"ஹலோ தலைவரே, இசைஞானி இளைய ராஜாவின் இசைப் பயண பொன்விழா ஆண்டை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் அவருக்கு முதல்வர் ஸ்டாலின் பெரிய அளவில் பாராட்டு விழாவை நடத்தி, அவரது ரசிகர்களின் மனதைக் குளிரவைத்திருக்கிறார்.''”
"ஆமாம்பா, நேரு உள் விளையாட்டரங்கமே அன்று இசையில் மிதந்ததே?''”
“"உண்மைதாங்க தலைவரே, இளையராஜாவின் திரைப்பாடல்களோடு தொடங்கிய விழாவில், திரையுலகினரும் இளையராஜாவின் ரசிகர்களும் பெருமளவில் குவிந்திருந்தனர். நடிகர் கமலோ, தானே எழுதி வந்த பாடலைப் பாடி இளையராஜாவை வாழ்த்தினார். ரஜினியோ, ’"இந்திய நாட்டை ஆளும் கட்சியினருக் கும் புதிய, பழைய எதிர்க்கட்சியினருக்கும் ஒரு சவாலாக இருந்துகொண்டிருக்கும் முதலமைச்சர் அவர்களே'’ என்று ஸ்டாலினை விளித்ததன் மூலம், டெல்லியையும் நடிகர் விஜய்யையும் ஒருசேர உரசியபடியே பேச்சைத் தொடங்க, அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது. "இதுவரை நான் பார்த்த அதிசய மனிதர் என்றால் அது இளைய ராஜாதான். ராகதேவன் இளையராஜாவுக்கு, ராகதேவி இசையை அள்ளிக் கொடுக்கிறாள். ராஜாவின் பயோபிக் படம் விரைவில் ரிலீசாக வேண்டும். அதற்கு நான் கூட திரைக்கதை எழுதத் தயாராக இருக்கிறேன்'’என்றார் கலகலப்பாக.''
"ராஜாவை வாழ்த்திப் பேசிய முதல்வர் ஸ்டாலின் "இளையராஜாவின் இசை, தாயாகத் தாலாட்டுகிறது, காதலின் உணர்வுகளைப் போற்று கிறது, வெற்றிப் பயணத்திற்கு ஊக்கமளிக்கிறது, வலிகளை ஆற்றுகிறது. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால், இவர் இளையராஜா அல்ல, இணையற்ற ராஜா'’என்றெல்லாம் வாழ்த்து மழை பொழிந்தார்.''”
"ஆமாம்பா... கூடவே, இளையராஜாவுக்கு ஸ்டாலின் வேண்டுகோளையும் வைத்தாரே?''”
’"ஆமாங்க தலைவரே, முதல்வர் தன் உரையில் ‘ஒரு ராஜா இருந்தால் அவருக்கென நாடு இருக்கும், மக்கள் இருப்பார்கள், எல்லைகள் இருக்கும். ஆனால் இந்த ராஜா மொழிகளை கடந்தவர், எல்லைகளையும் கடந்தவர், எல்லாருக்கு மானவர். அப்படிப்பட்ட இளையராஜாவுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். சங்கத் தமிழ் இலக்கியங்களுக்கு அவர் இசையமைத்து சில ஆல்பங்கள் வெளியிட வேண்டும்’ என்றதோடு, இளையராஜாவுக்கு "பாரத ரத்னா' விருதை வழங்கவேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வேண்டுகோளையும் வைத்தார். விழாவில் நெகிழ்வோடு உரையாற்றிய இளையராஜா, ‘"ஒரு இசையமைப்பாளருக்கு அரசே பாராட்டு விழா நடத்துவது இதுதான் முதல்முறை. இதை என்னால் நம்பமுடியவில்லை... முதல்வருக்கு நன்றி! முதல்வர் சொன்னபடி, தமிழ் இலக்கியங்களுக்கு நான் இசையமைப்பேன்'’என்றார் உணர்ச்சிப் பெருக்கோடு. நிகழ்ச்சிக்கு மறுநாள் இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில், "தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில் அதீத மகிழ்ச்சி காரணமாக எனக்குப் பேச்சு வரவில்லை. இந்தப் பாராட்டு விழாவை இவ்வளவு அழகாக அரசு நடத்தியதை நம்ப முடியவில்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன் வந்திருந்தது விழாவுக்கு மகுடம் வைத்தது போலிருந்தது. தமிழக மக்களுக்காக விரைவில் சிம்பொனியை நடத்துவேன்' என்று குறிப்பிட்டுள்ளார்''”
