல் திட்டங்களை  வடிவமைத்து வருகிறார்.  அவரது நோக்கத்தைப் புரிந்துகொண்டு அமைச்சர்களும் மா.செ.க்களும் செயல்பட்டால், தி.மு.க.வின் நோக்கமும் இலட்சியமும் நிறைவேறும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.''’’ 

""உதயநிதியின் தேர்தல் வியூக அமைப்பாள ரான சுனில் பற்றி பல்வேறு தகவல்கள் வலம்வருகிறதே?''’’

""தி.மு.க.வுக்கு 2015 முதல் 2019 வரை தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர் சுனில். பின்னர் எடப்பாடியின் மகன் மிதுனுக்கு நெருக்கமாகி, கடந்த தேர்தலில் எடப்பாடிக்காக மட்டும் வேலை பார்த்தார். இதற்கிடையே, காங்கிரசில் இணைந்து, அக்கட்சியில் பொறுப்பும் வாங்கிக்கொண்டார். தமிழக பா.ஜ.க.வின் மாஜி தலைவர் நட்பும் இவருக்கு கிடைக்க, அவர்களின் நட்பு இறுக்க மானது. இந்த சூழலில், தற்போது 2026 தேர்தலை மையப்படுத்தி தி.மு.க.வின் தேர்தல் வியூக வகுப் பாளராக வர முயற்சித்தார். ஆனால், முதல்வர் ஸ்டாலினும், பென் அமைப்பும் இவரை நம்ப வில்லை. இந்தச்சூழலில், கடந்த சில  மாதங்களாக  துணை முதல்வர் உதயநிதிக்காக வொர்க்பண்ணிக் கொண்டிருக்கிறார். அதே நேரம் காங்கிரசின் தலை வர்களோடும் சுனில் நெருக்கமாக இருப்பதால், சீட் ஷேரிங்கில் இவர் மூலமாக உதயநிதியிடம் வலி யுறுத்த சிலர் முயற்சித்து வருகின்றனர். எடப்பாடி மகன் மிதுனிடமும், பா.ஜ.க. மாஜி தலைவரோடும் மிக நெருக்கமாக சுனில் இருந்துவருவதால் தி.மு.க.வின் சீக்ரெட்டுகள் எதிர்த்தரப்புக்கு செல்வதாகவும் உளவு வட்டாரங் கள் சொல்கின்றன. எனவே அவர் சந்தேக வளையத்தில் இருக்கிறா ராம்.''’’

""திருச்சியில் நடந்த தி.மு.க. பூத் ஏஜண்டுகள் கூட்டத்தில் அடிதடி என்கிறார்களே?''’’

rang

""திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட தி.மு.க. பி.எல். ஏ2 பாகநிலை முகவர்கள் கூட்டம், அமைச்சர் நேரு தலைமையில் நடந்தது.  இதில் பேசிய அமைச்சர் நேரு ’"இந்த மாவட்டத் திற்கு மட்டும் 5000 கோடிக்கு மேலாக வளர்ச்சித் திட்டத்தை முதல்வர் வழங்கியுள்ளார். நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம்'’ என்றெல்லாம் உற்சாகமாகப் பேசினார். நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேருவோ, ’"டிஜிட்டல் முறையில் உறுப் பினர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. இதனை பயன்படுத்தி நாம் தேர்தல் பணியாற்ற வேண்டும்'’ என்றார். அப்போது பேசிய அந்தநல்லூர் ஒன்றியக் குழு தலைவர் துரைராஜ் ’ "ஸ்ரீரங்கம் நகரம் சரியாக செயல்படவில்லை'’ என்று சொல்ல, உடனே குறுக்கிட்ட ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார், ’"2021 தேர்தலைவிட கடந்த எம்.பி. தேர்தலில் ஸ்ரீரங்கம் நகரப் பகுதியில் 7 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ளோம்'’என்றார். அப்போது திடீரென வட்டச் செயலாளர் ஜனா மற்றும் அவ ரது ஆதரவாளர்கள் எழுந்து சென்று சத்தம் போட்டதோடு, பகுதி செயலாளர் ராம்குமாரை எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது. இதைக்கண்ட நேரு சத்தம்போட்டு அவர்களை அமர வைத்த     தாகச் சொல்கிறார்கள். இந்த ராம்குமார், நேருவுக்கு எதிரான அரசியல் செய்வதாக பேசப்பட்டு வந்தது. அதனால்தான் நேருவின் ஆதரவாளரான ஜனா அவரை எட்டி உதைத்தார் என்கிறார்கள்.''’’

