லைக் கிராமங்களில் வாழும் மலைவாசிகள், பழங்குடியினர், சரியான போக்குவரத்து வசதியில்லாமல் தொடர்ந்து பல்லாண்டுகளாகக் கஷ்டப் பட்டு வாழ்ந்த சூழலில், அவர்களின் கிராமத்துக்குள் ஒரு அரசுப் பேருந்து வந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? அப்படித்தான் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு மலைக் கிராம மக்கள் புதிதாக ஊருக்குள் வந்த அரசுப் பேருந்தை உற்சாகமாக வரவேற்றுக் கொண்டாடினார்கள்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதிக்குட் பட்ட கள்ளிப்பட்டி என்ற ஊருக்கு மேற்கே கடம்பூர், சத்தியமங்கலம் மலைப்பகுதியும், கிழக்கே அந்தியூர், பர்கூர் மலைப்பகுதியும் உள்ளது. இந்த மலைப்பகுதியில் தான் தொட்டகோம்பை என்ற கிராமம் உள்ளது. சுமார் நூறு குடும்பங்கள் இங்கு உள்ளன. இந்தத் தொட்டகோம்பையிலிருந்து ஐந்து கி.மீ. தூரத்திலிருக்கும் கரும்பாறை கிராமத்தில்தான் அரசுத் தொடக்கப்பள்ளி, ரேஷன் கடை உள்ளது. மருத்துவமனைக்கோ அடுத்த 10 கி.மீட்டரில் கள்ளிப்பட்டி, வலையபாளையம், அத்தாணி போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டும். இந்த மலைக் கிராமங்களுக்கு பேருந்து வசதிக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக இங்கே வாக்கு கேட்டுவரும் அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கேட்டு ஓய்ந்துவிட்டார்கள்.

இத்தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. அந்தியூர் வெங்கடாஜலம், தொட்டகோம்பை கிராமத்திற்கு பாதை வசதியும், பேருந்து வசதியும் அரசு ஏற்படுத்தித்தர வேண்டுமென்று  சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார். அதையடுத்து அரசு, அதிகாரி களுக்கு உத்தரவிட்டது. ஆனால் அதிகாரிகளோ, ஆய்வு செய்வதாகக்கூறி காலம்கடத்தினார்கள்.

Advertisment

இந்நிலையில், தூக்கநாயக்கன்பாளையம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிவபாலன், தனது சொந்த நிதியை செலவழித்து ஒரு வித்தியாசமான திட்டத்தை செயல்படுத்தினார். சென்ற மார்ச் 1ஆம் தேதி தமிழக முதல்வரின் பிறந்தநாளன்று அந்த தொட்டகோம்பை கிராமத்திலுள்ள பள்ளிக் குழந்தைகள் 36 பேரை கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவந்து முதல்வரை சந்திக்க, அந்த குழந்தைகள் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்ததோடு, "நாங்கள் கல்வியை கற்க வேண்டும், அதற்கு பேருந்து வசதி செய்து தாருங்கள் ஐயா'' என முதல்வரிடம் கோரிக்கை வைக்க, நெகிழ்ந்துபோன முதல்வர், "மிக விரை வாகச் செயல்பட்டு அக்கிராமத்திற்கு பேருந்து செல் வதை உறுதிப்படுத்தி எனக்கு தகவல் தெரிவியுங் கள்'' என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தினமும் கால்நடையாக நடந்தே செல்லும் அந்த குழந்தைகள், விமானத்தில் பறந்து சென்று, ரயில் மூலம் திரும்பிய அந்த பயணம் வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சியை குழந்தைகளுக்கு கொடுத்துள்ளது. முதல்வரின் உத்தரவால் வருவாய் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட, அக்கிராமத்துக்கு சாலை வசதி ஏற் படுத்தப்பட்டது. சென்ற 25ஆம் தேதி அரசுப் பேருந்து அந்த கிராமத்திற்குள் சென்றது.

அந்த பேருந்தில் பிற்படுத்தப்பட் டோர், ஆதி திராவிட நலத்துறை அமைச் சர் மதிவேந்தன், தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. அந்தியூர் செல்வராஜ், தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடாசலம், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், இந்த நிகழ்வை சாத்தியமாக்கிய ஒன்றிய செய லாளர் சிவபாலன் ஆகியோர் பயணம் செய்து அந்த கிராமத்திற்கு சென்றார்கள்.

Advertisment

malaimakkal1

அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ. மற் றும் தி.மு.க. நிர்வாகிகளை மாலையிட்டு வரவேற்று மகிழ்ச்சியில் கொண்டாடினார் கள் மலை மக்கள். அவர்களின் கோயிலில் பூஜை செய்து கிராமத்திற்குள் வந்த பேருந்துக்கும் மாலையிட்டு அந்த பேருந்தின் ஓட்டுநர், நடத்துனருக்கும் மரியாதை செய்தார்கள். பேருந்து மட்டும் இல்லாமல் நடமாடும் ரேஷன் கடையும் அங்கு நிறுவப்பட்டது.

"எங்க வாழ்க்கை காடு, மலை என இப்படியே போனாலும் எங்க குழந்தைகள் நல்லா படிச்சு அர சாங்க வேலைக்கு போகணும், அதுக்கு பள்ளிக் கூடம் அவசியம். ஒவ்வொரு நாளும் காட்டுக்குள்ள ஏழெட்டு கிலோமீட்டர் குழந்தைகள் நடந்துபோய் பள்ளிக்கூடம் போயிட்டு வர்றது ரொம்ப சிரமமாக இருந்தது. காட்டு விலங்குகள் பயமும் இருந்தது. ரேஷன் பொருள் வாங்குவதற்கு நாங்க இரும்பாறை கிராமத்துக்கு நடந்துதான் போகணும். உடம்பு சரியில்லை, கர்ப்பமா இருக்குற பெண்களுக்கு குழந்தைபேறுக்கு  ஆஸ்பத்திரிக்கு போகணும் னாலும் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிற கள்ளிப்பட்டி அல்லது வேற ஊருக்கு நடந்தேதான் போகணும். இப்ப எங்க கவலையெல்லாம் தீர்ந்து போச்சு. எங்க ஊருக்கு பஸ் வந்திருச்சு. இதுக்கு காரணம் முதல்வர் தான். மக்களுக்கு தேவையான எந்த செயலாக இருந்தாலும் முதல்வர் காதுக்கு நேரடியாகப் போச்சுன்னா அது உடனே நிறை வேறுங்கற நம்பிக்கை இப்போது ஏற்பட்டிருக்கிறது'' என மகிழ்ச்சியோடு கூறினார்கள் தொட்டகொம்பை மலைக்கிராம மக்கள். 

தற்காலிகமாக காலையிலும், மாலையிலும் அக்கிராமத்திற்கு அரசுப் பேருந்து சென்று வருகிறது. மலைப்பகுதி பாதைகள் அதிக வளைவுகளைக் கொண்டிருப்பதால் பெரிய பேருந்துகள் ஒரு சில நேரங்களில் இயக்க முடியாமல் போகலாம். ஆகவே சிற்றுந்து வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.

தொட்டகோம்பை மலைக் கிராமத்தில் வசிக்கும் அந்த பழங்குடியினர், இந்த தலைமுறை வாழ்க்கையிலேயே நாங்கள் பேருந்தில் பயணிப்போம் என்பதை இப்பவும் எங்களால் நம்ப முடியவில்லை என வியக்கிறார்கள்!