"அந்த இடத்திற்கு உரிமை கொண்டாட வரவில்லை. பல நூறு ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்தும் பாரம்பரியப் பாதையை மட்டும் விட்டுக்கொடுங்கள். இல்லையெனில் எங்களது உயிர் மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்'' என முதலமைச்சர் தொடங்கி மாவட்ட நிர்வாகம் வரை கோரிக்கை வைத்துக் காத்திருக்கின்றனர் ஊத்துக்குளி வட்டத்திற் குட்பட்ட நீலாக்கவுண்டம்பாளையம், தென்முக காங்கயம்பாளையம் மற்றும் கஸ்தூரிபாளையம் ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்திற்குட்பட்ட கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி திருக்கோவிலுக்கு சொந்தமாக நீலாக்கவுண்டம்பாளையத்தில் உள்ள 14.74 ஏக்கர் (சர்வே எண்:135/1 & 135/7) நிலத்தை கண்டறிந்து, அதில் வேலி போட்டு தங்கள் வசம் கையகப்படுத்த இந்து சமய அறநிலையத் துறை முயற்சித்த நிலையில், "எங்கள் முன்னோர்கள் விட்டுக் கொடுத்தாலும் மொத்த இடமும் உங்களுடையது தான். ஆனால் காலம்காலமாக நாங்கள் பயன்படுத்தும் 600 அடி நீளமுள்ள இந்த மண் பாதைக்கு மட்டும் வேலி போடாமல் விட்டுக்கொடுங்கள். வேலி போட்டு அடைத்தால் எங்களது வாழ்வாதாரமே கெடும். ஒரு சிறிய தேவைக்காகக்கூட தார்ச்சாலையை அணுக நாங்கள் மூன்று கி.மீ. தொலைவு சுற்ற வேண்டியிருக்கும். இதனால் பல கேடுகள் வரும்'' என்பது தான் நீலாக்கவுண்டம்பாளை யம் உள்ளிட்ட மூன்று கிராமத்தினரின் வேண்டுகோள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/27/path1-2025-10-27-17-06-02.jpg)
தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காக பாரம்பரியப் பாதை வேண்டி முதல்வரின் தனிப்பிரிவு தொடங்கி, மாவட்ட நிர்வாகம் வரை கோரிக்கை மனுக்களை அனுப்பி வைத்துக் காத்திருக்க, எல்லைகளை அளந்து வேலிகளைப் போட்டது இந்து சமய அறநிலையத் துறை. இதனால் வெகுண்ட மக்கள், "பாரம்பரிய பாதை எங்களுக்குத்தான்!' எனப் பாதையில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்த, பின்வாங்கிச் சென்றது இந்து சமய அறநிலையத் துறை. அதன் பின் ஊத்துக்குளி வட்டாட்சியரிடம் மனுக்களைக் கொடுக்கவும், கிராம மக்களுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையை துவங்கியது வருவாய்த்துறை. ஆனால் பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாத சூழல் தற்போது வரைக்கும்.
"ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்குச் செல்லும் ஒரே குறுகிய, சுலபமான வழி இதுவே. இது மூடப்பட்டால், 3 கி.மீ. சுற்றிச்செல்ல வேண்டியிருப்பதால், மருத்துவ அவசர காலங்களில் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பள்ளி மாணவர்கள், கைத்தறி/விசைத்தறி தொழிலாளர்கள், விவசாயிகள், பால்கூட்டுறவு சங்கத்தினர், சுடுகாடு செல்வோரின் அத்தியாவசியப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் முடங்கும். இந்த பாதையில் புதைக்கப்பட்டுள்ள கிராமத்தின் முக்கிய குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் பழுதுகளைச் சரிசெய்ய முடியாத நிலை உருவாகும்'' என்பது சின்னம்மாளின் வாதம்.
துரைசாமியோ, "இந்த நிலம் எங்கள் முன்னோர்களின் கொடை என்பதையும், இப்பாதையை நம்பி பல நூறு குடும்பங்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் அடங்கியுள்ளதையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் பாரம் பரியமாகப் பயன்படுத்தி வரும் பாதையை மட்டும் விட்டுவிட்டு, மீதமுள்ள இடங்களில் கோவில் நிர்வாகம் தங்கள் திட்டத்தைச் செயல்படுத்த தாங்கள் அறிவுறுத்த வேண்டும். Easement Act, 1882 சட்டப்படியும், மனிதாபிமான அடிப்படையிலும் எங்கள் பரம்பரைப் பாதைக்கான உரிமையை நிலைநாட்டி, எங்கள் வாழ்வாதாரத்தைக் காக்குமாறு மூன்று கிராம மக்களின் சார்பாகத் தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்'' என்கிறார் அவர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/27/path2-2025-10-27-17-06-13.jpg)
இது இப்படியிருக்க, கிராம சபைத் தீர்மானம், முன்னாள் கிராமப் பஞ்சாயத்து தலைவரின் பாதைப் பயன்பாடு குறித்த ஒப்புமைச் சான்று, முதியோர் சான்றுகள், மற்றும் 2011ஆம் ஆண்டு முதல் உள்ள செயற்கைக்கோள் வரைபடங்கள் உள்ளிட்ட உறுதியான ஆவணங்கள் மூலம் இந்திய பயன்பாட்டுரிமை சட்டம், 1882, பிரிவு 15-ன் கீழ், கிராம மக்களுக்குச் சட்டப்பூர்வமான நிரந்தர உரிமையை (Prescriptive Easement) உறுதி செய்து மாவட்ட நிர்வாகத்திடம் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர் கிராமத்தி லுள்ள இளந்தாரிகள்.
இதுகுறித்து பேசிய ஊத்துக்குளி வட்டாட்சியர் கதிர்வேலோ, "இப்பொழுது தான் பணிக்கு வந்துள்ளேன். சட்டப்படி அந்த இடம் இந்து சமய அறநிலையத் துறைக்குத் தான் சொந்தம். மக்கள் தங்களது கோரிக்கையை வைத்துள்ளனர்'' என பொத்தாம் பொதுவாக முடித்துக் கொண்டார்.
அடிப்படை வாழ்வாதாரத்தை முன் னிறுத்தி, முதலமைச்சரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் தங்களது கோரிக்கையினை பரிசீலிக்க வேண்டுமென்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பு. மக்களுக்கான அரசென்பதில் மக்களின் வாழ்வாதார நலம்தானே முதன்மையானதாக இருக்கவேண்டும்?
-ஆதித்யா
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/27/path-2025-10-27-17-05-51.jpg)