"உண்மைதாம்பா, மனதை தாலாட்டும் நிகழ்ச்சியாக அது அமைந்திருந்தது. சரிப்பா, சட்டமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரைக் கூட்டும் முடிவில் முதல்வர் இருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, தமிழக சட்ட மன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரை நவம்பர் மாதம் கூட்டுவதற்குத் திட்டமிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிவிடும். அதனால், இந்த அரசின் முழுமையான சட்டமன்றக் கூட்டத்தொடர் என்றால் இந்த நவம்பர் கூட்டத் தொடராகத்தான் இருக்கும். எனவே, தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இதுவரை நிறைவேற்றப்படாத அறிவிப்புகள் எவை எவை என்று பார்த்து, அவற்றில் சாத்தியமானதை அறிவிக்கும் நோக்கோடு, அதிகாரிகளிடம் விவாதிக்கவிருக்கிறார் ஸ்டாலின். குறிப்பாக, அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவிருக்கிறது ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு. அதன் பரிந்துரைப்படி, ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என்கிறார்கள் தி.மு.க. ஆதரவு அரசு அலுவலர்கள். தேர்தல் ஃபீவர் ஆரம்பித்திருப்பதால், பல புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட இருக்கிறதாம்.''”
"ஜெ.’மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது தீவிர நடவடிக்கை பாயப்போகிறது என்கிறார் களே?''”
"ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகச்சாமி கமிஷனின் அறிக்கை, கடந்த 29.08.2022-லேயே தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. அந்த அறிக் கையில் ’"சசிகலா, டாக்டர் சிவக்குமார், அப் போதைய சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று இவ்வாணையம் முடிவு செய்கிறது. டாக்டர் ரெட்டி மற்றும் டாக்டர் பாபு ஆப்ரகாம் ஆகியோருக்கு எதிரான விசாரணைக்கும் உத்தர விட வேண்டும். அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி அவர் களையும் விசாரணை செய்யவேண்டும்'’என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஆணையத்தின் அறிக்கை குறித்து 29.08.2022 அன்றே அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த அறிக்கையின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தமிழக அரசு 17.10.2022-ல் அரசாணை வெளியிட்டது. இத்தனை நாளாய் அமைதியாக இருந்த நடவடிக்கைகள், தற்போது தீவிரம் பெற்றிருப்பதாகச் சொல் கிறார்கள். எனவே, விரைவில் ஜெ. மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை பாயவிருக் கிறது என்று ஒரு பரபர தகவல் உலவுகிறது.''”
"புதுவை காங்கிரஸ் தரப்பில் இன்னும் தேர்தல் பரபரப்பைப் பார்க்க முடிய வில்லையே?''”