""தி.மு.க.வின் ஓரணியில் திரள்வோம் திட்டத்தை பலவீனப்படுத்தத் திட்டமிட்டிருக்கும் எடப்பாடி, தானும் ஒரு போட்டித்  திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறாரே?''’’

""உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வின் வியூகங்களைக் கண்டு கலங்கிப்போன எடப்பாடி, அதன் ’ஓரணியில் தமிழ்நாடு’ செயல்திட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில், ’"தமிழகத்தைக் காப் போம்'’எனும் செயல் திட்டத்தை’ பதிலுக்குக் கையில் எடுத்திருக்கிறார். இதற்காக, வாக்குச்சாவடி முகவர் களுக்குப் பயிற்சியளிப்பது பற்றி அ.தி.மு.க. மா.செ.க் களுடன் தீவிரமாக ஆலோசித்து பல உத்தரவுகளை அவர் பிறப்பித்திருக்கிறார். இதற்கிடையே, தமிழகத்தைக் காப்போம் என்ற பெயரில் அவர் தமிழகம் முழுவதும் ’ரோடு ஷோ’ நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக தமிழகம் முழுவதும் எடப்பாடி சுற்றுப்பயணம் செல்வதற்கான பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. உண்மையில் இவரது தமிழகத்தைக் காப்போம் என்கிற திட்டம், தி.மு.க.வுக்குப் போட்டியாக இருக்குமா என்பது போகப்போகத் தெரிந்துவிடும்.''’’

""அ.தி.மு.க.வை உடைக்கவும் பா.ஜ.க. தயாராக இருக்கிறது என்கிறார்களே?''’’

""முதல்வர் கனவோடு, எடப்பாடிக்குப் போட்டி யாக அ.தி.மு.க.வில் அரசியல் நடத்திவரும் வேலுமணி, ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பங்கேற்றதோடு. அமித்ஷா வையும் நேரில் சந்தித்து, எடப்பாடியின் நிலைப்பாட் டிற்கு எதிராக ஒரு நாளிதழுக்குப் பேட்டி கொடுக்க வைத்தார், அமித்ஷாவும் அதன்படி, "தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி ஆட்சிதான் அமையும்' என்றும், "முதல்வர் யார் என்பதை தேர்தல் வெற்றிக்கு பின்னர் முடிவெடுப்போம்' என்றும் அழுத்தமாகத் தெரிவித்தார். இதனால் கடுமையாக எரிச்சல் அடைந்திருக்கும் எடப்பாடி, உளுந்தூர்ப்பேட்டையில் பேசும்போது "பா.ஜ.க.வுடன் நாங்கள் வைத்திருப்பது கொள்கைக் கூட்டணி அல்ல. தேர்தல் கூட்டணிதான். தேர்தலில் ஜெயித்தால் கூட்டணி ஆட்சிக்கெல்லாம் வாய்ப்பில்லை. அ.தி.மு.க. தனியாகத்தான் ஆட்சி அமைக் கும்'’ என்று அழுத்தம் திருத்தமாக அவருக்கு பதில் சொன்னார். இனியும் கூட்டணி ஆட்சி இல்லை என்று எடப்பாடி பிடிவாதம் பிடித்தால், வேலுமணி மூலம் அ.தி.மு.க.வை உடைக்கும் முடிவில் இருக்கிறதாம் பா.ஜ.க. அதன் ஆலோசனைப்படி,  சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் 22 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அழைத்து ரகசியக் கூட்டம் போட்டிருக் கிறாராம் வேலுமணி. எனவே பா.ஜ.க.வுக்கும் எடப்பாடிக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.''’’

""எடப்பாடியுடன் தி.மு.க. மாஜி மந்திரி ஒருவர் விமானத்தில் அருகருகே அமர்ந்து பயணித்தது பரபரப்பை ஏற்படுத்திவருகிறதே?’

rang1

சேலத்திலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் 1ஏ என்ற இருக்கையில் அமர்ந்து எடப்பாடி பயணித்தார். விமானம் புறப்படு கிற நேரத்தில் அவருக்குப் பக்கத்து இருக்கை யான 1 பி-யில் வந்து அமர்ந்தவர் மாஜி தி.மு.க. மந்திரி செந்தில்பாலாஜி. இருவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்ட னர். அதன்பிறகு ஒரு வார்த்தைகூட பேசா மல், சென்னைவரை மௌனமாகவே வந்தி ருக்கிறார்கள். இவர்கள் இருவரும் அருகருகே பயணித்ததையும், ஒரே விமானத்தில் இருந்து இறங்கியதை பரபரப்பாகப் பார்த்தவர்கள் தான் திகைத்துப் போனார்களாம்.''’’