"தமிழகம், புதுவை, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. எனவே, தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம்காட்டி வருகின்றன. ஆனால், புதுவையில் தேர்தல் களப்பணிகளில் அங்குள்ள காங்கிரஸ் ஆர்வம் காட்டாமல் இருந்துவருகிறது. புதுவையைப் பொறுத்தவரை, தி.மு.க.வை விட காங்கிரஸ் கட்சிதான் அதிக இடங்களில் போட்டியிடும். காங்கிரஸ் ஆட்சி அமைக்க தி.மு.க. உதவும். ஆனால், இந்தமுறை, தி.மு.க. மாற்றி யோசிக்கிறது. அதாவது, காங்கிரசை விட அதிக இடங்களில் போட்டியிட்டு புதுவையில் தி.மு.க. ஆட்சியைக் கொண்டு வரவேண்டும் என அங்குள்ள தி.மு.க.வினர் உறுதியாக இருக்கிறார்கள். அதனால், இந்தமுறை காங்கிரஸுக்கு அங்கே கூடுதல் சீட் கிடைக்குமா? தி.மு.க. கொடுக்கிற சீட்டைத்தான் காங்கிரஸ் பெற வேண்டுமா? என்கிற குழப்பம் நிலவுகிறது. மேலும், காங்கிரசில் யாருக்கு சீட் என்பதும் முடிவாகவில்லை. அதனால்தான் அங்கே காங்கிரஸ் தரப்பில் சுறுசுறுப்பைப் பார்க்க முடியவில்லை.''”
"தமிழக சட்டமன்றக் காங்கிரஸ் தலைவர் ராஜேஸ்குமார் தொடர்ந்து தி.மு.க. கூட்டணிக்கு எதிராசு வாள் சுழற்றுகிறாரே?''”
“"தமிழக காங்கிரஸ் கட்சி, தங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு இருக்கும் ஆதரவு நிலை குறித்து, அவர்களின் தொகுதியில் ஒரு சர்வேயை நடத்தியிருக்கிறது. இதில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஸ்குமார் உட்பட காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் பலருக்கும் அவர்களின் தொகுதி யில் அதிருப்தி இருப்பது அப் போது தெரிய வந்திருக்கிறது. மேலும், காங்கிரசின் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு மீண்டும் சீட் தந்தாலும் அவர்கள் ஜெயிக்கமாட்டார்கள் என்றே அந்த சர்வேயின் ரிசல்ட் சொன்னதாம். அதனால், இந்த முறை செல்வப்பெருந்தகையைத் தவிர பெரும்பாலும் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாம். அதேபோல, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதால், சிட்டிங் காங்கிரஸ் தொகுதிகள் பலவற்றை தி.மு.க. எடுத்துக்கொள்ளவிருக்கிறதாம். அந்த வகையில் ராஜேஸ்குமாரின் கிள்ளியூர் தொகுதியை இந்த முறை தி.மு.க. எடுத்துக் கொள்ள இருக்கிறதாம். அந்த ஆத்திரத்தில்தான் அவர் தொடர்ந்து, தி.மு.க. கூட்டணியில் சர்ச்சையை உருவாக்கும் வகையில் பேசிவருகிறார் என்கிறார்கள். இதற்கிடையே, அண்மையில் நெல்லையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ப.சி. கலந்துகொண்டார். அவரை மேடையில் வைத்துக்கொண்டே, ’"காங்கிரஸ் இல்லாமல் எந்தக் கொம்பனும் ஆட்சியமைக்க முடியாது'’ என்று கூட்டணிக்கு எதிராக அவர் சவால் விடுத்ததை, ப.சிதம்பரம் ரசிக்கவில்லை யாம்.''”
"வாக்குத் திருட்டு பற்றி உடன்பிறப்புகளை கனிமொழி எம்.பி.யும் எச்சரித்திருக்கிறாரே?''”