""மதுரைப் பகுதியில் கொலைவெறி யுடன் சிலர் சுற்றி வருவதாக காவல்துறையே பதறுகிறதாமே?''’’

""கடந்த ஜூன் 21ஆம் தேதி அன்று, மதுரை விளாங்குடி, பாண்டியன் தியேட்டர் பின்புறம் உள்ள மேக்ஸ் அப்பார்ட்மெண்டில் உள்ள, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு சொந்தமான பிளாட்டிலிருந்து கோடிக்கணக்கில் ரூபாய் கொள்ளை போனது. ஆனால் தீவிர குற்றத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் டீமோ அவர்  காவலாளியிடம் வாக்குமூலம் பெற்று,  ரூபாய் 14 லட்சம் கொள்ளை போனதாக வழக்கைப் பதிவு செய்தது. இதற்கிடையே, மாவட்டத்தில் கோலோச்சிய குறிப்பிட்ட சமூக டீம்கள், ""கொள்ளையடித்த அந்த சமூக டீமால் நமக்குப் பெயர் கெட வாய்ப்பு உண்டு. எனவே இவர்களை சும்மாவிடக்கூடாது, பொலி போட்ற வேண்டியதுதான்’ என்று, குற்றவாளி களுக்கு எதிராக ஆவேசத்துடன் திரிந்து கொண்டு இருக்கின்றன. கொள்ளை போன பணம் கிடைக்கிறதோ இல்லையோ?  இந்தக் கொள்ளையால் கொலை விழ வாய்ப்புண்டு என்பதைத் தெரிந்து கொண்ட போலீஸ், பதட்டத்தோடு கண்காணிப்பை விரிவுபடுத்தியிருக்கிறது.''’’ 

""ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. குடும்பத் துடன் தலைமறைவாகிவிட்டதாகச் சொல்கிறார்களே?''’’

""சிறுவன் கடத்தப் பட்ட விவகாரத்தில் கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்திக்கு, ஜாமீன் தர மறுத்து விட்டது சென்னை உயர்நீதிமன்றம். எனவே இவர் சுப்ரீம் கோர்ட் டில் ஜாமீன் மனுவை அப்ளை செய்தார். இதை  நீதிமன்றம் நிலு வையில் வைத்திருக் கிறது. இதனால் போலீஸ் கைது செய்து விடுமோ என்று பயந்த ஜெகன் மூர்த்தி, தன் குடும்பத்துடன் தலை மறைவாகிவிட்டார். அவர் எங்கு மறைந்திருக்கிறார் என்று போலீஸால் கண்டுபிடிக்க முடியவில்லை. பல இடங்களிலும் அவரைத் தேடித் தனிப்படைகள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. அவருக்கு சுப்ரீம்கோர்ட் முன் ஜாமீன் தராதபட்சத்தில் அவர், காவல்துறையில் சரணடைய முடிவெடுத்திருக்கிறாராம்.    சிறுவன் கடத்தலில் இவருக்கும் ஏ.டி.ஜி.பி. ஜெயராமுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதை காவல்               துறை ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வைத்து வருவதால், அவர்  கடும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கிறார் என் கிறார்கள்.''’’

""பிரபல லாட்டரி அதிபர் மார்டினின் மகன் புதுவை அரசியல் களத்தில் காய்களை நகர்த்திவருகிறாரே?''’’

""புதுச்சேரி அரசியலில் பா.ஜ.க. சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ள நிலையில், ’லாட்டரி’ மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ், அங்குள்ள அரசியல் களத்தில் தீவிரமாகக் களமிறங்க, காய்களை நகர்த்திவருகிறார். இதற்காக, நடிகர் விஜய் பாணியில் தனிக் கட்சி தொடங்கவும் திட்டமிட்டிருக்கும் அவர்,      தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது தொடர்பாக, சட்ட நிபுணர்களுடன் ஆலோ சித்துவருகிறார்.பா.ஜ.க. அமைச்சர் சாய்சரவணன் ராஜினாமா செய்திருப்பதால் அந்த இடத்தில் புதிய அமைச்சராக ஜான்குமாரை நியமிக்க பா.ஜ.க. மேலிடம் தீர்மானித்திருக்கிறது. அந்த ஜான்குமாரின் சொந்த தொகுதி பாண்டிச்சேரியில் உள்ள காமராஜர் நகராகும். அந்தத்  தொகுதியைக் குறிவைத்துதான், ஜோஸ்சார்லஸ் களத்தில் குதித்துள்ளார். இதற்காக அவரது ஆதரவாளர்கள் கடந்த 2 மாதங்களாக களத்தில் இறங்கித் தேர்தல்     பணிகளை ரகசியமாக செய்து வருகின்றனர். ஜோஸ்சார்லசின் அரசியல் நுழைவை பாண்டிச்சேரியில் உள்ள அரசியல் கட்சிகள் உற்று கவனிக்கத் தொடங்கியிருக்கின்றன.''’’

""தமிழக பா.ஜ.க. பிரமுகர் வினோஜ் பி.செல்வம் மீது தொடர்ச்சியாக எதிர்மறை ரிப்போர்ட்டுகள் அக்கட்சியின் மேலிடத்துக்கு செல்கிறதே?''’’

""பல்வேறு கிரிமினல் குற்றங்களில் தொடர்புடைய மிளகாய்ப்பொடி வெங்க டேசனுடன் வினோஜ் மிக நெருக்கமாக இருப்பது, புகைப்பட ஆதாரங்களுடன் வெளிச்சத்துக்கு வந்தது. இப்போது, போதைப்பொருள் கடத்தலில் போலீசிடம் சிக்கிய அ.தி.மு.க. பிரதீப் மற்றும் நடிகர் கிருஷ்ணாவுடன் வினோஜ் பி.செல்வத்திற்கு இருந்த நெருங்கிய நட்பிற்கான புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவரது செக்கர்ஸ் ஓட்டலில் கொக்கைன் விநியோகம் நடந்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகப்படுகிறதாம். அதனால் அவரை                  விசாரிக்க போலீஸ் முடிவெடுத்திருக்கிறதாம். இந்த நிலையில் பா.ஜ.க.வின் மாநில செயலாளராக அறிவிக்கப்பட இருந்தார் வினோஜ். இவர்                   மீதான புகார்கள் டெல்லியின் கவனத்துக்குச் சென்றதால், அவருக்கு இந்தப் பதவி கிடைப்பதில் கேள்விக்குறி ஏற்பட்டிருக்கிறதாம். ஆனால் வினோஜோ,’பிரதீப்போடு நான் இருக்கும் போட்டோக்கள் கல்லூரி காலங்களில் எடுக்கப்பட்டது. அதன்பிறகு அவருடன் எனக்கு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை’ என்று பரிதாபமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் கமலாலயத் தரப்பிடம் கலக்கம் தெரிகிறது.''’’

""நானும் என் காதுக்கு வந்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். அமைச்சர் நேரு, சட்டச் சிக்கலில் இருந்து விடுபடுவதற்காக சிறப்பு நள்ளிரவு பூஜையை செய்திருக்கிறார். சீர்காழியில் உள்ள சட்டநாதர்  கோயிலுக்கு, சுக்கிர வார தினத்தை முன்னிட்டு நள்ளிரவில் ரகசியமாகச் சென்ற அவர்,  தனது மேல் சட்டையைக் கழற்றிவிட்டு, பயபக்தியோடு, கோயில் மூலவரான  சட்டநாதருக்கு புனுகு சார்த்தி, நள்ளிரவு பூஜையைச் செய்திருக்கிறார். அவரை அறிந்தவர்களையே அவரது இந்த பூஜை நடவடிக்கை திகைக்க வைத்திருக்கிறதாம்.''’ 

 

final

 

எதிரும் புதிரும்!

பா.ம.க.,வின் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய அன்புமணி, ""பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், வயது முதிர்வு காரணமாக தற்போது குழந்தை போல மாறிவிட்டார். அவரை மூன்று தீயசக்திகள் ஆட்டிவைக்கிறார்கள்'' என்று கடுமையாகக் குற்றம்சாட்டினார். அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பா.ம.க. இணை பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான அருள், ""ஐந்து ஆண்டுகளாக ஐயா, ஐயாவாக இல்லை... குழந்தையாக மாறிவிட்டார் என்று அன்புமணி சொல்கிறாரே, இந்த குழந்தைதான் 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரை தலைவ ராக்கியது. அப்படியானால் அது மட்டும் எப்படி செல்லும்? ராமதாஸால் உருவான கட்சி பா.ம.க. மூன்று தீயசக்திகள் ஆட்டிப் படைப்பதாகக் கூறும் அன்புமணியை, வழி நடத்தும் சக்திகளை எங்களாலும் பட்டியலிட முடியும். உயிரோடு இருக்கும்வரை நான்தான் தலைவரென ராமதாஸ் கூறுவது அவரது உரிமை'' என்று காட்டமாகக் கூறினார். இந்நிலையில் அன்புமணி டெல்லி சென்றுள்ளார். இந்திய தேர்தல் தலைமை அதிகாரிகளை சந்திக்கவும், அமித்ஷாவை சந்திக்கவும் திட்டமாம்!

 

 

nkn020725
இதையும் படியுங்கள்
Subscribe