"கடந்த 12ஆம் தேதி தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.வின் பூத் கமிட்டி கூட்டம், சங்கரன்கோவிலில் நடந்தது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கெடுத்த இந்தக் கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி., "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. கூட்டணி மட்டும்தான் உடையாமல் அப்படியே இருக்கிறது. அப்படிப்பட்ட கூட்டணியை வெற்றிபெற வைக்கவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. நம் முதல்வர் எத்தனையோ முதலீடுகளைக் கொண்டு வந்து தொழில் புரட்சியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே 42 சதம் பெண்கள் வேலைக்குச் செல்லும் மாநிலம் தமிழ்நாடு என்கிற நிலை உருவாகியிருக்கிறது. நம் மாநிலத்தின் சாதனையை எந்த மாநிலமும் எட்டவில்லை'’என்றெல்லாம் ஆட்சியின் பெருமைகளை விவரித்தவர், ‘"பா.ஜ.க.வினர் தேர்தல் கமிஷனை வைத்தே வெற்றி பெற்றிருக்கின்றனர் என்பது பல தரவுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. பல ஆயிரம் ஓட்டுகள் காணாமல் போயிருக்கிறது. எனவே பூத் கமிட்டி உறுப்பினர்களான நீங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். நீங்கள்தான் வெற்றிக்கு அச்சாணி போன்றவர்கள்'’என்றெல்லாம் பூத் கமிட்டியினரை உஷார்படுத்தினார்.''”
"பா.ஜ.க.வின் மாஜி மாநிலத் தலைவரின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது என்கிறார்களே?''”
"தமிழக பா.ஜ.க.வின் மாஜி மாநிலத் தலைவர் மீது, கர்நாடக காங்கிரஸ் அரசு மூலம் வழக்குத் தொடுக்க முடியுமா என கூட்டணிக் கட்சி களெல்லாம் கேள்வியெழுப்பி வருகின்றன. அந்த மாஜி, கர்நாடக காவல்துறையில் 2020 வரை பணியாற்றியவர். அவர் ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் கழித்து இப்போது சொத்து வாங்கியிருப்பதாக, அறிக்கை மூலம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அந்த சொத்து 80 கோடி மதிப்பிலானது என்பதால், அது வில்லங்க ரகத்தில் வருகிறது. எனவே இவர் மீது கர்நாடக அரசும், மத்திய அரசும், தமிழக அரசும் கூட வழக்கைத் தொடுக்க முடியும். ஏற்கனவே இந்த மாஜியின் ஏடாகூடங்களை அறிந்து அவரை ஓரங்கட்டி வைத்திருக்கும் பா.ஜ.க.வின் தேசியத் தலைமை, இவர் மீதான சொத்துக் குவிப்பு விவகாரத்தை தீவிரமாக ஆராய்ந்து வருகிறதாம். எனவே அந்த மாஜியின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது என்கிறார்கள் கமலாலயத் தரப்பினரே.''”
"இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிய மாநில செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர். சென்னையைச் சேர்ந்த எவரும் இதற்கு முன் இப்படி கட்சியின் மாநிலப் பொறுப்புக்கு வந்ததில்லை என்பதால், அங்குள்ள காம்ரேட்டுகள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. மு.வீரபாண்டியன், 2018 முதல் சி.பி.ஐ.யின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர். தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில செயலாளராகவும் இருந்து வருகிறவர். விவசாயிகள் போராட்டம் தொடங்கி சமூக நீதிப் போராட்டங்கள் வரை பலவற்றிலும் இவர் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். இவருக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.''”
"தமிழக டி.ஜி.பி. நியமன விவகாரம் சிக்கலில் இருப்பதாகச் சொல்கிறார்களே?''”
"தமிழக பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கட் ராமன் நியமிக்கப்பட் டாலும், அது தொடர் பாக அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. காரணம், இதேபோல் உ.பி.யிலும் பொறுப்பு டி.ஜி.பி. நியமிக்கப்பட்ட நிலையில், அதற்கென அரசாணை அங்கே பிறப்பிக்கப்பட்டதாம். அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அங்கே வழக்கு தொடுக்கப் ட்டி ருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு நிதானத்தைக் கடைப்பிடிக்கிறது என்கிறார்கள். முறைப்படி டி.ஜி.பி.யைத் தேர்ந்தெடுக்க, 8 பேர் கொண்ட ஒரு பரிந்துரைப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதில் வெங்கட்ராமன் பெயரும் இருக்கிறது. ஆனால் சீனியாரிட்டி படி பார்த்தால், சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் இரண்டு அதிகாரிகளில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அந்த 8 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியல் டெல்லிக்கு அனுப்பப்பட்டுவிட்டது. அதில் முடிவெடுக்க எப்படியும் மூன்றுமாத காலம் ஆகலாம். அதுவரை வெங்கட்ராமன் பொறுப்பு டி.ஜி.பி.யாகவே தொடர்வார். இதனிடையே அவரது நியமனம் குறித்து அரசாணை பிறப்பிக்கவேண்டிய சூழல், தமிழக அரசுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அப்படிப் பிறப்பித்தால் அதுவும் வழக்கைச் சந்திக்க வேண்டிவரும். இப்படியாக தமிழக டி.ஜி.பி. நியமன விவகாரம் என்பது இடியாப்பச் சிக்கலில் இருக்கிறது என்கிறார்கள் சீனியர் காவல்துறை அதிகாரிகள்.''”
"தமிழக முதல்வர் அரசு முறைப் பயணமா கிருஷ்ணகிரி, ஒசூர் என பயணம் செய்து பணிமுடிந்த திட்டங்களைத் தொடங்கி வைச்சிருக்காரே..''…”
"ஆமாங்க தலைவரே... செப்டம்பர் 14 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். ஆனாலும் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு இந்தப் பயணத்தில் தங்களைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசலையேன்னு வருத்தமாம். கிருஷ்ணகிரி மாங்கனி மாவட்டம். இங்கே 50,000 ஹெக்டேர் அளவில் மாமரம் பயிரிடப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சம் விவசாயிகள் இதில் உள்ளனர். இந்த விவசாயிகள் இந்த ஆண்டு தற்கொலைக்குச் செல்லுமளவுக்கு, மாம்பழத்தின் விலை வீழ்ச்சியடைந்தது. அதற்கு ஆதார விலை வேண்டும் எனக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். முதல்வரின் வருகையையொட்டி மாமர விவசாயிகளுக்கு ஏதாவது அறிவிப்பு இருக்கும்னு அவங்க எதிர்பார்த்திருந்திருக்காங்க. தவிரவும் முதல்வரைச் சந்திக்கவும் ஆவலா இருந்திருக்காங்க. தி.மு.க. மா.செ. மதியழகன் அதுக்கெல்லாம் வழியில்லாம பண்ணிட்டதா வருத்தப்படறாங்க.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைச் சொல்றேன். சமீபத்துல பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அ...மலை, பி.எல்.சந்தோஷ் தன்னை கைவிட்ட நிலையில் ரஜினியை சீச்ரெட்டாக சந்திச்சு, எப்படியாவது பிரதமர் மோடியிடம் பேசி தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்றும், என் கட்சியில் என்னைக் கார்னர் பண்றாங்கன்னும் ஒரே புலம்பலாம். அத்தோடு என்னைக் கைவிட்டுறாதீங்கன்னு வேண்டுகோள் விடுத்தாராம். அதை ரஜினி எப்போதும்போல் கேட்டுக்கொண்டாராம். இதற்கிடையே அ...மலை, திண்டுக்கல் மணல் ரத்தினம், தி.மு.க. நடப்பு அமைச்சர் ஒருவர் என மூன்றுபேரும் சேர்ந்து திண்டுக்கல் பகுதியில் 100 ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கியுள்ளது பூதாகரமா வெளிவரத் துவங்கிருச்சாம். இந்தத் தகவல் ரஜினிக்குத் தெரியாதாம்.''
___________________
இறுதிச் சுற்று!
உறுதிமொழி!
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் (செப்.15), தி.மு.க. சார்பில் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ‘"தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்'’ என உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி மொழி ஏற்றார். அப்போது, தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி, "நான், தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன்'' என உறுதிமொழி வாசித்தார். இந்த நிகழ்வில் துணைமுதல்வர் உதயநிதி, அமைச்சர் கள், தி.மு.க.வின் மூத்த தலைவர்கள், மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
-இளையர்